வேலை, வேலையென பொருள் தேடியே பொழுதுகள் கழியும் ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்பதுதான் எல்லோரது எண்ணமும்..!
அன்று முழுவதும் ஓய்வாகப் பொழுதைப் போக்கலாம்; நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்..! உறவினர்களைச் சந்திக்கலாம்..!
ஆனால், வாரத்தில் ஆறு நாள்களும் வேலை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமையும் வேலை செய்யும் தொழில் முனைவோர்களான பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..?
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ளது எம். சண்முகசுந்தரபுரம் என்ற சின்னஞ்சிறிய கிராமம்.
இங்குள்ள அன்னை சத்யா மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த அனைத்துப் பெண் உறுப்பினர்களுமே பட்டாசு ஆலைத் தொழிலாளிகள்தான்.
இவர்கள், வாரத்தில் ஆறு நாள்களும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மசாலாப் பொடி தயாரித்தல், அப்பளம் தயாரித்தல் என சுயதொழில்களில் ஈடுபட்டு, மாவட்ட அளவிலான சிறந்த மகளிர் குழு விருதினை மத்திய அமைச்சரிடம் பெற்றுள்ளது வியப்புக்குரிய செய்திதானே..!
அந்தக் குழுவினரைச் சந்திக்க அவர்களது ஊருக்குச் சென்றபோது, கிராமிய மணத்தோடு வரவேற்றனர்..!
அந்த மகளிர் குழுவின் ஊக்குநர் ஜி. காளியம்மாள், பிரதிநிதிகள் பி.வீரம்மாள், ஜி.முருகாயி ஆகியோரிடம் அவர்களது தொழில், செயல்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியபோது ஆர்வத்துடன் பதில் அளித்தனர்.
எப்போது சுய உதவிக் குழுவினைத் தொடங்கினீர்கள்..?
கடந்த 2002-ம் ஆண்டிலேயே, 15 உறுப்பினர்களோடு எங்கள் மகளிர் குழு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சந்தா பணம் வசூலிப்பது, உறுப்பினர்களிடையே வட்டிக்கு விடுவது என மற்ற மகளிர் குழுக்களைப் போலத்தான் இயங்கிவந்தோம்.
தொழில் செய்யும் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
குழுவாகச் சேர்ந்து ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால், அனைவரும் பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பதால், அதற்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணமும் இருந்தது.
கிராமப் பகுதியாக இருப்பதால் கறவை மாடுகளை வாங்கலாம் என முடிவு செய்தோம்.
2005-ல் ஒரு நபருக்கு ரூ. 12 ஆயிரம் வீதம், வங்கியில் கடன்பெற்று 15 பேரும் ஆளுக்கு ஒரு கறவை மாட்டை வாங்கினோம்.
தினசரி பட்டாசு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டே, மாடுகளையும் பராமரித்து வந்தோம். சிரமமாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும், மாதந்தோறும் தலா ரூ. 1500 வரை கிடைத்தது. ஆனால், வறட்சிக் காலத்தில் மாடுகளுக்கு போதிய புல் தீவனம் கிடைப்பதில் பிரச்னை வந்தது. இதனால்
2007-ல் மாடுகளை விற்று விட்டோம்.
மசாலாப் பொடி வியாபாரத்தில் நுழைந்தது எப்படி?
மாடுகளை விற்றவுடன், பணி ஓய்வுநாளில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என எண்ணினோம். அப்போது, மசாலாப் பொடி தயாரித்து விற்றால் என்ன எனத் தோன்றியது. அன்றாட சமையலுக்கு மசாலாப் பொடி இன்றியமையாதது என்பதால், 2007-லேயே மசாலாப் பொடி மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினோம்.
இவற்றைத் தயாரிக்க போதிய நேரம் கிடைக்கிறதா?
வாரத்தில் ஆறு நாள்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் சென்று விடுவோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று மசாலாப் பொடியை மில்லில் அரைத்து வருவோம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அவற்றைப் பாக்கெட்டுகளாகப் போடுவோம். பின்னர் கிராமத்தில் தேவையானவர்களுக்கும், பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்களுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கடைக்கும் மசாலாப் பொடியை விற்று வருகிறோம்.
அதேபோல, ஒரு வாரம் அப்பளம் தயாரித்து, மசாலாப் பொடியுடன் சேர்த்து விற்பனை செய்கிறோம். எங்களது தயாரிப்புகள் தரமாக இருப்பதால், அனைவரும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தருகின்றனர்.
இத்தொழில் மூலம் வருமானம்..?
போதிய நேரம் கிடைக்காததால், வியாபாரத்தை விரிவுபடுத்த முடியவில்லை. எனினும் தற்போது ஒரு உறுப்பினருக்கு மாதம் குறைந்தது ரூ. 600 வரை கிடைக்கிறது.
குறைவான வருவாய் கிட்டினாலும், சொந்தத் தொழில் என்பதால் நிறைவாய் இருக்கிறது.
இந்த சிறிய வருமானம் எங்கள் கைச்செலவுக்குப் போதுமானதாக உள்ளது. விடுமுறை நாளில் வீட்டில் இருப்பதற்குப் பதிலாக வேலை செய்வதும் பிடித்துள்ளது. இதற்கு அதிக உடல் உழைப்பும் தேவைப்படாது.
சிறந்த மகளிர் சுய உதவிக்குழுவுக்கான விருதைப் பெற்றது..?
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 2010, 2008-2009-ல் மாவட்டத்தில் சிறந்த மகளிர் சுய உதவிக் குழு என்ற மணிமேகலை விருதை, மத்திய அமைச்சர் தின்ஷாபட்டேல் வழங்கினார்.
சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை, ஒன்றிய அளவில் சிறந்த மகளிர் குழு என்ற விருதை வழங்கியுள்ளது. விருதுகள் எங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசுகள்.
எதிர்காலத் திட்டம்..?
எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள்.
பல இடங்களில் பட்டாசு தயாரிக்க 10 அறைகள் வைத்திருப்பார்கள். அதில், ஒவ்வொரு அறையாக தனித்தனியே ஆண்டு குத்தகைக்கு விடுவர். அதில், இரு அறைகளை குத்தகைக்கு எடுத்து தொழிலை விரிவாக்கும் திட்டம் உள்ளது.
தற்போது வங்கியில் கடன் உள்ளது. அந்தக் கடனைச் செலுத்திய பின்னர், பட்டாசுத் தொழிலில் ஈடுபட, வங்கியில் கடன் கேட்க உள்ளோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


