மாடு விரட்டிய கரங்களையும் புத்தகம் ஏந்தச் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். படிப்பு என்றால், என்னவென்றே தெரியாத குக்கிராமங்களில் பள்ளிகளை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களுக்குக் கல்வி ஒளியை ஏற்படுத்தியவர் காமராஜர். அப்படிப்பட்ட காமராஜரின் ஒவ்வொரு பிறந்த
நாளையும், 3 தினங்கள், கோவில் திருவிழா போல, மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர் ஒரு குக்கிராமத்தினர். அந்த வகையில் 44வது ஆண்டையும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து, சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லெட்சுமிபுரம் என்ற கிராமம்தான் இத்தகைய சிறப்புக்குரிய கிராமம்.
இக்கிராமத்தில், அண்மையில் மூன்று நாட்கள் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவைக் காண முடிந்தது. இந்தப் பிரம்மாண்டமான விழாவில், இக்கிராம மக்கள், குடும்பம், குடும்பமாக மகிழ்ச்சி கரைபுரள ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். இது குறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த, கிராம நல அபிவிருத்தி சங்கத்தின் கல்விக் குழுத் தலைவர் டி.குத்தாலிங்கம் நம்மிடம் பேசியதில் இருந்து...
""காமராஜர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில்,1963 - ல், எங்கள் ஊரில் ஒரு தொடக்கப்பள்ளிக்கு அனுமதி அளித்து,அவரே நேரில் வந்து திறந்து வைத்தார்.
அந்தப் பள்ளிதான் ஜோதி தொடக்கப்பள்ளி. படிப்பறிவே இல்லாத எங்கள் கிராமத்தினர் இந்தப் பள்ளி மூலம் படிப்படியாக கல்வி அறிவு பெற ஆரம்பித்தனர்.
எங்கள் கிராமத்திற்குக் கல்வி ஒளியை ஏற்றிய காமராஜருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் காமராஜர் பிறந்த தினவிழாவை, 3 தினங்கள் பிரம்மாண்டமாக நடத்திவருகிறோம். இந்த ஆண்டு 44 வது ஆண்டு விழாவாகும்.
பெருந்தலைவர் காமராஜர் 1975 - ல் மறைந்த போது, முதல்ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில், உள்ளூர் மக்கள் சம்பளமே வாங்காமல் செய்த அயராத உழைப்பால், சிலை அமைத்தோம். தமிழகத்திலேயே நாங்கள்தான் காமராஜருக்கு முதன் முதலாகச் சிலை அமைத்ததாகக் கூறப்படுவதுண்டு. அப்போது ஜனதாகட்சியின் தலைவராக இருந்த பா.ராமச்சந்திரன், குமரிஅனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆரம்பத்தில் சிவாஜி மன்றம் என்ற பெயரில் விழா நடத்தினோம். பின்பு காமராஜர் நற்பணிமன்றம் என்ற பெயரில் நடத்தி வருகிறோம். ஆரம்ப காலத்தில், காமராஜர் பிறந்தநாள் விழாவை, வில்லிசை, மேளதாளத்துடன் காமராஜர் படம் வைத்த சப்பரம் வீதி உலா வருதல், காமராஜர் வேடமிட்ட கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடத்தி வந்தோம்.
தற்போது முதல் நாள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகிறோம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவர் செய்த சாதனைகளையும், அவர் குறித்த விவரங்களையும் தற்போது உள்ள தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
இரண்டாம் நாள் முழுக்க, அவர் திறந்து வைத்த பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களைக் கொண்டே, முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் முதலான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்துகிறோம். மூன்றாம் நாள் உள்ளூர் இளைஞர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, சிலம்பம், களியல் ஆட்டம், இரவு நாடகம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்துகிறோம். வெளியூரில் இருந்து ஏராளமானோர் இந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க வருகின்றனர்.
எங்கள் ஊரில், எத்தனையோ குடும்பக் கோவில்கள், ஊர்ப் பொதுக்கோவில்கள் உள்ளன. அதற்கெல்லாம் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மக்கள் கூடுவர். ஆனால் காமராஜர் பிறந்ததின விழா கொண்டாட்டத்தில் மட்டுமே அனைத்து பொதுமக்களும், சாதி, மத, அரசியல் சாயம் இன்றி கலந்து கொள்வர். ஒவ்வொரு வீட்டில் இருந்தும் நன்கொடை பெற்று இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.
எல்லா வீட்டிற்கும் விருந்தினர்கள் அழைக்கப்படுவர். குறிப்பாக இவ்வூரில் இருந்து வெளியூருக்குக் கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களைக், கணவருடன் அழைத்து விருந்து உபச்சாரம் செய்வது வழக்கம். சென்னை, மும்பை உள்ளிட்ட வெளியூரில் வேலை செய்யும் இப்பகுதி இளைஞர்கள் கூட, காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு ஊருக்கு கண்டிப்பாக வருவர். ஏனென்றால் அன்று உறவினர்கள் மட்டுமன்றி அனைத்து நண்பர்களையுடம் கூட ஒரு சேர காணமுடியும்.
இந்த விழா அனைத்துமே, இக்கிராமத்திற்குக் கல்விக்கண் அளித்த காமராஜருக்காகதான்'' என்றார்.