

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் எவை?
செ.இ.ரவிச்சந்திரன், கொத்தமங்கலம்.
சுமார் 10 மிலி (2 ஸ்பூன்) கற்றாழைச் சோறுடன் கால் ஸ்பூன் (1.25 மிலி) விரலி மஞ்சள் தூள் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேனும் சேர்த்துச் சாப்பிட, கல்லீரல் (லிவர்) மற்றும் மண்ணீரல் (ஸ்பிலீன்) பகுதிகள் சுத்தமடைகின்றன. ரத்த ஊறல் ஏற்படும் இந்தக் கேந்திரங்களின் சுத்தியால், ரத்தமும் சுத்தமடைகிறது. ரத்தக் கேட்டினால் ஏற்படும் மூட்டுவலி, வீக்கம், எரிச்சல் போன்றவை இதனால் குணமடைந்துவிடும் என்று ஆயுர்வேத மருத்துவப் புத்தகமான சாரங்கதர ஸம்ஹிதையில் காணப்படுகிறது.
மாதவிடாய் சரியாக ஆகாத பெண்களுக்கு, கற்றாழை இலையை மேல் பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும் கத்தியால் சீவி, துணியால் சுற்றி மாதவிடாய் வரும் துவாரத்தினுள்ளே சொருகி வைத்தால், ரத்தப்போக்கு வலியின்றி நன்றாக ஏற்படும் என்று ஷோடஷாங்கஹிருதயம் எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.
பாதி வெந்த நிலையிலுள்ள தீக்காயங்களில், கற்றாழைச் சோற்றைப் பூசினால், காயங்கள் விரைவில் ஆறிவிடும்.
புளித்த கஞ்சியுடன் நல்லெண்ணெய்யும் கற்றாழைச் சோறும் கலந்து பழுக்காத கட்டிகளில் பூசினால் அவை விரைவில் பழுத்து உடைந்துவிடும்.
கற்றாழை இலைகளினுள்ளே பிசுபிசுப்புடன் காணப்படும் சோற்றை மட்டும் எடுத்துக் காய வைத்து, மூக்குப் பொடி போல உறிஞ்ச, மஞ்சள் காமாலை நோய் விரைவில் மட்டுப்படும் என்று பாவமிஸ்ரர் எனும் முனிவர் குறிப்பிடுகிறார்.
சோற்றுக் கற்றாழை வீர்யத்தில் குளிர்ச்சியானது. கசப்பும் இனிப்பும் கலந்து சுவை கொண்ட அதனை உள்ளுக்குச் சாப்பிட்டால் நல்ல ஒரு மலமிளக்கியாகச் செயல்படும். சளித் தொல்லையால் ஏற்படும் காய்ச்சலுக்கு காற்றாழைச் சோறு சாப்பிட விரைவில் காய்ச்சல் குணமாகும். பித்த ரத்தங்களால் ஏற்படும் தோல் எரிச்சல், புகைச்சல், சூடு, சிவப்புக் கொப்பளங்களில் வெளிப்பூச்சாகப் பூச, நல்ல ஒரு கிருமி நாசினியாகவும், சூட்டைத் தணிக்கும் மருந்தாகவும் பயன்படும். அதிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகைத் தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண்களுக்கு மிகவும் நல்லது. விஷங்களை முறிக்கும் சக்தி கொண்டது. உடல் நரம்பு வலியைப் போக்கும். கற்றாழையை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் குமார்யாஸவம் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட, உடல் புஷ்டி, இளமையான தோற்றம், உடல் வலு, நிறம், பசி ஆகியவை மேம்படும். ஆண்களுக்கு போக சக்தியை வளர்க்கும் என்று கைய தேவ நிகண்டுவில் காணப்படுகிறது.
கற்றாழையின் பூவை இடித்துப் பிழிந்து சாறு அல்லது சிறிது நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட, குடலில் வாயு மற்றும் பித்த சேர்க்கையைத் தணிக்கும். குடல் கிருமிகளை வெளியேற்றும். எளிதில் செரிக்காது என்பதால் உணவுக்கு 1 மணி நேரம் முன்னதாகச் சாப்பிடுவது நல்லது.
கற்றாழையின் தொடர் உபயோகம் புத்திக்கு நல்ல தெளிவை ஏற்படுத்தி அறிவை வளர்க்கும் என்று பாவபிரகாசர் தெரிவிக்கிறார்.
சீரகத்துடன் கற்றாழைச் சோற்றைச் சேர்த்து அரைத்துப் புண்களில் பற்றிட அங்குள்ள எரிச்சல், பழுத்த நிலை போன்றவை விரைவில் குணமடைந்துவிடும் என்று ரஸ ரத்தன சமுச்சயம் எனும் நூல் கூறுகிறது.
ரஜபிரவர்த்தினீ வடி எனும் ஆயுர்வேத மாத்திரை மருந்தில் கற்றாழை முக்கிய மூலிகைப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. மாதவிடாயைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் இம்மருந்தை, காலை மாலை ஒரு மாத்திரையை வெதுவெதுப்பான தண்ணீருடன் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
நவீன ஆராய்ச்சிகளின் பலனாக, கற்றாழையிலிருந்து முடி வளர்ச்சிக்கான மருந்துகளும், பொடுகுத் தொல்லை நீங்கவும், முகப்பரு குணமாவதற்கும் மேலும் பலதரமான மருந்துகளும் வரத் துவங்கியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.