ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

புள்ளிகள்

பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியேற்றதும் அவரிடம் ஒரு நிருபர், 'தங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டதா?' என்று கேட்டார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 10:34 pm

பிரதமர் மொரார்ஜி தேசாய் பதவியேற்றதும் அவரிடம் ஒரு நிருபர், 'தங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டதா?' என்று கேட்டார்.

அதற்கு மொரார்ஜி, 'என்னுடைய லட்சியம் பிரதமராவது அல்ல; சத்தியத்தையும் கடவுளையும் அறிவதே!' என்று பதில் கூறினார்.

வினோபாவுக்கு பல மொழிகள் தெரியும். ஒருமுறை அவரைப் பேட்டி காண வந்த நிருபர், 'உங்களை எந்த மொழியில் பேட்டி காணலாம்' என்றார்.

அதற்கு வினோபா, 'எனக்கு மிகவும் பிடித்த மொழி மௌனம்' என்று கூறினார்.

'சு.சமுத்திரம் என் நண்பர். அவர் ஒரு நாள் புத்தகக் கண்காட்சியைப் பார்த்துவிட்டு என்னிடம், 'புத்தகக் கண்காட்சியில் உன் நூல்கள் நிறைய விற்பனையாகின்றன. நீ என்ன அவ்வளவு மோசமாகவா எழுதுகிறாய்?' என்று கேட்டார்.

ஒரு நூல் அதிகமாக விற்க வேண்டும் என்றால், மோசமாக எழுத வேண்டும் என்ற ரீதியில்தான் அவர் அப்படிக் கேட்டார். அந்தக் கால நிலைமை அப்படி!' என்று நிகழ்ச்சியொன்றில் தென்கச்சி சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

'1971-இல் 'ஈஸ்வரோ ரஷது' எனும் பிரார்த்தனையோடு 'துக்ளக்' இதழில் என்னை எழுதச் சொன்னார் சோ. அந்தக் கட்டுரைத் தொடர் முழுவதிலும் அவர் பெயரைக் குறிப்பிடுகிற வாய்ப்பு என் அரசியல் அனுபவத்தில் வரவில்லை.

அவரை ஓர் அமெச்சூர் நடிகராக நான் பார்த்தவன். இன்று ஒரு தேர்ந்த அரசியல் பத்திரிகையாளராக அனுபவத்தால் அவரைக் காண்கிறேன். ஒரு பத்திரிகையாளர், ஓர் எழுத்தாளர் என்கிற என் நல்லுறவை மிக நாகரிகமாக சோ காப்பாற்றினார்' என்று 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' எனும் நூலில் ஜெயகாந்தன் எழுதியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி, தனது தாய் லலிதாங்கியுடன் சென்னைக்கு வந்தார். பின்னர், அவர் 'மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி' என்று எம்.எல்.வசந்தகுமாரியாக மாறினார். இவர் விகடம் கிருஷ்ணமூர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்டார்.

1952-இல் வந்த 'மூன்று பிள்ளைகள்' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த வசந்தகுமாரிக்கு, முகத்தசையில் ஏற்பட்ட பாதிப்பால், திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாட்டிலேயே முதலில் சுதந்திர முழக்கப் பாடலை ஒலிநாடா வடிவில் பாடியவர் வசந்தகுமாரி.

சிறுவயதில் புரந்தரதாசர் கீர்த்தனைகளுக்கு அவர் ஸ்வரங்களை எழுதினார். அவரை புகழ்பெற்ற இசைக் கலைஞர் ஜி.என்.பாலசுப்பிரமணியன் முழு நேரப் பாடகியாக மாற்றினார். ராகங்களையும், ஆலாபனைகளையும் மேடையில் எப்படி கற்பனை விரிகிறதோ, அதற்கேற்ப மெருகேற்றி மேல் கட்டையில் சிறப்புற பாடும் திறமையுடையவர் வசந்தகுமாரி.

'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...' எனும் பாரதியாரின் பாடலும், 'மணமகன்' எனும் படத்தில் இடம்பெற்ற 'எல்லாம் இன்ப மயம்' எனும் பாடலும் வசந்தகுமாரி பாடியுள்ளார். அத்துடன் கர்நாடக இசையிலும், தமிழ், மராத்தி மொழிகளிலும் பாடியுள்ளார்.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

பழம்பெரும் நடிகையான சுஷ்மா சேத், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். 'கபி குஷி கபி காம்', 'தீவானா', 'எ லவ் ஸ்டோரி', 'தமாஷா' உள்ளிட்ட படங்களின் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சுஷ்மா சேத். நாட்டின் முதல் மெகா சீரியல் என்று அறியப்படும் 'ஹம்லோக்' என்ற தொடரில் நடித்தவர். இவர் தனது அழகாலும், தனித்துவமான நடிப்பாலும் முத்திரை படித்தவர். தற்போது அவருக்கு 90 வயதாகிறது. இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார்.

இதற்கு அவர், 'நான் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தியானம், யோகா, சுவாசப் பயிற்சி, நடைப்பயிற்சியை யார் உதவியின்றி தனியாளாக மேற்கொள்கிறேன். உடலையும், மனதையும் சீராக வைக்க இது முக்கியமான யோகப் பயிற்சியாகும். இதை நாள்தோறும் செய்துவந்தால், கவலை, மன அழுத்தம் நீங்கி நுரையீரலின் திறன் மேம்படும். ஆயுளை நீட்டிக்க உதவும்' என்கிறார்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

பகதூர்ஷாவிடம் இருந்து மானியமாகப் பெற்ற இடத்தில் ஓர் ஊரை தோஸ்த் முகம்மது கான் உருவாக்கினார். இதற்கு தனது மனைவி 'பத்ஹ்கர்' (தற்போது போபால்) பெயரை சூட்டியதோடு, நவாப் ஆனார் தோஸ்த் முகம்மது கான். இவரின் வழித்தோன்றல்கள் 1740-இல் இருந்து போபாலை ஆண்டனர். போபாலை நவாப் பைஸ் முகம்மது கான் தலைநகரமாக்கினார். 1814-இல் நவாப் பேராட்சி நடைபெற்றது.

1820-இல் நவாப் நாதிர்ஷாவின் மனைவி குத்ஸியா பேகம், அவருக்குப் பின்னர் அவரது மகள் சிக்கந்தர் பேகம் ஆட்சிபுரிந்தனர். 1868-இல் சிக்கந்தர் பேகத்தின் மகள் சாஜஹான் பேகம் ஆட்சியை சாதுர்யமாக நடத்தினார். 1901-இலிருந்து சாஜஹான் பேகத்தின் மகள் சுல்தான் ஜஹான் பேகம் 25 ஆண்டுகள் ஆட்சியைச் சிறப்பாக நடத்தினார். இவரோடு 107 ஆண்டுகள் பெண்ணாட்சி நிறைவடைந்தது. இவருக்குப் பின்னர் அவருடைய மகன் ஹமீதுல்லா கான் ஆண்டார். இவரே போபாலின் கடைசி நவாப். சுதந்திரத்துக்குப் பின்னர் போபால் இந்திய குடியரசில் இணைந்தது.

'இந்திய வரலாற்றில் பெண்களின் பெருமையைப் பறைசாற்றிய முறையான ஆட்சி, நினைத்துப் பார்த்துப் பாராட்டும் சீரான, சிறப்பான ஆட்சி, பொறுப்பான ஆட்சி, பொறுமைமிகு பெண்களின் திறமையான ஆட்சி' என்றால் இந்த 107 ஆண்டு கால ஆட்சியே நினைவுக்கு வரும்.

-வி. கண்ணன், கும்பகோணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.