ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிறுகதை: கிளிக்கூண்டு

திருச்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவில், கரிகால் சோழனால் கி.பி. இரண்டாம்  நூற்றாண்டில்  காவிரியையும் கொள்ளிடத்தையும் இணைக்கும் உள்ளாற்றின் குறுக்கே  கல், களிமண் கொண்டு  ஓர் அணை கட்டப்பட்டது. 1804-ம் ஆண்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:58 am

முத்துகுமார்

திருச்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவில், கரிகால் சோழனால் கி.பி. இரண்டாம்  நூற்றாண்டில்  காவிரியையும் கொள்ளிடத்தையும் இணைக்கும் உள்ளாற்றின் குறுக்கே  கல், களிமண் கொண்டு  ஓர் அணை கட்டப்பட்டது. 1804-ம் ஆண்டு கரைகள் உயர்த்தப்பட்டு அணை சீர் செய்யப்பட்டது...- கல்லணைப் பற்றிய குறிப்பை படித்துக் கொண்டிருந்தேன்.

"மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்ய கட்டணச் சலுகையை 40 சதவீதமாக உயர்த்தி ரயில்வே பட்ஜெட் போட்டிருக்காங்க மம்தா பானர்ஜி. பெண்களுக்கான வயது வரம்பையும் 58 ஆக குறைச்சிருக்காங்க தெரியாமா?'-ஆங்கில நாளிதழில் நிருபராகப் பணிபுரியும் தோழி சசிகலா கேள்விக் கணையுடன் வீட்டுக்குள் பிரவேசித்தாள்.

"நம்ம நாட்டிலே அரசாங்கத்துக்கும், அரசியல்வாதிக்கும் மகளிர் மேலேதான் எத்தனை கரிசனம்! எனக்கு நீ சொன்ன சலுகையைப் பெற பாட்டி யாரும் இல்லையே'

"எங்க பக்கம் பாட்டிகளுக்குப் பஞ்சமே இல்லேப்பா. கொள்ளு பாட்டி கூடஇரண்டு பேரு  இருக்காங்க'

"அரசு தொட்டிலிலே போடப்பட்ட ஓர் அனாதை குழந்தையா என்னோட வாழ்க்கை இருபந்தைந்து வருடங்களுக்கு முன் தொடங்கியதையும், உறவுன்னு சொல்லிக்க எனக்கு யாரும் இல்லேன்னும் குத்திக் காட்டறே இல்லே"

 "சாரிடீ! வர்மக் கலை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கே. பாரதியோட புதுமைப் பெண் மாதிரி தோற்றமும் இருக்கு. பேசவும் செய்யறே. ரௌத்திரம் பழகுன்னு அவர் சொன்னதையும் தப்பாம கச்சிதமா கடைப்பிடிக்கிறே. மீசை வேணா வரைஞ்சு விடட்டுமா'

நான் பதில் ஏதும் பேசாது கடந்த கால சோகம் மனதில் நிழலாட நாற்காலியில் அமர்ந்தேன்..

"போலீஸ்கார நண்பியோட பந்தாவா கல்லணை போகப்போறோம்னு வந்தா நீ மப்டி டிரஸ்ஸிலேயே ரெடியாயிட்டே போல இருக்கு'- என்னருகில் வந்து தலையை வருடினாள் சசி. கோபம் தணியாது நான் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன்.

"மலைக்கோட்டை இருக்கற சின்னக் கடை தெருவிலே நீ  குடியிருக்கிறது எனக்கு ரொம்ப சௌகரியமா இருக்கு, உன்னைப் பார்க்க வந்தா பிள்ளையார் தரிசனமும், சூர்யாவிலே டிபனும் ஈஸியா கிடைச்சுடுது. வார விடுமுறை ரெண்டு பேருக்கும் சனிக்கிழமையா  இருக்கறதாலே நினைச்ச இடத்துக்கு சேர்ந்து போக முடியுது'- சகஜ நிலைக்கு என்னைக் கொண்டு வர பேச்சை மாற்றினாள் சசிகலா.

சத்திரம் பஸ் நிலையம்.  கல்லணை செல்லும் பஸ்ஸýக்காக காத்திருந்தோம். டீ, காபி இரண்டு முறை குடித்தாகிவிட்டது. பொறுமையைச் சோதித்துவிட்டு ஒரு வழியாக திருவானைக்கோவில் வழியாக கல்லணை செல்லும் 2-ம் எண் அரசு போக்குவரத்துக் கழக பஸ் வந்தது.

சசிகலாவுக்கு மட்டும் உட்கார இடம் கிடைத்தது. நான் நின்று கொண்டேன்.

முதல் மீசையே மழிக்கப்படாத தோற்றத்தில் வளர் இளம்பருவ கல்லூரி, பள்ளி மாணவர்களும், அவர்களது வயதில் மாணவிகளும் பஸ்ûஸ பெருமளவு ஆக்கிரமித்திருந்தனர்.

"என்னடா  ரோமியோ, பார்ட்டி இன்னும் படியலையா, ஒரே கிளியோட மூன்றாவது சனிக்கிழமையா சுத்தறே'- பஸ்ஸின் கூரை தலையை இடிக்கும் அளவுக்கு உயரமாக என் முன்னால் ஜோடியுடன் நின்று கொண்டிருந்த மாணவன் காதில் கிசுகிசுத்தவாறு என்னை உரசிக் கொண்டு முன்னே சென்றான் ஒரு தடியன். அவனை லாக்கப்பில் தள்ளி முட்டிக்கு முட்டி  தட்ட வேண்டும் என்று மனதில் கருவிக் கொண்டேன்.

பஸ் திருவானைக்கோவிலை நெருங்கிக் கொண்டிருந்தது. கூட்டம் குறைந்தபாடில்லை.

என் முன்னால் நின்ற மாணவன், சுடிதார் அணிந்து சற்று குள்ளமாக இருந்த அவனது ஜோடியைச் சீண்டிக் கொண்டிருந்தான். பயணிகள் பார்க்கிறார்களே என்ற வெட்கமே இன்றி அவளது உடலில் விரும்பிய  இடங்களில் கைகளைப் பரவ விட்டான். முட்டிக்காலை மடித்து உயர்த்தி அவளது பின்புறத்தில் தட்டினான்.

செல்போனில் எடுக்கப்பட்ட இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ஏராளமான புகைப்படங்களைக் காட்டி அவளிடம் ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்தான். மஞ்சள் பூசி குளிக்காததால் மீசை அரும்பியிருந்த சற்று மாநிறமான அவளைப் பார்க்கும்போது எனக்கு பாவமாக இருந்தது. கூடவே எரிச்சலும் வந்தது. பஸ் கண்டக்டர் எதையும் கண்டு கொள்ளாது கூட்டத்தில் லாகவமாக புகுந்து டிக்கெட் தந்துவிட்டு தனது ஆசனத்தில் அமர்ந்து ரூபாய் நோட்டுக்களை எண்ணி அடுக்கிக் கொண்டிருந்தார்.

"பெத்தவங்க எத்தனையோ கனவுகளோட பிள்ளைகளை படிக்க அனுப்பறா. இதுகள் இப்படி கெட்டு சீரழியறதுகள். கலி ரொம்பத்தான் முத்திப் போச்சு' பஸ்ஸில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் முணுமுணுத்தார். "வாயை மூடிண்டு வாங்கோ. அவனை பாத்தா பெரிய இடத்து புள்ளை மாதிரி இருக்கான். காதிலே விழுந்தா ஆளை வச்சு அடிச்சுடுவான். நமக்கேன் வீண் வம்பு'-கணவர் வாய்க்கு கடிவாளம் போட்டாள் மனைவி.

கிளிக்கூடு கிராமத்தை நெருங்கிக் கொண்டிருந்தது பஸ். இரண்டு சீட்டுகள் முன்னால் காலியாகவே, அவளை நெட்டித் தள்ளிக் கொண்டே முன்னால் விரைந்தான் பஸ் நாயகன். கசங்கிய டிக்கெட்டை கீழே நழுவ விட்டு  சென்றாள் அவள்.

சந்தேகத்துடன் அதைப் பிரிந்து பார்த்தேன்.  "சேவ் மீ' என்று அதில் ஆங்கிலத்தில் கிறுக்கியிருந்தது. ஜோடி இருக்குமிடம் கண்களைத் திருப்பினேன். உட்கார இடம் கிடைத்துவிடவே அவன் அவளது  தோளில் வலது கையை வாகாகப் போட்டுக் கொண்டு ஏதோ கதை அளந்து கொண்டிருந்தான். திரைப்பட இயக்குநர்கள் கண்ணில் பட்டால் இளம் வில்லன் ரோலுக்கு கொத்திக் கொண்டு போய் விடுவார்கள்.

சசி உடன் வருவதையே மறந்துவிட்டது. இப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவள் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன்.

"என்பக்கமே நீ வரலையே. கல்லணையே வந்தாச்சு. அப்படி என்ன வேடிக்கை வேண்டியிருக்கு. எனக்கும் மாறி மாறி ஏதோ போன் வந்துகிட்டே இருந்தது. முக்கியமான அசைன்மென்ட் கவர் செய்ய வேண்டியிருக்கறதாலே கிளம்பி வர முடியுமான்னு ஆபிஸ்லே கேட்டாங்க. என்னாலே மறுக்க முடியலை. வந்த பஸ்ஸிலேயே திரும்பிடலாம்னு பாக்கறேன். மாலை 5 மணிக்கு ஃப்ரியாயிடுவேன். காவலன் படத்துக்கு வேணா போகலாமா?'

"இல்லேடி நீ கிளம்பு! நான் சீக்கிரம் வந்துட்டா உனக்கு போன் செய்யறேன்'

"380 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலமுள்ள அணையை தனியா சுத்தி வந்தா போரடிக்குமேடி. அடுத்த வாரமே நாம திரும்பி வரலாமே-திருச்சிக்குத் திரும்ப துணைக்கு அழைத்தாள் சசிகலா.

சமாதானம் சொல்லி சசியை அனுப்பிவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கினேன். காவிரியில் 13 மதகுகள், வெண்ணாற்றில் 9 மதகுகள், மணற்போக்கியில் 5 மதகுகள், கொள்ளிடத்தில் 30 மதகுகள் கொண்ட  அணை பிரமாண்டமாய்த் தெரிந்தது. திடீரென மழை தூற ஆரம்பித்தது.

பஸ்ஸில் பார்த்த ஜோடியைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். குளிக்க தடை செய்யப்பட்ட இடம் என்று ஆபத்து எச்சரிக்கை அறிவிப்பு இருந்த இடத்தில் பயம் இன்றி பலர் குளித்துக் கொண்டிருந்தார்கள், பஸ்ஸில் பார்த்த ஜோடிக்கிளிகள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பரஸ்பரம் தண்ணீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணுக்கு பாவம் பார்த்தது தவறோ? திருச்சிக்கு சசியுடன் திரும்பி போய் இருக்கலாமோ- மனசு ஊசலாடியது.

அணையின் ஒருபகுதியில் அனுமார் கோயில் இருப்பது ஞாபகத்துக்கு வரவே அந்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து அங்கு செல்லும் படிகளில் மெதுவாக இறங்கினேன். பின்னால் வேகமாக ஓடி வந்தாள் அந்தப் பெண். "அருண் அயோக்கியன்னு தெரியாம மாட்டிக்கிட்டேன். காப்பாத்துங்க மேடம்'- ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது அவளுக்கு.

"என்ன படிக்கிறே?'

"பிளஸ் ஒன் மேடம்'

"வளர் இளம்பருவத்திலே அற்ப பாலுணர்வுக்குப் பலியாயிடாதே. அப்புறம் எதிர்காலமே பாழாயிடும். உலகம் மோசமாதான் இருக்கும். நாமதான் கவனமா இருக்கணும்.

இரும்புக் கம்பியிலே செய்திருந்தாலும்,வெள்ளிக் கம்பியிலே செய்திருந்தாலும் ஏன் தங்கத்திலேயே செய்திருந்தாலும் கிளிக்கூண்டு கிளிக்குச் சிறைதான். சுதந்திரத்தைப் பறிகொடுத்திட்டு கூண்டுக்குள்ளே சிக்கிடாதே. அப்புறம் காலத்துக்கும் அதிலிருந்து மீளமுடியாது'

கோயிலை நாங்கள் அடைந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, அவனும் வந்துவிட்டான்.

"டாய்லெட் போயிட்டு வரதுக்குள்ளே எங்கேடி ஓடிட்டே?'

"கோயில் மாதிரி தெரிஞ்சது, அதுதான் பார்க்கலாமேன்னு...'

"என்கிட்ட சொன்னா நானே அழைச்சிக்கிட்டு வருவேனே. ஏமாத்திட்டு போகலாம்னு நினைச்சே அணையிலேயே தள்ளிட்டு போயிடுவேன். ஜாக்கிரதை'- அவனின் அடாவடி அதிகரிக்கவே நான் குறுக்கிட்டேன்.

"அவளை விட்டுவிடு அருண்'

"பாருடா! பேரு வரைக்கும்  தெரிஞ்சு போச்சா. அனாவசியமா இதிலே நீங்க தலையிடாதீங்க'

"படிக்கிற வயசிலே இப்படிக் கூத்தடிக்கிறீங்களே. வெட்கமாயில்லை.  விருப்பம் இல்லாத பெண்ணை கூட்டிகிட்டு...'

"மேடம் நிறுத்துங்க. விருப்பம் இல்லாமதான் நான் வாங்கிக் கொடுத்த செல்போனை  வச்சிருக்காளா. சாரதாஸிலே வாங்கிக் கொடுத்த புது சுடிதாரை போட்டுக்கிட்டு வந்திருக்காளே. எனக்கு கூலி வேண்டும். அதை தரச் சொல்லுங்க. அப்புறமா வாங்க, நானே தாராளமா அனுப்பி வைக்கிறேன்,

எனக்கு முகமெல்லாம் சிவந்து கோபம் உச்சக் கட்டத்தை எட்டியது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டேன்.

"மேடம்! நான்  விருப்பத்தோடதான் இவரோட கூட இருக்கேன். ஏன் எங்களையே தொடர்ந்து வந்துகிட்டு இருக்கீங்க. உங்க வேலையை பாத்துக்கிட்டு போகமாட்டீங்களா' -பிறழ் சாட்சியாய் பல்டி அடித்து அவள் போட்டாளே ஒரு போடு.

"அடிப்பாவி!"

"என்ன அசந்து போய் நின்னுட்டீங்க. உங்களுக்கு  என்னை விட ஒரு ஐந்து வயசு கூட இருக்கலாம். இவளை விட ரொம்ப நல்லாவே இருக்கீங்க. தேவைப்பட்டா இந்த செல் போன் எண்ணிலே தொடர்பு கொள்ளுங்க' ஒரு காகிதத்தை கையில் திணித்து விட்டு அவளை அணைத்தபடி கோயிலிலிருந்து மேலே  அணைக்கு செல்ல படிகளில் ஏறினான். அவமானத்தில் கூனிகுறுகிப் போனேன்.

போலீஸ் நிலையத்தில் முறையாகத் தெரிவித்து விட்டு பிரச்னையை அணுகியிருக்கலாமோ-மனசு  அலைபாய்ந்தது. சக பெண் கான்ஸ்டபிள் ரேணுகாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அருணைப் பற்றி விசாரித்தேன். "நல்லவேளை என்கிட்ட கேட்டே. எம்.எல்.ஏ.வோட கடைக்குட்டி அவன். ஒட்டடை குச்சிக்குச் சேலை கட்டி விட்டா கூட முறைச்சு பாக்கற பொம்பளை பொறுக்கி அவன். வேலியிலே போற ஓணானை வீணா மடியிலே எடுத்து விட்டுக்காதே'- எச்சரித்தாள் ரேணுகா.

இவ்வளவுக்குப் பிறகும் அருணிடம் மாட்டிக் கொண்டுள்ள பெயர் தெரியாதவளைக் கைவிட மனம் இடம் கொடுக்கவில்லை. அனுமாரை ஒருமுறை சேவித்துவிட்டு படிகளில் மேலே ஏறினேன். செல்போன் மணி மாலை 5.30 என்று காட்டியது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை எப்போது வேண்டுமானாலும் வரலாம் போல் இருந்தது.

சூடாக ஒரு காப்பியை குடித்துவிட்டு கரிகால் சோழன் கம்பீரமாக யானையில் அமர்ந்திருக்கும் சிலை அருகே நின்றேன். கரிகாலன் என்றால் தீயவர்களான பகைவர்களுக்கு எருமை வாகனமுடைய காலனைப் போன்றவன் என்று எப்போதோ படித்தது நினைவில் வந்தது.

அணை வெறிச்சோடியிருந்தது. ஆங்காங்கே ஓரிருவர் அவசரம் அவசரமாக பஸ் பிடிக்க விரைந்து கொண்டிருந்தனர். அருணும் அவளும் எங்கே போயிருப்பார்கள். அவளை  மீட்க முடியுமா- யோசித்தபடி நடந்தேன். அணைப் பகுதியிலிருந்து கருப்பண்ணசாமி கோயிலுக்கு செல்லும் பாதை தெரிந்தது. கோயிலை மேலிருந்து எட்டிப் பார்த்தேன். அவனும் அவளும் மிகவும் நெருக்கமாக அங்கே அமர்ந்து இருப்பது தெரிந்தது.

சுற்றிலும் பார்த்தேன்.

யாருமில்லை. பூனையைப் போல ஓசைப்படாது கோயிலுக்குச் செல்லும் பாதையில் கவனமாக இறங்கினேன். கை வைத்துப் பார்க்காமலே இதயம் துடிப்பது காதுக்குக் கேட்டது.

 "நீ என்ன போலீஸ்காரியா. விடாம எங்களையே துரத்தறே'- கோபம் கொப்பளிக்க எழுந்து ஆவேசமாகக் கத்தினான் அருண்.

வர்மக் கலையைப் பயன்படுத்தி அவனது உடலில் நான்கு தட்டுகள் தட்டினேன். நாயே இனி உன்னால் பேசவோ, கைகால்களை அசைக்கவோ முடியாது. ஜலசமாதிதான் உனக்கு  தண்டனை. மிருகமே செத்து தொலை. அவனை பலம் கொண்ட மட்டும் கால்களால் எத்தி தண்ணீரில் தள்ளினேன்.

பேய் அறைந்தது போல் பயந்து நின்ற அவளை இழுத்துக் கொண்டு கோயிலிலிருந்து மேலே வந்தேன்.

 "தேங்க்ஸ் மேடம். நான் உங்க மனசை நோக அடிச்சிருந்தாலும் சரியான சமயத்திலே வந்து என்னோட மானத்தைக் காப்பாத்திட்டீங்க'- கதறி அழுதாள் அவள்.

"அழவும் பேசவும் இது நேரமில்லை.  இப்போ உடனே இங்கிருந்து கிளம்பணும்' பஸ் நிற்குமிடத்தில் காருடன் காத்திருந்தாள் சசிகலா.

"யாருடி இவ! காலையிலே பஸ்ஸிலே பாத்த பொண்ணாட்டம் இருக்கே. இவளை எங்கே பிடிச்சே. எதுக்காக இவளை நம்மளோட கூட்டிக்கிட்டு வரே' "ப்ளீஸ். எல்லாம் விவரமா சொல்றேன். இப்ப நான் இவ பக்கத்திலே பின்னாலே உட்காந்துக்கிறேன். நீ கொஞ்சம் வேகமாக டிரைவ் பண்ணி திருச்சிக்குப் போயேன்'

"காலையிலேயே கல்லணைக்குக் காரிலே போகலாம்ன்னு சொன்னேன்.

நீதான் பஸ்ஸிலே போகலாம்னு பிடிவாதம் பிடிச்சே. நீ திருச்சி வந்து எனக்கு போன் பண்ணுவே. படத்துக்கு போகலாம்னு இருந்தா, காரை எடுத்துக்கிட்டு 6 மணிக்கு கல்லணைக்கு வாங்கறே. என்னடி ஆச்சு உனக்கு இன்னைக்கு?'

"உன்னோட ஃபிரண்ட் இப்போ ஒரு கொலைகாரி! போலீஸ்லே சரண்டர் ஆகணும்'- காலையில் இருந்து நடந்ததை ஒரு கதையைப் போல சசியிடம் விளக்கினேன்.

"நீ அவனைக் கொலை செஞ்சது இவளை காப்பத்தவா. இல்லே உன்னை அவன் அவமானப்படுத்தியதுக்கா' நிருபராய் கேள்வி எழுப்பினாள் சசி.

"இரண்டுக்கும் சேர்த்துத்தான் வச்சுக்கோயேன்"

பக்கத்தில் கோழிக்குஞ்சாய் சுருண்டு படுத்திருந்தவளைத் தட்டி எழுப்பினேன்.

"பயப்படாதே. சசிகிட்டே வீடு எங்கேன்னு சொல்லு. பத்திரமா கொண்டு போய் விட்டுவிடுவா. பெத்தவங்களை ஏமாத்தாதே. கவனமா படிச்சு பெரிய மனுஷியா நீ வரணும். என்னை பத்தி கவலைப்படாதே. சிறையிலே எனக்கு உன்னோட முன்னேற்றம் பத்தி நல்ல தகவல் கிடைக்கணும்' கேவிக்கேவி அழுத அவளுக்கு ஆறுதல் கூறினேன். காரிலிருந்து பார்த்த போது உச்சிப் பிள்ளையார் கோயில் தெரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.