தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இதயங்களில் வாழ்பவர்!

இதயநோயால் பாதிக்கப்பட்டவரான அன்னை தெரசா டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டியை பார்த்தபோது அன்னை தெரசா கூறினாராம்,""நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளு

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:23 pm

அ. குமார்

இதயநோயால் பாதிக்கப்பட்டவரான அன்னை தெரசா டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டியை பார்த்தபோது அன்னை தெரசா கூறினாராம்,""நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து பாதுகாக்கவே கடவுள் உன்னை இந்த உலகத்திற்கு அனுப்பியுள்ளார்'' என்று.

 ""அன்னை தெரசாவை சந்தித்தது உயிருள்ள கடவுளை சந்தித்தது போன்றே தோன்றியது. இந்த வார்த்தைகளை எனக்குக் கிடைத்த கெüரவமாகவே கருதுகிறேன். என் மீது எனக்குள்ளேயே ஒரு நம்பிக்கையை விதைத்தவர் அன்னை தெரசா'' என்று கூறும் டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டி இந்தியாவில் முன்னணி இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்களில் ஒருவர். பல ஆயிரக்கணக்கான இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட ஷெட்டி நிறுவிய "நாராயண ஹிருதாலயா', பெங்களூரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை.

 சாதாரணமாக ஓர் இந்திய மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகளைவிட இங்கு கூடுதலாக எட்டு மடங்கு இதய அறுவைச் சிகிச்சைகள் நடக்கின்றன. தினமும் 27-க்கும் குறையாமல் இதய அறுவைச் சிகிச்சைகளை ஷெட்டி தனியாக மேற்கொள்கிறார்.

 அறுவைச் சிகிச்சைக்கான கட்டணத்தில் ஏழை நோயாளிகளுக்கு சலுகை உண்டு. அவர்களாகவே கேட்பதற்கு முன் இவராகவே சலுகை அளிப்பதுண்டு. ஆனால் சிகிச்சையின் தரத்தில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லை.

 இங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 ஒவ்வொரு நோயாளியையும் நன்கு பரிசோதனை செய்வதோடு அவர்களுடைய குடும்ப விவரங்களைக் கேட்டறிந்து அறுவைச் சிகிச்சை செய்து முடிக்கும் வரை நோயாளிகளிடமும் அவரது குடும்பத்தினரிடமும் தொடர்பிலேயே இருப்பார்.

 மங்களூரில் பிறந்த இவர் பள்ளியில் படிக்கும்போது உலகிலேயே முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த தென்னாப்பிரிக்க டாக்டர் கிரில்டின் பெர்னாட் பற்றி ஆசிரியர் கூறியதைக் கேட்டு தானும் ஒரு டாக்டராக வேண்டுமென்று அப்போதே முடிவு செய்தாராம். 1982-ம் ஆண்டு கொல்கத்தாவில் 140 படுக்கைகள் கொண்ட ஆய்வு நிறுவன மருத்துவமனையொன்றை அமைத்தார். 1997-ம் ஆண்டு 450 படுக்கைகள் கொண்ட மணிபால் இதய அறக்கட்டளையை நிறுவினார்.

 இந்தியாவில் இதய அறுவைச் சிகிச்சையைத் தொடங்கியபோதுதான் பொருளாதார வசதியற்ற பலர் இது போன்ற சிகிச்சை எதுவுமின்றி இருப்பதை உணர்ந்து ஏழைகளுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தைக் குறைப்பதென தீர்மானித்தார். "அவர்களது வாழ்க்கை என்னுடைய கைகளில் இருக்கிறது என்பதை உணரும்போது இந்தக் கட்டணக் குறைப்பு எனக்கு சிரமமாகத் தெரியவில்லை' என்று கூறும் டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டிக்கு இப்போது 57 வயது ஆகிறது.

 மூன்று மகன்கள் ஒரு மகள் என மனைவி சகுந்தலாவுடன் கோரமங்களாவில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது மூத்த மகன் பொறியாளர். மற்ற இரு மகன்களும் தந்தையைப் போலவே மருத்துவத்துறையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்.

 தன்னம்பிக்கை மிகுந்த இவர் தினமும் 13 மணி நேரம் மருத்துவமனையில் பணியாற்றுகிறார். இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேல் இதய அறுவைச் சிகிச்சை செய்துள்ள இவர், 45 பேர் அடங்கிய மருத்துவ குழுவொன்றை அமைத்துள்ளார். அக்குழுவினர் அறுநூறுக்கும் மேல் அறுவைச் சிகிச்சைகளைச் செய்கின்றனர். டாக்டர் தேவிபிரசாத் ஷெட்டியின் "நாராயண ஹிருதாலயா'வில் தான் இந்தியாவில் செய்யப்படும் மொத்த "ஓபன் ஹார்ட் சர்ஜரி'யில் 12 சதவீதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 இது குறித்து தேவிபிரசாத் ஷெட்டி கூறும் விளக்கங்களைக் கேட்கலாம்:

 ""இதய பாதிப்பைக் கண்டறிய இப்போது நிறைய நவீன முறைகள் வந்துள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பின் 64 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் செய்வதன் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.

 இந்தப் பரிசோதனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றொரு முக்கியத்துவம் பெற்றதாகும். இதற்குச் செலவும் குறைவு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது நவீன முறையில் இதய பாதிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

 இதயம் முழுமையாகச் செயலிழக்கும் பட்சத்தில் மட்டுமே இதய மாற்று சிகிச்சை அவசியமாகிறது. உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லாததால், செயற்கை இதயம் அல்லது இடது பக்க வால்வை இயக்க உதவும் கருவியைத்தான் பயன்படுத்த வேண்டும். இதயம் தானாகவே ரத்தத்தைப் பம்ப் செய்வதற்குப் பதில் மார்பின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் செயற்கை கருவிகள் ரத்தத்தை பம்ப் செய்கின்றன.

 2008-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக வெங்கட கிருஷ்ணய்யா என்பவருக்கு இந்த செயற்கை இருதயத்தைப் பொருத்தினோம். இதுபோன்ற செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்களில் ஏழு பேர் நீண்ட காலம் உயிருடன் இருந்தனர். செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள் மொபைல் போனை ரீசார்ஜ் செய்வதைப் போன்று அடிக்கடி செயற்கை இதயத்தை ரீ-சார்ஜ் செய்ய வேண்டும்.

 மாரடைப்பு காரணமாக இதய துடிப்பு நின்றுபோவது, நுரையீரல் செயல்படாமல் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் இ.சி.எம்.ஓ. (எக்ஸ்ட்ரா கார்ப்போரியல் மெம்ரேன் ஆக்சிநேஷன்) எனப்படும் முன்னேற்றமடைந்த சிகிச்சை மூலம் மீண்டும் அலைகளை இயக்க முடியும். இ.சி.எம்.ஓ. சிகிச்சை முறையில் நிறைய நோயாளிகளைக் காப்பாற்றியுள்ளோம்.

 இதய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கும் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்க முடியும். செயற்கை வால்வுகள் பொருத்தலாம். இன்றைய தினத்தில் இவையெல்லாம் சாதாரணமாக ரிப்பேர் செய்வது போலாகிவிட்டது. இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது ஒரு பிரச்னையே அல்ல. அறுவைச் சிகிச்சை மூலம் அதை சரிப்படுத்தலாம். முழுமையாக இதயம் செயலிழக்கும்போதுதான் செயற்கை இதயம் பொருத்த வேண்டும்.

 இப்போது டெலிமெடிஸின் முறை உலகம் முழுவதும் பரவியுள்ளது. மொத்தம் 100 மையங்கள் உள்ளன. ஆப்ரிக்காவில் மட்டும் 50 மையங்கள் உள்ளன. இதுவரை இதன் மூலம் 53 ஆயிரம் நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்துள்ளோம். தேசிய அளவில் இதை விரிவுபடுத்த உள்ளோம். எங்கள் "நாராயண ஹிருதாலயா'வுக்கு 73 நாடுகளிலிருந்து நோயாளிகள் வருகின்றனர். இதற்காகவே 24 அறுவைச் சிகிச்சை கூடங்களை எங்களது மருத்துவமனையில் அமைத்துள்ளோம்.

 ஓபன் ஹார்ட் சர்ஜரியின் அடுத்த கட்டம் செயற்கை இதயம்தான். இது முழுமையான செயற்கை இதயம். இதன் மூலம் இடது பக்கமுள்ள இதயத்தை மட்டுமே மாற்ற முடியும். இன்னும் ஏழாண்டுகளில் வலது, இடது இருபுறமும் உள்ள இதயத்தையும் மாற்றும் முறை வந்துவிடும் என நம்பலாம். இப்போது இதன் தேவை அதிகரிக்குமானால் சர்வ சாதாரணமாக செயற்கை இதயம் கிடைக்க வாய்ப்புண்டு. இதை பொருத்துவதால் பாட்டரி ரீ-சார்ஜ் செய்வதற்கு மட்டுமே சற்று செலவாகுமே தவிர, வேறு செலவு ஏற்படாது.

 இப்போது ஏழு நகரங்களில் எங்கள் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இன்னும் ஏழாண்டுகளில் 30 ஆயிரம் படுக்கைகள் கொண்டவைகளாக இம்மருத்துவமனையை மாற்ற வேண்டும். ஏழைகளுக்கும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் பயன்படும் வகையில் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை படுக்கைகள் அமைக்க வேண்டுமென்பதும் என்னுடைய லட்சியமாகும்.

 மேற்கத்திய நாடுகளில் இதய மாற்று அறுவைச் சிகிச்சை போன்றவற்றுக்கு உதவியாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது போல் சில இந்திய மருத்துவமனைகளிலும் ரோபோக்களைப் பயன்படுத்துகின்றனர். எங்கள் மருத்துவமனையை பொருத்தவரை, ரோபோக்களை பயன்படுத்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ரோபோக்களைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு திருப்தியில்லை''  என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.