ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நல்ல கொலஸ்ட்ரால் குறைவு.... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம்!

என் வயது 54. மெலிந்த உடல். உடல் பலவீனம் காரணமாக பரிசோதனை செய்ததில் நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், தைராய்டு சுரப்பி மந்தமாகவும் வேலை செய்வதை அறிந்து ஆங்கில மருந்துகள் சாப்
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: நல்ல கொலஸ்ட்ரால் குறைவு.... கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம்!
Updated on
2 min read

என் வயது 54. மெலிந்த உடல். உடல் பலவீனம் காரணமாக பரிசோதனை செய்ததில் நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், தைராய்டு சுரப்பி மந்தமாகவும் வேலை செய்வதை அறிந்து ஆங்கில மருந்துகள் சாப்பிட்டு வருகிறேன். அவற்றை நிறுத்தினால் கொலஸ்ட்ரால் கூடிவிடுகிறது. ஆயுர்வேதத்தில் இதற்கான நிரந்தரத் தீர்வு உள்ளதா?

ப.நாகராஜன், இரணியல்.

"ஜாடராக்னி' எனும் ஒரு வஸ்து மனித உடலின் வயிற்றிலிருந்து செயல்படுகிறது. ஜாடரம் அல்லது ஜடரம் என்றால் வயிறு, அக்னி என்றால் நெருப்பு. இதனைப் பாசக பித்தம் என்றும் அழைக்கலாம். "பாசகம்' என்றால் உண்ணும் உணவைப் பாகப்படுத்துவது என்று அர்த்தம். இந்தப் பித்தம் உணவைச் சீரணிக்கச் செய்கிறது. செரிமானமாகும் உணவிலிருந்து சத்தான பகுதியையும், தேவையற்ற மலப்பகுதியையும் பிரிக்கிறது. தன்னிருக்கையிலிருந்து கொண்டே, உடலின் உட்புறப் பகுதிகளில் பரவியிருக்கக் கூடிய "தாத்வக்னி' எனப்படும் தாதுக்களின் நெருப்புகளுக்கு ஊட்டத்தை அளித்து அவற்றின் செயல்பாடு மந்தமாகாதபடி பார்த்துக் கொள்கிறது.

ஆனால் இந்தப் பாசக பித்தம் தவறான உணவுப் பொருட்களின் சேர்க்கையால் கெட்டுப் போய்விட்டால், அது மற்ற தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பின் ஊட்டத்தைக் குறைத்து அவை மந்தமாகும் தறுவாயில், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் தலைதூக்கும். எளிதில் செரிக்காத உணவு, வறட்சி, உலர்ந்த தன்மை, குளிர்ச்சியானவை, மலக்கட்டு உண்டாக்குகிற எரிச்சல் ஏற்படுத்துகிற, அசுத்தமான பொருந்தாத உணவினாலும் அதிக அளவு நீர் பருகுவதாலும், நேரங்கெட்ட நேரத்தில் புசிப்பதாலும்,  சரியான நேரத்தில் உணவை உட்கொண்டாலும், ஆசை, கோபம், பேராசை, பொறாமை, வெட்கம், வருத்தம், உணர்ச்சி, எழுச்சி, பயம், கடும்பசி இவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் உட்கொண்ட உணவானது, பாசகபித்தத்தைக் கெடுத்துவிடும்.

இதனால் இரைப்பையில் உணவும், உணவிலிருந்து பிரியும் முதல் சாரமான பகுதியும் சீரணமாவதில்லை. சீர் கேடடைந்த இந்த உணவின் சாரம் இரைப்பையையும், மற்ற தாதுக்களையும் அடையும்போது அந்த சாரத்தை "ஆமம்' என்கிறோம். கண்களுக்குப் புலப்படாத வகையில் உடல் உட்புறக் குழாய்களில் இது படிவதால் மனிதர்களுக்குப் பலக்குறைவு, உடல் கனம், வாயுவின் செயல் முடக்கம், சோர்வு, சீரணக் குறைவு, வாயில் எந்த நேரமும் எச்சில் ஊறுதல், மலம், சிறுநீர், வியர்வை ஆகியவற்றின் தேக்கம், வாயில் ருசியை அறிய முடியாதபடி ஆகிவிடுதல், சுறுசுறுப்பற்ற தன்மை போன்றவை தோன்றிடவும், கெட்ட கொலஸ்ட்ரால் வளர்ந்து, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து போகும். தைராய்டு சுரப்பியின் செயலும் மந்தமாகும்.

அதனால் நீங்கள் அவற்றைச் சரி செய்ய முயலும் ஆங்கில மருந்துகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே பெற இயலும். அதற்குக் காரணம் அவை பாசக பித்தத்தைச் சீர் ஆக்குவதற்கான முயற்சியில் ஈடுபடவில்லை. உடலில் பரவியுள்ள "ஆம' தோஷத்தை சீரணிக்கச் செய்தல், ஜாடராக்னியை வளர்த்தல், ஊடுருவும் சூடான மருந்துகளால் தயாரித்த எண்ணெய் வகைகளைப் பருகுதல், வியர்வை சிகிச்சை இவற்றால் ஆமத்தைச் சீரணிக்கச் செய்து, அவற்றை உடல் உட்புறங்களிலிருந்து இளகச் செய்து இரைப்பைக்கு வந்தால் வாந்தி மருந்து கொடுத்தும், குடலுக்கு வந்தால் ஆசன வாய் வழியாக கழியச் செய்யும் பேதி மருந்தாலும் வெளியேற்ற வேண்டும். இந்த சிகிச்சை முறைகளை ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் நீங்கள் தங்கி செய்து கொள்வது நல்லது.

வேறு ஏதேனும் எளிய முறையைக் கையாண்டு இந்த பாசக  பித்தத்தையும், நல்ல கொலஸ்ட்ராலையும் வளர்த்துக் கொள்ள முடியுமா? என்று நீங்கள் நினைத்தால் அதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. ஜீரகம்  1/2 - 1 ஸ்பூன், மல்லி விதை (தனியா) 1/2 - 1 ஸ்பூன் தூளாக்கி, சுமார் 200 -250 மி.லி. தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் விழித்தெழுந்ததும், வாய் கொப்பளித்துவிட்டு, இந்த மூலிகை நீரை வடிகட்டிக் குடிக்கவும். பின் 15 - 20 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருந்துவிட்டு, பிறகு எழுந்து செல்லவும். இதிலுள்ள இன்னொரு நன்மை  குடல், கல்லீரல், மண்ணீரல், இரைப்பை ஆகியவை சுறுசுறுப்புடன் இயங்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com