

எனக்கு வயது 72. கடந்த இரண்டு மாதங்களாக நடந்தால் நெஞ்சில் வலதுபுறம், மார்புக்கூடு எலும்பில் (மேலிருந்து 3-ம் எலும்பு) வலது புறமாகவும் வலி பரவுகிறது. சற்று நேரம் ஓய்வு எடுத்த பின் வலி குறைகிறது. மீண்டும் நடந்தால் வலி எடுப்பதில்லை. இரவு படுக்கப் போகும் முன் மீண்டும் வலி அதிகமாகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குத் தீர்வு உண்டா?
இதயத்திற்குப் பிராண வாயுவைக் கொண்டு சேர்க்கும் குழாய்களுக்கான பரிசோதனையை நீங்கள் செய்து கொள்வது நலம். அப்பகுதிகளில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா? அவற்றிலுள்ள ரப்பர் போன்ற மிருதுவான தன்மை குறைந்து இறுக்கமாக இருக்கின்றனவா? ரத்தம் போதுமான அளவில் அவற்றின் உள்வட்டப் பாதையில் செல்வதற்கான அழுத்தம் சீராக இருக்கிறதா? என்பன போன்ற பல கேள்விகளுக்கான விடைகளை, பரிசோதனைகளின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
அப்படியெல்லாம் செய்து பார்த்து, இதயமும் அதன் நாளங்களும் சரியாக இருக்கின்றன எனத் தெரிய வந்தால், இதயத்தைச் சார்ந்த வியான வாயுவையும், மார்புப் பகுதியைச் சார்ந்த உதான வாயுவையும் சரியான முறையில் செயல்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம்.
மஹா நாராயண தைலம் என்ற பெயரில் ஓர் ஆயுர்வேத தைலமிருக்கிறது. இரும்புக் கரண்டியில் சிறிது தைலத்தைச் சூடாக்கி, வெது வெதுப்பாக மார்புப் பகுதியின் நடுவிலிருந்து விலாப் பகுதிகளுக்கு காலையில் தடவி, சுமார் 15 நிமிஷத்திலிருந்து 45 நிமிஷங்கள் வரை ஊறிய பின், வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதால், நெஞ்சுக்கூட்டின் பகுதியிலுள்ள தசை மற்றும் தசை நார்களினுள்ளே தங்கியுள்ள வாயு வெளியேறிவிடும். அங்குள்ள நரம்புகள், தசைகள் வலுப்படுவதால், உங்களுடைய வலி குறைய வாய்ப்பிருக்கிறது.
தான்வந்திரம் எனும் ஆயுர்வேத குளிகை மாத்திரைகள் இரண்டை, காலை உணவிற்குப் பிறகும், இரவு உணவிற்குப் பிறகும், சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீருடன் பருகுவதாலும் உங்களுடைய வலி குறைய வாய்ப்பிருக்கிறது. வியான - உதான வாயுக்களை மட்டுப்படுத்தி, அவற்றால் ஏற்படும் நெஞ்சு வலியை அகற்றும் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.
இரைப்பையில் வாயு தங்கினாலும் வலி ஏற்படக்கூடும். வாயுவை உற்பத்தி செய்யும் கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, பச்சைப்பயறு, சுண்டல் போன்றவற்றைச் சாப்பிடுவதை நீங்கள் தவிர்ப்பது நலம். முன் உண்ட உணவு செரித்த நிலையில், அடுத்த உணவை வெதுவெதுப்பாக உண்பதன் மூலம், வயிற்றில் வாயு சேராமல் பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு உணவின் இறுதியிலும், அரை குவளை புளித்த மோரை அருந்துவது மிகவும் நல்லது. சுக்கு போட்டுக் காய்ச்சிய வெந்நீரை அருந்தினாலும் நல்லதுதான்.
பசியின் தன்மை குறைந்த நிலையில், வயிறு சில்லிட்ட நிலையில், வாயு கொண்டிருந்தால், நெஞ்சுக்கூட்டில் வலி வரும். அப்படியுள்ள நிலையில், தச மூலாரிஷ்டம் எனும் ஆயுர்வேத மருந்தை, சுமார் 25-30 மி.லி. காலை, இரவு உணவிற்குப் பிறகு தொடர்ந்து 41-48 நாள்கள் சாப்பிட்டு வர, வயிற்றின் சூடானது சீராகி, வாயு கீழ்நோக்கிச் சென்றுவிடும். நீங்கள் நடக்கும்போது வலி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.
நுரையீரல் பகுதிகளில் பிராணவாயு - கரியமில வாயுவின் நுழைவும் வெளியேற்றுவதும் சீராக இல்லாதிருந்தால், நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்படலாம். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை நன்கு கற்றறிந்த பெரியோரிடம் பயிற்சி எடுப்பதன் மூலம், நுரையீரல் செயல்பாட்டினை நம்மால் மேம்படுத்த முடியும்.
வயோதிக வயதிலிருக்கும் உங்களுக்கு மேற்குறிப்பிட்ட மருந்துகளால் உபாதைகளை மட்டும் நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டியதில்லை. அவை அனைத்தும் தசை-தசைநார்கள்-எலும்புகள்-நரம்புகள்-ரத்தக்குழாய்கள் போன்றவற்றை வலுப்படுத்தும் திறனும் கொண்டவை என்பதால், நீங்கள் அவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, தாராளமாகச் சாப்பிடலாம். எண்ணெயை வெளியே பூசலாம். உணவு முறைகளை மாற்றி அமைக்கலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.