பெங்களூரு அரண்மனை மர்மம்
பெங்களூரு அரண்மனையைப் பற்றி பிரபல சரித்திர ஆய்வாளர் டாக்டர் சூரியநாத காமத், "பெங்களூர் மாவட்ட கெஸட்'டில் குறிப்பிடும்போது இங்கிலாந்து நாட்டின் பண்டைய சகாப்தத்தை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து


பெங்களூரு அரண்மனையைப் பற்றி பிரபல சரித்திர ஆய்வாளர் டாக்டர் சூரியநாத காமத், "பெங்களூர் மாவட்ட கெஸட்'டில் குறிப்பிடும்போது இங்கிலாந்து நாட்டின் பண்டைய சகாப்தத்தை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்து அப்படியே பெயர்த்தெடுத்து கொண்டு வந்து அமைத்ததைப் போல் உள்ளது என்று எழுதியுள்ளார்.
உண்மையில் அந்த அரண்மனை அந்த காலகட்டத்தில் புகழ் பெற்ற கல்வியாளரும்
மதபோதகருமான கராத் என்பவர், பெங்களூரில் அப்போது கிடைத்த கிரானைட் கற்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை வைத்தே குறைகூற முடியாத வகையில்
வின்ட்சர் அரண்மனையைப்போல் கட்டி முடித்ததாக கெஸட்டில் குறிப்பிடப்
பட்டுள்ளது.
1880-ஆம் ஆண்டு 45 ஆயிரம் சதுர அடியில் நகரின் மத்தியில் அச்சு அசலாக எட்டாம் ஹென்றி மன்னர் தன் ஆட்சி காலத்தில் லண்டன் கான்டர்பெர்ரியில் தன் மனைவிக்காக கட்டிய வின்ட்சர் அரண்மனையை போன்று, பெங்களூரு அரண்மனை கட்டப்பட்டபோது, யாருக்கு இவ்வளவு பெரிய அரண்மனை கட்டப்படுகிறது என்ற விவரம், அப்போது ஒருவருக்கும் தெரியவில்லை.
அப்போது பெங்களூருவில் மிகப் பிரபலமாக விளங்கிய கட்டட வல்லுநர் கர்னல் சாங்கே தான் இதன் பொறுப்பை ஏற்று கட்டியதாக டாக்டர் காமத் குறிப்பிட்டுள்ளார். சிவில் டிசைன் மற்றும் என்ஜினியரிங்கில் திறமைசாலியாக விளங்கிய சாங்கே, தற்போது கர்நாடக உயர்நீதிமன்றம் செயல்படும் "அட்டாரா கச்சேரி' கட்டடத்தையும் கட்டினார் என்பது கூடுதல் தகவலாகும். அரண்மனையைக் கட்டி முடித்தவுடன் அப்பகுதி முழுவதையும் அப்போதைய மைசூர் மன்னர் மும்மடி கிருஷ்ணராஜ உடையாருக்கு 1882-ஆம் ஆண்டில் 10 லட்சம் ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்தவரும் இவர்தான். அதன் பின்னரே பெங்களூரு அரண்மனை மற்றும் அதைச் சுற்றியுள்ள மைதானமும் மைசூர் மன்னரின் சொத்தாக மாறியது.
பெங்களூரு அரண்மனையை கட்டிய கராத், பெங்களூருவில் அரசு அச்சகத்தை அமைக்க உதவியதோடு அதன் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இத்தனை பெரிய அரண்மனையைக் கட்டுவதற்கான அவசியமும் இதற்கு யார் நிதியுதவி அளித்தார்கள் என்பதும் இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. லண்டனின் ஏற்கெனவே உள்ள ஓர் அரண்மனையையே பிரதிபலித்தாற்போல் ஓர் அரண்மனையைக் கட்ட வேண்டுமென்றால் அதற்கொரு காரணமும், ஏராளமான பொருளுதவியும், மனித உழைப்பும் நிச்சயம் தேவை. இதற்கு கர்னல் சாங்கே ஒத்துழைத்ததும் ஆச்சரியமான விஷயமாகும்.
இந்த அரண்மனையின் உட்புற வேலைப்பாடுகள், பெரிய அலங்கார விளக்குகள், கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட மரக் கதவுகள் அனைத்தும் சரித்திர ஆய்வாளர்களை வியக்க வைத்துள்ளன. கராத்தினிடமிருந்து இந்த அரண்மனையை மைசூர் மன்னர் வாங்கிய பின்னர் கட்டுமானத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அரண்மனை வடக்குப் பகுதியில் இந்திய கலாசார முறையில் மகாராணிக்கென்று தனி கட்டடம் கட்டப்பட்டு, அங்கிருந்து அரண்மனைக்குள் வருவதற்கு முழுவதும் மறைக்கப்பட்ட தனி வழிப்பாதை அமைக்கப்பட்டதாக 1890-ஆம் ஆண்டு "பெங்களூர் மாவட்ட கெஸட்'டில் பதிவாகியுள்ளது.
மைசூர் மன்னர்களின் கைக்கு பெங்களூரு அரண்மனை மாறியவுடன் பெங்களூரு வரும்போதெல்லாம் மன்னர் குடும்பத்தினர் இங்கு தங்குவதை வழக்கமாகக் கொண்டனர். அரண்மனையையும் அரண்மனை மைதானத்தையும் அரசு கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து, அப்போதைய மன்னர் ஜெயசாம ராஜேந்திர உடையார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென்று வந்த உத்தரவின்படி பெங்களூரு வந்த ஜெயசாம ராஜேந்திர உடையார் வழக்கில் ஆஜராக வேண்டிய தினத்தன்று காலை பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் உயிர் துறந்தது மறக்க முடியாத சம்பவமாகும்.
இன்று இந்த அரண்மனை மன்னரின் வாரிசான ஸ்ரீகண்ட தத்தா உடையார் பெயரில் உள்ளது. அரண்மனை மைதானம் அவரது ஐந்து சகோதரிகளின் பெயரில் உள்ளது. இந்த அரண்மனை உள்பட அனைத்தையும் கையகப்படுத்த, தேவராஜ் அர்ஸ் கர்நாடக முதல்வராக இருந்தபோது, அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெறப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீகண்ட தத்தா கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தீர்ப்போ அரசுக்கு சாதகமாக அமைந்தது. மீண்டும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய, அரசு கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் அரண்மனை மைதானத்தை வர்த்தகம், இசை, திருமணம் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. சொத்து வரியுடன் கேளிக்கை வரியையும் பெங்களூரு நகராட்சி அதிகரித்தது. ஆனால் மைதானத்தை சுற்றிலும் உள்ள பேலஸ்ரோடு, பெல்லாரி ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் அரண்மனை மைதானத்தில் எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு அதிகரித்தது. உச்சநீதிமன்றம் இவை அனைத்திற்கும் ஒட்டுமொத்தமாக தடை விதித்து வழக்கு முடியும் வரை மன்னரின் வாரிசுகள் அரண்மனை மைதானத்தின் மூலம் லாபமடைவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களில் இந்த தடையுத்தரவு மீறப்பட்டு அரசியல், இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதனால் போக்குவரத்து பாதைகளை மாற்றியமைத்த காவல் துறையும் கடைசியில் போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க முடியாமல், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறுகிய கால திருமண நிகழ்ச்சிகளைத் தவிர பெரிய அளவில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாதென்று தடை விதித்துள்ளது. நிரந்தரமாக கட்டப்பட்ட மேடைகளையும் கட்டடங்களையும் அகற்ற அரசு உத்தரவிட்டது.
பெங்களூரு அரண்மனை கட்டப்பட்டதற்கான காரணம் தெரியாமல் போனது ஒருபுறமிருக்க, தற்போது அரண்மனையையும் மைதானத்தையும் கைப்பற்ற அரசும், காப்பாற்றிக்கொள்ள ஸ்ரீ கன்டதத்தாவும் நடத்தும் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பதும் மர்மமாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...