தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோடாக் மனிதர்

1888-ஆம் ஆண்டு, ""பட்டனை அழுத்துங்கள். மற்றவைகளை நாங்கள் செய்கிறோம்'' - என்ற வாக்கியத்துடன் 100 எக்ஸ்போஷர் பிலிமுடன் கூடிய காமிரா ஒன்றை 34 வயது வாலிபர் ஒருவர் விளம்பரப்படுத்தினார். பிலிம்கள் அனைத்தும்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am

அ. குமார்

1888-ஆம் ஆண்டு, ""பட்டனை அழுத்துங்கள். மற்றவைகளை நாங்கள் செய்கிறோம்'' - என்ற வாக்கியத்துடன் 100 எக்ஸ்போஷர் பிலிமுடன் கூடிய காமிரா ஒன்றை 34 வயது வாலிபர் ஒருவர் விளம்பரப்படுத்தினார். பிலிம்கள் அனைத்தும் எடுக்கப்பட்டவுடன் காமிராவை உரிமையாளர் தொழிற்சாலைக்கு அனுப்பி டெவலப்பிங் செய்து படங்களைத் தருவார். பின்னர் மீண்டும் புதிய ரோல் லோடு செய்யப்படும். இதை வடிவமைத்து விற்பனை செய்தவர் தான் ஜார்ஜ் ஈஸ்ட்மன்.

இந்த காமிராவின் விலை 25 அமெரிக்க டாலர். மிகவும் மலிவாக கருதப்பட்டாலும் இன்னும் சிறிய அளவில் கையடக்க அமைப்பில் தயாரிக்க வேண்டுமன்ற ஆர்வத்தில் தீவிர முயற்சிக்கும் பின்னர் காமிரா விலை ஒரு டாலர். பிலிம் விலை ஒரு ரோல் 15 சென்ட் என்று அறிமுகப்படுத்தினார். சிறியதாகவும் எங்கு வேண்டுமானாலும் கையில் கொண்டு செல்லும் அமைப்பில் இருந்ததாலும் சுற்றுலா செல்பவர்கள் மட்டுமன்றி அன்றாட வாழ்க்கையில் புகைப்படமெடுப்பது இன்றியமையாததாக கருதப்பட்டது.

தன்னுடைய கண்டுபிடிப்பினால் ஒரே ஆண்டில் கோடீஸ்வரரான ஜார்ஜ் ஈஸ்ட்மன் வருமானம் ஆண்டொன்றுக்கு ஒரு மில்லியன் டாலராக உயர்ந்தது. அப்போது தினசரி வாழ்க்கைக்கு ஐந்து டாலர் போதுமானதாக இருந்தது. 50 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மாளிகையை கட்டி இருபதாண்டுகள் தனிமையில் வாழ்ந்த அவரது நியூயார்க் மாளிகை தற்போது கட்டட அமைப்பில் எவ்வித மாற்றமுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படக் கலையின் வளர்ச்சியை விளக்கும் வகையில் சர்வதேச புகைப்பட அருங்காட்சியகமாக விளங்குகிறது. அவருக்குப் பின்னரும் தொடர்ந்து செயல்பட்டு வந்த "கோடாக்' நிறுவனம்தான் 1975-ஆம் ஆண்டில் முதன்முதலாக டிஜிட்டல் காமிராவை அறிமுகப்படுத்தியது.

நியூயார்க்கில் உள்ள வாட்டர்வில்லி கிராமத்தில் வசித்து வந்த மரியா கல்பர்ன் ஜார்ஜ் வாஷிங்டன் ஈஸ்ட்மன் தம்பதியருக்கு 1854-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி ஜார்ஜ் ஜூனியர் பிறந்தார்.

இவருக்கு ஐந்து வயதாகும்போது இவரது குடும்பம் ராச்செஸ்டருக்கு இடம் பெயர்ந்தது. அங்கு சென்றவுடன் இவரது தந்தை ஈஸ்ட்மன் கமர்சியல் கல்லூரி ஒன்றைத் துவங்கினார். கல்லூரி வெற்றிகரமாக நடந்து வந்த வேளையில் 1862-ம் ஆண்டு மூத்தவரான ஈஸ்ட்மன் எதிர்பாராமல் காலமாகிவிடவே குடும்பம் வருமானமின்றி தவித்தது. குடும்ப சுமை முழுவதும் ஜார்ஜ் ஈஸ்ட்மன் மீது விழுந்தது. 14-வது வயதில் தன் தாயாரையும் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் வாரத்திற்கு 3 டாலர் ஊதியத்தில் பணிக்கு அமர்ந்தார். ஓராண்டிற்குப் பின்னர் வேறொரு காப்பீட்டு நிறுவனத்தில் ஆபீஸ் பையனாகச் சேர்ந்ததோடு மாலை நேரத்தில் அக்கவுன்டன்சி படித்து முடித்தார். 1874-ஆம் ஆண்டு ரோசெஸ்டர் சேமிப்பு வங்கியில் ஜூனியர் கிளார்க்காக சேர்ந்தார். வாரத்திற்கு 15 டாலர் ஊதியமாக பெற்றார்.

நான்காண்டுகள் கழித்து தன் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டுமென்று விரும்பியவர் 1878-ஆம் ஆண்டு தன் தாயாருடன் சான்டா டோமின்கோவுக்கு சுற்றுலா சென்றிருந்துபோது நினைவுக்காக ஒரு போட்டோகிராபி காமிரா ஒன்றை ஜார்ஜ் வாங்கி வந்தார். அந்த காமிரா பெரியதாகவும் மைக்ரோ ஓவன் போன்று கனமானதாகவும் இருந்தது. மேலும் அதை வைப்பதற்கு தனியிடம் தேவைப்பட்டது. காமிராவின் உள்ளேயிருந்த கண்ணாடி பிளேட்டுகளில் எக்ஸ்போஸ் செய்து பின்னர் வேறோரு பிளேட்டில் அதை பதிவு செய்ய வேண்டும். அதன் பளுவை பார்க்கும்போது புகைப்படமெடுக்க இத்தனை சிரமம் தேவையா என்ற எண்ணம் ஜார்ஜ் மனதில் தோன்றியது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் வகையில் இலகுவாக மாற்றலாமே என்று தோன்றியது.

அடுத்து மூன்றாண்டுகள் வேலையிலிருந்து திரும்பியவுடன் அம்மாவின் சமையலறையே சோதனைக் கூடமாக பயன்படுத்தி பரிசோதனைகளைச் செய்தார். சில சமயங்களில் வேலையிலிருந்து திரும்பியவர் உடைகளை மாற்றக்கூட நேரமின்றி சமையலறையிலேயே உறங்கியதும் உண்டு.

1881-ஆம் ஆண்டு ஹென்றி ஸ்டாரங் என்பவர் பண உதவி செய்ய வங்கி வேலையை ராஜிநாமா செய்துவிட்டு ஈஸ்ட்மன் டிரை பிளேட் கம்பெனியை துவங்கினார். கண்ணாடி பிளேட்டுகளுக்குப் பதிலாக பேப்பர் மீது உருவம் பதியும்படி புதிய முறையைக் கண்டுபிடித்தார். அதற்குத் தகுந்த செல்லுலஸ் சொல்யூஷனுடன் கூடிய பிலிமையும் கண்டுபிடித்தார்.

தொடர்ந்து 1888-ஆம் ஆண்டு கையில் கொண்டு செல்லும் வகையில் பிளெக்ஸிபிள் பிலிமுடன் கூடிய காமிரா உருவாயிற்று. "கோடாக்' என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டபோது ஜார்ஜ் ஈஸ்ட்மன் கூறினார். "" "கே' என்ற எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து எழுத்துக்களிலும் இது வலிமையாகவும் மனதில் பதியும் படியும் தோன்றியது. இந்த எழுத்தையே பயன்படுத்தி ஏன் புதிய வாழ்க்கையை தொடங்கக்கூடாது என்று மனதில் எழுந்த கேள்விக்குப் பதிலே "கோடாக்' என்ற வார்த்தை.''

திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் வசித்து வந்த அவர், 1907-ஆம் ஆண்டில் தாய் இறந்தவுடன் தனிமையில் வசித்து வந்தார். தினமும் காலையில் தனது தனிமை அறையில் சிற்றுண்டி சாப்பிடும்போது அவரது அந்தரங்க இசைக் கலைஞர் ஹெரால்ட் கிளீசன் இசைக் கருவிகளை வாசிப்பார்.

புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டிய ஜார்ஜ் தனி நூலகம் ஒன்றை அமைத்து ஆசிரியர்கள் பெயர்களுக்கேற்ப வரிசை கிரமமாக புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார். சமையல் செய்வதிலும் ஆர்வமுள்ள இவர் தனக்கு தேவையானவற்றை சமைத்துக் கொள்ள டார்க் ரூமை ஒட்டினாற்போல் சமையலறையை அமைத்திருந்தார்.

1924-ஆம் ஆண்டு ராச்செஸ்டர் பல்கலைக்கழகம், மாசாசூசெட் இன்ஸ்டிடியூட், ஹாம்படன் இன்டிடியூட் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு ஒரே நாளில் 30 மில்லியன் டாலரை நன்கொடையாக எழுதிக் கொடுத்தார்.

கையெழுத்திட்டுக் கொடுத்தவுடன்,""இப்போதுதான் நான் சுதந்திர மனிதனாக இருக்கிறேன்'' என்று கூறினாராம். உடல் நலக்குறைவால் இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாமல் நடக்கவும் மிகவும் சிரமப்பட்டார். இந்த வலிகளிலிருந்து விடுதலை பெற தன் 77-ஆம் வயதில் 1932-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைசியாக அவர் தன் நண்பர்களுக்கு தெரிவித்திருந்த குறிப்பில், ""என்னுடைய வேலைகளை முடித்துவிட்டேன். எதற்காக காத்திருக்க வேண்டும்'' என்று எழுதியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.