

என்னுடைய வயது 67. இதய நோயும் ரத்த அழுத்தமும் உள்ளது. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களில் அடைப்புகள் உள்ளன. இரவில் நாக்கு உலர்ந்து போகிறது. எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நாக்கு உலர்ந்து போகிறது. இது எதனால்? இதைக் குணப்படுத்த முடியுமா?
அ.ஸ்ரீ ராம் பராசரன், சாலிகிராமம், சென்னை-93.
ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க, நீங்கள் சாப்பிடும் மருந்துகள் அனைத்தும் அடைப்பைச் சுரண்டி எடுக்கக் கூடியவையாகவும், வறட்சி மற்றும் சூடான வீர்யம் கொண்டவையாகவும் இருக்கக் கூடும். சூடான வீர்யத்தினால் அடைப்பை உருக்கி, அவ்விடத்திலிருந்து சுரண்டி எடுத்து வறட்சி என்னும் தன்மையால் சுண்டச் செய்யும் வீர்யமிக்க மருந்துகளால், வாயின் உட்பகுதிகளில் அமைந்துள்ள எச்சில் சுரப்பிகளில் அவற்றின் தாக்கம் உணரப்படும். வாயின் உட்புறம் எப்போதும் நெய்ப்புடன் எளிதில் இயங்கக் கூடியதாக இருக்க நெய்ப்பும் நெகிழ்ச்சியும் உமிழ்நீரால் கிடைக்கிறது. உமிழ்நீர் குறைந்தால் வாயும் தொண்டையும் உலர்ந்துவிடும். நா வறட்சியால் நீர் வேட்கை, தாக உணர்வு ஏற்படும். பெரும்பாலும் உடலில் நிறைந்துள்ள தண்ணீரின் நிறை, குறைநிலைகளை உணர்த்தும் முக்கியப் பணியைச் செய்யும் உமிழ்நீரில் ஏற்படும் தாக்கத்தின் பிரதிபலிப்புதான் இரவில் ஏற்படும் தாக உணர்ச்சி.
அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளின் தன்மையை மருத்துவர் மூலம் கண்டறிந்து அவற்றை எப்படி எப்போது சாப்பிட்டால் வாய், நாக்குப் பகுதிகள் உலர்ந்து போகாமலிருக்கும் என்பதை அறிந்து கொள்வது நலம். இரவு உணவுக்குப் பிறகு, ஓரிரு டம்ளர் வெண்ணைய், ஆடை நீக்கிக் கடைந்துள்ள மோரில் கால் பங்கு தண்ணீர் சேர்த்துப் பருகுவது நல்லது. இந்த வகையில் கடைந்து, தண்ணீர் சேர்க்கப்பட்ட மோர் சுவையில் சிறிது அளவு துவர்ப்பு, புளிப்பும், இனிப்பும் நல்ல விகிதமுள்ளதாயிருக்கும். குடலில் ஜீரணமான பின்பும் இனிப்புச் சுவையுடையது, சூடான வீர்யம் உடையது. எளிதில் செரிக்கும். மற்ற உணவையும் செரிக்கும் அளவுக்குப் பசியைத் தூண்டிவிடும். பருகியதும் உடலுக்கும் மனதுக்கும் திருப்தி தந்து வாயு தோஷத்தைக் குறைக்கும். ஜீரண இறுதியில் இனிப்பாக மாறுவதால் பித்த தோஷத்தைத் தூண்டிவிடாது. துவர்ப்புச் சுவை, உஷ்ண வீர்யம், வெண்ணெய் நெய்ப்பு இன்றி வறட்சியான குணம் போன்றவற்றால் கபத்தையும் குறைக்கும். இப்படியாக மூன்று தோஷங்களையும் சமனம் செய்யும் உயர்ந்த குணங்கள் கொண்டது இந்த மோர். பகல் வேளைகளில் ஆடை சத்து முழுவதும் எடுத்துக் கடைந்த தயிரில் நிறைய நீர் சேர்த்து, நீர் மோர் தயாரித்து கொத்துமல்லி இலை, கறிவேப்பிலை உப்பு சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. நல்ல குளிர்ச்சியானது. நா வறட்சியைப் போக்கும்.
நல்லெண்ணெய் - தேங்காய்ப்பாலை வாயில் விட்டுக் கொப்பளித்துத் துப்புவதால் வாய் வறட்சியையும் நாக்கு வறட்சியையும் போக்கிக் கொள்ள முடியும். எள்ளை மென்று வெகுநேரம் வாயில் வைத்திருந்து பிறகு உமிழ்ந்து கொப்பளிப்பதும் நல்லதே.
இரவில் சாப்பிடும் உணவு மாவு வகைகளாகிய இட்லி, தோசை என்று அமைந்திருந்தால், நடு இரவில் நாக்கு உலர்ந்துபோய் அதிக தண்ணீரின் தேவையை உணர்த்தக் கூடும். மாவினுடைய அம்சம் ரத்தத்தில் கலந்திருக்கையில் அதை நீர்க்கச் செய்து, செரிமானம் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உடல் ஆட்படும்போது, நீரின் தேவைக்கான உத்தரவை நீர் வேட்கையின் மூலம் உத்தரவிடுகிறது. அதனால் நீங்கள் மாவுப் பண்டங்களை இரவில் சாப்பிடாமல், கோதுமையை உப்புமா, சப்பாத்தி என்ற வகையில் மாற்றி அமைத்துச் சாப்பிடவும்.
இரவில் அதிகம் தண்ணீர் பருகினால், சிறுநீரின் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் தூக்கம் கெட்டுவிடக் கூடும். தூக்கம் குறைந்தால் அனேக உபாதைகள் தலைதூக்கிவிடும். அதனால் உலர்ந்து போய்விட்ட நாக்குக்கு வெட்டி வேர் போட்டு ஊறிய மண் பானைத் தண்ணீரை, நாக்கின் மீது படர விட்டு, சிறிதுநேரம் வைத்திருந்து சிறிய அளவில் பருகினால், மேலும் மேலும் ஏற்படக் கூடிய நாவறட்சியை எளிதில் போக்கிக் கொள்ளலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.