தாகூர் - விக்டோரியா
ரவீந்திரநாத் தாகூரின் கடைசி பதினேழு ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் 1924 ஆம் ஆண்டில்


"அந்த அயல்நாட்டு மண்ணில்
எனக்காகக் காதல் செய்தியொன்று
காத்திருக்கிறது என்பதை
மீண்டுமொருமுறை நான்
எப்படிச் சொல்வேன்?
..... ...... ...... ...... ..... ..... ..... ......
அவளது மொழி
எனக்குத் தெரியாது
அவளது கண்கள் மட்டுமே
என்னிடம் பேசின
அவை என்ன பேசின?
அந்த சொல்வன்மையின்
வேதனை எப்போதும் நிலைத்திருக்கும்!'
1941 ஆம் ஆண்டில் தாகூர் எழுதிய "காலி நாற்காலி' என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு இது.
ரவீந்திரநாத் தாகூரின் கடைசி பதினேழு ஆண்டுகளில் அவர் எழுதிய கவிதைகள் அனைத்தும் 1924 ஆம் ஆண்டில் அர்ஜென்டினா, போனர்ஸ் அயர்ஸில் சந்தித்த விக்டோரியா ஒகாம்போ என்ற பெண் இவர் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை அடிப்படையாக வைத்து எழுதியதாகும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே பிரெஞ்ச், ஸ்பானிஷ் மொழியில் திறமை பெற்றிருந்த விக்டோரியாவுக்கு கவிதைகளில் அதிக நாட்டமிருந்தது. இதற்கு தாகூர் எழுதிய "கீதாஞ்சலி' கவிதைத் தொகுப்பும் காரணமாகும். 1914 ஆம் ஆண்டில் அவரது 24 வது வயதில்தான் தாகூரின் "கீதாஞ்சலி' அவருக்கு அறிமுகமானது. இது குறித்து விக்டோரியா குறிப்பிடுகையில், "எனக்கு கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. தாகூரின் கீதாஞ்சலியைப் படித்தவுடன் மகிழ்ச்சியாலும் நன்றியாலும் என்னையறியாமல் கண்ணீர் தளும்பியது. என்னைப் பொறுத்தவரை தாகூர்தான் கடவுள் என்று எனக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்' என்று எழுதியிருந்தார்.
விக்டோரியா முழுமையான எழுத்தாளராக உருவான பின்னரே பத்தாண்டுகள் கழித்துத் தாகூரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் அவர் அர்ஜென்டினாவிலிருந்து வெளி வரும் "லாநாசியன்' என்ற நாளேட்டில் பல்வேறு தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தார். 1924 ஆம் ஆண்டில் பெருநாட்டின் சுதந்திர நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தாகூர் வரும்போது, போனர்ஸ் அயர்ஸ் வரப் போவதாகவும், விக்டோரியாவுக்குத் தகவல் கிடைத்தது.
அவரைச் சந்திப்பதற்காக பிளாஸô ஓட்டலில் சிறப்பு அறையொன்றை வாடகைக்கு அமர்த்தியிருந்தார் விக்டோரியா.
தாகூர் தன்னுடைய பிரிட்டிஷ் செயலாளர் லியானார்ட் எம்ஹைஹ்ஸ்ட்டுடன் வந்தபோது உடல் நலன் பாதிக்கப்பட்டதால் பல வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால் பெரு பயணத்தை ரத்துச் செய்த தாகூர் விக்டோரியாவை மட்டும் சந்திக்க ஒப்புக் கொண்டார்.
முதன்முதலாக நிகழ்ந்த இருவரது சந்திப்பு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் அவரவர் படைப்புகள் குறித்து விவாதிக்க ஆதாரமாகவும் அமைந்தது. தாகூரிடமிருந்து ஓவியத் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் விக்டோரியாவுக்குப் பெரும்பங்கு உண்டு. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் சில ஆண்டுகள் கழித்துத் தாகூரின் ஓவியங்களை பாரிஸ் நகரில் முதன்முறையாகக் கண்காட்சியாக வைக்க விக்டோரியா உதவினார். அந்த சமயத்தில் இரண்டாவது முறையாக தாகூர் விக்டோரியாவை நேரில் சந்தித்தார். இதுவே கடைசி சந்திப்பாகவும் அமைந்தது. அர்ஜென்டினாவிலிருந்து தாகூர் புறப்படும்போது அவரது வசதிக்காக நாற்காலியொன்றை விக்டோரியா பரிசளித்தார். அதை மையமாக வைத்து தாகூர் எழுதிய "காலி நாற்காலி' என்ற கவிதையே அவருடைய கடைசிக் கவிதையாகவும் ஆயிற்று.
அப்போதுதான் தாகூரின் கவிதைத் திறமையை மட்டுமே அறிந்தவர்கள் அவரது ஓவியத் திறமையையும் அறிய முடிந்தது.
தாகூருக்கு விக்டோரியா மீதிருந்த அன்பினாலும் பாசத்தினாலும் இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தான் எழுதும் கவிதைகளில் "விஜயா' என்று அவரைக் குறிப்பிட்டிருந்தார். தொலைத் தொடர்பு வசதிகள் முன்னேற்றமடையாத அந்தக் காலத்தில் இருவரும் கடிதங்கள் மூலம் தங்கள் நட்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர். விக்டோரியாவுக்காக தாகூர் பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினார். இவர்களது தொடர்பை அறிந்தவர்கள் இந்த நட்பைத் தெய்வீகமாகவே கருதினர். இருவரது கடிதத் தொடர்பும் தாகூர் 1941 ஆம் ஆண்டில் காலமாகும் வரை நீடித்தது.
விக்டோரியா தன்னுடைய மனதில் இருந்த எண்ணங்களையெல்லாம் கடிதம் மூலம் தாகூருக்கு எழுதி வந்தார். தாகூர் மீது விக்டோரியாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் கூற முடியாது. அதே சமயம் தாகூர் எழுதிய கவிதைகள் விக்டோரியாவை மனதில் வைத்து எழுதப்பட்டதாகக் கருதினாலும் காதலையும் மீறி அவர்களது உறவு புனிதத் தன்மை உடையதாகக் கருதப்பட்டது.
விக்டோரியாவுக்கு இருபது வயதிலேயே திருமணமாகி சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து விட்டார். அப்போது விவாகரத்து என்பது சட்ட விரோதமாகவும், தனியாகப் பிரிந்து வாழ்வது ஒதுக்கி வைப்பதற்குச் சமமாகவும் கருதப்பட்டது. இவரது குடும்பம் வசதியானது என்பதால் அவர்களது ஆதரவுடன் எழுத்துப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்.
1952 ஆம் ஆண்டில் விக்டோரியா தனது சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அதில் நூறு பக்கங்களுக்கு மேல் தாகூர் பற்றியே அதிகமாக குறிப்பிட்டிருந்தார். இருவருக்குமிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களும் இடம் பெற்றிருந்தன. இந்த சுயசரிதை 1979 ஆம் ஆண்டில் விக்டோரியா இறந்த பின்னரே வெளிவந்தது. அதன் பின்னர்தான் இவர்கள் இருவருக்குமிடையே இருந்த நட்பு வெளி உலகுக்குத் தெரிந்தது.
விக்டோரியாவின் 87 ஆவது வயதில்தான் அவரது படைப்புகள் அங்கீகரிக்கப்பட்டு, அர்ஜென்டினா அகாதெமியில் இடம் பெறும் முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். இந்த அங்கீகாரம் அவருக்குத் தேவையில்லை என்றாலும் நீண்டகாலத்துக்கு முன்பே இந்த புகழ் தனக்குக் கிடைத்திருக்க வேண்டியது என்று கருதியதால் அதை ஏற்றுக் கொண்டார்.
1953 ஆம் ஆண்டில் இவர் எழுதிய சில கருத்துகள் தாய்நாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கருதி ஜெனரல் பேரன் விக்டோரியாவைச் சிறையில் அடைத்தார். இந்தியாவின் தலையீடு காரணமாக 26 நாட்களுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதிய விக்டோரியா பின்னர் தொடர்ந்து அவருக்கும் கடிதம் எழுதிவந்தார். இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அர்ஜென்டினா சென்றிருந்த போது விக்டோரியாவின் வீட்டுக்குச் சென்று சந்தித்தது முக்கிய நிகழ்வாகும்.
1979 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி விக்டோரியா, வாயில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். வலியைப் பொறுத்துக் கொள்வேனே தவிர மருந்து மாத்திரை எதுவும் உட்கொள்ள மாட்டேன் என்ற மன உறுதியுடன் மரணத்தை ஏற்றுக் கொண்டார். இது தனக்கேற்பட்ட விதி என்று கூறினாலும் இறுதிவரை அவரது மனத் தூய்மை விக்டோரியாவை விட்டு விலகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...