/

விடியலை நோக்கி வீதி நாடகம்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் அனைத்து துறை மாணவ, மாணவிகளையும் இணைத்து வீதி நாடகக் குழு அமைக்கப்பட்டு, கிராமங்களில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :3 பிப்ரவரி 2013, 4:56 am

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் அனைத்து துறை மாணவ, மாணவிகளையும் இணைத்து வீதி நாடகக் குழு அமைக்கப்பட்டு, கிராமங்களில் விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார், கல்லூரியின் இளங்கலை தமிழ்த்துறைத் தலைவர் இரா.இளவரசு.

சென்னை கலைக் குழு நிறுவனர் பிரளயன் மற்றும் நாடகப் பயிற்றுநர் கி.பார்த்திபராஜா ஆகியோரைக் கொண்டு இதற்காக 30 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டக் குழு 5 உள்ளது. திட்ட முகாம் நடைபெற்ற சித்துராஜபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் கலப்பட உணவுப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த முதல் நாடகம் நடத்தப்பட்டது.

வடபட்டி, வெம்பக்கோட்டை ஊர்களில் நடந்த திட்ட முகாம்களிலும் நாடகத்தை நடத்தியிருக்கின்றனர். சுமார் 25 நிமிடங்களிலிருந்து 30 நிமிடம் வரை நாடகம் நடைபெறுகிறது. வீடு செட் வேண்டும் என்றால் கம்புகளை பிடித்துக் கொண்டு நடிக்கிறார்கள். செட் போட இயலாது என்பதால், கம்பையே வீடு, கடை உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்துகிறார்கள் மாணவர்கள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை காடுகளில் போடுவதால் மிருகங்கள் தின்று, மடிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மரக்கன்றுகளை நட்டு பறவை இனங்களைப் பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதால் சுத்தமான காற்று கிடைக்கிறது. கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு பில் வாங்க வேண்டும். போலியானவற்றை வாங்கக் கூடாது. விலை குறைவாக உள்ளது என தரமற்ற பொருள்களை வாங்கக் கூடாது. பெட்டிக் கடைகளில் மாத்திரை வாங்கக் கூடாது என்பன போன்றவை குறித்து நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்தக் கல்லூரி மாணவர்கள்.

நாடகத்திற்கான தாள வாத்தியமாக தபேலாவை மட்டும் பயன்படுத்துகின்றனர். நாடகத்திற்கு பெரும்பாலும் "மைக்' உபயோகிப்பதில்லை.

2011ஆம் ஆண்டு பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், அதே ஆண்டும் சிவகாசி நகராட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவிலும், கடந்த ஆண்டு டிசம்பர் 12 அன்று ஏழாயிரம்பண்ணையிலும் வீதி நாடகம் நடத்தி பாராட்டுப் பெற்றிருக்கின்றனர்.

கல்லூரியை விட்டு பட்டம் பெற்றபின் வெளியேறும் மாணவர், அவரே வேறு ஒரு மாணவரை அடையாளம் கண்டு, குழுவில் சேர்க்க வேண்டும் என்ற விதியை தங்களுக்குள் கடைப்பிடிக்கின்றனர். அதனால் இந்தக் கல்லூரியில் கலையை வளர்க்கும் புதிய மாணவர்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை.

அரசு விழாக்கள் மட்டுமல்லாது, கிராமம் கிராமமாகச் சென்று வீதி நாடகங்களை நடத்த வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.