

என் வயது 52. போக்குவரத்துத்துறையில் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஆறு மாதமாக கை விரல்களின் நுனி நகமும், நகத்திலுள்ள தோல்களும் வெடித்துள்ளது. உள்ளங்கையிலும் பாலம் பாலமாக வெடிக்கிறது. உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்பட்டு, சொறிந்தால் ரத்தம் வந்து பின்னர் கறுப்பாக மாறிவிடுகிறது. உள்ளங்கை, உள்ளங் காலில் கொப்பளங்கள் ஏற்படுகிறது. சொறிந்தால் நீர் வடிகிறது. இதைச் சரிப்படுத்த முடியுமா?
செ.சேகர், கரட்டடிபாளையம்.
உடல் உட்புறப் பகுதிகளில் சீற்றம் கொள்ளும் வாத - பித்த - கபதோஷங்கள், ஏழு தாதுக்களாகிய ரஸம் - ரத்தம் - மாம்ஸம் - மேதஸ் - எலும்பு -மஜ்ஜை - விந்து ஆகியவற்றைக் கெடுக்கின்றன. தோஷங்களால் கெட்டுப் போன தாதுக்கள், மலக்கழிவுகளாகிய மலம், சிறுநீர், வியர்வை போன்றவற்றைக் கெடுத்து, நோய்களுக்குக் காரணமாகின்றன என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இது போன்று ஏற்படும் நோய்களுக்கு நிஜம் என்றும் வெளிப்புறக் காரணங்களாகிய விஷவாயு, நெருப்புக் காயம், ரசாயனப் பொருட்களைத் தொட நேர்தல், கீழே விழுந்து அடிபடுதல், எலும்பு உடைதல், காமம், குரோதம், பயம் இத்யாதிகளால் மனம் பேதலித்தல் போன்றவற்றால் ஏற்படும் நோய்களை ஆகந்துகம் என்றும் பெயரிட்டுள்ளது.
பேருந்து பணிமனையில் வண்டிகளுக்குத் தேவையான உதிரி பாகங்களை இணைப்பது, கிரீஸ் போடுவது, வேறு ஏதேனும் ரசாயன பொருட்களைத் தொட நேர்வது போன்றவற்றால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருந்தால், ஆகந்துக நோய் உபாதையால் நீங்கள் குறிப்பிடும் தொல்லைகள் ஏற்பட்டிருக்கலாம். மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து உரக்கப் பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு குறித்த நேரத்திலல்லாமல் காலம் தவறி சூடு ஆறிப்போன உணவு வகைகளை, கைகளை நன்றாகச் சுத்தம் செய்து கொள்ளாமல் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருத்தல் ஆகியவை குடல் பகுதியில் வாத - பித்த - கப தோஷங்களின் சீற்றத்துக்குக் காரணமாகி, நிஜம் எனும் உபாதைகளுக்குக் காரணமாகியிருக்கலாம்.
ஆக, நிஜ - ஆகந்துக உபாதைகள் உங்களைத் தாக்கியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருப்பதால், உடல் உட்புற தாது மலங்களை தோஷங்களின் சீற்றத்திலிருந்து விடுபடச் செய்து, அவற்றைத் தத்தம் பணிகளில் சீராக செயல்படும்படி செய்ய வேண்டும்.
சீற்றங் கொண்டுள்ள தோஷங்களை குடலிலிருந்து வெளியாகும் மலக் கழிவின் மூலம் வெளியேற்ற மாணிபத்ரம் எனும் ஆயுர்வேத லேஹிய மருந்து உங்களுக்கு உதவலாம். தோல் உபாதைகளை அறவே நீக்கும் இந்த மருந்தை நீங்கள், காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சியின் தண்ணீர் செரித்து, மதியம் பசி ஏற்பட்டுள்ள தறுவாயில், சுமார் 20 - 25 கிராம் நக்கிச் சாப்பிட வேண்டும். லேஹியம் சாப்பிட்ட பிறகு, வீட்டினுள் உலாத்த வேண்டும். சிறிது சிறிதாக அடிக்கடி வெந்நீர் பருக வேண்டும். வெந்நீரில் பிழியப்பட்ட துணியை வயிற்றின் மீது ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்வதால், உட்கொண்ட லேஹிய மருந்து குடலில் கெட்டுப் போயுள்ள தோஷங்ளைச் சுரண்டி எடுத்து,மலத்துடன் நீர்ப்பேதியாக்கி வெளியே கொண்டு வந்து விடும். 15 நாட்களுக்கு ஒருமுறையாக சுமார் 4 -5 முறை இந்த மருந்தை நீங்கள் சாப்பிட்டு, உடல் உட்புறச் சுத்தத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். முன் குறிப்பிட்ட தவறான உணவுமுறைகளைத் தவிர்த்து, வீட்டிலிருந்து மனைவியோ, தாயாரோ செய்து தரும் உணவை மட்டுமே, நண்பர்களுடன் அல்லாமல் தனியே அமர்ந்து, பேசாமல் சிரிக்காமல் உணவிலேயே மனம் செலுத்தி உண்ண வேண்டும். மாலையில் வீடு திரும்பியதும் அவர் செய்த சமையலைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களிடமிருந்து மேலும் சில உதவிகள் தங்களுக்குத் தேவைப்படுகிறது.
கருங்காலிக் கட்டை, வேப்பம்பட்டை, சரக்கெண்ணெய்ப்பட்டை, ஆல், அரசு, அத்தி, இத்திப் பட்டை, புங்கம்பட்டை, ஏழிலைப் பாலைப்பட்டை போன்றவற்றில் கிடைத்த மட்டும் பட்டைகளை மொத்தம் 60 கிராம் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, 250 மி.லி. அளவு சுண்டியதும் வடிகட்டி காலை, மாலை பாதியாகப் பிரித்து, வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், தோல் உபாதைகள் குணமாக நல்ல வாய்ப்புள்ளது. இதற்கும் மனைவி அல்லது தாயாரின் உதவி தேவைப்படும்.
பணிமனையில் செய்யும் வேலைகளால் இந்த உபாதை ஏற்படுகிறது என்று நீங்கள் நினைத்தால், நால்பாமராதி தைலம், தினேசவல்யாதி தைலம், தூர்வாதி தைலம், அய்யப்பாலா தைலம் போன்ற நல்ல தரமான தைலங்களில் ஒன்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, உபாதைகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் குளிக்கவும், இம்மருந்துகளின் தொடர் உபயோகத்தால் நிறைவான பலனை விரைவில் நீங்கள் அடையலாம். இந்த எண்ணெய்ப் பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு அல்லது கடலை மாவைத் தண்ணீரில் கரைத்துப் பயன்படுத்தவும்.
உணவில் புலால் வகை, புளித்த தயிர், நல்லெண்ணெய், வெல்லம், டீ, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, வடை, கத்தரிக்காய், கடுகு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.முன் உண்ட உணவு நன்றாகச் செரிமானமாகி பசி ஏற்பட்ட பிறகே, அடுத்த வேளை உணவை உண்ணவும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.