சோதனைகளை சந்தித்தவர்கள்!
ஆர்.கே.தயாரிப்பு நிறுவனத்திற்காக முதன்முறையாக நர்கீஸை நடிக்க வைக்க அவரது வீட்டிற்குச் சென்ற ராஜ்கபூர், ஏற்கெனவே


ஆர்.கே.தயாரிப்பு நிறுவனத்திற்காக முதன்முறையாக நர்கீஸை நடிக்க வைக்க அவரது வீட்டிற்குச் சென்ற ராஜ்கபூர், ஏற்கெனவே படங்களில் நடிக்கத் தொடங்கியிருந்த நர்கீஸ் தன்னுடைய படத்தில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், ""அவரது வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தபோது என் இதயத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஒப்புக்கொள்வாரா? மாட்டாரா? கதவை திறந்த நர்கீஸ் என் எதிரே நிற்பதைப் பார்த்தபோது மெய் மறந்து போனேன். வலது கையால் கூந்தலை ஒதுக்கியபடி என்னை வரவேற்ற காட்சியை என்னால் மறக்க முடியவில்லை'' என்றாராம்.
முதன்முதலாக அவர்கள் சந்தித்துக்கொண்ட காட்சியைதான் முப்பதாண்டுகளுக்கு பிறகு "பாபி' படத்தில் டிம்பிள் கபாடியாவை அறிமுகப்படுத்தும் காட்சியில் அந்த சம்பவத்தை அப்படியே படமாக்கியிருந்தார் ராஜ்கபூர். பத்தாண்டுகளாக திரையிலும் திரைமறைவிலும் காதலர்களாக வாழ்ந்த ராஜ்கபூர்- நர்கீஸ் ஜோடி பிரிவுக்குப் பின்னரும் வாழ்க்கையில் ஒரே மாதிரியான சோதனைகளைச் சந்தித்தது ஆச்சரியமான விஷயமாகும்.
""என்னுடைய 29 வயதில் "மதர் இந்தியா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். என்னுடைய மகன்களாக ராஜேந்திர குமாரும் சுனில்தத்தும் நடித்தனர். எந்த நடிகையைக் கேட்டாலும் அதுபோன்ற பாத்திரம் அமைவது கடினமென்றே சொல்வார்கள். என்னை உச்சத்திற்கு கொண்டு சென்ற பின்னர் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தபோதிலும் இந்தப் புகழுடன் திரையுலகை விட்டு விலக முடிவு செய்தேன். "மதர் இந்தியா' படப்பிடிப்பின்போது உண்மையிலேயே தீ விபத்தில் சிக்கிக்கொண்டேன். என்னை சுற்றிலும் நெருப்பு. என்னை காப்பாற்ற வேண்டுமென்று துணிச்சலுடன் நெருப்பில் நுழைந்து என்னை காப்பாற்றிய சுனில் தத் என்னைப் பொறுத்தவரை ரியல் ஹீரோவாக தோன்றினார். அவரைத் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், "மதர் இந்தியா' ரிலீஸ் வரை உங்களது திருமணத்தை தள்ளிப்போடுங்கள்' என்று படத்தின் தயாரிப்பாளர் மெஹ்பூப்கான் எங்களைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் நாங்களிருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டோம். ஆனால் படம் ரிலீஸôன பின்னரே எங்கள் திருமணத்தை அறிவித்தோம்'' என்று நர்கீஸ் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
திருமணத்திற்கு பின்னர் சுனில்தத் எடுத்த "யாதேன்' படுதோல்வியடைந்ததால் பெரும் இழப்பைச் சந்திக்க வேண்டியதாயிற்று. சுல்தான் அகமது எடுத்த "ஹீரா' மீண்டும் சுனில் தத்திற்கு மறுவாழ்வை அளித்தது. பாலிஹில்ஸில் இருந்த அவரது வீட்டைத் தயாரிப்பாளர்கள் சூழ்ந்தபோது சுனில்தத்தை மகிழ்விக்க வேண்டுமென்பதற்காக சிறுவனான சஞ்சய்தத்திற்கு விலையுயர்ந்த பரிசுபொருள்களை அளித்தனர். இது அவனது எதிர்காலத்தைப் பாதிக்குமென்று கருதிய சுனில்தத் அவனை போர்டிங் பள்ளியில் சேர்க்க நினைத்தார். சிறுவனான சஞ்சய்க்கு அது பிடிக்கவில்லை. நர்கீஸூலும் சுனில்தத் கருத்தை ஏற்க முடியவில்லை என்றாலும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாராம்.
இதுகுறித்து நர்கீஸ் கூறுகையில்,""தந்தை என்ற முறையில் எது நல்லது கெட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் அவர் முடிவில் நான் தலையிடவில்லை. நாங்கள் அவனை அழைத்துக்கொண்டு புணே அருகேயுள்ள சானாவருக்கு சென்றோம். வழியில் சஞ்சய் ஒருவார்த்தை கூட எங்களுடன் பேசவில்லை. அவனை போர்டிங் பள்ளியில் சேர்த்துவிட்டு திரும்பியபோது அவர் ஏதும் பேசாமல் வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டார். என்னிடமும் எதுவும் பேசவில்லை. அரை மணி நேர பயணத்திற்கு பின்னர் மீண்டும் காரை அந்த பள்ளிக்கூடத்திற்கு அவர் திருப்பினார். நாங்களிருவரும் சஞ்சய் இருந்த வகுப்பறைக்கு சென்றோம். வாசலில் நின்று பார்த்தபோது பென்சில் முனையை வாயில் வைத்து கடித்தபடி வெறித்த பார்வையுடன் சஞ்சய் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவனது பார்வையில் கோபம் இருந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. சுனில் என்னை அணைத்தபடியே காருக்கு அழைத்து வந்தார். எங்களிருவருக்கும் இடையே அவன் படுத்துறங்கிய காட்சியை மறக்க முடியவில்லை. தூக்கத்தை இழந்தேன். மறந்தும்கூட போர்டிங் ஸ்கூலுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள் என்று நான் யாருக்குமே யோசனை சொல்ல மாட்டேன்'' என்று நர்கீஸ் கூறியிருந்தார்.
போர்டிங் பள்ளியிலும் சஞ்சய்க்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. உடனிருந்த மாணவர்கள் அவரிடம் நட்புடன் பழகவில்லை. ராஜ்கபூர்- நர்கீஸ் உறவைப் பற்றி தங்களது பெற்றோர் மூலம் அறிந்த தகவல்களை வைத்து கேலி செய்தனர். அந்த குரூரமான விமர்சனங்களை சஞ்சயால் தாங்க முடியவில்லை. போதைப்பொருள் உட்கொள்ளத் தொடங்கினார். சஞ்சய் போதை பழக்கத்திற்கு அடிமையானது சுனில்தத்- நர்கீஸ் தம்பதியரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இளைஞரான பின்னரும் அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்தார். சஞ்சய்தத்தின் வாழ்க்கையைத் திசைமாற்ற அவரை கதாநாயகனாக வைத்து "ராக்கி' படத்தை சுனில்தத் தயாரித்தபோது நர்கீஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சஞ்சய்தத்திற்கு திருப்புமுனையாக அமைந்த "ராக்கி' திரைக்கு வருவதற்கு முன்பே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நர்கீஸ் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 1981-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி காலமானார். அதன் பின்னரே "ராக்கி' ரிலீஸôனது. படத்தின் ஆரம்ப தினத்தன்று தியேட்டரில் சுனில்தத்- சஞ்சய்தத் இருவருக்குமிடையே ஒரு சீட் காலியாக வைக்கப்பட்டதாம். இவை நர்கீஸ் வாழ்க்கையில் நேர்ந்த சோகங்கள். இவற்றையும் மீறி அவருக்கு சில சந்தோஷ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டுதான்.
நர்கீஸ் நடித்த "மதர் இந்தியா' ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது; இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முதன்முறையாக ஒரு பெண் தலைவராக நர்கீûஸ தேர்ந்தெடுத்தது; திரையுலகிலிருந்து முதன்முறையாக ராஜ்யசபா உறுப்பினராக நடிகை என்ற முறையில் நர்கீûஸ தேர்வு செய்தது எல்லாம் நர்கீஸýக்கு பெருமை சேர்த்த விஷயங்களாகும்.
ராஜ்கபூரை பொறுத்தவரை 16 வயது முதல் 60 வயது பெண்கள் அனைவரும் விரும்பும் கதாநாயகனாக வலம் வந்தார். நீல நிறக் கண்களுடன் மெதுவாக பேசும் தன்மையும், புத்திசாலித்தனமும், கற்பனை வளமும், கல்வியறிவும், உலகம் சுற்றிய அனுபவமும், ஆன்மிக உணர்வும், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவராகவும் அழகுடனும் விளங்கினார். மொத்தத்தில் உண்மையான மேதை என்ற இமேஜ் அவருக்கிருந்தது. ""நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது "மேரா நாம் ஜோக்கர்'தான். திறமையற்ற குழந்தை மீது எப்போதுமே பெற்றோர்களுக்கு விருப்பம் அதிகம்'' என்று விளக்கமளித்த ராஜ்கபூர், ஏராளமான பொருட் செலவில் "மேரா நாம் ஜோக்கர்' படத்தை எடுத்து ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஆர்.கே.ஸ்டுடியோவை அடமானம் வைக்க வேண்டியதாயிற்று. தன்னை அப்பாவியாக காட்டியவர், தொடர்ந்து காதலில் தோல்வியடைவதை அவரது ரசிகர்கள் ஏற்கவும் இல்லை. ஒதுக்கவும் இல்லை. படத்தின் நீளம் (இரண்டு இடைவேளை), காதல் ஹீரோவாக கருதப்பட்டவர் இறந்து போவது போன்றவை படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.
""மேரா நாம் ஜோக்கர்' பட தோல்விக்கு பின்னர் என்னுடைய வழக்கமான விநியோகஸ்தர்கள் என் மீது நம்பிக்கை இழந்தனர். என்னுடைய வெற்றிப்படங்கள் மூலமாக லாபமடைந்ததை மறந்தனர். அவர்களைத் திருப்திப்படுத்த குறைந்த பட்ஜெட்டில் புது முகங்களான என்னுடைய மகன் ரிஷிகபூரையும் டிம்பிள் கபாடியாவையும் வைத்து "பாபி' படத்தை எடுத்தேன். அதை நம்பிக்கையுடன் வாங்க தயங்கிய விநியோகஸ்தர்கள் படத்தை முன்கூட்டியே பார்க்க வேண்டுமென்றனர். பணத்தை முதலீடு செய்யத் தயங்கியதால் அவர்களுக்காக 10 ரீல்களை போட்டுக் காண்பித்தேன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?'' என்று பேட்டியொன்றில் கண்களில் நீர்மல்க ராஜ்கபூர் கூறினாராம்.
அவரது அதிர்ஷ்டம் 1973-ம் ஆண்டு வெளியான "பாபி' சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அதன் பின்னரே மற்ற நடிக-நடிகைகளும் தங்கள் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்தத் தொடங்கினர். ராஜ்கபூரின் அடுத்த படத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் போட்டி போட "சத்தியம் சிவம் சுந்தரம்' படத்தில் ஜீனத் அமன் ஒப்பந்தமானார். வித்தியாசமான கதாபாத்திரம் என்று கேள்விப்பட்டவுடனே ராஜ்கபூரை நேரில் சந்தித்த அவர், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத் தயார் என்பதை நிரூபிக்க அவரது அறையிலேயே மேக்கப் போட்டு உடை மாற்றி நடித்துக் காட்டி ஒப்பந்தமானதாக ராஜ்கபூரே கூறியுள்ளார்.
ஆர்.கே.ஸ்டுடியோவில் உள்ள அவரது ஆர்.கே. காட்டேஜ் மிகவும் பிரபலமானதாகும். நர்கீஸ், பத்மினி, வைஜெயந்திமாலா உள்பட அனைத்து கதாநாயகிகளும் அங்கு வைத்து மேக்-அப் டெஸ்ட் செய்த பின்னரே படங்களில் ஒப்பந்தமானார்கள். சிறு வயது முதலே விதவிதமான நாணயங்களைச் சேகரிப்பது ராஜ்கபூரின் வழக்கம். அதே போன்று நடிகைகளையும் விதவிதமாகத் தேர்வு செய்தது அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ரசிகர்களால் மறக்க முடியாத இந்த ஜோடியில் நர்கீஸின் பிறந்த நாள் ஜூன் முதல் தேதியன்றும், ராஜ்கபூரின் நினைவு நாள் ஜூன் 2-ம் தேதி வருவதும் எதிர்பாராத ஒன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...