நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

படித்தேன் ரசித்தேன் -1

வெள்ளைக்காரர்கள் காலத்தில் புதிய கலெக்டராக வந்த ஓர் ஆங்கில அதிகாரிக்குத் தமிழின் மீது விருப்பம் உண்டானது. தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்துச் சில மாதங்களில் இலக்கியங்களையும் வாசிக்கத் துவங்கினார்.

News image
Updated On :22 மார்ச் 2013, 5:36 am

பூதலூர் முத்து

வெள்ளைக்காரர்கள் காலத்தில் புதிய கலெக்டராக வந்த ஓர் ஆங்கில அதிகாரிக்குத் தமிழின் மீது விருப்பம் உண்டானது. தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்துச் சில மாதங்களில் இலக்கியங்களையும் வாசிக்கத் துவங்கினார். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்து கொள்வதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள அடிக்கடி அவர் வித்துவான் தியாகராச செட்டியாரை வரவழைத்துப் பாடம் கேட்பது வழக்கம்.

ஒரு நாள் திருக்குறளை கலெக்டர் வாசித்துக் கொண்டிருந்தபோது "தக்கார் தகவு இலர்' என்ற 114-வது குறள் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவருக்குத் தோன்றியது. உடனே அவர் திருக்குறளில் ஒரு திருத்தம் செய்து, அதை தியாகராச செட்டியாரிடம் காட்டி ஒப்புதல் வாங்க வேண்டும் என்று அவர் வீட்டைத் தேடிச் சென்றார்.

காலை நேரத்தில் வீட்டில் உள்ள கீரைப் பாத்திகளைக் கொத்தி வேலை செய்து கொண்டு இருந்தார் தியாகராச செட்டியார். கலெக்டர் வீடு தேடி வந்ததும் பதற்றத்துடன் தியாகராச செட்டியாரின் மனைவி அவரை இருக்கையில் அமரச் செய்துவிட்டு கணவரை அழைத்தார். அவரோ தோட்ட வேலை செய்தபடியே, என்ன விஷயமாக வந்திருக்கிறார் என்று கேட்டு வரச் சொன்னார்.

அதற்குள் கலெக்டரே வீட்டின் பின்பக்கம் வந்து நின்றவராக திருக்குறளில் தான் ஒரு தவறு கண்டுபிடித்துள்ளதாகவும், அதைத் திருத்தி எழுதி வந்திருப்பதாகவும் வாசித்துக் காட்டினார். தியாகராச செட்டியாருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. கையிலிருந்த மண் வெட்டியை ஆவேசமாக உயர்த்தியபடி, ""யார் எழுதிய பாடலை யார் திருத்துவது? தமிழ் ஒன்றும் நாதியத்த பிள்ளையில்லை. போற,

வர்றவன் எல்லாம் தலையில் அடிச்சிட்டுப் போறதுக்கு! தமிழில் ஒரு எழுத்தை மாத்தறதுக்கு எந்த வெள்ளைக்காரன் முயற்சி பண்ணினாலும் பாத்துட்டு சும்மா இருக்கமாட்டேன்.. வெளியே போங்க...'' என்று உரத்த குரலில் சத்தமிட்டார். பயந்துபோன கலெக்டர் வெளியேறிப் போய்விட்டார்.

"கதா விலாசம்' என்ற நூலில் கரும்பலகைக் காட்சிகள் என்ற கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன்

-----------------------------------

விதி காரணமாகவே அவர்கள் சந்தித்திருக்க வேண்டும். மெரினா கடற்கரையில் மாலையில் நீண்ட, "வாக்' போவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர் பாலசந்தர்...ஆனால் பந்தா இல்லாமல் வெள்ளை வேஷ்டி அணிந்து நடக்கும் பிராமணர்கள் மாதிரி அல்லாமல், வண்ண உடை அணிந்து செல்வார் அவர். கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் லுங்கி; அதற்கு மேட்ச் ஆவதுபோல் பளபளவென்று ஆடம்பரமான குர்த்தா. கழுத்தைச் சுற்றி தெளிவாகப் பின்னப்பட்ட ஸ்கார்ஃப். அழகான கட்டுமஸ்தான தோற்றமும் சுருள் சுருளான தலைமுடியும், பெண்களை ரெண்டாவது தடவை அவரைப் பார்க்க வைக்கும்.

சாந்தாவையும் பாலசந்தரையும் அறிமுகப்படுத்தியது பேபி ஸரோஜா. இருவருக்கும் பொதுவான தோழி. ஒரே மாதிரியான ஆர்வம் கொண்டிருந்ததன் காரணமாகவும், நெருங்கிய நட்பு காரணமாகவும் பேபி ஸரோஜாவும் பாலசந்தரும் பொருத்தமான ஜோடியாக இருப்பார்கள் என்றே பலரும் நினைத்திருந்தார்கள். ஆனால் விதி வேறு விதமாக நினைத்தது.

சாந்தாவும் பேபி ஸரோஜாவும் நீண்ட நாள் தோழிகள். இருவரும் சேர்ந்து சைக்கிளில் மெரினாவுக்கு வருவார்கள். பாலசந்தரின் காலை நேர "வாக்கிங்' போதுதான் சாந்தாவை முதல் தடவை சந்தித்தார்; கண்டதும் காதல் கொண்டார்.

கொஞ்ச நாட்களுக்குக் காதல் தொடர்ந்தது. ""நாம் கல்யாணம் செய்து கொள்வோமா?'' என்று ஒருநாள் பாலசந்தர் முன்மொழிய, தம் தந்தை- விசு அண்ணா என்று அழைக்கப்பட்ட விசுவநாதன் மற்றும் தாய் லட்சுமிரத்தனிடம் இதைத் தெரிவித்தார் சாந்தா. ஜாக்கிரதை உணர்வுடன் இதை எதிர்கொண்டார் விசு அண்ணா. ஒரேடியாக நிராகரித்து விடவில்லை என்றாலும் "அதிகம் படிக்காத, சினிமாவை வாழ்க்கையாய் எடுத்துக் கொண்ட ஒருவனுக்கு என் மகளைக் கொடுப்பதா?' என்ற தயக்கம் அவருக்கு. தமது முடிவைத் தெரிவிக்கத் தாமதப்படுத்தினார்.

சாந்தாவுக்குத் தந்திரமாக ஒரு யோசனை சொன்னார் பாலசந்தர். ""உன்னுடைய அப்பாவின் சம்மதமும் ஆசியும் கிடைக்கும்வரை நீ காலேஜ் போகாதே! வீட்டிலேயே இருந்து விடு! இப்படிச் செய்வதும் உன் தந்தையைப் புறக்கணித்த மாதிரிதான்''என்றார்.

திட்டம் வேலை செய்தது. விசு அண்ணாவும் அவர் மனைவி லட்சுமியும் இறங்கி வந்தார்கள். 1952 செப்டம்பர் 5-ஆம் தேதி திருப்பதியில் சாந்தா- பாலசந்தர் திருமணத்தை மிக எளிமையாக நடத்தினார் விசு அண்ணா.

- "வீணையின் குரல்- எஸ். பாலசந்தர் வாழ்க்கைச் சரிதம்' (விக்ரம் சம்பத்: வீயெஸ்வி) நூலிலிருந்து

-----------------------------------

ஒரு நாள் டி.கே.சி. தன் சீடனைக் கூப்பிட்டு, ""உள்ளே ஒரு சந்தனப் பெட்டி இருக்கிறது எடுத்து வா'' என்று சொன்னார்.

சீடன் சந்தனப் பெட்டியைக் கொண்டுவந்து டி.கே.சி. முன் வைத்தான்.

அந்தப் பெட்டியை டி.கே.சி. திறந்தார். அதன் உள்ளே ஒரு பழைய பட்டுப் புடவை இருந்தது. அந்தப் பழைய புடவையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். மடியில் வைத்துக் கொண்டார். தோளில் போட்டுக் கொண்டார். பிறகு பெட்டியில் வைத்தார். அந்தப் பெட்டியை வலம் வந்து வணங்கினார். அப்போது அவர் முகம் ஆனந்தப் பரவசத்தால் மலர்ந்து இருந்தது. அவர் கண்களில் நீர் வடிந்து கொண்டிருந்தது.

சீடனுக்கு விஷயம் புரியவில்லை. டி.கே.சியிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான்.

""எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம். எங்கள் குடும்பத்து பெரியவர்கள் இறந்து போனால், அவர்கள் இறந்து போகும் போது அணிந்திருந்த ஆடைகளை வைத்து வழிபடுவோம். அந்த நாளில் புகைப்படம் எடுக்கும் கலை வளரவில்லை. அதனால் இந்த முறையை எங்கள் குடும்பத்தினர் பின்பற்றி வருகிறார்கள்...''

இந்தப் பழைய புடவை என் பாட்டியின் புடவை. இன்று என் பாட்டியின் மறைந்த நாள். இந்தப் புடவையைப் பார்க்கும்போது என் பாட்டி என் மீது காட்டிய அன்பு என் நினைவுக்கு வருகிறது. என்னைத் தோளிலே போட்டுப் பரிவுடன் பேணிய காட்சிகள் என் நினைவுக்கு வருகிறது.

எனக்குத் தேவாரத்தையும் திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து என்னைச் சான்றோன் ஆக்கிய செயல்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன...'' என்று சொன்னார். அப்போதும் அவர் கண்களில் நீர் பெருகிக் கொண்டே இருந்தது.

-----------------------------------

வள்ளியம்மா ஆர். முனுசாமி முதலியார், ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்த பதினாறு வயதுள்ள ஒரு சிறு பெண். நான் அவளைப் பார்த்தபோது படுத்த படுக்கையாக இருந்தாள். உயரமானவளாகையால் மெலிந்து நலிந்து இருந்த அவள் உடல் பார்ப்பதற்கு திடுக்கிடத்தக்கதாக இருந்தது.

""வள்ளியம்மா, நீ சிறை சென்றதற்காக வருந்துகிறாயா...?'' என்று கேட்டேன்.

""வருத்தமா, இப்போதுகூட, இன்னொரு தடவை கைது செய்யப்பட்டால் நான் சிறைக்குச் செல்லத் தயார்...'' என்று வள்ளியம்மா பதில் சொன்னாள்.

""அதனால் நீ இறந்து போவதாக இருந்தால் என்ன செய்வாய்?'' என்று தொடர்ந்து கேட்டேன்.

""அதை நான் பொருட்படுத்தவே மாட்டேன். தாய்நாட்டிற்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?'' என்று பதில் வந்தது.

இந்த சம்பாஷணை நிகழ்ந்த சில நாட்களுக்குப் பிறகு வள்ளியம்மாவின் உயிரோட்ட உடல் எங்களுடன் இல்லை. எனினும் அவளுடைய அழியாப் பெயர் என்னும் வெற்றியை எங்களுக்கு விட்டுச் சென்றாள். அவள் பிரிவு பற்றி இரங்கற் கூட்டங்கள் பல இடங்களில் நடந்தன. இந்தப் பாரத மகளின் உன்னத தியாகத்தை என்றும் நினைவுபடுத்த "வள்ளியம்மா மண்டபம்' நிறுவ இந்தியர்கள் தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானம் இதுவரையிலும் செயலாக மாறவில்லை என்பது வருந்தத்தக்கது. அதற்குத் தடையாக பல இடையூறுகள் குறுக்கிட்டன. சமூகத்தினரிடையே பல சச்சரவுகள் ஏற்பட்டன. முக்கியமான ஊழியர்கள் ஒவ்வொருவராக விலகினர். ஆனால் மண்டபம் கல்லினாலும் காரையினாலும் கட்டினால்தான் என்ன, கட்டப்படாவிட்டால்தான் என்ன? வள்ளியம்மாவின் தொண்டு அழியாதது. சேவையென்னும் கோவிலை அவள் தன் கரங்களினாலேயே எழுப்பினாள். அவளுடைய மாண்புமிக்க உருவம் பலர் இதயத்தில் நிரந்தரமாகப் பதிந்து இருக்கிறது. இந்தியா உள்ளவரையில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக சரித்திரத்தில் வள்ளியம்மாவின் பெயரும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.

- "மதாத்மா காந்தி படைப்புகள் தொகுதி (2)ல் மகாத்மா காந்தி'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.