குட்டையன்
டவுனில் போய் புது சவரக் கத்திகளை வாங்கிக் கொண்டு தன் சொந்த குக்கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான் ஊர் குடி மகன் குட்டையன்.


சோகச் செய்தி அந்த குக்கிராமமெங்கும் பரவி உறவுகளின் அழுகையும் கூப்பாடும் அடங்கி சில மணி நேரமாயிற்று.
டவுனில் போய் புது சவரக் கத்திகளை வாங்கிக் கொண்டு தன் சொந்த குக்கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தான் ஊர் குடி மகன் குட்டையன்.
அடிக்கும் வெயிலை சமாளிக்க தன்னுடைய மேல்துண்டை முக்காடாக போட்டபடி வேக வேகமாக நடந்து வந்து கிராமத்து எல்லையைத் தொட்டபோது எதிரே வந்த இஸ்மாயில் பாய், ""ஏலே குட்டையா அரசாங்க ஆஸ்பத்திரிக்கா போயிட்டு வாறே? தாவீது நல்லா இருக்கானா?'' எனக் கேட்க,
""சாயிபு ஐயா, தாவீது ஐயாவுக்கு என்னாச்சி?'' பதறிக் கொண்டே கேட்டான் குட்டையன்.
""ஏலே... குட்டையா உனக்கு சேதி தெரியாதால.. தாவீது பன மரத்துல இருந்து தவறி கீழே வுழுந்துட்டான்ல...'' என்றார் பாய்.
குட்டையனின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
""சாயிபு ஐயா நீங்க என்ன சொல்றீய...?''
""தாவீது ஐயா பனமரத்துல இருந்து கீழே வுழுந்துட்டாவளா..? அடக்கடவுளே...'' என குட்டையன் மீண்டும் பதறினான்.
""ஆமால.. ஓல வெட்ட பனமரத்துல ஏறினவரு கைதவறி கீழே வுழுந்து பலத்த அடி. மரைக்காயரோட பிளசருல தூக்கி போட்டுக்கிட்டு பாளையங்கோட்ட ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருக்காவ நீ அவங்க ஜாதி குடி மொவனாச்சே அதுதான் உனக்கு தெரியுமான்னு கேட்டேன் போ... போ... என்ன ஏதுனு போயி பாரு...'' என பாய் அவசரப்படுத்தினார்.
""ஐயா நா டவுனுக்கு போயி சவரக் கத்தி வாங்கிட்டு வாரேன். எனக்கு ஒண்ணுமே தெரியாதே.. நீங்க சொல்லித்தான் தெரியுது சாயிபு ஐயா... நீங்க நெசமாத்தான் சொல்றீயளா? '' என மீண்டும் குட்டையன் சந்தேகத் தொனியில் கேட்க, இஸ்மாயில் பாய் சற்று கோபமாக, ""அட எளவுடுப்பான் நா ஏம்ல பொய் சொல்லப் போறேன் போ.. போ... சீக்கிரம் போயி, என்னாச்சி ஏதாச்சினு பாரு...'' என அவசரப்படுத்திவிட்டு, புகைந்து கொண்டிருந்த தாமரை சிங்கம் சுருட்டை எடுத்து மீண்டும் வாயில் வைத்து புகைத்தபடியே கடந்து சென்றார்.
துக்கம் குட்டையனின் தொண்டையை அடைக்க கதறி அழவேண்டும் போலிருந்தது அவனுக்கு. வேக வேகமாக தன் குடிசையை நோக்கி ஓடினான் குட்டையன்.
குக்கிராமம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. அது ஒரு சிறிய அழகான குக்கிராமம். கிராமத்தைச் சுற்றி கறுப்பு நிற அழகிகளாக விண்முட்ட நிற்கும் பனை மரங்கள். ஊருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் கட்டப்பட்ட பார்வதி அம்மன் கோயில். அதன் முன்னால் சற்று தொலைவில் விரிந்து படர்ந்து விழுதுகள் விட்ட மிகப்பெரிய ஆலமரம். அம்மரத்தில் கூடுகள் கட்டி வசிக்கும் விதவிதமான பறவைகளின் கூட்டம். கிராமத்து வீடுகளில் வளர்ப்பு பிராணிகளாக பசுக்களும் வெள்ளாடுகளும் உண்டு.
குக்கிராமத்தில் பெரும்பாலானவை பனை ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகள். இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவில் அழகான பள்ளிவாசல். இத் தெருக்களில் மட்டும்தான் பல பெரிய கான்கீரிட் வீடுகள் இருந்தன. சில ஓட்டு வீடுகளும் உண்டு. கிராமத்தில் கோபுரங்களோடு இரண்டு வேத கோயில்கள். கிராமத்திற்கு வடக்கே ஒரு சிறிய வாய்க்கால். தெற்கே... இருப்புப்பாதை அமைந்துள்ள ஒருசிறிய ரயில்நிலையம்.
பகல் வேளைகளில் மின் கம்பங்களின் கீழே சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் தெரு நாய்கள். அதை கல்லெறிந்து காயப்படுத்தும் குறும்புக்காரச் சிறுவர்கள். குடிசை வீட்டின் மண் சுவற்றில் பெண்களின் கைரேகைகளை பதித்துக்கொண்டு காய்ந்து கொண்டிருக்கும் வறட்டிகள். கிணற்றுப் பாசனத்தில் மனிதர்களோடு சேர்ந்து உழைக்கும் உழவு மாடுகள். உழவு மாடுகளுக்கு லாடம் கட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட மந்தைவெளி. காடுகளுக்கு மேய்ச்சலுக்காக கொண்டு போகப்படும் மாடுகளும் இங்கேதான் வளர்ப்பவர்களால் கொண்டுவிடப்படும். மந்தைவெளியைச் சுற்றி அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக நிழல் விரிக்கும் புளிய மரங்களும் வேப்ப மரங்களும் உண்டு. இங்கேதான் ஊராட்சி மன்ற கட்டிடமும் பேட்டையார்கடை என அழைக்கப்படும் ஒரு சிறிய மளிகைக் கடையும் உண்டு. இதுதான் இக்கிராமத்தின் அடையாளம்.
இக்கிராமத்தில்தான் குட்டையன் தன் தொழிலை செய்து வந்தான். ஊர் பொது நிலத்தில் இவன் வசிக்க ஓர் ஓலைக்குடிசை. அதன் பக்கத்தில் கிராமத்து ஆடுகள். முடி திருத்திக் கொள்ள முகச் சவரம் செய்துகொள்ள ஒரு சிறிய கொட்டகை. முடி வெட்டிக் கொள்ளவோ முகச்சவரம் செய்துகொள்ளவோ உடனே காசோ பணமோ கொடுக்க வேண்டியதில்லை. ஆறுமாதத்திற்கு ஒருமுறை அரிசியும் பணமும் வீட்டுக்கு வீடு கிடைக்கும்.
கிராமத்தில் யாராவது தவறிவிட்டால் ஊர் ஊராகச் சென்று துஷ்டி சொல்வது முதல் அடக்கம் செய்வது வரை அத்தனை வேலைகளையும் முன் நின்று நடத்துவது ஊர் குடிமகனின் வேலைதான். குட்டையன் குருவம்மாள் தம்பதியினர்க்கு குழந்தை பாக்கியம் இல்லை. உறவுக்காரப் பையன் ஒருவனை எடுத்து வளர்த்து வந்தார்கள்.
மயான அமைதியில் குக்கிராமம். ""பேதில போவான் குடிச்சிப்புட்டு பன ஏறி இருப்பான் அதான் கீழே வுழுந்து நொறுங்கி நூறு சுள்ளியா கெடக்கான்'' என்றாள் ஒரு வயதான மூதாட்டி.
""புள்ளக்குட்டிக்காரன் அவனுக்கு ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுனா குடும்பத்த ஆரு காப்பாத்துவா?'' என்று இரக்கப்பட்டாள் ஒரு பெண். நரம்பில்லா நாக்குகள் தாவீது பனமரத்துல இருந்து கீழே வுழுந்ததை பத்தி விமர்சித்துக் கொண்டிருக்க,
""எம்மோவ்.. ஐயாவுக்கு எப்படி இருக்காம்?''
கவலையோடு கேட்டான் குட்டையன்.
""ஆஸ்பத்திரிக்கு போனவிய இன்னும் யாரும் வரல.. கீழே வுழுந்ததுல பலத்த அடியாம் கடவுந்தான் அவர காப்பாத்தனும்...'' என்றார்கள்.
""கடவுளே.. தாவீது ஐயாவுக்கு ஒன்னும் ஆவக்கூடாது அஞ்சாறு புள்ளக்குட்டிகார மனுசன் அவரு மட்டும் பிழைச்சிக்கிட்டார்னா பார்வதி அம்மனுக்கு வர்ற வெள்ளிக்கிழமை பொங்கல் வைக்கணும்..'' மனதுக்குள் அல்ல சத்தமாகவே வேண்டிக் கொண்டான் குட்டையன்.
வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த குருவம்மாள், ""வந்துட்டியலா? கஞ்சி குடிக்கியேலா? காணத் தொவையல் அரைச்சி வெச்சிருக்கேன்...'' என குருவம்மாள் சொல்ல,
குட்டையனுக்கு வந்ததே கோபம்.
""அட செத்த பய மொவள... அங்க தாவீது ஐயா சாவ கிடக்காவளாம் இங்க காண தொவையல வெச்சி வாய்க்கு ருசியா கஞ்சி குடிக்கணுமாம் கஞ்சி...'' என கோபத்தில் அனலில் இட்ட கடுகாய் பொறிந்தான் குட்டையன்.
""நேரமா எந்திரிச்சி கத்தி வாங்க போனவிய. ஒண்ணும் குடியாம போனவிய. வயிறு பசிக்காதா.. செத்தம் கருப்பட்டி காபியாவது வெச்சித் தாரேன்...'' என்றாள் குருவம்மாள்.
""அட கூறுகெட்ட பய மொவள... சும்மா பேசாம கெட.... போயி உண்டியல எடுத்துவா...'' என்றான்.
""உண்டியல எடுத்து வந்து என்ன செய்யப்போறீய...?'' என்றாள்.
""ஆங்... கடிச்சித் தின்னப்போறேன்.... போயம்லா... உண்டியல எடுத்துட்டு வா...'' என மிரட்டினான் குட்டையன்.
குருவம்மாள் மிரண்டபடி உண்டியலை எடுத்துவந்து குட்டையன் கையில் கொடுத்தாள்.
குட்டையன் உண்டியலை ஓங்கி தரையில் அடித்து உடைத்தான். ரூபாய் தாள்களையும் சில்லறைகளையும் தன் மடியில் பத்திரப்படுத்தியதை கண்ட குருவம்மாள், ""எங்கே போறீய...?'' என்றாள்.
""அட சிறுக்கி மொவள புறப்படும் போதால எங்க போறியனு கேப்ப... ஐயாவ பாக்க ஆஸ்பத்திரிக்கு போறேன்...'' என்றான்.
""கோயிலுக்குனு சேத்துவெச்ச உண்டியல உடைச்சி துட்டு பூராம் எடுத்திகிட்டிய சாமி கோவிச்சுக்காதா? தெய்வ குத்தம் ஆதாதா?'' என கவலையோடு கேட்டாள் குருவம்மாள்.
""அதெல்லாம் ஒண்ணும் ஆவாது புள்ள. நீ மனச போட்டு குழப்பிக்காத...'' என்றான்.
""க்கும்... நீங்கதான் அவியலுக்கு ஒண்ணுன்னா இப்படி கெடந்து உசுர வுடுறிய ஆனா அவிய அப்படியா? போன வாரம் அவிய கன்னத்துல லேசா கத்தி பட்டிச்சினு உங்கள திட்டோ திட்டுனு திட்டுனாவ அதுக்குள்ள மறந்து போச்சாக்கும்....'' என்றாள் குருவம்மாள்.
""ஏளா குருவம்மா பேசாம கிடளா பழச பேசறதுக்கு இதுவாளா நேரம். அவிய போடுற ஊர் சோத்த தின்னுதானளா நாம ஒடம்ப வளக்கறோம்...'' என்றான் நன்றி தோய்ந்த குரலில் குட்டையன்.
""ஆமா.. அவிய சும்மாவா சோறு போடுதாவ? நீங்க கால நேரம் பாக்காம சிரைக்கிய... அதற்கு அவிய சோறு போடுதாவ.. என்னமோ சும்மா சோறு போடுற மாதிரி பேசறிய...'' என்றாள் குருவம்மாள்.
""ஏளா குருவம்மா... உனக்கு பயித்தியம் கியித்தியம் பிடிச்சி போச்சாளா? உன் நியாயத்த ஒடப்புல கொண்டு போடுளா ஏலா.. இன்னைக்கு ஊர் சோத்துக்கு போவ வேணாம்...'' என கட்டளை பிறப்பித்தபடியே... குடிசையை விட்டு வெளியே போன தன் கணவனை இமை கொட்டால் பார்த்துக் கொண்டிருந்த குருவம்மாளுக்கு அவனின் இரக்க குணம் உள்ளுக்குள் பெருமிதமாக இருந்தது.
கார் ஏறி ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்குள் பதற்றமாக குட்டையன் நுழைய.... ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் தன் குக்கிராமமே திரண்டு நின்றது போல் கிராம மக்கள். ஜாதி மத பேதமில்லாமல் திரண்டு நின்றார்கள். குட்டையன் அவர்களை நெருங்கி....
""ஐயா பிழைச்சிக்கிட்டாவளா ஒண்ணும் ஆவலிய...?'' என்றான்.
""தாவீது பிழைச்சிக்கிட்டான் கண்ண முழிச்சி பேசறான். ரத்தம் ஏத்தி இருக்கு. இனிம பயப்பட வேண்டியதில்ல...'' ரத்தின சுருக்கமாக கொம்பையா சொல்ல.. அப்போதுதான் குட்டையனுக்கு போன உயிர் திரும்பிவந்தது போலிருந்தது.
""நா கும்பிட்ட தெய்வம் கைவிடல...'' என்றான் குட்டையன்.
""மரைக்கார் ஐயா மட்டும் பிளசர கொடுத்து உதவலேனா தாவீது உசுர காப்பாத்தி இருக்க முடியாது..'' என்றார் செல்லத்துரை.
""உங்களுக்கு ஆயிரம் கும்புடு..'' என்று மரைக்காயர கையெடுத்து கும்புட்டான் குட்டையன். ""ஐயா புழைச்சிகிட்டாவனா பார்வதி அம்மனுக்கு பொங்கல் வைக்கணும்னு வேண்டி இருக்கேன்...'' என்றான் குட்டையன்.
""நானும் வேத கோயில்ல பழ கஞ்சி வெச்சி ஊத்தணும்னு வேண்டி இருக்கேன்..'' என்றார் ஆபிரகாம்.
""தாவீது புழைச்சிக்கிட்டான்னா பள்ளிவாசல்ல பழம் பங்கு வைக்கிறதா வேண்டி இருக்கோம்...'' என்றார் காதர் பாய்.
""கோயிலுக்கு வெச்சிருந்த உண்டிய ஒடைச்சி செலவுக்கு காசு கொண்டாந்திருக்கேன். குருவம்மாள இன்னைக்கு ராத்திரி ஊர் சோத்துக்கு போவ வேண்டாமினும் சொல்லி இருக்கேன்...'' என்ற குட்டையனின் பேச்சில் வெளி வேஷம் இல்லாத பாசமும் கிராமத்து ஜனங்களுக்கு மட்டுமே பாத்தியமான நேசமும் நன்றாகவே வெளிப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...