ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கட்டியால் ஏற்படும் தொடர் வயிற்று வலி!

ஊதிப் பெரிதாக்குதல் எனும் ஒரு தன்மையை வாயுவால் மட்டுமே செய்ய முடியும். பெருங்குடல் பகுதியில் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அபானன் எனும் வாயுவிற்கு
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கட்டியால் ஏற்படும் தொடர் வயிற்று வலி!
Updated on
2 min read

எனது வயது 43. தொடர் வயிற்று வலி காரணமாக முதலில் என்டோஸ்கோபி பிறகு கொலனோஸ்கோபி டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் Tiny polyp in ascending colon என்று வந்துள்ளது. பயாப்ஸி டெஸ்டில் பிரச்சனை ஒன்றுமில்லை என்று வந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள், உணவு முறைகள் உள்ளனவா?

எஸ். முருகன், தாராபுரம்.

ஊதிப் பெரிதாக்குதல் எனும் ஒரு தன்மையை வாயுவால் மட்டுமே செய்ய முடியும். பெருங்குடல் பகுதியில் எந்நேரமும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அபானன் எனும் வாயுவிற்கு குடல் வழி வரக் கூடிய தவறான உணவு, பழக்க வழக்கங்கள் முதலியவற்றால் சீற்றம் பெற்ற வாயு முதலில் பசித்தீயின் வலிமையைக் குறைக்கும். பெருங்குடல் பகுதியில் பக்குவம் பெறாத உணவுச்சாறு, மலதோஷம் ஆகியவற்றால் வயிற்றில் நீங்கள் குறிப்பிடும் Polyp எனும் உபாதை வயிற்றின் உட்புற சவ்வுகளிலிருந்து வளர்ந்து விடக்கூடும். நீர் பசையற்ற ஒரு பகுதியாக பெருங்குடல் அமைவதால் அங்குள்ள வறட்சியான தன்மையானது உந்தி பெரிதாக்கப்பட்ட Polyp உபாதையைக் கடினமாக்கி விடுகிறது. இதனால் சதா சர்வகாலமும் அசைவுடன் கூடிய வாயுவின் குடல் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தும் இந்தச் சிறிய கட்டி அல்லது உருண்டையானது வலியை உங்களுக்கு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. இந்தக் கட்டியைச் சிறியதாக்கி மறையச் செய்ய வேண்டிய கட்டாயமும், வாயுவின் தங்கு தடையற்ற அசைவுகளுக்கான வழிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.

கட்டியினுடைய வளர்ச்சியானது மேலும் பெருகக் கூடிய வாய்ப்பை அந்தப் பகுதியே ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் மலப்பாதை வழியாக செலுத்தக் கூடிய எனிமா எனும் வஸ்தி சிகிச்சை ஓர் அவசரகால சிகிச்சையாக உங்களுக்கு பயனளிக்கலாம்.

அதற்கென்று பிரத்யேகமான ஆயுர்வேத மருந்துகள் கூறப்பட்டுள்ளன. சூடான வீரியம் கொண்ட பசுவின் சிறுநீரில் கலந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மூலிகைகளால் வஸ்தி சிகிச்சை செய்து, ஏற்பட்டுள்ள கட்டியைச் சிறிதாக்க முடியும். வாயுவின் சீற்றத்தையும் மலம் வழி வெளியேற்ற முடியும்.

உணவில் சூடாறிப்போன  பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, வேர்க்கடலை, வறண்டு போன கீரைகள், குளிர்ந்த நீர், வறட்சி தரும் தானியங்கள் போன்றவற்றின் சேர்க்கையினால் இந்த உபாதை மேலும் வளரக்கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் இவற்றை நீங்கள் தவிர்த்து உணவை வெதுவெதுப்பாக, முன் உண்ட உணவு நன்றாக செரித்து பசி ஏற்பட்டுள்ள நிலையில் சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல், வாயுவினால் குடல் பகுதி உந்திப் பெரிதாகுதல் மற்றும் குடலில் வாயுவின் உருண்டோடும் தன்மை ஆகியவை எவ்வகையிலும் ஏற்படாதிருக்கும்படி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் (10}15 மி.லி) வேப்பெண்ணைய்யை சுமார் 5 மி.லி. கடுகெண்ணெய்யுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மேற்குறிப்பிட்ட குடல் உபாதைகளைத் தவிர்க்கலாம். Polyp சிறிதாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

 மாதுளம்பழச்சாறு அல்லது மோருடன் பெருங்காயம், இந்துப்பு, சுக்கு பொடித்து கலந்து புழுங்கலரிசிக் கஞ்சியுடன் காலையில் பருகி வர வயிற்றுவலி குறைந்து விடும். உணவிற்குப் பிறகு, சிட்டிகை சுக்கு, ஓமம், சோம்பு, கல்லுப்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு வெற்றிலைக் கொழுந்துடன் சுருட்டி வாயினுள் அடக்கி மென்று சாப்பிட உண்ட உணவு விரைவில் செரிப்பதுடன் குடலில் வாயு மற்றும் ஆகாயம் எனும் பஞ்சபொதிகங்களின் ஆதிக்கம் செலுத்தாதிருக்க நன்கு உதவும்.

உலர்ந்த புலால், முள்ளங்கி, மீன், உலர்ந்த காய்கறிகள், பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, உணவு உட்கொண்ட பிறகு பழங்கள் சாப்பிடுதல் போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய உணவுப் பதார்த்தங்கள். இந்த Polyp உபாதையினால் குடல் காற்று மற்றும் மலம் தடைபடும்போது இஞ்சித் துண்டு, கடல் உப்பு, மிளகுத் தூள் மற்றும் கடுகு ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து நீர் விட்டு அரைத்து இலந்தைக்கொட்டை அளவு உருண்டையாக்கி காய வைத்த மாத்திரையை ஆசனவாயில் செருகிக் கொள்வதன் மூலம் அவற்றை தடையின்றி வெளியேற்றலாம். சுகுமாரம் கஷாயம், இந்து காந்தம் கஷாயம், ஹிங்குவசாதி சூரணம், வைஸ்வாநரம் சூரணம், மூலகாத்யாரிஷ்டம், நிம்பாம்ருதாஸவம் போன்ற ஒரு சில ஆயுர்வேத மருந்துகள் இந்த உபாதைக்கு உபயோகப்படுத்தக்கூடிய சிறந்த மருந்துகளாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com