சரியான காரணங்களுக்காக எடுத்த தவறான முடிவுகள்
முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இயக்குநர், நாடகக் கலைஞர், பின்னணிக் குரல் கொடுத்தவர், சமூக ஆர்வலர் போன்ற


முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இயக்குநர், நாடகக் கலைஞர், பின்னணிக் குரல் கொடுத்தவர், சமூக ஆர்வலர் போன்ற பெருமைகள் நந்திதா தாஸþக்கு உண்டு. பள்ளியில் படிக்கும்போதே நாடக ஆர்வலர் சஃப்தர் ஹாஸ்மியின் "ஜன நாட்டிய மன்ச்சில்' ஆறாண்டுகள் பயிற்சிபெற்றவர் நந்திதா. இதுவே திரையுலகில் நுழைவதற்கு ஆதாரமாக இருந்தது. ஜியாகிரஃபி பி.ஏ. படித்துவந்த நந்திதா, ஹபீப் தன்வீர், ரெய்னா, போரிஜான் ஆகியோருடன் நாடகங்களில் நடித்து வந்தபோதே சமூக சேவையில் எம்.ஏ.,பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே பகுதி நேரமாக அங்கூர், அலாரிப்பு போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக குடிசைவாழ் சிறுவர்கள் நலனுக்காகவும் ராஜஸ்தான் கிராமங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுடன் சேர்ந்து கல்வி மற்றும் நாடகக்கலையை கற்றுக் கொடுத்துள்ளார்.
1987ஆம் ஆண்டில் இவரது முதற்படமான பிரகாஷ் ஜா}வின், ராஜஸ்தானிய கிராமிய கதையான "பரினாட்டி' வெளியான பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து முசாபர் அலியின் டிவி தொடரில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களில் நடிக்கவே முக்கியத்துவம் தந்தார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் சமூகத்தில் அடிப்படை உரிமைக்காக முதன்முதலாக குரல் கொடுத்த "கூஞ்சா' என்ற பெண்ணின் உண்மைக் கதையைப் படமாக்கிய போது, அந்த பாத்திரத்தில் ஆர்வத்தோடு ஏற்று நடித்தார். ஆனால் அது போன்ற படங்களுக்குச் சரியான வரவேற்பு கிடைக்காதது இவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. விஜய்சிங்கின் ஜெயகங்கா, சாந்தி போன்ற டிவி தொடர்கள் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தாலும் "ஃபயர்' திரைப்படம்தான் இவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது. இதில்தான் அவருக்கு பிரதான பாத்திரம் கிடைத்ததோடு படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சப்னா ஆஸ்மி, குல்பூஷண் கார்பந்தா போன்ற பிரபல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை நந்திதாதாúஸ தேடிப் பிடித்தாராம். இப்படத்தின் இயக்குநர் தீபா மேத்தா, தகுதியான நடிகையைத் தேடுகிறார் என்பதைக் கேள்விப்பட்ட நந்திதா நேரே அவரிடம் சென்று துணிச்சலாக பேசிய பின்னரே, தான் தேடிய "சீதா' பாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமானவர் எனத் தீர்மானித்து தீபா இவருக்கு வாய்ப்பளித்தார். இயல்பு வாழ்க்கைக்கு மாறுபட்ட கதை அமைப்பு. இந்தப் பாத்திரத்தை ஏற்க நிறையவே தயங்கினார் நந்திதா. ஆனால், நண்பர்கள் வற்புறுத்தலால் நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஷப்னா ஆஷ்மிதான் காட்சிகளில் எப்படி நடிப்பதென்று சொல்லித் தந்தாராம்.
எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் எப்படிச் சமாளிப்பது என்ற கருத்தில் அதன் திரைக்கதை முழுவதையும் நேஷனல் புக் டிரஸ்ட்டில் பணியாற்றி வந்த தன்னுடைய தாயார் வர்ஷா தாஸþக்கு நந்திதா அனுப்பிவைத்தாராம். நந்திதா மார்புத்துணியின்றி நடிக்கும் ஒரு காட்சியைத் தவிர மற்றபடி நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஒப்புதல் தந்த நந்திதாவின் தாய், பின்னர் கதைக்கு அந்த காட்சி தேவை என்பதால் நடிப்பதில் தவறில்லை என்று ஒப்புதல் அளித்தாராம். அதன் பின்னரே நந்திதா "ஃபயர்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தக் காட்சியைப் படமாக்கும் போது என்னுடைய சங்கடத்தை உணர்ந்த தீபா மேத்தா, நானே அந்தக் காட்சியில் நடித்தபோதிலும் வேறொருவரை வைத்துப் படமாக்கினார் என்று மக்கள் சொல்லும்படி இயக்கியிருந்தார்'' என்கிறார் நந்திதா.
தீபா மேத்தாவுடன் நந்திதா திருவனந்தபுரம் சென்றிருந்த போது ஏராளமான பெண்கள் "ஃபயர்' படத்தைப் பாராட்டி பேசியது எதிர்பாராத நிகழ்வு என்கிறார் நந்திதா. இதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து தீபா மேத்தா எடுத்த "எர்த்' படத்தில் நந்திதா நடித்தபோது அந்தக் கதை தன்னை வெகுவாகப் பாதித்ததாக கூறினார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், ஆங்கிலம், வங்காளம், அஸ்ஸாமி என பல மொழி படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இது குறித்து அவரது கருத்து என்ன?
""இவையனைத்துமே எனக்கு வித்தியாசமான அனுபவங்கள். அதே நேரத்தில் தங்கள் கருத்துக்களை என் மூலம் வெளிப்படுத்த வேண்டுமென்பதுதான் இயக்குநர்களின் குறிக்கோளாக இருந்தது. மக்கள் என்னிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். சில சமயங்களில் அந்த எதிர்பார்ப்பு அதிகமாகவும் இருக்கும். என்னை ஒரு நடிகையாகவோ, நாடகக் கலைஞராகவோ நான் கருதியதில்லை. எனக்கு ஓய்வென்பதே கிடையாது. அதே சமயம் ஒரே கொள்கையில் பிடிவாதமாக நிற்பவளும் அல்ல. பலவிதமான கருத்துக்களை ஏற்றுக் கொள்வது எனக்கு ஆர்வத்தை அளிக்கிறது.
தோல்வியை பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. புதிதாக ஒன்றை செய்யும்போது அது வெற்றியும் அடையலாம். தோல்வியும் அடையலாம். அதை ஏற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சொந்த மொழியிலிருந்து வேற்று மொழி படங்களில் நடிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை. தென்னிந்திய படங்களில் நடிக்கும் போதெல்லாம் ஏதோ புதிதாகத் தேர்வு எழுதுவது போல் தோன்றுமே தவிர செய்ததையே திரும்ப செய்யக் கூடாது என்ற உணர்வு தோன்றும். அதன் காரணமாகவே வித்தியாசமான பாத்திரங்கள் என்னைத் தேடிவந்தன.
எனக்குப் பிடித்த கதாபாத்திரம், இயக்குநர், கதை இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். இது என் பிறவி குணம். ஆனால் நான் தேர்ந்தெடுத்தது அனைத்துமே சரியானவை என்று கூற முடியாது. சரியான காரணங்களுக்காக சில தவறான முடிவுகளையும் எடுத்திருக்கிறேன். சமீப காலமாக திரையுலகம் மாற்றம் கண்டுள்ளது. இப்போது பணம்தான் முக்கியம்.
50மற்றும் 60களில் கமர்ஷியல் சினிமா என்றோ அதையொட்டிய சினிமா என்றோ பிரிவினை இல்லை. இயற்கையையொட்டி இருந்தன. மெல்லமெல்ல ஆக்ஷன், பிற கதைகள் என ஆக்ரமிக்கத் தொடங்கின. தற்போது " மல்டிபிளக்ஸ்' சினிமா என்ற புதிய பரிணாமத்தைப் பெற்றிருக்கிறது.
தற்போது ஸ்பானிஷ் திரைப்படமொன்றில் நடித்து வருகிறேன். மும்பை, பார்சிலோனா என்று மாறிமாறி படப்பிடிப்பு நடக்கிறது. இப்படத்தில் முதன்முறையாக நடன காட்சியொன்றில் நடிக்கிறேன். அயிட்டம் நம்பர் அல்ல; வித்தியாசமான நடனம். சரோஜ்கான் நடனத்தை அமைத்துள்ளார். இன்றைய இளைஞர்களின் கோபத்தை பிரதிபலிக்கும் சௌமித்ரா ரானடேயின் ""ஆல்பர்ட் பின்ட்டோ கோ குஸ்ஸா க்யோ ஆட்டா ஹெய்ன்'' என்ற படத்திலும் நடிக்கிறேன். என்னுடைய மகன் விஹானுடன் செலவிடும் நேரம்தான் எனக்கு மிகவும் மதிப்புள்ளதாகவும் அவனது கண்கள் வழியாக காணும் உலகம் அன்பால் பிணைக்கப்பட்டதாகவும் தெரிகிறது'' என்கிறார் நந்திதா தாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...