நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

நாமதான் வாழ்க்கையை மெருகேத்தணும்..!

எவ்வித சூழ்நிலை அம்சங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளாத மனநிலையிலேயே அவளுடைய பணிகளை கறாராகவும் நீக்குப்போக்காகவும் செய்கிற சுபாவம், திவ்யாவுக்கு.

News image
Updated On :4 ஜனவரி 2014, 1:22 pm IST

நூறு ஊழியர்கள் அளவுக்கு வேலை பார்க்கிற ஏற்றுமதி நிறுவனம் அது.

 மதிய உணவுக்கான இடைவேளையை அறிவிக்கிற மின்சார மணி சப்தமிட்டு நிற்க -

 வழக்கமாக, உணவுக்கிடையே சுவாரஸ்யமாகவும் தடபுடலாகவும் ஆரம்பிக்கிற உரையாடல்கள் அந்த ஒரு மணிநேர அவகாசத்தில் வளாகம் எங்கிலும் நடமாட்டத்திற்கிடையேயும் களைகட்டி நிற்கும்.

 அந்த நேரத்திற்கு, வேலையின் இறுக்கத்தைக் களைந்து கொள்கிற வடிகாலாகவே ஊர்ந்து போகும்.

 அந்த அலுவலக நிர்வாகப் பிரிவில்தான், திவ்யாவுக்கு வேலை - கணக்கு உதவியாளராக.

விற்பனைப் பிரிவிலும் ஈடுபாட்டோடு தானாகவே முயற்சித்துச் செய்த ஊழியத்தால், கம்பெனியின் நல்லெண்ண வரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததும், கம்பெனியின் கனிவான பார்வை அவள் மீது படர்ந்திருந்ததும் அவளால் அறிந்திருக்க இயலாதாயினும், அவளுக்குள்ளாகவே ஒரு நிறைவு மலர்ந்தே இருந்தது.

 சக ஊழியர்களது மரியாதை கலந்த தொனியும் உரையாடல்களில் பரவி நிற்கும்.

 எவ்வித சூழ்நிலை அம்சங்களையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளாத மனநிலையிலேயே அவளுடைய பணிகளை கறாராகவும் நீக்குப்போக்காகவும் செய்கிற சுபாவம், திவ்யாவுக்கு.

 உணவை சாப்பாட்டு முற்றத்திலே முடித்துக் கொண்டு வெளிவந்தவள், வளாகத்துக்குள்ளே எதிர் மூலையில் மகிழ மரத்து நிழலுக்காக ஒதுங்கினாள். எதிர்வாட்டத்தில் இருக்கிற உணவகத்திலும் ஊழியர்கள் நிறைந்தே இருந்தனர்.

 அலுவலக வாயில் பக்கமாக சகாக்களின் ஹாஸ்யமான உரையாடல்கள் அரங்கேறிக் கொண்டிருந்த நிகழ்வு அவளை ஈர்த்தது.

 அரசல் புரசலாகவும் அர்த்தமுள்ளதாகவும் வெளிப்படுகிற கிண்டல் பேச்சுகளுக்கிடையே, வெடிக்கிற மாதிரியான சிரிப்பொலிகளும் எகிறி நின்றதையும் கவனித்தாள்.

 எதையும் கண்டு கொள்ளாதவனாக, அவர்களிடமிருந்து விலகி வந்து கொண்டிருந்த கிட்டுவை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு, நிகழ்வுகளின் காரணிகளை ஊகிக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

 கிட்டுவே அவளிடத்திற்கு வந்து கொண்டிருந்தான்.

 ""வெடிக்கிற சிரிப்பிலே யாருக்காச்சும் நாக்கு மாட்டிண்டு கடிபடல்லியே...! எதைப் பற்றியாம் அரங்கேற்றம்...''

  கிட்டத்தில் வந்த கிட்டுவிடம் கேட்டாள், திவ்யா.

 கிட்டு பதிலளிக்கவில்லை. தயங்கினான். அது அவனது சுபாவந்தான்! எதையுமே ஒன்றுக்கு மறுதடவையாகக் கேட்ட பிறகே, பதில் கிடைக்கும். பேச ஆரம்பித்துவிட்டால், மடை வெள்ளமாக நிற்பான்.

 ""என்ன.., நான் கேட்கிறேனே?'' என்றாள் மறுபடியும் திவ்யா.

 சிரிப்பையே பதிலாகக் காட்டியவாறு அவளைச் சாதாரணமாகவே பார்த்து நின்றது, தட்டிக்கழிக்க முயலுவதாகவே திவ்யாவுக்குப் புரிந்தது.

 அவனது தயக்கத்தை ஏற்றுக் கொண்டவளாக,

 ""உனக்கு விருப்பமில்லேன்னா, வேணாம்...'' என்றாள், சட்டென்று.

 ""நோ... நோ..., அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே... என்னைப்பற்றி கம்மெண்ட்ஸ்... அவங்களுக்குப் பழக்கமாயிடுச்சு...'' என்றான் அசட்டுச் சிரிப்புடன், கண்களை விரித்தவாறே.

 ""ரசிக்கிற மாதிரிதானே... என்னென்னு சொல்லேன்...'' சுவாரஸ்யமாகவே கேட்டாள்.

 ""சொல்லிடலாம்... வம்பாயிடக்கூடாதே... நீ ஏதாச்சும்...?'' என்று இழுத்தான்.

 ""ஏதாச்சும் எனக்கென்னவாம்...? உன்னைப் பற்றித்தானே நானும் தெரிஞ்சுக்கிடலாம் இல்லியா?‘‘

 ""உன்னோட காத்து படல்லேன்னா, என்னோட மூச்சு தவிச்சிடுமாம். அவங்களுக்கு எப்பவுமே இப்படியொரு கம்மெண்ட்...!''

 தவிப்பை ஒருவாறு தாராளப்படுத்திவிட்ட பூரிப்பில், அவனது மூச்சுக்காற்று நிஜமாகவே கூத்தாடியது.

  -இப்படியொரு சந்தர்ப்பத்துக்காக எவ்வளவு நாட்கள் பொறுமை காத்தாகிவிட்டது. தருணத்தில் கைகொடுக்கிற மாதிரி அல்லவா திவ்யாவே லகுவாகிவிட்டாள். எல்லாத்துக்குமே

நேரப்பொருத்தம் அதுவாகவேதான் அமையுமோ... என்று எண்ணங்களைச் சிறகடிக்கவிட்டுக் கொண்டிருந்தவனிடம் -

 திவ்யாவே பேச வேண்டிய அவசியத்துக்கு வந்தாள்.

 ""இதெல்லாம் உனக்குச் சரியாப் பட்றதா...! மனசுக்கு "ஊண்டிங்'கா இல்லே...? கடிச்சுக் காயப்படுத்துறதுக்கு வேறொண்ணும் கெடைக்கலே, "அது'களுக்கு... நீ கோவிச்சுக்கிடல்லியே...'' என்றவளிடம், நிஜமாகவே ஆதங்கம்தான் வெளிப்பட்டது.

 ""அவங்க கடிச்சுக் காயப்படுத்துறதா ஏன் நெனைக்கணும்...? கரும்பிலே எறும்பு ஊர்ற மாதிரியாகவும் எடுத்துக்கிடலாமே...''

என்றவன், ""எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு...ம்மா...'', தயக்கத்துடனேயே ஒருவழியாக தன் மனசைத் திறந்துவிட்டவன், அவளது முகத்தை கனிவோடு நோக்கினான்.

 ""கூத்துதான்... எனக்குப் பிடிக்கலீயே...'', சட்டென்று பதிலளித்தவள் வெறுமையாகவே அவனை ஏறிட்டுப் பார்க்கையில், அவளிடம் எந்தச் சலனமும் இல்லாததாலேயே, கிட்டுவும்

சோர்ந்துபோகிற மாதிரி காட்டிக்கொள்ளவில்லை.

தாவிக் குதிக்கிற மனசைத் தடுத்து நிறுத்த முடியாமலே, ""என்னைப் பார்த்து சொல்லு... எதனாலே பிடிக்கலேன்னு...?''

 -ஏதோ உரிமை கலந்த பழக்கத்தில் உறுதியாகவே கேட்டான் கிட்டு, மனசில் அமுக்கி வைத்திருந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டில்.

 ""உன்னைப் பிடிக்கலேன்னு, எவள் சொல்லுவா...''

சாதகமான தொனியில் சாமர்த்தியமாகவே பதிலளித்த திவ்யாவிடம்,

 ""பிறகென்ன...? ஓகே சொல்ல ஏன் தயங்குறே...?''

 ""வாழ்க்கையைப் பிடிக்கலேன்னு சொல்ல வந்தேன்...''

 ""பதினாறும் பெத்து பெரிய மனுசி ஆனது எப்பவாம்.. தெரிஞ்சுக்கிடலாமே...''

 ""நான் சீரியசா சொல்றேன்டா...'' வறண்ட தொனியில் அவளது குரல் வெளிப்பட்டது.

 ""ஓகே... சீரியசாவே இருக்கட்டுமே... இந்த மாதிரி செல்லமா "டா' போட்டு சின்ன வார்த்தையா சொல்லத் தோணுச்சுன்னாலே, மனசுக்குள்ளாற ஒரு "சொந்தம்' நெருக்கமாயிருக்குன்னு அர்த்தம்...! எதுக்கு மறைக்கிறே...? நான் ஒண்ணும் மோசமானவன் இல்லியே... இந்த கம்பெனியிலே ஏழு வருஷமா ஒண்ணாவே "குப்பை' கொட்டுறோம்... ஏதாவது எசகுபிசகா....''

 ""எதுவுமே சொல்றதுக்கில்லே... "சுத்தத்தங்கம்'னு உனக்கு கம்பெனிலே செல்லப்பேரு இருக்கே...'' என்றவன்,

 ""என்னைப் பற்றி நீ சரியாகவே தெரிஞ்சுக்கிடலே, கிட்டு...''

 ""சொன்னால்தானே, தெரிஞ்சுக்கிட... மனசுக்குள்ளே மறைக்கிறது எதுக்குன்னா, அது "கனி'யாகட்டுமேங்கிறதுக்காகத்தான்... அப்புறமா, அது "வாசனை'யா கௌம்புறப்போ மறைக்க முடியாது தெரிஞ்சுக்கோ...''

 ""என்னமா பேசுறே...! வைரமுத்து மாதிரி... என்னாலே நம்ப முடியல்லீயே!''

 புருவத்தை நிமிர்த்திப் பார்த்த திவ்யாவை லேசான புன்னகையுடன் நோக்கியவாறே -

 ""எல்லாமே சிம்பிள்தான், மேடம்... நாம அப்படிப் பார்க்கனும், எதையுமே...! இப்போ சொல்லு...'', என்றான் ஆர்வமாக.

 ""அதுதான் சொன்னேனே... எல்லாருக்குமே உன்னைப் பிடிக்கும்னு... எனக்கும் அப்படித்தான்னு வச்சுக்காயேன்...'' மனசைத் திறந்த திவ்யா -

 ""என்னை வேறெதுவும் கேட்காதே, கிட்டு... வேணாம், எனக்கு வேறெதிலும் மனசு ஒட்டலே... ப்ளீஸ்...'' கம்மிய குரலில் ஒலித்தாள். கண்களையும் மூடிக்கொண்டாள்.

 ""உன்னோட பேச்சு, எனக்கொண்ணும் ஆச்சரியமாப்படல்லே, திவ்யா... சலிப்பும், சங்கடமும் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்குனு, யாராச்சும் சொல்ல முடியுமா...

 யார்க்கிட்டே இருந்தும் உதவியோ ஒத்தாசையோ இல்லாமலே இருக்கட்டுமே... "ஏமாந்தோ, ஏமாற்றப்பட்டோ இருக்கலாம்னுகூட வச்சுக்கோயேன்... எல்லாவற்றையும் மீறி நீ ஜொலிக்கல்லே...! உன்னுக்குள்ளே ஒரு சுடர் அணையாமலே எரிஞ்சுக்கிட்டிருக்குல... ஒரு வைராக்கியம் உன்னுக்குள்ளே இல்லேன்னா, இதெல்லாம் நெஜமாகுமா...

 சொல்லும்மா... நீ எதிலே கொறைச்சல்...? நான் எந்த வழியிலே இயலாதவனா ஆயிட்டேன்...?''

 மடைவெள்ளமான கிட்டுவின் வார்த்தைகள் அவளை வெலவெலக்க வைத்துவிட்டது.

 மனசுக்குள்ளே இறுகிக் கிடந்த முடிச்சு, தானாகவே அவிழுகிற நிலையில் அவனது பேச்சின் தாக்கம். அவளது மனசின் இறுக்கத்தை கரைக்கத் தொடங்கியது.

 ""எல்லாருக்கிட்டேருந்தும் நான் ஒதுங்கிப் போயிருக்கேன், கிட்டு... இந்த ஆபீஸ்.. இதைவிட்டா வீடு... அதுக்கு மேலே எதுவும் இருக்கிறதா, எனக்குத் தெரியல... சின்ன வயசா நான் இருந்தப்பவே, என் அப்பா சித்த சுவாதீனமில்லாமல் எங்கேயோ போயிட்டாராம். என் அம்மா கஷ்டப்பட்டுத்தான் என்னைப் படிக்க வச்சாங்க... இன்னைக்கி நான் மனுஷியா நிக்கிறதே என் அம்மாவாலேதான்...'' வறட்சியாகவே பேசினாள் திவ்யா.

 ""ஓகே... மனசுக்கு சஞ்சலமாகவே தெரிஞ்சாலும், எல்லாமே சரியாகவே நடந்திருக்கு... டபுள் ஓகே...''

 ""தட்டத் தட்டத் தாண்டியம்மா, தங்கமே பிரகாசிக்கும்னு சொல்லுவாங்க, தெரிஞ்சுக்கோ.. வேறென்ன பிராப்ளமாம் சொல்லேன்.. ஊம்..ம்...''

 மனசில் இறுகிக் கிடப்பதை லேசாக்கி விடுவதற்கு அன்பும் அனுசரணையுமான தூண்டுதலே தேவைப்படுவதாக கிட்டுவுக்கு உணர்த்தியது.

 திவ்யாவே தொடரலானாள் -

""என் அம்மாவை கடைசிவரைக்கும் பார்த்துக்கிடணுமே.. என் அப்பாவையும் தேடியாகணுமே...''

 ஏக்கத் தொனியில பேசிய திவ்யாவிடம்,

 ""வேணாம்னு யார் குறுக்கே நிற்க முடியும்...? பெத்தவங்களுக்குப் பிறகு மத்தவங்க... தாயும் தந்தையும்தானே முதல் தெய்வம்னு ரிஷிமாருங்க சொல்லிட்டுப் போயிருக்காங்க...'' என்றவன் -

 ""இங்கே மட்டும் எப்படின்னு நெனைக்கிறே...?''

விளித்தவாறே அவளது விழிகளுக்குள் சலனத்தின் அசைவுகளைத் தேடினான், கிட்டு.

 ""உனக்கும் ஏதாச்சுமா...? எப்படி...?''

 அனுசரணையான தொனியில் பேசிய அவளிடத்திலே நெருக்கம் படர்ந்திருந்தது, இயல்பாகவே.

 ""அம்மா, அப்பாவுக்கெல்லாம் ஆயுசுக்கொண்ணும் கொறைச்சல் இல்லே... அம்மாவுக்கு உடம்பு பூரா சர்க்கரை... அப்பாவுக்கு ஒத்தெக்கையி, ஒத்தக்காலு நின்னு போச்சு... எல்லாமே "ஷாக்' ஆக்சிடெண்ட்தான்...! வேறொண்ணுமில்லே.., அக்காள் ஏகப்பட்ட சீர்செனத்தியோட கல்யாணமாகிப் போனவள், புருஷனோட பிரச்னையாகி வீட்டோ வந்துட்டதாலே, இந்த விபரீதம்...! அவங்களுக்கெல்லாமே நான் ஒருத்தன்தான் ஊழியம்... அந்த வகையிலே எனக்கு வீடே கோயில் மாதிரிதான்... உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா, வீடேறி வந்து பாரேன்.. நெஜவாழ்க்கைன்னா, எப்படியுந்தான் இருக்கும்..! நாமதான் மெருகேத்தனும். வாழ்க்கை ஜொலிக்கனும்னா...''

 அவனது பேச்சு திவ்யாவுக்கு நெகிழ்வை ஏற்படுத்தினாலும், காட்டிக் கொள்ளாமலே -

 ""உன் சோகத்தைக் கிளறிட்டேனா... என்னை மன்னிச்சுடு, கிட்டு...''

 என்றவளை இடைமறித்தவாறே, ""நத்திங்... டஸ் இன் மேட்டர்... உன்னைப் பற்றி நீ சொல்லிட்டே... என் வீட்டோட நடப்பை நானும் சொல்லிட்டேன்... பரஸ்பரம், நமக்குள்ளே ஒரு அண்டர்ஸ்டாண்டிங்... தேட்ஸ் ஆல்... டேக் இட் ஈஸி...''

 ""இந்த வாழ்க்கையை புரிஞ்சுக்கிற மாதிரியே இல்லை.. வேண்டான்டா, இந்த வாழ்க்கையே...''

 -அலுத்துக்கொண்டவள் இமைகளை மூடியவாறே காதுகளைப் பொத்திக்கொண்டு, உடம்பையும் குலுக்கிக் கொண்டாள், திவ்யா.

 கிட்டுவே தொடர்ந்தான்-

 ""எதார்த்தத்தைப் புரிஞ்சுக்கிட்டோம்னா, மனசுக்கு பாரமுமில்லே.. திகிலுமில்லே...''

 பூ மாதிரி மனசை லேசாக்கிட்டு பார்க்க ஆரம்பிச்சோம்னா, இந்த உலகமே பூவுலகம்தான்... நீ வேண்டாம்னுட்டாலே, வாழ்க்கை உன்னை விட்டு விலகிடுமா...?

 புருவத்தை உயர்த்தியவாறு கண்களை மூடிக்கொண்டே தலையசைத்தாளே தவிர, அவளது மனசுக்குள்ளே ஒரு பரவசம் தோகை விரிக்கிற நிகழ்வு அரங்கேறவே செய்தது.

நிதானித்து யோசிக்கிற பாவனையில் இருந்த திவ்யாவிடம்...

""ஆபீசிலே நம்மைப் பற்றி என்ன பேசிக்கிறாங்க, தெரியுமா...?'' என்றான் அர்த்தமுள்ள பார்வையுடன்.

அசைவுகள் எதுவும் அவளிடம் தெரியக்காணோம்.

""வாய் இருக்கச்சே, நாலுந்தான் பேசுவாங்க... நமக்கெதுக்கு, அதெல்லாம்...?''

நிமிராமலே பதிலளித்த திவ்யாவிடம்...

""அவங்க தப்பாகவே பேசலேம்மா... உணர்ச்சிகளே அத்துப் போயிட்ட "கட்டை'களாம், நாம்...''

என்ற கிட்டுவின் வார்த்தைகளால் அவளது பெண்மையின் மென்மையான உணர்வுகள் உள்ளுக்குள்ளாற சிலிர்க்கவே செய்தது.

கூச்சத்தில் நெகிழ்ந்தவளாக, -

""இப்போ, என்ன செய்யணுங்கிறே...?''

அவளது கேள்வியில் ஏதோ முடிவெடுக்கும் நிலைக்குத் தயாராகிவிட்டவளாகவே,

கிட்டுவுக்கும் மனசில் பட்டது.

""நல்லதாகவே செய்வோம்''... நீயும் தயாராகணுமே...!''

""நல்லதுக்கும் கெட்டதுக்கும் தலைகால் தெரியமாட்டேங்குதே...!''

"" நாலு பேருக்கு முன்னாலே செய்யுறதெல்லாமே, நல்லதாகவே ஆகும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க... ரிஜிஸ்டர் ஆபீஸ் போயிடுவோம்... பதிவு பண்ணிக்கிடுவோம் கூட வந்திருக்கிற நாலு பேருங்க வாழ்த்துவாங்க...!''

"" எல்லாமே உனக்கு லேசுதான்... அதுக்குப் பின்னாடி எப்படியாம்...?''

""எப்படி நடக்குதோ, அந்த வழியிலேயே ரெண்டு பேருமா சேர்ந்து போவோம்... அது தான்... நம்ம வாழ்க்கை...! நம்ம வாழ்க்கையை தெரிஞ்சுக்கிட்டவங்க யாராச்சும் காவியமாப் படைக்கட்டுமே...!''

""அவ்வளவுக்குப் போகுமா...?'' என்றவளின் முகத்தில் மலர்ச்சி வெட்கத்துடன் வெளிப்பட, குறுகுறுப்போடு பார்த்தவாறே -

""என்னாலே எதுவும் நடக்கப் போறதா, தெரியல்லேப்பா... என் அம்மாவைப் பார்த்துக்கோ... அவங்ககிட்டேயே பேசிக்கோ... அவங்க சரின்னா..., எனக்கும் "அது' தான்..!''

அவளது பதிலில் ஒரு தீர்க்கம் தெரிந்ததை கிட்டுவும் உணர்ந்தவனாக -

""ராமரு எவ்வளவோ தொலைவுலே மிதிலைக்கு போனாரு... எனக்கொரு மிதிலை ரொம்பவும் பக்கத்திலே தானே...!''

என்ற கிட்டுவை அடக்கத்துடனேயே திவ்யா பார்ப்பது மாதிரி இருந்தாலும், அவளது கண்களில் உயிரோட்டமான பிரகாசம் தெரிவதை கிட்டு கூர்மையாகவே கவனித்தான்.

""என்னைப் பற்றி ஏதாச்சும் வீட்டிலே போட்டு வச்சிருக்கிறீயா,... அப்படியெல்லாம் இல்லியே...?''

கண்களை சுருக்கியவாறே கேட்டாள், ஏதோ எச்சரிக்கை உணர்வுமேலிட்டவளாக...

""நோ கம்மெண்ட்ஸ்... நாட் யெட்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே, தாயீ...'', கன்னத்தில் போட்டுக் கொண்டவன் -

"" பச்சை மண்ணிலே பயிர் பண்ணிடலாம்... பால் மணலா இருக்கச்சே, எப்படிச்செய்ய... பக்குவமாகணுமே...?''

பலமாகத் தலையசைத்தான், கிட்டு.

அர்த்தம் விளங்கிக் கொள்ள முயற்சிப்பது போல, அவனது விழிகளுக்குள்ளேயே பயணப்படுகிறவளானாள் திவ்யா, ஒருகணம்.

""அப்போ... நான் வீட்டுக்கு வரலாம், இல்லியா...? அம்மாவையும் அப்பாவையும் பார்க்கனும் போலத் தோணுது... அதோட, அக்காவையும் பார்த்துட்ட மாதிரி இருக்கும். ஆனா, ஒண்ணு... நீயாகவே ஏதாச்சும் கற்பனை பண்ணிக்கிடக் கூடாது...

நான், என் "பிரின்சிப்பிள்' மேலே தான் நிக்கிறேன்...''

""டபுள் ஓகே... யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் டு... ஈவன் நௌவ்...''

- அமைதியாகவே பதிலளித்த கிட்டு, அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருக்க, திவ்யாவின் இமைகளும் மெதுவாகவே மூடிக்கொண்ட நிலையில் -

உணவுவேளை முடியப் போகும் நேரத்தை அறிவிக்கும் வகையில் மின்சார மணி சப்தம் எழுப்பி நின்றது.

""போகலாமே...'' என்றவன், எதிர்பக்கம் பார்த்தவனாக -

நம்ம சகாக்கள் நம்மளையே தான் பார்த்துக்கிட்டிருக்காங்க... வேறொண்ணும் வித்தியாசமா இல்லே, இந்த ரெண்டு "கட்டை'களும் அன்பாலே ஈரமாகி, வாழ்க்கையைத் தொட்டுப் பார்த்து தூறல்லே நனெஞ்சு சுகம் காண பயணப்படுறாங்களோன்னு தான்...''

- மெதுவாகவே கிசுகிசுத்த போது, உதடுகளை எச்சிலால் ஈரமாக்கிக் கொண்டாள், திவ்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.