ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதய நோய்களும் மூவிலை வேரும்!

வியானன் என்ற ஒரு வாயு இதயப்பகுதியிலிருந்து செயலாற்றுகிறது. உடல் முழுவதும் சுற்றி வரும் திறமை படைத்த இந்த வாயு,  மனித உடலில் செயல்களாகிய நடத்தல், அமர்தல், எழுந்து கொள்ளுதல்,
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதய நோய்களும் மூவிலை வேரும்!
Updated on
2 min read

69 வயதாகும் நான் இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சையும், அது பலனளிக்காமல் பைபாஸ் அறுவைச் சிகிச்சையும் செய்து கொண்டுள்ளேன். இப்போதும் மார்பு வலி, களைப்பு இவற்றால் சிரமம் ஏற்படுகிறது. கை, கால் விரல்கள் மரத்துப்போன உணர்ச்சியும் இருக்கிறது. இப்போது உடலின் பல பகுதிகள் நமநமவென்று குடைச்சலுடன் உடலில் மேல் பகுதிகளும் மரத்துப் போக ஆரம்பித்துள்ளன. நடப்பதிலும் சிரமம் உள்ளது. இதற்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு உள்ளதா?

பாபு வெங்கடேசன், சாலிகிராமம், சென்னை.

வியானன் என்ற ஒரு வாயு இதயப்பகுதியிலிருந்து செயலாற்றுகிறது. உடல் முழுவதும் சுற்றி வரும் திறமை படைத்த இந்த வாயு,  மனித உடலில் செயல்களாகிய நடத்தல், அமர்தல், எழுந்து கொள்ளுதல், உடல் உறுப்புகளை அசைத்தல், கண் சிமிட்டுதல் போன்ற அனைத்து அங்க அசைவுகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. நரம்புகளின் வழியாக இதயத்தில் இருந்து கொண்டு ஒரு செயலூக்கியாக இருக்கக்கூடிய இந்த வாயுவானது, இதய அறுவை சிகிச்சைக்குப் பின் தன் சுறுசுறுப்பை இழந்துவிட்டதோ என்று உங்களுடைய விஷயத்தில் யோசிக்கத் தோன்றுகிறது. இதயத்தை வலுப்படுத்தவும், இந்த வாயுவின் கதி முடக்கத்தை சீராக்குவதற்கும் மூவிலை என்ற ஒரு கொடியின் வேரை ஆயுர்வேதம் இதயநோய்களுக்கான ஒரு சிறந்த மருந்தாக எடுத்துக் கூறுகிறது.

இதய நோய்களுக்கு இந்த மூவிலை வேரை இடித்து சுமார் 15 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கால் லிட்டர் ஆகும்வரை காய்ச்சி வடிகட்டி அதில் 125 மி.லி. காலையிலும், மீதமுள்ள 125 மி.லிட்டரை மாலையிலும் சமஅளவு சூடான பாலுடன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதய நாளங்கள், அதைச் சுற்றியுள்ள தசைநார்கள், இரத்தக் குழாய்கள், இதயத்தை செயல்படுத்தும் நரம்புகள் போன்றவை வலுப்படுவதை நம் முன்னோர் கண்டறிந்தனர். மூவிலை வேரைப் பற்றி பாவப்ரகாசர் எனும் முனிவர் குறிப்பிடுகையில், மூவகை தோஷங்களாகிய வாத பித்த கபங்களை அது சமநிலைப்படுத்துவதாகவும், தசைகளுக்கு ஊட்டத்தை தரக்கூடியதாகவும் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். தன்வந்தரி நிகண்டுவில் வாயுவை தன் சீற்றத்திலிருந்து குணப்படுத்தி நன்றாக செயலாற்ற உதவிடக்கூடியது என்ற ஒரு குறிப்பும் காணப்படுகிறது. இதை உத்தேசித்தே ஆயுர்வேதத்தினுடைய பல மருந்து தயாரிப்புகளிலும், முக்கியமாக இதயநோய்களை குணப்படுத்தும் மருந்துகளிலும் இந்த மூவிலையின் வேர் சேர்க்கப்படுகிறது. இதைக் கண்டறிந்து சேகரித்து மருந்தாக தயாரித்துச் சாப்பிடுவதற்கு உங்களுக்கு கஷ்டமாகத் தோன்றினால் ஆயுர்வேத மருந்துகளாகிய தசமூலம், இந்துகாந்தம் போன்ற கஷாயங்களில் மூவிலையின் வேர் சேர்க்கப்படுவதால் இவற்றை  ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் உங்களுக்கு ஏற்பட்டுள்ள உபாதைகளாகிய மார்புவலி, களைப்பு, விரல்கள் மரத்துப்போன உணர்ச்சி போன்றவை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த மருந்துகளுடன் இதயத்திலுள்ள வியான வாயுவின் செயல்களை சீராக்கக் கூடிய தன்வந்தரம் குளிகை, வாயு குளிகை, ப்ரபாகரவடீ போன்ற மருந்துகளையும் சேர்த்துச் சாப்பிடுவது இதயத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவும்.

ஹிங்குவசாதி சூரணம், வைச்வானரம் சூரணம் போன்ற சூரண மருந்துகளில் ஒன்றை வெந்நீருடன் கலந்து சாப்பிடும் ஒரு வைத்தியமுறையை நம் முன்னோர் பயன்படுத்தி இதயநோய்களை குணப்படுத்தி வந்தனர். இவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். குடலின் தன்மை, பசியின் நிலை, உடலின் அங்க அமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மருந்துகளின் நேர அமைப்பை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் இவற்றை ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே உங்களுக்குக் கூறமுடியும்.

உணவு வகைகளில் இதயத்தை வலுப்படுத்தக்கூடிய மிளகு, சீரகம், தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, சோம்பு, ஓமம், கிராம்பு, பூண்டு போன்றவற்றின் சேர்க்கையை சீரான அளவில் அமைத்துக் கொள்ளவும். செயல்களில் நிதானம், மனதில் அமைதி, பொறுமை ஆகியவை தேவையான இத்தருணத்தில் தங்களுக்கு

மேற்குறிப்பிட்ட மூவிலையின் வேர் நல்ல பலனைத் தர வாய்ப்பிருக்கிறது. இதய உபாதைகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக இறைவன் நமக்களித்துள்ள இந்த மூவிலையின் வேரின் பெருமையை உணர்ந்து இது பற்றிய ஆராய்ச்சிகளும் வருங்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடியதாக இருக்கும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com