இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க!

புளி, மிளகாய், பருப்பு வகைகளை மொத்த விற்பனைக் கடைகளில் வாங்கி வெயிலில் காய வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில்
இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க!

*  புளி, மிளகாய், பருப்பு வகைகளை மொத்த விற்பனைக் கடைகளில் வாங்கி வெயிலில் காய வைத்துக் கொண்டால் மாதக்கணக்கில் பூச்சித் தொல்லைகள் இல்லாமல் பாதுகாக்கலாம். அதற்கு முன்பாக பருப்பு வகைகளைப் போட்டு வைக்கும் பெரிய பெரிய டின்களையும், அரிசி போட்டு வைக்கும் டிரம்களையும் வெயிலில் கழுவிக் காய வைத்து, அதன் பின்னர், காய வைத்த பொருட்களைப் போட்டு வைக்கலாம்.

*    பழைய பருப்போடு புதுப்பருப்பை அதன்மேல் போட்டால் பழைய பருப்பு மாவாகி அடியில் தேங்கிவிடும். அதனால் இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

*    மழைக்காலத்தில் பரணில் இருக்கும் சில பாத்திரங்கள் பூஞ்சை பிடித்து அப்படியே படிந்து போயிருக்கும். அவற்றை எடுத்துக் கழுவி வெயிலில் காய வைத்து அவற்றைப் பழைய காட்டன் துப்பட்டாக்கள் அல்லது பழைய புடவைகளால் நன்றாக கவர் செய்து கட்டி வைக்கலாம்.

*    சமையல் அறை பொருட்கள் போட்டு வைக்கும் பாட்டில்களில் என்னென்ன பொருள் உள்ளது என்று பெயர் எழுதி ஒட்டி வைத்துப் பயன்படுத்துங்கள். இதனால் அவசர அவசரமாகச் சமையல் செய்யும்போது எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என நேரத்தை வீணாக்க வேண்டாம்.

*    மதிய நேரத்தில் குழாயில் வரும் தண்ணீர் ரொம்ப சூடாக வரும். அதில் மிதியடிகளை ஊற வைத்துத் தேய்த்தால் அழுக்கு நன்றாகப் போகும். அதேபோன்று சூடாக வரும் தண்ணீரில் எண்ணெய் பாட்டில்களையும் ஊறவைத்துக் கழுவிக் காய வையுங்கள்.

*    திரைச் சீலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், சோஃபா கவர்களை லைட் கலர், மெல்லிய துணியில் தைக்கும்போது உங்கள் வீட்டில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். வெயிலுக்கும் இதமாக இருக்கும்.

*    உடைந்த பர்னிச்சர் போன்ற வேண்டாத பொருட்களை ஜன்னல் ஓரத்தில், வீட்டு மூலை முடுக்குகளில் அடைத்து வைத்திருப்போம். தேவையில்லாத பொருட்களை விற்பது, எடுத்து பரணில் போடுவது என்று அங்குள்ள அடைப்புகளை நீக்கலாம். உங்கள் வீட்டில் இதனால் நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.

*    வீட்டின் அருகில், பால்கனியில் என வீட்டைச்சுற்றி மரம், செடிகள் வளர்க்கலாம். தண்ணீர் பிரச்னை இருந்தால் தண்ணீர் அதிகம் தேவைப்படாத செடிகள் இருக்கின்றன. அதை வாங்கி வளர்க்கலாம். குளுமையாக இருக்கும்.

*    ஏஸியை அதிகமாகப் பயன்படுத்தும்போது திடீரென்று ரிப்பேர் ஆகிவிட்டால் ரொம்ப சிரமமாக இருக்கும். அதனால் வெயில் காலம் ஆரம்பிக்கும் முன்பே ஏஸியை வருடாந்திர சர்வீஸ் செய்து கொள்ளவும்.

*    மிக்ஸிகளுக்கு சைலன்சர் பொருத்தினால் காலை வேளையில் சட்னி முதலியன அரைக்கும்போது குழந்தைகள், வயோதிகர்களின் தூக்கம் கெடாது.

*    வேண்டாத பழைய சூட்கேஸ்களைத் தூக்கி எறிய வேண்டாம். பருப்பு, மல்லி, கோதுமை, அரிசி போன்றவற்றை வெயிலில் காய வைக்க அவை உதவும். பலமான காற்று அடிக்கும்போது பொருட்களும் சிதறாது.

*    சிலருக்கு தொடர்ந்து பயணம் செய்ய நேரிட்டால் சூட்டினால் வயிற்று வலி ஏற்படலாம். இதைத் தவிர்க்க ஒரு பாட்டில் குடிதண்ணீரில் இரண்டு ஸ்பூன் சீரகம் போட்டு எடுத்துச் சென்று அடிக்கடி பருகி வர சூட்டினால் ஏற்படும் உபாதைகள் குறையும்.

*    புளியைக் கரைத்த பிறகு, வரும் சக்கையை தூக்கி எறியாமல் உப்பில் போட்டு வைத்தால் பூஜை சாமான்கள், பித்தளை பாத்திரங்கள் தேய்க்க உதவும்.

*    பட்டு வாங்கும்போது ஒரிஜினல் பட்டு துணிதானா என்று கண்டுபிடிக்க கைவிரலைத்  துணி மீது வைத்து அழுத்தினால் கைரேகை பதிந்ததும் சட்டென மறைந்துவிடும். வேறு நூல்கள் கலந்திருந்தால் கைரேகை அப்படியே இருக்கும்.

*    மாத்திரைகள் வாங்கியவுடன் அதன் கவரின் மீது தேதியுடன் எந்த நோய்க்காக வாங்கினோம் என்பதைத் குறிப்பெழுதி வைத்தால் அடுத்தமுறை மருந்து வாங்கும்போது உதவியாக இருக்கும்.

*    செல் ஃபோன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை நிறுத்தி வைப்பதன் மூலம் பேட்டரியின் சக்தியைச் சேமிக்கலாம்.

*    துளசி இலையை தினமும் வெறும் வயிற்றில் மென்று தின்று வந்தால் ரத்தம் சுத்தமாகும். தொண்டைவலி, சளித்தொல்லை குணமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com