குழந்தைபருவத்தில் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாமல் இருந்த எனக்கு ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் மிகச் சிறந்த பலன் கிட்டியது. நன்கு நடக்க ஆரம்பித்து கல்வி பயின்று, குழந்தை பேறு பெற்று தற்போது 64 வயதை எட்டிவிட்டேன். கடந்த நான்கு ஆண்டுகளாக கால்கள் மிகவும் பலமிழந்து தனியாக நடப்பதற்கு பயம், கால்களை 1 அங்குலத்திற்கு கூட தூக்கவோ, படியேறவோ முடியவில்லை. நரம்புகள் தளர்ந்து விட்டதுபோன்ற நிலை. மீதமுள்ள வாழ்நாட்கள் இப்பிரச்சனைகள் நீங்கி நிம்மதியாக வாழ வழி என்ன?
ராஜகோவிந்தன், மரப்பாலம் கோவை.
வாயு எனும் தோஷத்தின் ஆதிக்கப்பகுதியான இடுப்பு, இரு கால்கள் மற்றும் பாதம் ஆகியவற்றில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நீங்கள் குழந்தைப் பருவத்தில் நன்றாக குணமடைந்திருந்தாலும் அதன் சீற்றத்தை மறுபடியும் அடைந்திருப்பதாக தங்களுடைய கடிதத்தின் மூலம் தெளிவாகிறது. வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, முறமுறப்பு, நுண்ணியது, அசையும் தன்மை ஆகியவை சீற்றமடையும் தறுவாயில் இடுப்பு, கால்கள் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தசை, எலும்பு மற்றும் நரம்புப் பகுதிகளில் அவை ஏற்படுத்தும் தாக்கமானது கால்களுக்கு கடுமையான பலவீனத்தையும் நடக்கமுடியாத அளவிற்கு தொய்வையும் ஏற்படுத்தக் கூடும். இந்த குணங்களுக்கு நேரெதிரிடையான அதாவது வறட்சிக்கு எதிரான நெய்ப்பு, லேசான தன்மைக்கெதிரான கனம், குளிர்ச்சிக்கு எதிரான சூடு, முறமுறப்புக்கு எதிரான மழமழப்பு, நுண்ணியதிற்கு எதிரான தூலித்தது, அசையும் தன்மைக்கு எதிரான நிலையானது ஆகிய குணங்களின் வாயிலாக வாயுவின் சீற்றத்தை அடக்கி அவற்றின் மூலம் கால்களுக்கு வலுவூட்ட முடியும்.
வயிற்றில் மேற்குறிப்பிட்ட குணங்களின் வருகையானது பசி எனும் தீயில் வீழ்ந்து அங்கு வேகவைக்கப்பட்டு அவற்றின் சத்தான பகுதியை இரத்தத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு கால்களில் வந்து சேரும் பாதை, அவற்றை உள்வாங்கிக் கொள்ளும் அணுக்களின் வலுவான தன்மை போன்றவற்றை நீங்கள் பெறுவதன் மூலமாக நினைத்த காரியம் கைகூடும். அதற்கு முதலில் நாம் செய்து கொள்ள வேண்டியது பசித்தீயின் வலுவைக் கூட்டுவதுதான். வயிற்றுப்பகுதியில் வாயுவின் அதிகமான சேர்க்கை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் இருப்பின் பசித்தீயின் செயல்பாடானது மந்தநிலையில்தான் இருக்கும். ஆகவே அப்படி இருப்பதாக இருந்தால் சுத்தமான விளக்கெண்ணெய்யை சுமார் 15 மில்லிலிட்டர் அளவில் அரை கிளாஸ் சூடான பாலுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குடல்பகுதியைச் சார்ந்த வாயு மற்றும் மலத்தேக்கமானது முழுவதுமாக வெளியேறி பசியினுடைய ஜ்வாலையை நன்றாக மீட்டுத் தரும்.
நிலம், நீர் மற்றும் நெருப்பின் ஆதிக்கத்தைக் கொண்ட இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச் சுவைகளை உணவில் சிறிது அதிகம் சேர்த்துக்கொண்டால் வாயுவிற்கு எதிரான குணங்களை அவற்றின் மூலம் சம்பாதித்து வாயுவைக் கீழடக்கி, போஷகாம்சம் நரம்புகளில், எலும்புகளில் மற்றும் தசைநார்களில் கொண்டு சேர்க்கப்படுவதால் கால்கள் நன்றாக வலுப்பெற்று தங்களால் மறுபடியும் நடப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படக்கூடும். இவையனைத்தும் உட்புறக் குழாய்களின் மூலமாக பெறும் ஆரோக்கியமாகும். வெளிப்புற வைத்தியமுறைகளாகிய இதே சுவைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் தைலமருந்துகளின் "தாரை' எனப்படும் உடலெங்கும் ஊற்றப்படும் சிகிச்சை முறை, "நவரக்கிழி' எனப்படும் சித்தாமுட்டி வேர் கஷாயத்துடன் பால் சேர்த்து வேகவைக்கப்படும் "நவரஅரிசி'யினால் உடலெங்கும் தேய்த்துவிடப்படும் சிகிச்சைமுறை, "பஞ்சமாம்சக்கிழி' எனப்படும் ஐந்து வகையான மாமிசக் கொழுப்புகளை மூட்டை கட்டி உடலெங்கும் தேய்த்துவிடப்படும் சிகிச்சை, நீராவிக்குளியல் சிகிச்சை ஆகியவை பயன்தரக்கூடும்.
வாயுவை சீற்றமடையச் செய்யும் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களை இந்த சிகிச்சைமுறை செய்து கொள்ளும் காலகட்டத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டும். கால்களில் குளிர்ச்சியைத் தூண்டிவிடும் தண்ணீர், குளிரூட்டப்பட்ட அறை, தரை ஆகிய பகுதிகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நலம். மழை மற்றும் பனிப்பொழியும் நாட்களில் இரவில் உறங்குகையில் கனமான ஒரு கம்பளியால் உடலைப் போர்த்திக் கொள்வதன் மூலம் நரம்புகளில் வாயுவின் தாக்கத்தைத் தவிர்க்கலாம். தரையில் சம்மனம் போட்டு அமர்வது, நாற்காலியில் அமர்ந்துகொண்டு காலணி அல்லது காலுறை இல்லாமல் சில்லிட்ட தரையில் பாதத்தை அழுத்தி வைத்து அமர்தல், தொடைகளை ஆட்டிக் கொண்டிருத்தல் போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.
மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அனைத்தும் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை செய்து கொள்ளப்பட வேண்டியவை. இம்முறைகள் அனைத்தும் தற்சமயம் தமிழகத்திலுள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளில் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


