தாத்தான்னா தாத்தாதான்!
அமெரிக்காவில் உள்ள பையனிடமிருந்து தகவல் வந்ததும் ராமமூர்த்திக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஐந்தாண்டுகளுக்குப்


அமெரிக்காவில் உள்ள பையனிடமிருந்து தகவல் வந்ததும் ராமமூர்த்திக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வரப் போகிறான். கல்யாணம் முடிந்து மனைவியோடு போனவன், பேரன் சாகேத்துக்கு மூன்று வயதாகப் போகிறது. இப்பொழுதுதான் வருகிறார்கள்.
என்னதான் நெட்டிலும், எஃப்பியிலும் பேரன், பிள்ளை, மருமகள் என்று எல்லோரையும் அடிக்கடி பார்த்தாலும் நேரில் பார்ப்பதுபோல் ஆகுமா?.... தொட்டு, தூக்கி, கொஞ்சி, அணைத்து... அத்தருணத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ராமமூர்த்தியின் அப்பா நாராயணனிடம் பேரன் பிரசாந்த் குடும்பத்துடன் வருவதைச் சொன்னவுடன் அவர் முகம் மலர்ந்தது. நாராயணன் எழுபது +. சற்று ஒடிசலான தேகம். பெரிதாக வியாதி வெக்கை எதுவும் கிடையாது. தனது அன்றாடத் தேவைகளை தானே கவனித்துக் கொண்டு விடுவார். மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்.
காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு சிவன் கோயிலுக்குப் போய் திரும்புவார். அதற்குள் ஒரு மணி நேரமாகி விடும். இரண்டாவது டோஸ் காபி. அதன் பின் பகவத் கீதை பாராயணம். அது முடிந்ததும் இராமாயண வாசிப்பு. பதினோரு மணிக்கு மேல் சாப்பாடு.
மதியம் தூங்கமாட்டார். சுவற்றில் மனைப் பலகையை சாற்றி அதில் சாய்ந்தபடி தமிழ், ஆங்கில தினசரிகளைப் படிப்பார். அதன் பின் பழைய டைரிகளில் நுணுக்கி நுணுக்கி ஆனால் மணிமணியாக முத்துக் கோர்த்தது போல ஆறேழு பக்கங்கள் தினமும் எழுதுவார். என்ன எழுதுகிறார் என்பது யாருக்கும் தெரியாது. கேட்டதும் கிடையாது. அதுவரை எழுதியவை கிட்டத்தட்ட இருபது டைரிகளுக்கு மேலிருக்கும்.
ராமமூர்த்தி அப்பாவிடம் உட்கார்ந்து பேசிய நாட்களே இல்லை. இயந்திரம் போல ஏதோ வேலை. "லோலோ'வென அலைச்சல். மனைவியோடு கல்யாணம், கார்த்திகை, குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டம், யோகா வகுப்பு என இருபத்து நான்கு மணி நேரமும் போதாது என்றே சொல்லலாம்!
நாராயணன் யாரிடமாவது பேசமாட்டோமா என நினைப்பார். யாருமில்லாதது கண்டு அடுத்த கணமே எண்ணத்தை மாற்றிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவார். அவ்வப்போது ஓசூரில் உள்ள பெண்ணும், பாண்டியில் உள்ள கடைசிப் பையனும் வருவார்கள். எல்லாம் மின்னல் "விசிட்'தான். குசலம் விசாரித்துக் கிளம்பி விடுவார்கள். போகும்போது ஓசூருக்கும், பாண்டிச்சேரிக்கும் அவரை வரும்படி அழைப்பார்கள்.
""நீங்கள்தான் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அங்கு வந்து நான் என்ன செய்யப் போகிறேன்'' என்று சிரித்தவாறு கூறி தட்டிக் கழித்து விடுவார்.
பிரசாந்த் அமெரிக்காவிலிருந்து குடும்பத்துடன் வரும் செய்தி அத்தை, சித்தப்பா, சித்தி குடும்பங்களுக்கும் தெரிய வந்தது. அவர்களின் தொலைபேசி விசாரிப்புகள் ராமமூர்த்திக்கு கூடுதல் நேரத்தை விழுங்கியது.
வீட்டில் மாற்றங்கள் நிகழ்ந்தன. படுக்கை அறையிலிருந்த மேசை, நாற்காலிகள் வெளியே வந்தன. சோபா செட் மீது விரிக்கப்பட்டுள்ள துணி, கதவு, ஜன்னல்களின் விரிப்புகள், திரைச்சீலைகள் என அனைத்தும் புத்தம் புதிதாக மாற்றப்பட்டன. தடையில்லா மின்சாரத்திற்கு இன்வெர்ட்டர் பொறுத்தப்பட்டது. வாடகைக்கு இன்னொரு ஏ.சி. வந்தது.
நாள் நெருங்க நெருங்க ராமமூர்த்திக்கு டென்ஷன் அதிகமாயிற்று. பிரசாந்த் வருகையை ஒட்டி சம்பந்தி வீட்டு நபர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று வருபவர்களுக்கெல்லாம் வேளா வேளைக்கு காபி, டிபன், சாப்பாடு ஏற்பாடு செய்து சமாளிப்பது கஷ்டம் என்பதால் முன்னேற்பாடாக சமையலுக்கு ஆள் போட்டு, வீட்டு வேலைகளுக்கும் ஆட்கள் போட்டு சமாளிக்க ஏற்பாடு செய்துவிட்டான்.
* * *
அன்று பிரசாந்த் குடும்பத்தோடு வந்து சேர்ந்தான். விடியற்காலை வரவேண்டிய ஃப்ளைட் இரண்டு மணி நேரம் தாமதமாய் வந்தது. ராமமூர்த்தியும், மனைவியும் காத்திருந்து அழைத்து வந்தார்கள்.
வீட்டிற்கு வரும்போது காலை எட்டு மணிக்கு மேலாகிவிட்டது.
பிரசாந்த் தாத்தாவின் மடியில் கொள்ளுப் பேரனை உட்கார வைத்தான். பிரசாந்தின் மனைவி அவர் கையில் பெரிய சாக்லெட் டின்னைக் கொடுத்தாள். இருவரும் நமஸ்கரித்தனர்.
நாராயணனின் முகம் மலர்ந்தது. கொள்ளுப் பேரனை அள்ளியெடுத்துக் கொஞ்சினார். சாகேத் அவருடைய இரு பெரிய காதுகளையும் பிடித்து இழுத்து பெரிதாகச் சிரித்தான்!
பிரசாந்த், தாத்தாவிடம் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு பேசினான். அமெரிக்காவில் தான் அனுபவிக்கும் அவசர வாழ்க்கை பற்றிக் கூறியதும் அவரும் தனது அலுவலக நாட்களில் பட்ட துன்பங்களையும், தனி ஆளாக நின்று குடும்பத்தை நிர்வகித்ததையும் கதை போல பேச ஆரம்பித்துவிட்டார்.
தாத்தாவும் பேரனும் மனம் விட்டுப் பேசியதைப் பார்த்து ராமமூர்த்தி மாய்ந்து போனான்!
"அப்பாவா இவ்வளவு சந்தோஷமாகப் பேசுகிறார்... வாய் திறக்காமல் மெüனமாக இருப்பவரா இப்படி நாழிகைக் கணக்கில் பேசுகிறார்?'
""பிரசாந்த், உங்களையெல்லாம் பார்த்த சந்தோஷத்தில் தாத்தா எவ்வளவு உற்சாகமாகிவிட்டார், பார்த்தியா?''
நாராயணன் ராமமூர்த்தியை நிமிர்ந்து பார்த்தார்.
""அப்பா, ஒண்ணு தெரியுமா?... வயசானவர்கள் எல்லோருமே தங்களிடம் யாராவது வந்து பேச மாட்டார்களான்னு எதிர்பார்ப்பார்கள்... ஏங்குவார்கள்... அதுதான் நிஜம்.''
நாராயணன் பேரனின் பேச்சை ஆமோதிப்பதுபோல் பார்த்தார்!
""என்னதான் தாத்தா ஆத்ம திருப்திக்காக பூஜை புனஸ்காரங்கள் வைத்துக் கொண்டிருந்தாலும், பாராயணம் செய்தாலும், புத்தகங்கள் படித்தாலும் நாலு வார்த்தை நேருக்கு நேர் பேசுவது போல் ஆகுமா? அவர்களோடு ஒரு பத்து நிமிடம், ஐந்து நிமிடம் பேசினால் போதும் அதுதான் உற்சாக டானிக். அது அவ்வளவு சந்தோஷத்தைத் தரும்.''
தாத்தா சிரித்துக் கொண்டார்.
""நாங்கள் அமெரிக்காவில் நண்பர்களின் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை வாரா வாரம் ஒவ்வொரு இடமாக மாறி மாறிச் சென்று பார்த்து, அவர்களுக்குப் பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்து, அவர்களோடு அன்போடும், அனுசரணையோடும் பேசுவோம். அதை எங்களின் பிஸி ஷெட்யூலிலும் ஒரு முக்கியப் புரொகிராமாக ஆக்கிக் கொண்டுள்ளோம். உடல் தளர்ந்திருக்கும் சில பெரியவர்கள் எங்களின் விசாரிப்பால், பேச்சால் ரொம்பவுமே உற்சாகமாகி விடுவார்கள். எங்களை விடவே மாட்டார்கள். எங்களின் அடுத்த விசிட்டிற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் என்றால் பாரேன்.''
ராமமூர்த்தி கண் கொட்டாமல் பிரசாந்தின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும்போதே மனம் கனத்தது!
""இது புரியாமல்தான் இந்தியாவில் பெரியவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள். அண்மையில் நெட்டில் ஒரு சர்வே ரிப்போர்ட் பார்த்தேன். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், முதியவர்களின் மன உளைச்சல் அதிகமாகி அவஸ்தையுறுகிறார்கள் என்றும் கவலைப்பட்டு ஆதங்கத்தோடு சமூக ஆர்வலர் ஒருவர் எழுதியிருந்தார்.''
சில நொடிகள் யாரும் எதுவும் பேசாததால் இறுக்கமான சூழ்நிலை நிலவியது!
""பாட்டி மட்டும் ஆயுசோடு இருந்தால் தாத்தாவுக்கு ஒரு சிரமமும் இராது... தாத்தா தனிமையில்தான் என்ன செய்வார்... அப்பா அம்மா நீங்கள் எப்பப்போ முடிகிறதோ அப்போவெல்லாம் தாத்தாவோடு நேரத்தைச் செலவிடுங்கள்... அதுவே தாத்தாவுக்கு எனர்ஜி பூஸ்ட்.''
நாராயணன் சிரித்தவாறே பேரனின் கன்னத்தை செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு சொன்னார்: ""அவர்கள் என்னை கவனித்துக் கொள்வதில் எந்தக் குறையும் இல்லை... அவர்கள் வேலைக்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. நான்தான் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே.'''
""தாத்தான்னா தாத்தாதான்... யாரையும் எதற்கும் எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்''.
பிரசாந்த் தொடர்ந்தான்!
""தாத்தா நீங்கள் உங்களுடய தினசரி வேலைகளைக் கவனியுங்கள்... நாங்கள் குளித்து டிபன் சாப்பிடுகிறோம்... இன்னும் இரண்டொரு நாட்களுக்கு எங்களை "ஜெட்லாக்' பாடாய்ப்படுத்தும்.. இப்போது அங்கே இரவு. நாங்கள் தூங்கற "நேரம்... அந்த நேரம் வந்துவிட்டால் தூக்கம் கண்களை அழுத்தும், கொட்டாவி வாய் கிழியும்.''
""ஆமாம் நானும் "ஜெட்லாக்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சரி சரி.. ரொம்ப நாழி பேசிக் கொன்டே யிருந்து விட்டோம்... போய்க் குளித்துவிட்டு டிபன் சாப்பிடுங்கள்.... குழந்தைகளுக்கும் பசிக்கும்''.
""பிரசாந்த் உனக்குத் தூக்கம் வரலியா?...''
""எனக்கும் வந்துடுத்து'' என்று கொட்டாவி விட்டபடியே அப்பாவின் மடியில் படுத்துக் கொண்டான்.
எல்லாராலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...