ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காது கேட்கும் திறன் அதிகமாக..!

மூளையிலிருந்து காதுப் பகுதிக்கு கேட்கும் ஒலியை கிரகித்துக்கொள்வதற்கும், அந்த ஒலியை அர்த்தமாக புரிந்து கொள்வதற்கான
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: காது கேட்கும் திறன் அதிகமாக..!
Updated on
2 min read

எனது வயது 72. சமீபகாலமாக எனது காது கேட்கும் திறனும் பார்வையும் குறைந்து வருகிறது. Hearing Aid வைத்துக்கொள்ள விருப்பமில்லை. சாதாரணமாக நேருக்கு நேர் நன்றாகக் கேட்கிறது, பின்னால் வரும் சத்தங்கள் தெளிவாகக் கேட்கவில்லை. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறையில் ஏதேனும் தீர்வு உள்ளதா?

கி.ரகுபதி சுப்ரமணியன், ராஜகோபாலபுரம்,  புதுக்கோட்டை.

மூளையிலிருந்து காதுப் பகுதிக்கு கேட்கும் ஒலியை கிரகித்துக்கொள்வதற்கும், அந்த ஒலியை அர்த்தமாக புரிந்து கொள்வதற்கான செயல் திறனையும் பெற்றுள்ள நரம்புகள், ஏறிடும் வயோதிகத்தில் வாயுவின் வறட்சி எனும் குணத்தினால் தங்களுடைய விஷயத்தில் தொய்வடைந்திருப்பதாகத் தெரிகிறது. நரம்புகள் தொய்வடையாமல் இருப்பதற்காக நம் முன்னோர் தலைக்கும், செவிக்கும் எண்ணெய்ப் பசையை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நல்லெண்ணெய்யை மிளகு, சீரகம், ஓமம், வெற்றிலைக்காம்பு, பூண்டு ஆகியவற்றை ஓர் இரும்புக் கடாயில் சூடாக்கி பொறுக்கும் சூட்டில் அதாவது வெதுவெதுப்பாக எண்ணெய்யை மட்டும் ஒரு பஞ்சினால் முக்கி எடுத்து விட்டுக் கொள்வதை ஒரு முக்கிய செயலாக வைத்திருந்தனர். சுமார் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை இந்த காதினுள் விடும் எண்ணெய் வெளியே வழிந்துவிடாமல் இருப்பதற்காக எந்தப் பகுதியில் விட்டுக் கொண்டனரோ அந்தப் பகுதியில் தலையைச் சாய்த்து அசையாதவாறு பார்த்துக் கொள்வர். அதன் பிறகு அன்றோ அல்லது மறுநாள் காலையோ அந்த எண்ணெய்ப் பசையை அகற்றிக் கொள்வதற்காக பஞ்சினால் துடைத்துவிடுவர். மறைந்துபோன இந்த உயர்ந்த சிகிச்சைமுறையை மறுபடியும் தங்களைப் போன்ற வயதுள்ளவர்கள் அனுசரிக்கத் தொடங்கினால் பலவகையான காதைச் சுற்றிய நரம்பு உபாதைகளிலிருந்து விடுபடலாம் என்பது மட்டுமல்ல, கேட்கும் திறன் குன்றாமலும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

தலைப்பகுதிக்கு ஆயுர்வேத மூலிகைத் தைலங்களாகிய க்ஷீரபலா, கார்பாஸாஸ்த்யாதி, பலாஹடாதி போன்றவற்றில் ஒன்றை லேசாகச் சூடாக்கி ஒரு பஞ்சில் முக்கி எடுத்து தலையில் சுமார் அரை முக்கால் மணிநேரம் பொதிந்துவைக்கும் சிகிச்சைமுறையால் தலைப்பகுதியிலுள்ள நரம்புமண்டலமானது நெய்ப்பு எனும் குணத்தைப் பெறுவதாலும், வறட்சி எனும் வாயுவின் குணம் நீங்குவதாலும், அங்கிருந்து கீழாக இறங்கி உறுப்புகளைச் சென்றடையும் தறுவாயில் நரம்புகளில் செய்தி பரிமாற்றமானது தங்குதடையில்லாமல் நடைபெறுவதற்கு அதுவே காரணமாக அமைகிறது.

மூக்கில் எண்ணெய் அல்லது உருக்கிய நெய்யை விட்டுக் கொள்ளும் சிகிச்சைமுறைக்கு நஸ்யம் என்று பெயர். காதினுடைய நரம்புகளை வலுப்படுத்தக்கூடிய க்ஷீரபலா101 எனும்  நெய் மருந்தை நீராவியில் உருக்கி இரண்டு, நான்கு சொட்டுகள் காலையில்  பல் தேய்த்த பிறகு விட்டுக்கொண்டு மெதுவாக உறிஞ்சி அந்த நெய்மருந்தானது வாய்ப்பகுதிக்கு வந்தவுடன் துப்பிவிடும் முறையால் உங்களுடைய உபாதைகளுக்கு ஒரு தீர்வாக அது அமையக்கூடும். வாயினுள் அரிமேதஸ் எனப்படும் தைல மருந்தை சுமார் ஐந்து மில்லி லிட்டர் விட்டுக்கொண்டு சிறிது நேரம் வாயில் வைத்துக் கொப்பளித்துத் துப்பும் சிகிச்சை முறையால் காதினுள் உள்ள நரம்புகளை நம்மால் வலுப்படுத்த முடியும். கண்களில் விட்டுக்கொள்ளும் நயனாம்ருதம், நேத்ராம்ருதம் போன்ற எண்ணெய் சிகிச்சைமுறையாலும் தலைப்பகுதியைச் சார்ந்த உட்புற அழுக்குகள் நீங்குவதால் நரம்புகளில் ஏற்படும் தொய்வானது மேற்குறிப்பிட்ட நெய்ப்பு சிகிச்சைகள் மூலம் வலுப்படும்.

இப்படியாக தலையைச் சார்ந்த புலன்களில் நாம் ஏற்படுத்தும் நெய்ப்பானது அப்பகுதிகளில் உள்ள வறட்சியைப் போக்குவதால் மூளையைச் சார்ந்த பலவிதமான உபாதைகளுக்கும் ஒரு சிறப்பான தீர்வை ஏற்படுத்தித் தரும். இந்துகாந்தம் க்ருதம், விதார்யாதி க்ருதம், கல்யாணக க்ருதம் போன்ற ஆயுர்வேத மூலிகை நெய்மருந்துகள் வயோதிகத்தில் ஏற்படும் நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும் சிறந்த மருந்துகள். இம்மருந்துகளை லேசாக உருக்கிச் சாப்பிட்டு மேலே சிறிது வெந்நீர் சாப்பிடுவது ஆரோக்கியம். இம்மருந்துகளின் அளவு, சாப்பிடவேண்டிய முறை, காலம் ஆகியவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவது உசிதம். தவிர்க்கப்பட வேண்டியவற்றில் குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பது, இரவில் தலையில் தேங்காய் எண்ணெய்யைத் தடவிக் குளிரூட்டப்பட்ட அறையில் படுத்து உறங்குதல், உணவில் வறட்சி குளிர்ச்சி தரும் பண்டங்களை புசிப்பது, அதிக அளவில் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவையை உண்பது போன்றவையாகும்.

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 94444 41771

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com