பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

லக்னௌ சிறுவனின் வாழ்க்கை!

இன்றைய பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் 1941-ஆம் ஆண்டு  விநோத் மேத்தா பிறந்தார். ஆங்கிலப் பத்திரிகையாளராக

News image
Updated On :12 ஏப்ரல் 2015, 4:49 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

இன்றைய பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி நகரில் 1941-ஆம் ஆண்டு  விநோத் மேத்தா பிறந்தார். ஆங்கிலப் பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பல பத்திரிகைகளின் தொடக்க ஆசிரியராக இருந்துள்ளார்.

தனது 33-ஆம் வயதில் "டெபோனேர்' இதழுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதன் கவர்ச்சிப் படங்கள் பரபரப்பை ஏற்படுத்திய அதே வேளையில், அதன் எழுத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. இந்தியன் போஸ்ட், இண்டிபென்டென்ட், பயனியர் ஆகிய நாளேடுகளுக்கும் ஸண்டே அப்ஸர்வர் வார ஏட்டுக்கும் விநோத் மேத்தா ஆசிரியராக இருந்துள்ளார்.

எனினும், 1995-ஆம் ஆண்டில் அவரை மட்டுமே நம்பி தொடங்கப்பட்ட "அவுட்லுக்' வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும் இந்திய ஆங்கில இதழ்களின் முகம் புதிய தோற்றத்தைப் பெற்றது.

17 ஆண்டுகள் அதன் தலைமைப் பொறுப்பு வகித்த பின்பு, 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

உடல் நலக் குறைவால் புது தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதி காலமானார்.

அவருடன் பழகிய, பணியாற்றிய சிலரின் அஞ்சலி இங்கே...

Story image

சயீத் நக்வி- இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் ஆசிரியர்:
விநோத் மேத்தாவுடன் எனக்கு அப்பழுக்கில்லாத 62 ஆண்டு நட்பு இருந்தது. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். நாங்களிருவரும் 10 ஆண்டுகள் லக்னெளவில் ஒரே பள்ளியிலும் பின்னர் லண்டனில் ஓராண்டும் ஒன்றாகப் படித்தோம். எஞ்சிய காலம் முழுவதும் இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டோம்.

அவருடைய தந்தையும் சகோதரர்களும் ராணுவத்தில் இருந்தபோதிலும், எல்லா நடுத்தர இந்திய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனைப் போல, எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாடு அவருக்கு இருக்கவில்லை. அது லக்னெள ஊட்டிய சிறப்பு என்று கூற வேண்டும். "அவத்' சமஸ்தானத்தின் மையமாக இருந்தது அந்நகரம். குறுகிய பிராந்திய மனப்பான்மையில்லாமல், நெடுங்காலமாக எல்லாரையும் கைநீட்டி வரவேற்று வந்தது லக்னெள.

1857-இல் முதல் சுதந்திரப் போருக்குப் பிறகு, பிரிட்டிஷார் அந்த நகரத்தைப் பழிவாங்கும் உணர்வோடு, அங்கிருந்த உயர்நீதிமன்றத்தையும் பல்கலைக்கழகத்தையும்  அலாஹாபாதுக்கு மாற்றினர்.

அந்த பலத்த அடிக்குப் பிறகு, 1947-இல் லக்னெளவுக்கு இந்திய சுதந்திரம் மீண்டும் பலத்த அடியைக் கொடுத்தது.

ஜமீன்தாரி மானியத்தை 1951-இல் அன்றைய இந்திய அரசு ஒழித்தது. எங்களுடைய குடும்பங்களுக்கு இருந்து வந்த வருமானம் வற்றிவிட்டது.

நேருவின் மதச்சார்பின்மையில் எங்கள் குடும்பம் சிக்கிக் கொண்டது. பெரியவனாகி, பத்திரிகையாளனானதும், விநோதுக்குப் பழமை மீது அலுப்பு தட்டிவிட்டது. அவருக்கு லக்னெள என்றுமே வளர்ச்சி, பரந்த மனப்பான்மையின் அடையாளமாக இருந்தது. அதனால்தான் தனது சுயசரிதைக்கு "லக்னெள சிறுவன்' என்று பெயரிட்டார்.

Story image

அவுட்லுக் முன்னாள் நிர்வாக ஆசிரியர் தருண் தேஜ்பால்:
விநோத் மேத்தா தனது 33-ஆவது வயதில் "டெபோனேர்' பத்திரிகைக்கு ஆசிரியர் ஆனதிலிருந்து, பத்திரிகைகளைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை என்பது அவருடைய மிகப் பெரிய குணமாகும்.

இந்தியாவில் சிறந்த பத்திரிகையாசிரியர்கள் பலரின் லட்சிய வேகம் அவர்களை அரசியல்வாதிகளாக, டிவி நட்சத்திரங்களாக, தொழிலதிபர்களாக மாற்றியிருந்தது. ஆனால், ஒரு பத்திரிகை நிருபர், உதவி ஆசிரியர், புகைப்படக் கலைஞர், வடிவமைப்பாளர் என்ற கட்டத்துக்குள் திருப்தியாகத் தனது காலத்தைக் கழித்தவர் அவர்.

தினந்தோறும் மதிய வேளை உணவு உண்பதற்கும், பல இரவுகள் உணவு உண்பதற்கும் செல்வதுதான் பெரும் அரட்டைப் பிரியரான விநோத் வெளியுலகோடு வைத்திருந்த தொடர்பு. பத்திரிகைக்குத் தேவையான சுவையான விஷயங்களை அந்த வேளைகளில் அவர் சேகரிப்பது வழக்கம்.

அலுப்புத் தட்டும்விதத்தில் அது இருந்தால் மகா பாவம். எல்லாவற்றிலும் பரபரப்பு வேண்டும். பத்திரிகையில் வாதம்-பிரதிவாதம், சண்டைகள் எல்லாம் அவருக்கு வேண்டும்.

Story image

நாவலாசிரியரும் சமூக ஆர்வலருமான அருந்ததி ராய்:
எழுத்தாளராக என்னுடைய வாழ்க்கையில் விநோத் மேத்தா மிக முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

அவுட்லுக் வார இதழில் நான் எழுதிய பல கட்டுரைகள் உலகெங்கும் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. அவற்றை எழுதுவதில் எனக்கு இருந்த சுதந்திரமான மனநிலைக்குக் காரணம், விநோத் மேத்தா அவற்றை வெளியிடுவார் என்ற நம்பிக்கைதான்.

அவற்றில் பல மிக நீளமான கட்டுரைகள். வழக்கமான சிந்தனைக்கு மாறான அவற்றில் பலவும் மக்களின் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன.

1998-ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதும் அதனை எதிர்த்து நான் எழுதிய கட்டுரையில் ஒரு வார்த்தையைக் கூட அவர் மாற்றவில்லை.

ஒரே ஒரு சொல்லை மாற்ற விரும்பினாலும் அவர் என்னைக் கேட்காமல் செய்தது கிடையாது. நான் மறுத்தால், அதோடு விட்டுவிடுவார்.

அவுட்லுக்கில் நான் கட்டுரைகள் எழுதிக் கொண்டு பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்தாலும், நாங்கள் இருவரும் மிகச் சில தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறோம். எப்போதுமே தொலைபேசியில்தான் தொடர்பு.

Story image

நாவலாசிரியர் நயன்தாரா ஸேகல்   (நேருவின் சகோதரி விஜலக்ஷ்மி பண்டிட்டின் மகள்):
ஒரு நல்ல நண்பரை இழந்த துக்கத்தில் நான் விம்முகிறேன்.

நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிலும் ஸண்டே ஸ்டாண்டர்டிலும் எழுதி வந்த கட்டுரைகள் அன்றைய சர்வாதிகார அரசுக்குப் பிடித்தமானதாக இருக்கவில்லை. அந்த சமயத்தில்தான் முதலில் விநோத் மேத்தாவை சந்தித்தேன்.

அவர் அப்போது ஆசிரியராக இருந்த ஸண்டே அப்ஸர்வர் வார இதழுக்குத் தொடர் கட்டுரை எழுத வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சில மறைவுகளைக் காலத்தால் சரி செய்துவிட முடியாது. விநோத் மேத்தாவின் மறைவு அப்படிப்பட்டது. பத்திரிகைத் தொழிலுக்கு அவரைப் போன்றவர்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறார்கள்.

Story image

வி.சுதர்சன் - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர்:
விநோத் மேத்தாவின் கவனத்தைப் பெற வேண்டுமானால், புதுப்புது வழிகளைக் கையாள வேண்டும். ஒரு செய்திக் கட்டுரையாக ஊதிப் பெருக்கி எழுதப்படக் கூடிய படுசுவாரஸ்யமான கிசுகிசுத் துளியை மெல்ல கசியவிட வேண்டும். சில விநாடிகளுக்கு அவரது கவனத்தை நீங்கள் பெற்றுவிட்டால் அதுவே பெரிய வெற்றிதான்.

அந்த கிசுகிசுத் துளியை எப்படி முழு நீள செய்திக் கட்டுரையாக மாற்றலாம் என, தனது இரையைச் சுற்றி வரும் சுறா மீனைப் போல சுற்றிச் சுற்றி வரத் தொடங்கிவிடுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.