புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆவணப் படத்தில் சாதனை புரிந்து வரும் தமிழன்!

பொதுவாக வனவிலங்குகள் பற்றிய ஆவணப்படம் என்றால் அது எந்த நாட்டு ஆசாமி எடுத்தது

News image
Updated On :3 மே 2015, 7:34 am

ஸ்ரீதேவி குமரேசன

பொதுவாக வனவிலங்குகள் பற்றிய ஆவணப்படம் என்றால் அது எந்த நாட்டு ஆசாமி எடுத்தது என்றுதான் முதலில் கேட்போம். ஆனால் தமிழனாலும் இப்படிப்பட்ட ஆவணப்படங்களை மிக சாதுர்யமாக எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் சுப்பையா நல்லமுத்து. சமீபத்தில் 2015- ஆம் ஆண்டிற்கான 62வது தேசிய விருது அறிவிக்கப்பட்ட பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த இவரது "லைஃப் ஃபோர்ஸ் - இன்டியா'ஸ் வெஸ்டர்ன் காட்ஸ்' (Life Force - India's Western Ghats) என்ற ஆவணப்படத்திற்கு சிறந்த சாகசப் படம் என்ற தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவருக்கு கிடைத்திருக்கும் நான்காவது தேசிய விருது. இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் பிறந்தவன் நான். சினிமா மீது இருந்த ஆர்வத்தால் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசையில் 1986-இல் சென்னைக்கு வந்து சினிமாடோகிராபி படித்தேன். ஆனால் நான் சினிமாவில் சேர என் அப்பா அனுமதிக்கவில்லை. அதனால்   ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ISROவில் ஹை ஸ்பீட் கேமராமேனாக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே விஞ்ஞானிகளுடன்  இணைந்து அட்வான்ஸ் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அதிவேகத்தில் படம்பிடித்துக் கொடுப்பது எனது வேலை. உதாரணத்திற்கு ஒரு பறவை பறக்க ஆரம்பிக்கும்போது எவ்வளவு வேகத்தில் பறக்கிறது, தரை இறங்கும்போது எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறது என்பதை எல்லாம் மிக உன்னிப்பாகக் கவனித்து படம்பிடித்துக் கொடுப்பேன். இதன் அடிப்படையில்தான் அந்தக்காலத்தில் விமானம் பறக்கின்ற பார்முலாவையே கண்டுபிடித்துள்ளார்கள். இவ்வாறு பல அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல புராஜக்ட்கள் செய்தோம். இருந்தாலும் எனக்குள்ளே இருந்த சினிமா ஆசை குறையவில்லை. அதனால் விடுமுறை தினமான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சினிமாவில் கேமரா உதவியாளராக பல படங்களுக்கு வேலை செய்து வந்தேன். 

Story image

இந்நிலையில் அகமதாபாத் ISRO டெலிவிஷன் ஒளிபரப்பை முதன் முதலில்  தொடங்கினார்கள்.  இதனைச் சோதிக்கும் விதத்தில்  சுற்றியுள்ள 45 கிராமங்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கி சோதனை செய்து பார்த்தார்கள். இந்தத் திட்டத்தில் 2ஆண்டுகள் வேலை செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பிறகு ISRO வில் இருந்து வெளியே வந்து வேறுசில இடங்களில் வேலை பார்த்தேன். அதன்பின்னர் தொலைக்காட்சியில் ஃப்ரிலேன்ஸராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே "LIVING ON THE EDGE'  என்று வனவிலங்குகள் பற்றிய 52 வார நிகழ்ச்சியைத் தயாரித்து, இயக்கி தொகுத்து வழங்கினேன்.  நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுதான் இந்தியாவில் முதன்முதலில் வனவிலங்கு பற்றி வந்த ஆவணப்படம். அதற்கு எனக்கு "கீரின் ஆஸ்கார்' விருது கிடைத்தது. நான் ஏற்கெனவே ISRO வில்  நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வேலை பார்த்து பழகியிருந்ததால் ஆவணப்படம் எடுப்பதில் சிரமம் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு "பிபிசி', "நேஷனல் ஜியோகிராபி',"டிஸ்கவரி' போன்ற வெளிநாட்டுச் சேனல்களுக்கு வனவிலங்குகள், மருத்துவ சுற்றுச் சூழல்கள், பயணங்கள், சேவைகள் போன்றவற்றைப் பற்றி 12 ஆண்டுகள் உலக அளவில் படம் பிடித்துக் கொடுத்து வந்தேன்.

Story image

ஒரு கட்டத்தில் நானே சொந்தமாக "க்ரே ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். என் மனைவி அன்வித்தாவும் ISROவில்  என்னுடன் பணியாற்றியவர்தான். அதனால் எனக்கு உதவியாக நிறுவனத்தை கவனித்துக் கொண்டார். இரண்டு பேரும் இணைந்து நிறைய படங்கள் தயாரித்தோம். அதில் "டைகர் டைனாஸ்டி' என்ற புலிகள் பற்றிய ஓர் ஆவணப்படம் தயாரித்தோம். அதற்கு 2012-இல் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன.  அதன் மூலம் தமிழனாலும் இதுபோன்ற ஆவணப்படங்களைத் தயாரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினேன்.

இதைத் தொடர்ந்து டிஸ்கவரி சேனலுக்காக சமீபத்தில் இந்த "லைஃப் ஃபோர்ஸ் - இன்டியாஸ் வெஸ்டர்ன் காட்ஸ்' ஆவணப்படத்தை 18 மாதங்கள் கடுமையாக உழைத்து 200 அடி உயர மரத்திலேயே தங்கியிருந்து படம் பிடித்தோம். இதற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் தேவாங்கு, சிங்கவால் குரங்கு, கொம்பு பறவை (ஹார்ன் பில்) போன்ற அரிய அழிந்து வரும் உயிரினங்களின் இனத்தைக் கண்டுபிடித்து அதனை ஆவணம் செய்து கொடுத்தேன். இதில்  ஆச்சரியம் என்னவென்றால் ஊதா நிற தவளை என்கிற ஓர் அரியவகை உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்குள் புதைந்திருக்கும் இந்த உயிரினம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்காலங்களில் மட்டுமே வெளியே வந்து இனப்பெருக்கம் செய்துவிட்டு மீண்டும் பூமிக்குள் புதைந்துவிடும்.  இதற்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்து 22 நாள்கள் இதனைப் படம் பிடித்தேன். இந்த ஆவணத்திற்காக சமீபத்தில் 2015க்கான தேசிய விருது (Best Exploration and Adventure Film) கொடுத்தார்கள்.  நாங்கள் உழைத்த உழைப்புக் கிடைத்த விருதாக இதை நினைக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.

Story image

எனக்கு புலிகள் பற்றிய ஆராய்ச்சி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் ராஜஸ்தான் மாநிலம் மாதோப்பூரிலுள்ள "ரந்தம் போர் தேசிய பூங்கா'வில் உள்ள உலகப் புகழ் பெற்ற "மச்சிலி' என்ற புலி குடும்பத்தை கடந்த 8 ஆண்டுகளாக ஃபாலோ செய்து படம் பிடித்து வருகிறேன். இதற்காக மேலும் ஒன்றரை ஆண்டுகள் படம் பிடிக்க வேண்டியது இருக்கிறது. இந்த புலிகள் பற்றிய ஆவணப்படத்தை முதன்முறையாக திரையரங்குளில் வெளியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான முயற்சிகளும் செய்து வருகிறேன். அப்படி வெளியிட்டால் இந்தியாவில் உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி படம் பிடித்து  திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் ஆவணப் படம் இதுவாகத்தான் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.