திருப்புகழை வெளிப்படுத்திய திருப்புகழ்ச் சுப்பிரமணியர்

முருகப்பெருமான் புகழ் பாடும் இலக்கியங்களில் மங்கா புகழ் கொண்டு திகழ்வது திருப்புகழ் ஆகும். அந்தத் திருப்புகழ் தோன்றக் காரணமாகத் திகழ்ந்தவர் அருணகிரிநாதர்.
திருப்புகழை வெளிப்படுத்திய திருப்புகழ்ச் சுப்பிரமணியர்
Updated on
3 min read

முருகப்பெருமான் புகழ் பாடும் இலக்கியங்களில் மங்கா புகழ் கொண்டு திகழ்வது திருப்புகழ் ஆகும். அந்தத் திருப்புகழ் தோன்றக் காரணமாகத் திகழ்ந்தவர் அருணகிரிநாதர்.

அந்தத் திருப்புகழ்  இன்று நம் கரங்களில் தவழ்வதற்கு மூலகாரணமாக விளங்கியவர் வடக்குப்பட்டு த.சுப்பிரமணியப் பிள்ளை. இவரது பெருமுயற்சியால்தான் திருப்புகழ்ப் பாடல்கள் இன்று பக்தர்களால் பாடப்பெற்று வருகின்றன. முருகப்பெருமான் ஆட்கொண்ட அருணகிரி நாதரின் திருப்புகழ் வெளிவர உதவிய இவர், முருகப்பெருமானின் அடியார்கள் வரிசையில் முக்கிய இடம் பெறுகிறார்.

சுப்பிரமணியப்பிள்ளையின்  169ஆவது ஆண்டு பிறந்தநாள் டிசம்பர் 11ஆம் தேதி வருகிறது. செங்கல்பட்டில் தணிகாசலம் - லட்சுமி அம்மாள் தம்பதிக்கு இவர் 11-12-1846இல் பிறந்தார்.

சுப்பிரமணியப் பிள்ளையின் வரலாறை அறிய அவரது நாட்குறிப்புகளே பெரிதும் உதவுகின்றன. நாள்தோறும் உறங்குவதற்கு முன்  அன்றைய விஷயங்களை எழுதுவது அவர் வழக்கம். வறுமையில் வாடிய இவரது குடும்பத்தில் சுப்பிரமணியப் பிள்ளை படிப்பது பெரிய  சுமையாக இருந்தது. இவர் செங்கல்பட்டில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கே சென்னை கிறித்துவ பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் டாக்டர் மில்லர்துரை ஆய்வுக்காக இவரது பள்ளிக்கு வந்தார். அவரிடம் தன் நிலையை தைரியமாகக் கூறிய சுப்பிரமணியப்பிள்ளை அவரது உதவியையும் பெற்றார்.

அதேபோன்று, மில்லர் மீண்டும் ஒருமுறை வந்தபோது, தான் சென்னையில் மேல்படிப்பைத் தொடர விரும்புவதால், தனக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு அவர் சென்னையில்  நடத்தப்படும் ஓர் உதவித்தொகை தேர்வு எழுதும்படி சொன்னார்.

அதன்படியே தேர்வு எழுதிய அவர், முதலாவதாக தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் அவருக்கு  உதவித்தொகையாக மாதமொன்றுக்கு ரூ.8 கிடைக்க மில்லர் உதவினார்.

அவருக்கு கிறித்துவ பள்ளியில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தனது உதவித்தொகை பணத்தில் நான்கு ரூபாயை தனது செலவிற்காகவும், மீதமுள்ள தொகையைக் குடும்பத்தாருக்கும் கொடுத்து வந்தார். குடும்பம் மிகவும் வறுமையின் பிடியில் இருந்தபோதும் படிப்பில் கவனம் செலுத்துவதிலேயே அவர் குறியாக இருந்தார்.

 1866இல் இவர் மெட்ரிகுலேஷன் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றார். எப்.ஏ. படிக்க முடிவு செய்தார். அதேவேளையில் தன் குடும்பத்திற்கு உதவ சில இடங்களுக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுத்து அதன்மூலம் ஏழு ரூபாய் கூடுதலாகச் சம்பாதித்து அத்தொகையையும் குடும்பத்திற்குக் கொடுத்தார்.  1867ஆம் ஆண்டு எப்.ஏ. பரீட்சையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மில்லர் துரையின் சிபாரிசின் பேரில் ஸ்காட்லேண்ட் மிஷன் பள்ளியில் நாற்பது ரூபாய் சம்பளத்தில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அப்போதிருந்தே காலையில் சிவபுராணம் படிக்கும் பழக்கத்தையும் மேற்கொண்டு வந்தார்.   1868ஆம் ஆண்டு நாள்தோறும் தணிகேசன் மீது ஒரு பதிகம் இயற்றுவதாக உறுதி மேற்கொண்டார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்கிற தாயம்மாளை மனைவியாக்கிக் கொண்டார். அதே நேரத்தில், கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டின் முடிவில் அவருக்குத் தலைமை எழுத்தராகப் பதவி உயர்வும் கிடைத்தது.

இவர் ஒருமுறை சிதம்பரம்  தீட்சிதர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் பெருமையைக் காட்ட, பல மேற்கோள்களைப் பல்வேறு நூல்களிலிருந்து எடுத்துக்காட்டினர். "தாது மாமலர் முடியாலே' என்ற திருப்புகழ்ப் பாடலையும் மேற்கோள் காட்ட, அதன் தேனொழுகும் இனிமையால் கவரப்பட்டு, திருப்புகழ் மீது ஆசை ஏற்பட்டது. இந்நிலையில், 1870ஆம் ஆண்டு திருப்புகழை அச்சிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுமுதல் திருப்புகழ் ஓலைச் சுவடிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார்.

1876ஆம் ஆண்டு ஆறுமுக நாவலருடைய சைவ வினா விடை புத்தகத்தில் திருப்புகழ்ப் பாடல்கள் ஆறு இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். இப்பாடல்களில் மஞ்சக்குப்பம் மிஷன் பள்ளியின் தமிழ் ஆசிரியர் சிவசிதம்பரம் முதலியார் அவர்களைக் கொண்டு திருத்தம் செய்து வந்தார். 1878ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் இவருக்கு ஒரு கனவு தோன்றியது. அதில் திருத்தணிகை முருகன் சேவல்கொடியோடு மயில் வாகனத்தின் மீது  பொன்னிற ஜோதியாகக் காட்சி தந்ததை அவர் தனது நாட்குறிப்பில் எழுதி உள்ளார்.

 காஞ்சிபுரம் புத்தேரித்தெரு அண்ணாமலைப்பிள்ளை என்பவரிடம் எழுநூற்றைம்பது பாடல்கள் கொண்ட திருப்புகழ் ஓலைச்சுவடிகளையும், சிதம்பரத்தை அடுத்துள்ள பின்னத்தூர் சீனிவாசபிள்ளை என்பவரிடமிருந்து நானூறு பாடல்கள் கொண்ட ஓலைச்சுவடிகளையும், அதற்கு முன் அவர் கொடுத்த நூற்று இருபது பாடல்களையும் பெற்று திருப்புகழ்ப் பாடல்களைத் தொகுத்தார். இவரது நீதிமன்றப் பணி காரணமாக விழுப்புரம், நாமக்கல், கும்பகோணம், திருத்துறைப்பூண்டி, மதுரை, மானாமதுரை என பல்வேறு இடங்களில்  பணிபுரிய நேரிட்டது.

இவர் 1892ஆம் ஆண்டு  கும்பகோணத்தில் பணிபுரிந்தபோது திருப்புகழ் அச்சிடத் தயாராக  இருந்த நிலையில், சேலம் தமிழ்ப்பண்டிதர் சரவணப்பிள்ளை அதனைப் பார்வையிட்டுச் சில திருத்தங்களைச் செய்து தந்தார். பின் சென்னைக்கு வந்து முதல் பாகம் அச்சிடும் பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் திருத்துறைப்பூண்டியில் பணிபுரிந்தபோது,  1895ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி திருப்புகழின் முதல் பாகம் நூல் வடிவில் இவருக்கு வந்து சேர்ந்தது. இதுபற்றி அவர் தனது நாட்குறிப்பில், "இருபத்து நான்கு வருஷத்திற்கு முன்பு  துவங்கிய வேலை இப்போதுதான் முடிந்தது, அதுவும் பாதிவேலைதான் முடிந்துள்ளது' என்றும் வருத்தத்துடன் எழுதியுள்ளார். 

1900இல் திருப்புகழ் இரண்டாம் பாகத்திற்கான பாடல்களைச் சேகரித்து அவற்றை அச்சிட அனுப்பினார். இது 1902 ஜனவரி மாதம் வெளிவந்தது. 1903ஆம் ஆண்டு திருத்தணிகை அறக்கட்டளைக்காக ஒரு சிறிய நிலம் வாங்கி நன்கொடையாகத் தந்துள்ளார்.   

இவர் தரிசித்த 176 சிவாலயங்களைத் தொகுத்து சிவஸ்தல அகராதியைத் தயார் செய்து வைத்திருந்தார்.  தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் ஆலோசனையின்பேரில் சிவஸ்தல மஞ்சரி என்று இதற்குப் பெயரிட்டு, அந்நூலை வெளியிட்டார். 1908ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தணி திருப்புகழ் நூலைத் தனியாக வெளியிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com