தனிமனித சாதனை எதுவுமில்லை!
மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினனவுக்கு வருபவர் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன்தான்.


மழை என்றாலும், வெயில் என்றாலும் உடனே மக்களின் நினனவுக்கு வருபவர் சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன்தான். அதிலும் சமீபத்தில் சென்னையைப் புரட்டிப்போட்ட மழையின் காரணமாக பள்ளி மாணவர்கள் முதல் வயதான முதியவர்கள் வரை அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டவர் ரமணன். இவர் சென்ற மார்ச் 31-ஆம் தேதியோடு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவர் இத்தனை ஆண்டுகள் தான் கடந்துவந்த பாதையில் ஏற்பட்ட சவால்களையும், சாதனைகளையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
வானிலை துறையைத் தேர்ந்தெடுத்தது எப்படி? உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்?
எனக்கு பூர்வீகம் புதுக்கோட்டை. என் அப்பாவுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை. அம்மா ஹவுஸ் ஒய்ஃப். ஒரு தங்கை உண்டு. எல்லாரையும் போன்று எனக்கும் சாதாரணமான பள்ளி பருவம்தான். யாரிடமும் வம்பு தும்புக்கு எல்லாம் போக மாட்டேன். அமைதியாக நான் உண்டு - என் வேலை உண்டு என இருப்பேன்.
தபால் தலை சேகரிப்பு, நாணயம் சேகரிப்பு இதில் எல்லாம் சிறுவயதில் ஆர்வம் அதிகம். சிறுவயதில் இருந்தே ஜியாகிராபி பாடத்தில் ஆர்வம் அதிகம். அதனால் பி.எஸ்சி.யில் இயற்பியலை பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அடுத்து எம்.எஸ்சிமுடித்தேன்.
இயற்பியலை அடிப்படையாகக் கொண்ட வானிலைத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். தற்போது 36 ஆண்டுகள் கடந்து ஓய்வும் பெற்றுவிட்டேன்.
நீங்கள் வானிலை துறையில் சாதித்தவை எவை?
இந்தத் துறையை பொருத்தவரை தனி மனிதனின் சாதனை என்பது எதுவும் இல்லை. எல்லாமே கூட்டு முயற்சிதான். ராடார் ரிப்போர்ட் தருபவர் ஒருவர், சேட்டலைட் ரிப்போர்ட் தருபவர் ஒருவர், சின்ன சின்ன அப்சர்வேஷன் எல்லாம் ஓரிடத்தில் இருந்து வருகிறது. வங்கக் கடலில் ஒரு தாழ்வு பகுதி இருக்கிறது என்றால் மலேஷியன் - சிங்கப்பூரில் இருந்து தரவுகள் வருகின்றன. இப்படி எல்லாமே கூட்டு முயற்சிதான். இந்தத் தரவுகளின் அடிப்படையில்தான், நான் மக்களுக்கு பருவநிலை குறித்து ரிப்போர்ட் தருவேன்.
நான் இந்தத்துறைக்கு வந்தபுதிதில் புள்ளியியல் அடிப்படையில் தான் தரவுகள் இருந்தன. அறிவியல் தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் தற்போது டைனமிக் அடிப்படையில் காலநிலை, பருவமாற்றங்களைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது.
இந்த 36 ஆண்டுகளில் நிறைய அட்வான்ஸ் டெக்னாலஜி எல்லாம் வந்துவிட்டன. மேலும் செயற்கைக்கோளின் உதவிகளால் வானிலையின் நிலை துல்லியமாகக் கணக்கிடப்பட்டு படங்கள் கிடைக்கிறது. புவிநிலை செயற்கைக்கோள், துருவ நிலை செயற்கைக்கோள்களின் மூலம் துல்லியமான தரவுகள் எல்லாம் கிடைக்கின்றன.
நான் 2002- இல் இங்கு வந்தபோதுதான் போர்ட் டிரஸ்ட் எதிரில் புதிய நவீன ரக டாபுலர் ராடார் அமைத்தார்கள். அதன்மூலம்தான் புயல் மழை எல்லாம் நம்மை நோக்கி வரும்போது துல்லியமாகச் சொல்ல முடிகிறது. மேலும் கணினியின் அளவற்ற வளர்ச்சியாலும் சிறப்பாகப் பணி செய்ய முடிந்தது.
பருவநிலை மாற்றங்கள் ஏற்பட என்ன காரணம்?
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பருவ நிலை தற்போது இல்லை. மாற்றங்கள் ஏற்பட காரணம், மரங்கள் அழிக்கப்பட்டு கட்டடங்களாக மாறியதும், சாலையெல்லாம் தார்ச் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் மாறி நகரமயமானதால்தான். வெப்பம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.
நகரமயமாகி வருவதை நம்மால் தடுக்க இயலாது. ஆனால் அதிலிருந்து தற்காத்து கொள்ளலாம். எப்படி என்றால் முடிந்தவரை வீட்டைச் சுற்றி மரங்கள் நடலாம். மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கலாம், மொட்டைமாடியில் சூரிய தகடுகளைப் பொருத்தி தற்காத்து கொள்ளலாம். இதன் மூலம் வெப்பத்தில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம் முடிந்த அளவிற்கு நமக்குத் தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். இது எதையுமே செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் மொட்டை மாடியில் வெள்ளை பூச்சாவது பூசிக் கொள்ளலாம். இதனால் வெப்பம் தாக்குவது குறைவாக இருக்கும்.
நீங்கள் "மழை வரும்' என்று சொன்னால் வராது? "மழை வராது' என்றால் வரும் என்றெல்லாம் கூறுகிறார்களே? அதைப்பற்றி?
இதில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ரமணன் ஒருவர் மட்டுமே இந்த கணிப்புகளைச் சொல்லவில்லை என்பதுதான். அடுத்தது, நகரத்தில் 24 மணிநேரத்தில் சில பகுதிகளில் மழை வரும் வாய்ப்புள்ளது என்று சொன்னால் கண்டிப்பாக ஏதாவது ஓர் இடத்தில் மழை பெய்திருக்கும். அப்படி மழை வந்ததா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எங்களுடைய இணையதளத்திற்குச் சென்று பார்த்தால் எந்த இடத்தில் மழை பெய்துள்ளது என்பது தெரிந்துவிடும்.
மேலும் நான் வாட்ஸ் -அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற எதிலும் இல்லை. என் நண்பர்கள் யாராவது செல்போனில் காண்பித்தால் பார்ப்பேன் அவ்வளவுதான். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்பட்டதில்லை. காரணம் நான் முன்பே சொன்னது போன்று இது தனிமனித முயற்சி கிடையாது. இது தெரியாததால் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். அவ்வளவுதான்.
உங்களுக்கு அடுத்து யார் வானிலை மைய இயக்குநர்?
பாலசந்தர் என்பவர்தான் எனக்கு அடுத்து வானிலை மைய இயக்குநராக வருகிறார். அவர் மக்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான். நான் இல்லாத போது ஏற்கெனவே அவர்தான் தகவல்களைத் தந்திருக்கிறார்.
பணி ஓய்வு பெற்று விட்டீர்கள். இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
இத்தனை ஆண்டுகளில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் என எந்த நாளையும் பார்க்க மாட்டேன். தினமும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுவேன். இனி குடும்பத்துடன் இருப்பேன், அவ்வளவுதான். எங்கள் அலுவலகத்தில் என் துறை சார்ந்தவர்களாகட்டும், என் குடும்பமாகட்டும் இதுவரை எனக்கு அளித்த மிகப்பெரிய ஒத்துழைப்பை மறக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...