அலுவலகம் சென்ற எனக்கு வேலையில் கவனமே செல்லவில்லை. டூ வீலரை நிறுத்துதளத்தில் நிறுத்தி விட்டு ஒரே பாய்ச்சலில் மேனேஜரின் அறைக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்ட போது மணி சரியாக ஒன்பதரை. எனது பெருமூச்சு நூறு டிகிரி. ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் வேலைக்கே உலை வந்திருக்கலாம். அப்புறம் வீட்டில் உலை. நல்லவேளை... ம்ம்... நல்ல நொடி.
எனது இருக்கைக்குச் சென்றால் பணி மூட்டை. கோப்புகள், ரிஜிஸ்டர்கள்... இரவு வீட்டிற்குச் செல்லாமல் அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்தாலும் இருபது நாட்களுக்குக் குறையாது இப்பொழுது இருந்த வேலை அளவு. இன்னும் வரும் வேலையைக் கணக்கிட்டால்... தலை சுற்றியதில் என் முதுகு நன்றாகத் தெரிந்தது.
ஆனால் வேலையில் என் மனம் சென்றால்தானே? கவனம் இறங்கினால்தானே? காலையில் அலுவலகம் செல்லும் போது நடந்த அந்த சம்பவம்... அதுவே என் கண் முன், மனத்தின் முன் நிழலாடியது.
நான்கு நாளாக தொடர்ந்து அலுவலகத்துக்குச் செல்ல காலதாமதமாகி விட்டது. சும்மா இருப்பாரா மேனேஜர்? மூன்று நாள் சொல்லிப் பார்த்தார். நேற்று ஒரு பிடி பிடித்து விட்டார். பின்னே?
"" மூர்த்தி சார், மேனேஜர் கூப்பிடறார்'' ப்யூன் பாலு சொல்ல, உள்ளே நுழைந்த போதே விஷயம் தெரிந்து விட்டது. தொலைந்தோம். அப்பொழுது வந்தது எனக்கு ஒரே ஆசை. நான் உடனே செவிடு ஆகி விடக் கூடாதா? ம்ம்...
""இது என்ன கம்பனியா? உன் மாமியார் வீடா? வேலைக்கு வர இஷ்டம் இல்லைன்னா நீயெல்லாம் ஏன்யா வேலைக்கு வர்றே. மாசம் பிறந்தா கை நீட்டி சம்பளம் வாங்கற இல்ல? சோறுதான திங்கறே? ஒரு டிசிப்ளின் வேண்டாம்'' சாதாரண நேரத்தில் பார்த்தால் அவர் பேசுவது ஓர் எக்ஸிக்யூட்டிவ் தோரணையில். இந்த மாதிரி நேரங்களில்,நாம் வாயைத் திறந்தால்... சாரி சொல்லக் கூட... தொலைந்தோம். ஆலகால விஷத்தை அந்த பகவானுக்கு அடுத்ததாக அப்படியே விழுங்கி விட்டு என் இருக்கைக்கு வந்தேன். தலையைக் குனிந்து கொண்டு,நேற்று. அவமானம்... என்ன செய்வது? இரண்டு ஜான் வயிற்றைக் கழுவ, நான்கு ஜீவன் வயிற்றைக் கழுவ..
நாளை அரை மணி நேரம் முன்னதாகவே வந்து விட்டுத்தான் மறுவேலை... சினிமா ஹீரோக்களின் சபதம் செய்து விட்டுத்தான் பணியைத் தொடங்கி இருந்தேன். ம்ம்... என்ன செய்வது? வள்ளுவர் விட்டால்தானே... "சொல்லுதல் யார்க்கும் எளிய...'' அன்றே சொல்லி விட்டாரே.
கடிகாரம் அலார ஒலி எழுப்ப என் கையில் செம அடி வாங்கியது. ஆறு மணிக்கு அலாரம் வைத்திருந்தாலாவது எழுந்திருக்கலாம். ஐந்து மணிக்கு வைத்து விட்டு அணைத்து விட்டுப் படுத்ததன் விளைவு? மறுபடி தூங்க ஆரம்பித்து, எழுந்தது ஆறரை. எட்டரை மணி நேர தூக்கத்தில் இருந்து உடம்பு மீண்டு சுறுசுறுப்பை சோம்பேறித்தனமாக அடைந்தபோது மணி ஒன்பது. ஒலிம்பிக்ஸ் வேகத்தில் இரண்டு பருக்கைகளை விழுங்கி விட்டு, காலில் சாக்ûஸ மாட்ட... இவ்வளவு எளிதாகவா மாட்டி விட்டேன்? குனிந்து பார்த்தால்... கால் ஒரு பக்கம், சாக்ஸ் ஒரு பக்கம். காற்றில் மாட்டி இருக்கிறேன். லேûஸ டூ வீலரை ஸ்டார்ட் செய்து விட்டுத்தான் மாட்டினேன். மணி ஒன்பதரை. ஒரு சாலையில் எள்ளு போட்டால் எள்ளு விழாத அளவு வாகனங்களின் கூட்டம். அதில் ஊர்ந்து வந்து அடுத்த சாலையில் நுழைந்து ராஜதானி எக்ஸ்ப்ரஸ் வேகம் எடுத்தபோதுதான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன்.
சாதாரணமாகத்தான் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த வேகத்தில் எனக்கு அவர் மீது பொறாமை துளிர் விட்டது. பார்த்தால் பணியிலிருந்து ஓய்வு பெற்றவராகத் தெரிந்தார். என்ன ஹாயாக நடந்து கொண்டிருக்கின்றார். நான் புவியில் இருக்கின்றேனா, செவ்வாயில் இருக்கின்றேனா எனத் தெரியாத வேகத்தில் என் நிலைமை... நினைத்துப் பொறாமைப் பட்ட அதே வேளையில்தான்... ஐயோ என்ன ஆயிற்று அவருக்கு?அப்படியே மார்பில் கையை வைத்து உட்கார்ந்தவர்தான். ஒரு கம்பத்தில் சாய்ந்து விட்டார் அப்படியே. டூ வீலரை அப்படியே நிறுத்தினேன். இறங்கவில்லை என்றாலும் என் குரல் அங்கு சென்று கொண்டிருந்த இரு வாலிபர்களை எச்சரித்தது. உடனே அவர் அருகில் சென்று அவரைக் கவனித்தனர். நான் என் கைக் கடிகாரத்தை நோக்க... "வேலைக்கு வர இஷ்டம் இல்லைன்னா நீயெல்லாம்...' மேனேஜர் மார்க்கபந்து கத்திக் கொண்டிருந்தார். வேகமாக டூ வீலரைக் கிளப்பிய என் தலை அந்தப் பெரியவரை நோக்கி பின் நோக்கித் திரும்பிக் கொண்டே வண்டி ஓட்ட, இப்பொழுதும் படு பயங்கரமான கழுத்து வலி... அலுவலகம் வந்து சேரும் வரை, அந்தப் பெரியவர் மீதான எண்ணத்துக்கும், மார்க்கபந்துவின் நினைவுக்கும் பெரிய குருஷேத்திரம் என் மனதில். மார்க்கபந்துதான் வெல்ல வேண்டியது என் சூழ்நிலை. இருக்கைக்கு வந்ததும் அந்தப் பெரியவர் என் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டார். என்ன ஆனதோ அவருக்கு. ஏன் அப்படி மார்பைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் நடுச் சாலையில். என் மனதில் அதே கேள்வி. சே... வண்டியை நிறுத்தி விட்டு அவரைக் கவனிக்கக் கூட முடியாத பாவி ஆகி விட்டேனே... நான் மனிதன்தானா... என் கண் முன்னால் ஒரு பெரியவரின் அந்த நிலையைப் பார்த்தும் உதவ முடியவில்லையே. என் மேசையில் எப்படி அந்தப் பெரியவர் என்னால் வேலையைக் கவனிக்கவே முடியவில்லை.
""என்னடா மூர்த்தி, என்ன எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே. நானும் அஞ்சு நிமிஷமா உன்னைப் பார்த்துண்டுதான் இருக்கேன். ரிஜிஸ்டரைத் திறந்தியே தவிர ஒரு பக்கத்தை இன்னும் பார்க்கலே நீ. என்ன ஆச்சு?'' கேட்டுக் கொண்டே வந்தான் சந்தானம். சக ஊழியன்.
""மனசே சரி இல்லைப்பா...'' ஆரம்பித்து அவன் மனதை நோகடித்தேன்.
""அடப் பாவமே.. கேட்கவே மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு மூர்த்தி. பாவம் என்ன ஆச்சோ அவருக்கு...'' சொல்லி விட்டு இதே மாதிரி அவன் கேள்விப்பட்ட சம்பவங்கள் இரண்டு மூன்றைச் சொல்லி விட்டு மார்க்கபந்து அழைக்கின்றார் என அவர் அறைக்குச் சென்றான். என் மனது அந்தப் பெரியவரை நோக்கிச் சென்றது. மார்க்கபந்து எப்பொழுது என்னை அழைத்து ஆடப் போகின்றாரோ பந்து? முக்கியமான ஸ்டேட்மெண்ட் ஒன்று தயார் செய்ய வேண்டும்... ஏற்கனவே தாமதம்...
அன்று முழுவதும் அந்தப் பெரியவர் நினைவாகவே இருக்க, செய்த வேலைகளை அவர் எவ்வளவு பாதித்திருந்தாரோ என நாளை மார்க்கபந்து திட்டித்தான் தெரிய வேண்டும். மாலை கிளம்பும் போது சந்தானம் என் அருகில் வந்தான். என் மனது சோகமாகவே இருந்தது.
""மூர்த்தி, நான் உன் கூட வரவா, உன் வீட்டு கிட்ட ஒரு இடம்'' ஏதோ சொன்னான். எங்கேயோ போக வேண்டும் என்று அவன் சொன்னது கேட்டதே தவிர, வேறு எதுவும் என் காதில் விழவில்லை. காரணம் என் மனதில் அந்த எண்ணம் உதித்திருந்ததுதான்.
""டேய், நீ என் கிட்ட பர்மிஷன் கேட்கணுமா? வாடா'' என்று சொல்லி விட்டு நான் வண்டியைக் கிளப்ப என் பின்னால் சந்தானம். அவன் கை என் தோளில். வண்டியைக் கிளப்ப அது வெட்பப் புகை விட்டது. என் மனதும்.
ஒரு காப்பி சாப்பிட, என் மனதுக்கு இதமாக இருந்தது. மீண்டும் வண்டியைக் கிளப்பினேன். ஓர் இடத்தில் நிறுத்தினேன். அதே இடத்தில். காலையில் அந்தப் பெரியவர் எந்த இடத்தில் மார்பில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாரோ அதே இடத்தில். என்னடா கேட்டான் சந்தானம். இறங்கினேன். சந்தானமும். அருகில் இருந்த பெட்டிக் கடைக்குச் சென்றேன். ""காலைல ஒரு பெரியவர்...'' விசாரித்தேன்.
சட்டென்று புரிந்து கொண்டான் கடைக்காரன்.
""அதுவா பக்கத்துல இருக்கற ஜோதி ஆஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டுப் போனாங்க சார். என் கடையிலதான் சோடா வாங்கிக் கொடுத்தாங்க...'' சொல்லி விட்டு அவன் பணியைத் தொடர, சந்தானத்தை என் பின்னால் உட்கார வைத்து என் டூ வீலரை ஜோதி ஆஸ்பிட்டலை நோக்கிச் செலுத்தினேன்.
""மூர்த்தி எங்கேடா போறே?'' கேட்டான். ஜோதி ஆஸ்பிட்டல் சொன்னேன்.
""எதுக்குடா?'' அவன் கேள்வி, பதில் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தது.
ஜோதி மருத்துவமனை வரவேற்பறையை அடைந்து விசாரிக்க ஐசீயூவை நோக்கி என்னைப் பணித்தார்கள். என் பின்னால் சந்தானம் வர நான் ஐசீயூவை நோக்கிச் சென்றேன்.
கதவில் இருந்த கண்ணாடி வழியாகப் பார்க்க, அதே பெரியவர்தான். முகம் நன்றாக நினைவிருக்கின்றதே... அவர் அசைவது தெரிந்தது. என் மூச்சும் லேசானது. அங்கு நின்றிருந்தவர்கள் அவர் உறவினர்களாகத்தான் இருக்க வேண்டும். மகன்.. ..மகள்.. ..மருமகன்... மருமகள்.. ..
""எப்படி இருக்கார் இப்ப?'' கேட்டேன்.
""மைல்ட் அட்டாக், கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் ஒரு நாளைக்கு ஐசீயுலதான் இருக்கணுமாம். அப்புறம் நாலைஞ்சு நாள் வார்டுல... நீங்க...?'' கேட்டார், சொன்னவர்.
""நீங்க?'' கேள்வியைத் திருப்பினேன்.
""அவரோட பையன்''
""காலைல நான் ஆபீஸ் போகும் போது அவர் திடீர்னு மார்ல கையை வைச்சு உட்கார்றதை பார்த்தேன். மனசு கேட்கலை. அதான் விசாரிச்சுட்டுப் போகலாம்னு'' அப்பொழுது என்னால் உதவி செய்ய முடியவில்லை என்ற எண்ணம் என் வார்த்தைகளுக்கு சுருதி சேர்த்தது என் காதுகளில் விழுந்தது.
""ரொம்ப தாங்க்ஸ் சார்'' என் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார் அவர்.
""எதுக்கு சார்?''
""அக்கறையா வந்து விசாரிக்கறேளே'' அவர் கண்கள் கலங்கின. அதற்குள் எல்லாருக்கும் ப்ளாஸ்க்கில் காப்பி வர என் முன் ஒரு கோப்பையை நீட்டினர். வேண்டாம் என மறுத்தும் என் கையில் அவர்கள் கொடுக்க அதைப் பருகி விட்டு விடை பெற்ற என் மனதில் அதே குற்ற உணர்வு.. ஏதாவது ஹெல்ப் வேணும்னா.. .. கேட்டு விட்டுத்தான் கிளம்பி இருந்தேன். என் டூ வீலரை நோக்கி நடந்தேன். வண்டியைக் கிளப்பினேன்.
""ஏன்டா... ஆபத்துல உன்னால உதவ முடியாத சூழ்நிலை. நீ ஒண்ணுமே பண்ண முடியாது ஓகே. இப்ப அவரை வந்து பார்த்து என்னடா கண்டே?'' கேட்டான் சந்தானம், அவன் முகம் முழுக்க ஆச்சரியக் குறிகளைப் பதித்திருந்தவாறே.
""தெரியலடா. அந்தக் குற்ற உணர்வு இன்னும் அப்படியே இருக்கு. ஆனா இப்ப வந்து பார்த்தது என் மனசுக்கு லேசா இதமா இருக்கு'' சொல்லி விட்டு சாலையைப் பார்த்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


