புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

திறமைக்கேற்ற பயிற்சி!

இஸ்பா- இளம் வயதிலேயே அவர்கள் இந்த விளையாட்டுக்குத்தான் தகுதியானவர்கள். வாலிபால் தான் இவர் விளையாட முடியும். இவருக்கு தடகளம்தான் சரி.

News image
Updated On :17 ஜூன் 2016, 10:57 am

இஸ்பா- இளம் வயதிலேயே அவர்கள் இந்த விளையாட்டுக்குத்தான் தகுதியானவர்கள். வாலிபால் தான் இவர் விளையாட முடியும். இவருக்கு தடகளம்தான் சரி. இவருக்கு கால்பந்துதான் சரி என்பதைக் கண்டறியும் முகாமாக இது உள்ளது. இந்த விளையாட்டில்தான் அவர்கள் பிரகாசிக்க முடியும் என்று கண்டறிந்து சொல்லும் தகுதி வாய்ந்த முகாமாக மாறியிருக்கிறது.

இஸ்பாவின் நிறுவனரும், சர்வதேச தட கள வீரருமான ஆர். நடராஜன் வீரர்களைக் கண்டறிந்து தயார்படுத்துதலில் முக்கிய பணியாற்றுபவர்.

1995-இல் சென்னையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களைக் குவித்து தடகளத்தில் தமிழகத்தின் மானத்தைக் காத்தவர். 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்றவர். இப்போது இஸ்பா என்ற விளையாட்டு அமைப்பை உருவாக்கி இளம் தளிர்களை தடகளத்தில் பிரகாசிக்கச் செய்து வருகிறார். சுங்கத்துறை உயரதிகாரியான இவர், தடகளத்தில் தங்கங்களைக் கண்டறிகிறார்.

குறிப்பாக இக்காலத்தில் பெண்களுக்கு வரும் பல்வேறு பிரச்னைகளை உடற்பயிற்சி, யோகா மூலம் எளிதில் முன்கூட்டியே தடுக்க முடியும் என்கிறார் நடராஜன். பெண்களுக்கு ஏற்படும் முதுகுவலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்ற பல பிரச்னைகளுக்கு எளிதான உடற்பயிற்சிகள் மூலமே நிவாரணம் பெற முடியும் என்கிறார் அவர்.

சென்னையில் நேரு பூங்கா அருகிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய(எஸ்டிஏடி) மைதானத்தில் அவரைச் சந்தித்தோம். அவருடன் பேசியதிலிருந்து....

""இந்த முகாமின் நோக்கம் எதிர்கால தடகள வீரர்களை இப்போதே கண்டறிந்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிப்பதுதான். எப்படி எம்பிபிஎஸ் படிக்கும் டாக்டருக்கு சிறுவயதில் ஏபிசிடி கற்றுத் தருவது போலவோ அதுபோல்தான் இதுவும். அவர்களுடைய திறமைகளைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்கிறோம்.

கடந்த ஒரு மாதமாக சென்னை எஸ்டிஏடி மைதானம், ஐஐடி மைதானங்களில் பயிற்சி நடத்தி வருகிறோம். 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 10 வயதுக்குட்பட்டோர், 10-14 வயதுக்குட்பட்டோர், 14-18 வயதுக்குள்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளாக ஆண், பெண் என பிரித்து அவர்களுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கிறோம். தடகளத்தில் வேகம் முக்கியம். அதற்கு நாங்கள் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம். வீரருக்கு என்ன மாதிரி பயிற்சி சரிபட்டு வருமோ அதை அளிக்கிறோம். வீரர், வீராங்கனைகளுக்கு முக்கியமாக 5 விதமான பயிற்சிகளை அளிக்கிறோம்.

முதலாவது, கீழே விழுந்தால் அடிபடாமல் இருப்பதற்கான பயிற்சி.

இரண்டாவது, வளையக் கூடிய தன்மை. இளமையிலேயே வளையக் கூடிய தன்மைக்கான பயிற்சியை அளிக்கும்போது அது அவர்கள் வளர்ச்சியின்போது மிகவும் உதவும். இது தடகள வீரர்களுக்கு உரிய முக்கிய பயிற்சி ஆகும்.

மூன்றாவது, ரெக்கவரி என்று சொல்லக் கூடிய மீண்டு வருதல். காயம் பட்டாலும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி.

நான்காவதாக, மூச்சுப் பயிற்சி. இது விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அவசியமான பயிற்சியாகும்.

ஐந்தாவதாக, கவனிக்கும் திறனை அதிகரித்தல். இதுபோன்ற பயிற்சிகளை அளிப்பதால் எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த வீரர்களாக உருவெடுக்க முடியும்.

இதுதான் விளையாட்டுக்கு அடிப்படை. இந்த அடிப்படையைத் தான் நாங்கள் இங்கு கற்றுத் தருகிறோம்.

இஸ்பா இயக்குநர்களாக நான் மற்றும் தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே. வைத்தியநாதன், டாக்டர்ஆர்எம்எல் லஷ்மணன், எஸ். செந்தில், யோகா நிபுணர் வசந்தி ஆகியோர் உள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.