இதைத்தவிர, தமிழகத்தின் கலைகளையும், பண்பாட்டையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று எழுந்த ஆசையினால், சில ஆய்வுகள் செய்தேன். அப்போது ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மை உள்ள மகர யாழ், சகட யாழ், செங்கோட்டு யாழ் போன்றவற்றின் வடிவம், திருவாரூரில் பஞ்ச முக வாத்தியம் என இருந்தது. இவற்றையெல்லாம் என்னுடைய படைப்புகளின் மூலம் பதிவு செய்திருக்கிறேன். மேலும், செட்டிநாட்டு மர சிற்பங்கள், கோயில் சித்திரங்கள், தோல்பாவை கூத்து இதனுடைய களப்பணி வழிதான் இப்போது நான் செய்து வரும் ஓவியங்கள் என்றும் சொல்லலாம். இவை தவிர தற்போது மறைந்து வரும், மறைக்கப்பட்டு வரும், அழிந்து வரும் நமது பாரம்பரியங்களையும், குறியீடுகளையும் ஓவியமாகவோ, கோட்டோவியமாகவோ நான் இருக்கும் காலத்துக்குள் பதிந்துவிடவேண்டும் என்று முனைப்பில் இருக்கிறேன்.