ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுப் புண் தீர என்ன வழி?

என் வயது 77. ஐம்பது வருடங்களாக அல்சர் இருந்து வருகிறது. அவ்வப்போது சரி செய்து கொண்டு வந்துள்ளேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுப் புண் தீர என்ன வழி?
Updated on
2 min read

என் வயது 77. ஐம்பது வருடங்களாக அல்சர் இருந்து வருகிறது. அவ்வப்போது சரி செய்து கொண்டு வந்துள்ளேன். ஜீரணசக்தி குறைவாக உள்ளது. தற்போது சில மாதங்களாக புண்ணை ஆற்றுவது சற்று கடினமாக உள்ளது. புண் இருக்கும்போது அடிக்கடி பசி எடுக்கும். புண் ஆறிவிட்டால் பசி எடுப்பது இல்லை. வாயு கலைவதும் இல்லை. சிறிது ரசம் சேர்த்து சாப்பிட்டாலும் மீண்டும் புண் உண்டாகிவிடுகிறது. இப்பிரச்னை தீர வழி என்ன?

ய.ரங்கராஜன், லிங்கத்தூர் - கரூர்.

புண் வயிற்றில் இருக்கும்பொழுது அடிக்கடி பசி எடுப்பதாகக் கூறுவதிலிருந்து தங்களுக்கு வயிற்றில் புண் ஏற்படக் காரணமாகிய பாசகம் எனும் பித்தத்தினுடைய குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசான தன்மை, நீர்த்த தன்மை ஆகியவை காரணம் ஆகின்றன. ஊடுருவும் தன்மைக்கு நேரெதிரான மந்தம், சூட்டிற்கு எதிரான குளிர்ச்சி, லேசான தன்மைக்கு எதிரான கனம், நீர்த்த தன்மைக்கு எதிரான நிலைப்பு எனும் குணங்களைக் கொண்ட உணவு மற்றும் மருந்துகளின் வாயிலாக பித்தத்தினுடைய சீற்றத்தைத் தணித்து புண்ணை ஆற்ற முடியும். ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல புண் ஆறிவிட்டால் பசி எடுப்பதில்லை என்ற நிலையை இந்த குணங்கள் அனைத்தும் நிச்சயம் செய்யக் கூடியவையே. அதனால் இதிலிருந்து நாம் ஊகித்தறிவது என்னவென்றால், பசியை ஏற்படுத்தி அதே சமயத்தில் புண்ணை ஏற்படுத்தாத சுத்தமான பித்தம் தங்களுடைய குடல் பகுதியில் ஊறி வரவில்லை என்று நன்கு புலப்படுகிறது. மலச்சிக்கலையும் குடல் வாயு ஏற்படுத்துகிறது. அதனால் வாயுவைக் கலைப்பதற்கும், மலத்தை வெளியேற்றுவற்கும், கெட்டுப்போன பித்த ஊறலையும் ஒருசேர சரி செய்யப்பட வேண்டியவையாகும்.

ஆயுர்வேத மருந்தாகிய கல்யாண குலம் எனும் லேகிய மருந்தை 15 கிராம் அளவில் காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 7 நாட்கள் வரை தொடர்ந்து நக்கிச் சாப்பிட வேண்டும். இந்த லேகிய மருந்தினால் ஏற்படக்கூடிய நன்மைகள், குடல் வாயுவையும், கெட்டுப் போன பித்தத்தையும் பேதி மூலம் வெளியேற்றிவிடும். தூர் வாரப்பட்ட ஒரு கிணற்றிலிருந்து உரைகளின் நடுவே இருந்து எப்படி புது நீர் சுரந்து கிணற்றை நிரப்புமோ அதுபோல வெளியேற்றப்பட்ட கெட்ட பித்தநீரின் விளைவாக தங்களுடைய குடல் உட்புற சவ்வுகளிலிருந்து புதிய பித்த திரவமானது சுரந்து, பசியின் தன்மையைச் சீராக்கித் தரும். ரசத்தில் சேர்க்கப்படும் புளி, உப்பு, மிளகாய்ப்பொடி, கடுகு, எண்ணெய் தாளிப்பு போன்றவை குடல் புண்ணை மேலும் ஏற்படுத்தும் என்பதால் நீங்கள் எலுமிச்சம்பழச்சாறு அல்லது நெல்லிக்காய் வற்றல் ஊற வைத்த தண்ணீரைப் பிழிந்து சிறிது தக்காளிச் சாற்றுடன் கலந்து ரஸம் தயாரித்து அதை உணவாகச் சாப்பிட்டால் புண் ஆறும், பசியும் எடுக்கும்.

ம்ருத்வீகாதி லேஹ்யம், பரூஷகாதி லேஹ்யம், சங்கபஸ்மம், விதார்யாதி பால் கஷாயம், இந்துகாந்தம் க்ருதம், அப்ரக பஸ்மம், வராடிகா பஸ்மம், காமதுகா ரஸம் போன்ற தரமான ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வரலாம். அவிபத்தி எனும் ஒரு சூரண மருந்திருக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலா, இலவங்கம், பட்டை, கோரைக்கிழங்கு, வாய்விடங்கம், நெல்லிக்காய், சிவதைவேர் ஆகியவற்றிற்கு சமம் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சூரணம் எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதால் ந வ்யபத் }

ஆபத்தற்றது, அவ்யபத் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே மருவி அவிபத்தி சூரணம் என்ற பெயரில் தற்சமயம் ஆயுர்வேத மருந்துக்கடைகளில் விற்பனையாகிறது. காலையில் குடித்த புழுங்கலரிசிக் கஞ்சியானது நன்றாகச் செரித்து மதிய வேளையில் பசி ஏற்பட்டுள்ள நிலையில் கெட்டுப்போன பித்தநீரை வெளியேற்றுவதும் குடற்புண்ணை ஆற்றக்கூடிய திறனும் கொண்ட இந்த சூரணத்தை சுமார் பத்து கிராம் அளவில் எடுத்து இருபது மில்லி லிட்டர் தேன் குழைத்து நக்கிச் சாப்பிட உகந்த மருந்து. நீர் பேதியாகி குடலை சுத்தப்படுத்துமென்பதால், 15 நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் இம்மருந்தைச் சாப்பிடலாம். முன் பாராவில் குறிப்பிட்ட கல்யாணகுலம் என்ற மருந்தின் பயன்பாட்டை ஒரு வாரத்திற்கு மேல் தொடர வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு 15 நாட்கள் கழித்து இந்த அவிபத்தி சூரணத்தைச் சாப்பிட்டு வர தங்களுடைய பிரச்னைக்கு இதுவே ஒரு சிறந்த நிவாரணியாக அமையலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com