தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ராமானுஜன் என்ற கணித மேதை!

சென்ற வாரம் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்திருந்த கணிதப் பேராசிரியர் அல்லாடி கிருஷ்ணசாமி, தம் இல்லத்தில் நாடகத்திலும், குறும்படங்களிலும்,

News image
Updated On :30 மே 2016, 7:45 am

சாருகேசி

சென்ற வாரம் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்திருந்த கணிதப் பேராசிரியர் அல்லாடி கிருஷ்ணசாமி, தம் இல்லத்தில் நாடகத்திலும், குறும்படங்களிலும், திரைப்படங்களிலும் ராமானுஜன் வாழ்க்கை எந்த அளவுக்கு சரியாக வழங்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சுவையான சொற்பொழிவு நிகழ்த்தினார்.  (அதற்கு இரண்டு நாட்கள் முன்பு மெட்ராஸ் புக் கிளப்பில், கணிதத்தைப் பற்றியே பேசாமல், ராமானுஜனைப் பற்றிப் பேசி ஒரு பெரிய ரசிகர் வட்டத்தைச் சம்பாதித்துக் கொண்டார்)

 ஒரு நாடகத்தில், இந்திய இளைஞர் ஒருவரை ராமானுஜன் சந்தித்த பின், அவர் தம் இல்லத்துக்கு ராமானுஜனை அழைக்கிறார்.  உணவு பரிமாறும்போது மனைவியை அறிமுகப்படுத்துகிறார்.  அந்தப் பெண்மணிக்கு ராமானுஜன் மீது காதல் பிறந்துவிடுகிறது.   ஓர் இளம்பெண் ஒரு புத்திசாலி இளைஞன் மீது காதல் கொள்வது ஒன்றும் புதிதல்ல.  ஆனால் அவள் ராமானுஜனை மயக்கி, படுக்கைக்கே அழைத்துச் செல்வதாக நாடகத்தில் காண்பித்திருப்பது அபத்தம் என்று அடித்துச் சொல்கிறார் அல்லாடி.  இந்தக் காட்சி வந்ததும் நாற்காலியிலிருந்து எழுந்து, நிறுத்தச் சொல்லிக் கூக்குரல் கொடுத்தாராம். ஆனால் நாடகாசிரியர் அதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், பின்னர் பிற இடங்களில் நாடகம் நடத்தும்போது இன்னும் மோசமாக அந்தச் சம்பவத்தைக் காண்பித்திருந்தாராம்.  ""ராமானுஜன் ஓர் உண்மையான இந்து பிராமணர். தன் மனைவி ஜானகி மீது அன்பை வைத்திருந்தவர். அப்படி இருக்கிறபோது, இன்னொரு பெண்ணை அவர் நேசித்திருப்பார் என்பது ஏற்க முடியாத காட்சி'' என்றார் அல்லாடி.

 இன்னொரு முறை நாடகம் நடக்கும்போது, பேராசிரியர் நண்பர் ""நாடகத்துக்குப் போகலாமா, கிருஷ்ணா?'' என்று கேட்கிறார்.  அரங்கம் முழுக்க நிரம்பிவிட்ட நிலையில், ""நமக்கு எங்கே டிக்கட் கிடைக்கப்போகிறது?'' என்று அங்கலாய்க்கிறார் அல்லாடி கிருஷ்ணசாமி.  ஆனால் எதற்கும் முயன்று பார்க்கலாமே என்று தியேட்டருக்கு போன் செய்து பார்த்த போது, சரியாக இரண்டே இரண்டு நாற்காலிகள் இருக்கின்றன. வாருங்கள் என்று அங்கிருந்து பதில் கிடைத்ததும், வியப்புடன் இருவரும் தியேட்டருக்கு விரைகிறார்கள்.  கடைசி நிமிடத்தில் இருவர் கான்சல் செய்த டிக்கட் காரணமாக இவர்களுக்குக் கிடைத்தது.  ஆனால் அல்லாடி, அப்படி நாங்கள் அந்த நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஒருவேளை நாமகிரித் தாயார் நினைத்திருக்கலாம் என்று சொன்னபோது ஆமோதிப்பான கைதட்டல் எழுந்தது. 

சரி, எந்த அளவுக்கு நாமகிரித்தாயார் ராமானுஜனுக்குக் கணித முடிவுகளை எடுத்துச் சொல்வதில் உதவினார்?  உண்மையாகவே அவருடைய கனவில் வந்து கணிதப் புதிர்களைச் சொன்னாரா? 

அவருடைய நண்பர் பேராசிரியர் ஹார்டி இறை நம்பிக்கை இல்லாதவர்.  எனவே அவர் இதை ஒப்புக்கொள்ளவில்லை.  ""ஆனால் அப்படி நடந்ததா? இல்லையா? என்று இப்போது சொல்வதும் கடினம்.  ஆனால் ராமானுஜன் கடல் கடந்து இங்கிலாந்து செல்வதற்கு முதலில் அவர் தாயார் சம்மதிக்கவில்லை என்றாலும், பின்னர் அவர் கனவில் நாமகிரித்தாயார் தோன்றி, ஒப்புதல் அளிக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்'' என்றார் அல்லாடி.

ராமானுஜன் தற்கொலை முயற்சி மேற்கொள்ளும்போது, தப்பித்து, லண்டன் போலீஸ் கையில் சிக்கிவிடுகிறார்.  தாம் தம்மை அறியாமல் மாமிசம் சாப்பிட்டுவிட்டதால், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவர் போலீசிடம் சொல்கிறார். இது ஒருபுறம் இருக்கட்டும்.  ""தாம் நோய்வாய்ப்பட்டு இருப்பதால், தம்மால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு வைத்தியச் செலவு வைக்கக் கூடாது என்றும் அவர் நினைத்திருக்கலாம்'' என்கிறார் அல்லாடி.

Story image

 ஆனால் போலீஸ் அவரை விடுவதாயில்லை.  விஷயத்தை அறிந்த பேராசிரியர் ஹார்டி, உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, ""அவர் ஃபெலோ ஆஃப் ராயல் சொசைடி. அவரை நீங்கள் விடுவித்தாக வேண்டும்'' என்று சொல்ல, போலீஸ்காரர் அவரை விடுவித்துவிடுகிறார்.  ""ஆனால் அப்போது அவர் ராயல் சொசைடியில் உறுப்பினரே அல்ல.  இனிமேல்தான் ஆகப் போகிறார்.  ஆனால் அப்படிச் சொன்னால்தான் லண்டன் போலீஸ் அவரை வெளியேவிடும் என்பதால் அப்படி ஒரு பொய் சொல்ல வேண்டியதாகிவிட்டது என்று ஹார்டி குறிப்பிட்டது உண்மைதான்'' என்றார் அல்லாடி.

 சென்ற ஆண்டு வெளி வந்த ராமானுஜன் தமிழ்ப்படத்தைத் தாம் பார்க்கவில்லை என்பதால், அதைப் பற்றிக் கருத்துக் கூற தம்மால் இயலாது என்று சொன்னார் அல்லாடி.  ஆனால் சமீபத்தில் ராபர்ட் கனிகல் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து அதே தலைப்பில் எடுக்கப்பட்ட "த மேன் ஹூ நியூ இன்பினிடி' திரைப்படம் பிரமாதமாக இருக்கிறது என்றும், ஒரு சில சாதாரணத் தவறுகளே இருக்கின்றது என்றும் தெரிவித்தார்.  ராமானுஜனாக நடித்த தேவ் பட்டேல் அவரைப் போல் இல்லை என்றாலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.  ஹார்டியாக நடித்திருப்பவர் பார்க்கவும் அவர் மாதிரியே இருப்பதாகவும், மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகவும் சொன்னார். அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றார் அல்லாடி கிருஷ்ணசாமி.  திரைப்படத்தின் ஸிடி பிரதியை வைத்துக்கொண்டு கும்பகோணத்தில் பார்த்ததாகச் சொன்னார்.  ராமானுஜனின் மனைவி ஜானகியைக் காண்பிக்கவில்லை.  ஏனென்றால் அப்போது நடந்தது, பால்ய விவாகம்.  அதை மேற்கத்திய ரசிகர்கள் புரிந்து கொள்வது கடினம் என்பதால், தவிர்த்து விட்டார்களாம். ""ராமானுஜன் மனைவி ஜானகிக்கு எழுதும் கடிதங்களை மறைத்து வைத்துவிடும் மாமியார் கோமளத்தம்மாளாக நடித்திருப்பவரும் அருமையாக நடித்திருக்கிறார்''என்றார்.

ஓர் அமெரிக்க கணிதப் பேராசிரியர், ராமானுஜன் இளம் வயதில் மறையாமல் இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருந்தாலும், அவர் இப்போது சாதித்திருப்பதை விட ஒன்றும் அபூர்வமான கணித முடிவுகளைத் தந்திருக்க முடியாது என்று சொன்னதற்கு விளக்கம் தருகிற மாதிரி, ""அவர் சாதிக்க வேண்டியதை அந்த வயதிலேயே சாதித்துவிட்டார்.  இன்னும் அவர் கணிதப் புதிர்களை அவிழ்க்க பல பேராசிரியர்கள் பல கல்லூரிகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னொரு பேராசிரியரும் இளம் வயதில் நிறையப் பணி செய்துவிட்டு, அதிக நாள் வாழ்ந்திருந்தார். ஆனால் அவர் பின்னாளில் செய்தவை ஒன்றும் பிரமிப்பூட்டக் கூடியவையாக இருக்கவில்லை'' என்றார் அல்லாடி கிருஷ்ணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.