புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஒன்ஸ் மோர்

காலம் மாறலாம். கவலைகள் மாறலாம். கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கையே நிம்மதியைத் தரும்.

News image
Updated On :13 நவம்பர் 2016, 11:00 am

காலம் மாறலாம். கவலைகள் மாறலாம். கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கையே நிம்மதியைத் தரும். குறிக்கோள் இருந்தால் வெற்றி நிச்சயம். தந்தை சம்பாத்தியத்தை கைச்செலவு செய்யும் மகனுடைய சுதந்திரம், மகன் சம்பாத்தியத்தில் செலவு செய்யும் தந்தைக்கு இல்லை. சரியான நேரத்தில் தவறான முடிவு, தவறான நேரத்தில் சரியான முடிவு வெற்றியைக் கொடுக்காது. சரியான நேரத்தில் சரியான முடிவுதான் வெற்றியைக் கொடுக்கும். எண்ணம்தான் இளமை. வயது தீர்வு காட்டாது. வயதானாலும் இளமையை எண்ணித் துணிய வேண்டும். 90 வயது சாகக்கூடிய மூதாட்டி தலைமாட்டில் 50 புத்தகங்கள் - இளமைக்கால நினைவுகளைப் படிக்கிறவர்களைப் பார்த்திருக்கிறேன். இளமையாக இருக்கிறார்கள்.
உழைக்கத் துணிந்தவனுக்கு மலையும் மண்தான். சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டம். சரியாகச் செய்வதற்கும் சரி செய்வதற்கும் நிறைய வித்தியாசம். சரியாகச் செய்வது நிலைக்கும். சரி செய்வது நிலைக்காது. மன நிறைவுதான் மனதுக்கு நிம்மதி.
பிறந்தேன், வளர்ந்தேன், உண்டேன், உறங்கினேன் என்றில்லாமல் வாழ்ந்தேன், சாதித்தேன் என்று வாழ்ந்தவர்கள் சரித்திரம். முயற்சி தவறலாம். ஆனால் முயற்சிக்கத் தவறக் கூடாது. முயற்சியும் பயிற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றிதான். இசைமேதை திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வர இசைச் சக்ரவர்த்தி. தனக்கென ஒரு தனிப்பாதையை அமைத்து அவருடைய உள்மனம் சொல்கிறபடி ஒரு ராஜவாழ்க்கை வாழ்ந்தவர். அந்தக் காலத்தில், சட்டை போடாமல் நாதஸ்வரம் வாசித்த காலத்தில் ஜரிகை துப்பட்டா பட்டுச்சட்டை சகிதம் கச்சேரிக்குக் குறித்த நேரத்தில் தனி வண்டி வைத்துக் கொண்டு ராயலாக இருந்தார். முதல் வகுப்பில்தான் பயணிப்பார். HMV நிறுவனம் அவருக்குத் தங்கத்தால் ஆன ரிக்கார்டு கொடுத்து கௌரவித்தது.
ஒருமுறை திருவிழாவில் பல ராகங்கள் வாசித்துவிட்டு சீவாளியைச் சரி செய்யும்போது தோடி ராகம் வாசிக்க சரி செய்தார். அப்போது ஒருவர் "சபாஷ்' என்று குரல் கொடுக்க "யார் சபாஷ் போட்டது' என்று கேட்டார். "சபாஷ்' சொன்னவர் பெட்ராமாஸ் லைட் தூக்குபவர். அவர் உடனே "நான்தான்' என்றார். அதற்கு TNR "உனக்குத் தோடி தெரியுமா?' என்று கேட்டார். தெரியும். "அனுமதி அளித்தால் வாசிக்கிறேன்' என்றார் அவர். TNK, "எங்கே வாசி பார்க்கலாம்'' என்றவுடன் அவர் வாயில் சீட்டி அடிப்பதன் மூலம் அட்சரம் பிசகாமல் தோடி ராகத்தை ஆலாபனையுடன் அந்த பெட்ராமாஸ்காரர் வாசித்துக் காட்டினார்! TNR அதைக் கேட்டு மகிழ்ந்து பட்டு அங்கவஸ்திரம் அவருக்கு அளித்துக் கௌரவித்து "எப்படிக் கற்றுக் கொண்டாய்?' என்று கேட்க, "உங்கள் கச்சேரிக்கு லைட் தூக்கும்போது உன்னிப்பாய்க் கவனித்துக் கற்றுக் கொண்டேன்!'' என்றார்!
கண் இருப்பவன் பார்ப்பான். சிலர் மட்டுமே உன்னிப்பாய்க் கூர்ந்து கவனிப்பர். காது இருப்பவர் கேட்பார். சிலர் மட்டுமே ஊன்றிக் கேட்பார்கள். அவர்கள்தான் அதிபுத்திசாலி. உணர்வதிலும் உணர்த்துவதிலும்தான் இருக்கிறது வாழ்க்கை.

"உளிபடாத சிலைகள்' என்ற நூலில் ராம.வளத்தப்ப செட்டியார்.
******************
ஒரு பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான இரண்டு விஷயங்கள்... அன்பும், பாதுகாப்பும். இதன் அளவு, ஒருவருக்கு ஒருவர் வேறுபடலாம். பெண்கள் உணர்வுபூர்வமாக மட்டுமே ஆண்களிடம் இதை எதிர்பார்ப்பார்கள். ஆனால், அதிகமான ஆண்கள், ஒரு பாடிகார்டாகவே தங்களைப் பெண்களுக்குக் கொடுக்கிறார்கள். பெண்கள் எதிர்பார்ப்பது, திருடர்களிடம் இருந்தும், சண்டைக்காரர்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாக்கும் ஆணின் வலிமையை அல்ல. ஒரு பூவின் இதழ்கூட காயப்படுத்திவிடுமோ என்று பதறி, தங்கள் அன்பை அரணாக்கும் ஆண்களையே!
பெண்களுக்கானவை, கட்டளை வாக்கியங்கள் மட்டுமே என்பது இன்றும் பல குடும்பங்களின், குடும்பத் தலைவர்களின் நம்பிக்கை. அது பெண்களை உங்களுக்கு அடிபணிய வைக்கலாம். ஆனால், அப்படி அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும்போது, அவர்களின் அன்பைப் பெற இயலாது. எனவே, உத்தரவுகளைத் தவிருங்கள். "இதை அப்படிச் செய்தா நல்லாயிருக்கும்', "இதைத் தவிர்க்கலாமே' என்று பேசிப் பழகுங்கள்.
பெண்களைப் பட்டுப் புடவை, நகை என்று பெரிய பரிசுகளின் மூலம் ஆச்சர்யப்படுத்திவிடலாம் என்பது, மெய்யல்ல. அந்தப் பரிசுகளில் அவர்கள் மகிழ்வார்கள்தான். ஆனால், அதைவிட உங்களுக்குப் பிடித்த சப்பாத்தி, தக்காளி தொக்கு செய்து கொடுத்த நாளில் அதைக் குறிப்பிட்டு நீங்கள் அவர்களிடம் சொல்லும் "ஐ லவ் யூ' அவர்கள் மனதில் பீறிடச் செய்யும் மகிழ்ச்சியை, ஐந்து லட்ச ரூபாய் வைர நெக்லஸôலும் தர முடியாது. எனவே, உங்களின் அன்பே இந்த உலகத்தில் அவர்கள் கொண்டாடும் விலை மதிப்பற்ற பரிசு என்பதை உணருங்கள்!
"ஆல் இஸ் வெல்' என்ற நூலில் டாக்டர் அபிலாஷா.
தொகுப்பு: கேசி

கதிர்
13.11.2016
ஞாயிறு தினமணி இணைப்பு
இண்டர்நெட் முகவரி:
http://www.dinamani.com,
மெயில்: dinamanikadir@dinamani.com
தினமணி கதிருக்குப் படைப்புகள் அனுப்புவோர் தம்மிடம் பிரதி வைத்துக் கொள்ள வேண்டும். தபால் தலைகள் அனுப்ப வேண்டாம். திருப்பியனுப்ப இயலாது.
முகவரி : "எக்ஸ்பிரஸ் கார்டன்', 29, 2}வது பிரதான சாலை,
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை - 600 058.
Supplement to  Dinamani  RNI Reg. No. 3459/60

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.