ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்!

இன்னும் அழியாத நிறவெறி!

உலகில் செல்வ வளம் கொழிக்கும் நாடு என்றும், உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடு என்றும் அமெரிக்கா பலரால் புகழப்படுகிறது

Published On :

உலகில் செல்வ வளம் கொழிக்கும் நாடு என்றும், உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடு என்றும் அமெரிக்கா பலரால் புகழப்படுகிறது. அங்கே தனிமனிதர் சுதந்திரம் பெரிய அளவில் மதிக்கப்படுகிறது என்று இங்குள்ளவர்கள் பெருமையாகக் கூறுவதையும் நாம் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட அமெரிக்காவில்தான் நிறவெறித் தாக்குதல்களும் நடைபெறுகின்றன என்பது உண்மையாக இருக்கிறது. 
அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 6-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. அதில் செனட் சபைக்குப் போட்டியிடுகிறார், தமிழ்நாட்டில் பிறந்த சிவா அய்யாதுரை. அதனால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அவரைத் தாக்கியவர் ஒரு நிறவெறி பிடித்தவர் என்று சிவா அய்யாதுரை குற்றம் சாட்டியுள்ளார். 
நிறவெறி பிடித்தவர்களால் உடலளவில் தாக்குதலுக்கு உள்ளான சிவா அய்யாதுரை, இதற்கு முன்பு பலமுறை நிறவெறி பிடித்தவர்களால் மனதளவிலும் காயப்பட்டிருக்கிறார். 
இ - மெயிலைக் கண்டுபிடித்த தமிழரான சிவா அய்யாதுரை தமிழ்நாட்டில் பிறந்தவர். ராஜபாளையத்துக்கு அருகே உள்ள முகவூர் சிவா அய்யாதுரையின் தந்தையின் சொந்த ஊர். சிவா அய்யாதுரைக்கு 7 வயது இருக்கும்போதே அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரில் குடிபெயர்ந்துவிட்டார்கள். சிவா அய்யாதுரை படித்தது, வளர்ந்தது சிறப்பாக வாழ்வது எல்லாம் அமெரிக்காவில்தான். 
தனது 14-வது வயதிலேயே இ-மெயிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிவா அய்யாதுரைக்கு 1982-இல் இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர் இ - மெயிலைக் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறினார்கள். அப்போது அதற்கான காரணமாக அவர் கூறியது இந்தத் தாக்குதலிலும் தொடர்வதுதான் அவலம். 
"நான் இ - மெயிலைக் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்கு காரணம், 1. நான் ஓர் இந்தியன் 2. நான் புலம் பெயர்ந்தவன் 3. தமிழன் 4. கறுப்பு நிறத்தவன் 5. நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன். இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை'' என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் சிவா அய்யாதுரை.
செனட் சபை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடும் அவர், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் - டவுன்ஹால் பகுதியில் உள்ள கிரேட் பேரிங்டனில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அவர் எதிர்த்துப் போட்டியிடுவது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எலிஸபெத் வாரென் என்ற பெண்மணியை. ஏற்கெனவே அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் எலிஸபெத் வாரென். வலுவான அவரை எதிர்த்துப் போட்டியிடும் சிவா அய்யாதுரையின் வலிமையோ அவருடைய அச்சமில்லாத வெளிப்படையான விமர்சனங்களில்தான் இருக்கிறது என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு விஞ்ஞானியாகவும், தொழில்முனைவோராகவும் உள்ள சிவா அய்யாதுரை, தற்போது அமெரிக்க அரசிலும் பங்கு பெற விரும்புவது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதன் விளைவே இந்தத் தாக்குதல். 
"நாம் போதுமான அளவுக்கு பொறியாளர்களை உருவாக்கவில்லை. நமது தேவையை ஈடு செய்யும் அளவுக்கு டாக்டர்களை உருவாக்கவில்லை. ஆனால் இதற்கு மாறாக, எலிஸபெத் வாரென் போன்ற மோசமான நபர்களையே உருவாக்கியிருக்கிறோம்'' என்று சிவா அய்யாதுரைப் பேசிக் கொண்டிருக்கும்போது தாக்குதலை நடத்திய நபர் அவரை நோக்கி வந்திருக்கிறார். அவரை நோக்கி வந்த நபர் அணிந்திருந்த டி - ஷர்ட்டில் எதிர் அணியைச் சேர்ந்த எலிஸபெத் வாரெனின் ஆதரவாளர் என்பது அச்சிடப்பட்டிருக்கிறது. அவர் சிவா அய்யாதுரையின் பிரசாரத்தைத் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான வசை மாரியைப் பொழிந்து தள்ளியிருக்கிறார். ஆனால் அவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் சிவா அய்யாதுரை. அந்த நபர் உடனே சிவா அய்யாதுரையின் கையில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவரைத் தாக்கியிருக்கிறார். சிவா அய்யாதுரையின் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருக்கிறது. அதற்குள் சிவா அய்யாதுரையின் ஆதரவாளர்கள் தாக்கிய நபரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தாக்கிய நபரின் பெயர் சோலாவய். வயது 74. 
தாக்குதலுக்குக் காரணம் நிறவெறிதான் என்று தனது முகநூல், ட்விட்டர் பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார் சிவா அய்யாதுரை.
- ந.ஜீவா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.