காந்தி தரிசனம்
காரைக்குடியில் எனது சிறிய தாயார் உமையாள் ஆச்சி அவர்கள் வீட்டில் தங்கிப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 10 இருக்கலாம்.
எனது சிறிய தாயார் அவர்கள், தேசபக்தர் திரு. சா. கணேசன் அவர்களின் சிறிய தகப்பனார் அவர்களின் மனைவி ஆவார். அதனால் அவர்கள் எல்லாரும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.
அந்த வீடு எப்போதும் "ஜே ஜே' என்றிருக்கும். தேசத்தொண்டர்கள் வருவதும் போவதும் திரு. சா. கணேசனைக் கண்டு பேசுவதுமாக இருப்பார்கள்.
எப்போதும் என் காதில் "காங்கிரஸ்' என்றும் "காந்திஜி' என்றும் கேட்டுக்கொண்டேயிருக்கும். என் கண்கள் தேச பக்தர்களையும், கொடியையும், கதரையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டேயிருக்கும்.
என்னையறியாமலே நான் ஒரு காந்தி பக்தனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் மாறிக் கொண்டே வந்தேன்.
இந்த நிலையில் மகாத்மா காந்தி காரைக்குடிக்கு வருவதாக ஒரே பரபரப்பாக இருந்தது.
என் சிறிய தாயார் வீட்டின் முன் ஒரு திறந்த (டாப் இல்லாத) கார் ஒன்று அலங்காரம் செய்யப்பட்டு நின்றது. அதில்தான் மகாத்மாவை வைத்து ஊர்வலம் நடத்தப் போவதாகச் சொன்னார்கள்.
எனக்கு ஒரே துடிப்பு. காந்திஜியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம்.
என் சிறிய தாயார் பல முறை சாப்பிடக் கூப்பிட்டும் நான் போகவில்லை. வைத்த கண் வாங்காமல் காரையே பார்த்துக் கொண்டு நின்றேன். "ஜே' கோஷம் காதைப் பிளந்தது; எங்கும் பரபரப்பு.
காந்தி மகாத்மா வந்துவிட்டார். காரிலும் ஏறி உட்கார்ந்து விட்டார். எனக்கோ ஒரே பதட்டம். நெருக்கியடித்து காரின் பின்பக்கம் சென்று விட்டேன்.
காந்திஜியின் முகம் தெரியவில்லை. முதுகு மட்டும் தெரிந்தது. சடக்கென்று காரின் பின்புறமுள்ள "காரியரில்' தாவி ஏறி காந்திஜியின் முதுகைத் தொட்டேன். அவர் திரும்பிப் பார்த்து சிரித்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் நான் ஏதோ பெரிய குற்றம் செய்து விட்டதுபோல் நினைத்து என்மீது பாய்ந்து என்னைப் பிடித்துத் தூக்கினார்கள்.
காந்தியடிகள், அவர்களை அடக்கிவிட்டு என்னை தன் அருகில் வரும்படி அழைத்தார். நான் பயந்து கொண்டே அவரிடம் போனேன். அவர் ஒரு மோகனச் சிரிப்புச் சிரித்துவிட்டு என்னிடம் ஒரு ஆப்பிளைக் கொடுத்து கன்னத்தில் செல்லமாகத் தட்டினார்.
பிறகு மாலை போட வந்த கூட்டம் என்னை நெருக்கிப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.
ஊர்வலம் புறப்பட்டுப் போயிற்று. நானும் "காந்திஜிக்கு "ஜே ஜே' என்று கத்திக்கொண்டு பின்னே சென்றேன்.
ஊர்வலத்தில் போகும்போதே அந்த "காந்தி ஆப்பிளை' சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டேன்.
அந்த ஆப்பிள் என் ரத்தத்துடன் கலந்ததோ இல்லையோ "காந்தி நாமம்' என் ரத்தத்துடன் அன்றே கலந்துவிட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை நான் காந்தியடிகளைப் பின்பற்றி வருகிறேன். உண்ணும்போதும், உறங்கும் போதும்கூட காந்திஜியின் நினைப்பு என்னை விட்டு அகலுவதில்லை.
பகத்சிங் பாட்ஜ்
"காந்தி' என்றும் காங்கிரஸ் என்றும் சொல்லிக் கொண்டு படிக்காமல் திரு.சா.கணேசன் அவர்களையே சுற்றித் திரிந்த என்னை என் தாய் மாமன் தம்முடன் மலேயாவிற்குக் கூட்டிச் சென்றார்கள். அவர்களுக்கு மலேயாவில் டெலுக்கான்சன் என்ற ஊரில் வட்டிக்கடை இருந்தது. அந்த ஊரிலிருந்த ஆங்கிலோ சைனீஸ் ஸ்கூலில் என்னைப் படிக்க வைத்தார்கள். நான்கு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் படித்தேன்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் நிறைய சீன மாணவர்கள் படித்தார்கள். அச்சமயம் ஜப்பான் நாடு சீனா மீது அக்கிரமமாகப் படையெடுத்தது. ஜப்பானை எதிர்த்து சீன மாணவர்கள் எல்லாரும் ஊர்வலம் நடத்தினார்கள்.
என் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கிளர்ச்சி எண்ணம் வீறிட்டெழுந்தது. நானும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். ஜப்பான் சாமான்களையெல்லாம் தெருவில் போட்டுக் கொளுத்தினோம். கடைகளுக்குள் புகுந்து ஜப்பான் துணிமணிகளை எல்லாம் எடுத்துத் தெருவில் எறிந்தோம்.
போலீஸ் எங்களை அடித்து வளைத்துப் பிடித்தது. கூட்டத்தில் நானும் போலீஸ் மத்தியில் அகப்பட்டுக் கொண்டேன்.
மலேயாவில் அப்போது நிறைய பஞ்சாபி சீக்கியர்கள் போலீஸ்காரர்களாக இருந்தார்கள். அதிகாரிகள் மட்டும் ஆங்கிலேயர்கள்தான். ஒரு சீக்கியப் போலீஸ்காரர், சீன மாணவர்களுக்கு மத்தியில் ஓர் இந்திய மாணவனான நான் நிற்பதைக் கவனித்துவிட்டார்.
மாணவர்களை போலீஸ் வேனில் ஏற்றினார்கள். என்னைக் கவனித்த சீக்கிய போலீஸ்காரர் ஒவ்வொரு மாணவராக போலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார். நான் வேன் அருகில் வந்ததும் அதிகாரிக்குத் தெரியாமல் சடக்கென்று என்னை வெளியே இழுத்து வேறு பக்கம் தள்ளிவிட்டார்.
நான் வெகுதூரம் போய் விழுந்தேன். அதனால் நான் போலீசாரிடமிருந்து தப்பி விட்டேன். ஆனால் என் தாய் மாமனிடம் தப்ப முடியவில்லை. போலீஸ் அடியைவிட பலமான அடி அன்று கிடைத்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அன்று மாலை மேற்படி சீக்கிய போலீஸ்காரர் என்னைத் தேடி வந்தார். எனக்கு ஒரே திகிலாக இருந்தது.
அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போய் ஒரு டீ கடையில் டீ வாங்கிக் கொடுத்து "பகத்சிங்' படம் போட்ட பாட்ஜ் ஒன்றை என் சட்டையில் மாட்டிவிட்டு பகத்சிங் கின் வீரம் தீரம் தியாகம் இவற்றைப் பற்றி எனக்குச் சொல்லி நானும் பகச்சிங் போல இந்திய நாட்டின் விடுதலைக்குப் பாடுபட வேண்டும் என்று கூறி விடை பெற்றுக் கொண்டு சென்றார்.
அன்றிலிருந்து பகத்சிங் போல புரட்சி வீரனாக வேண்டுமென்ற எண்ணம் மனதில் புயலடிக்க ஆரம்பித்தது. சிறு வயதில் நெஞ்சில் ஏற்பட்ட அந்த வேகம்தான் 1942 இல் பெரும்புயலாக மாறி தேவகோட்டை திருவாடானை பகுதிகளில் புரட்சியாக வெடித்தது.
பாட்டியின் சாபம்
நான்கு ஆண்டுகள் டெலுக்கான்சனில் (மலேசியா) படித்துவிட்டு, பிறகு என் சொந்த ஊருக்கு - சிறுவயலுக்கு - வந்த சேர்ந்தேன். என்னை தேவகோட்டைக்கு சுவீகாரம் விடுவதென்று என் பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது.
இந்த முடிவு என் பாட்டியாரை ( என் தந்தையைப் பெற்றவர்) பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் என் தந்தையைப் பார்த்து ஆவேசமாக, ""டேய் நாச்சியப்பா, நம்ம குடும்பத்திலிருந்து நான் கண்போல காத்து வளர்த்த பிள்ளையையா சுவீகாரம் விடுறே, என் பேச்சைக் கேளுடா பிள்ளையை விடாதே. இல்லே மீறிவிட்டே உன் குடும்பத்துக்கு ஆண் வாரிசே இல்லாமல் போகும்'' என்று சாபம் கொடுத்துவிட்டு என்னை மட்டும் வாழ்த்தி, "நீ நல்லா இருப்பே... போயிட்டு வா'' என்று விக்கி விக்கி அழுது விடை கொடுத்தார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள். நான் பிறந்த வீட்டில் அதன் பிறகு ஆண் வாரிசு உண்டாகவில்லை.
பாட்டி சாபம் பலித்துத்தான் விட்டது.
ஆம். என் மூத்த சகோதரர் சுப்பையா செட்டியார் அவர்கள் காலமாகிவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு புதல்வி உண்டு. திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது. என் சகோதரருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை. என் அண்ணியாரும் காலஞ்சென்று விட்டார்கள்.
என் இரண்டாவது சகோதரர் திரு. அழகப்பன் திருமணமாகிச் சில நாட்களில் இறந்துபோனார். அவர் இறந்து சில நாட்களில் அவரது மனைவியும் இறந்து போனாள். என் தம்பி இராமநாதனுக்கு ஒரு புதல்வி பிறந்தாள். அத்துடன் அவனும் இறந்துபோனான்.
பாட்டியின் சாபம் பலித்ததென்று சொல்லாமல் இதற்கு வேறு என்ன காரணம் சொல்ல முடியும்?
நான்கு சகோதரர் பிறந்த வீட்டில் நான் சுவீகாரம் சென்றேன். மற்ற மூன்று சகோதரர்களுக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை.
சொன்னால் நம்பமாட்டீர்கள். அந்த வீட்டிற்கு ஆண் வாரிசு வேண்டுமென்று எனது பெரிய சகோதரர் திரு. சுப்பையா செட்டியார் அவர்களுக்கு மட்டும் இப்போது ஒரு பையனை சுவீகாரம் செய்திருக்கிறது.
(தொடரும்)
படம் உதவி: யோகா
1978 இல் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் "சொன்னால் நம்பமாட்டீர்கள்'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






