பரத்தும் அஸ்வினியும் பள்ளிக்கூடம் சென்று விட்ட பிறகு ஆளுக்கு ஒரு காப்பி டம்பளர்களுடன் நாற்காலியில் உட்கார்ந்த சுகுணா, சுந்தரம் இருவர்கள் மனங்களும் கவலையின் விளிம்பிற்குள் இருந்தன. பட்டு என்கின்ற பட்டம்மாள் மாமி காலமாகி இன்றோடு பதினெட்டு நாட்கள் ஆகி விட்டிருந்தன. சுந்தரத்தை வளர்த்துப் படிக்க வைத்து, அவனுக்கு வேலை கிடைக்க, சுகுணாவுடன் கல்யாணம் செய்து வைத்து, அவனுக்குப் பிறந்த பரத், அஸ்வினி இருவரையும் உடன் இருந்து வளர்த்து... அவர்கள் பெரிய வகுப்பு படிக்கும் பருவம் அடைந்த போது, இந்த உலகத்தை விட்டு மறைந்து விட்டாள் பட்டு மாமி. அந்த வீட்டில் தன் நினைவலைகளை நிறைத்து விட்டு பெரிய படமாக அந்த வீட்டு ஹாலில் வீற்றிருந்து தன் உடலைத் துறந்து வேறொரு உலகம் சென்று விட்டாள் பட்டு மாமி.
மாமியின் நினைவு சுந்தரம் மனது முழுக்க நிறைந்து இருந்தது. சுகுணா மனதிலும்தான். அன்பிற்குப் பாத்திரமானவர் மறையும் போது பாசம் சோகமாக மாறுவது இந்த உலகம் தோன்றிய நாள் முதலாய் இருக்கும் ஒரு விஷயம்தானே? யார்தான் இதற்கு விதிவிலக்கு. உண்மையான பாசம் இந்த சோகத்தை சந்திக்கத்தானே வேண்டும்?
சுகுணா மனதில் மற்றொரு கவலையும் ஆக்கிரமித்திருந்தது. மாமி மறைந்து விட, மாமியின் சொத்து... அந்த வீடு...அது இருந்த ஒன்றரை கிரவுண்ட் நிலம்...அது கையை விட்டுப் போய் விட்டதோ...
இருபது நாட்கள் முன்னால் நடந்தது அது. பட்டு மாமிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. திடீரென்று சுந்தரை அழைத்தாள். ""சுந்தர் இங்கே வா...'' மாமி அழைக்க, வந்து உட்கார்ந்தான் சுந்தர். ""என்ன விஷயம் மாமி. சொல்லுங்கோ'' சொன்னான். சுகுணாவும் என்ன என்பது போல் அங்கே வந்தாள். ""நீயும் உட்காரும்மா சுகுணா'' மாமி சொல்ல, உட்கார்ந்தாள்.
""முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும் சுந்தர். ஒரு உதவி பண்ணேன் எனக்கு. என்ன செய்வியா?'' கேட்டாள்.
""என்ன மாமி இது. ..நீங்க என்னை வளர்த்துப் படிக்க வைச்சு.. பெரிய ஆள் ஆக்கி... ... ஒரு உதவி செய்வியான்னு கேட்கறேளே. கட்டளை இடுங்கோ மாமி...நீங்க சொல்றதைச் செய்ய வேண்டியது என் கடமை ஆச்சே. என்ன விஷயம் சொல்லுங்கோ...'' சொன்னான்.
""சுந்தர். ஒண்ணும் இல்லைடா. எனக்கு வயசாயிடுத்து இல்லையோ. ரொம்ப முடியலை. இன்னும் கொஞ்ச நாள்தான் என் ஆயுசு போட்டிருக்குன்னு நினைக்கறேன்டா...''
""மாமி, என்ன மாமி இது ஏதோதோ பேசிண்டு. நீங்க நூறு வயசு இருப்பேள்...விஷயம் என்னன்னு சொல்லுங்கோ''
""இந்த வீட்டை உன் பெயருக்கு எழுதி வைக்கணும்டா. இங்க ஒரு ஆபீஸ் இருக்காமேடா. காமாட்சி சொன்னா. ஆல்மைட்டி அúஸாசியேட்ஸ்னு. நாளைக்கு அங்கே அழைச்சுட்டுப் போடா. உயில் எழுதணும்னா பணம் கட்டினா வேலையை முடிச்சுக் கொடுத்துடுவாளாம். அவா கிட்ட விஷயம் எல்லாம் சொல்லி என்ன பண்ணனும்னு கேட்டு உன் பெயருக்கு எழுதி வைச்சுடணும்டா...என்ன மறந்துடாதே...''
மாமி பேச, சுந்தர் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாய் இருந்தான். சுகுணாவும் எதுவும் சொல்லவில்லை.
""என்ன சுந்தர் ஏன்டா பதில் எதுவும் சொல்ல மாட்டேங்கறே. கட்டளை இடுங்கோ இப்பவே செஞ்சு முடிச்சுடறேன்னு சொல்லிட்டு, இப்ப என்னடா வாய் மூடிண்டு இருக்கே. என்னை அழைச்சுண்டு போக மாட்டியா?''
மாமியைப் பார்த்த சுந்தரின் கண்கள் கலங்கி இருந்தன. ""என்னடா ஆச்சு சுந்தர் ஏன்டா அழறே...'' அதிர்ச்சியில் கேட்டாள் மாமி.
""அப்பா அம்மாவை சின்ன வயசிலேயே இழந்துட்டேன், நான் பண்ணின என்ன பாவமோ. ஆனா புண்ணியமும் ரொம்பவே பண்ணியிருக்கேன் போல இருக்கு. நீங்க என்னை எடுத்து வளர்த்து இப்ப உங்க முன்னாடி ஒரு சந்தோஷமான குடும்பஸ்தனா வளர்ந்து நிற்கறேன். இந்த உதவிக்கே உங்களுக்கு நான் என்ன ப்ரதி உபகாரம் பண்ணுவேன்னு முழிச்சுண்டு இருக்கேன். நீங்க என்னடான்னா உங்க வீட்டை என் பெயருக்கு எழுதி வைக்கறேன்னு சொல்லிண்டு...வேண்டாம் மாமி...நான் ஏற்கெனவே உங்களுக்கு ஏழேழு ஜன்மத்துக்குக் கடமைப்பட்டிருக்கேன்.''
""டேய் வாயை மூடுடா. அம்மா பிள்ளைக்குச் செய்யறத்துக்கு ப்ரதி உபகாரம் பண்ணறானாம்...போடா படவா...நாளக்கு என்னை அந்த ஆபிஸýக்கு அழைச்சுண்டு போ. இந்த வீட்டு விவகாரம் எல்லாம் அந்த பெட்டியில இருக்கு. அதை ரெடியா எடுத்து வை. நாளைக்கு எடுத்துண்டு போகணும். என்ன... உளறிண்டு இருக்காதே...லூஸா நீ...'' சொல்லி விட்டு மாமி கண்களை மூடிக் கொள்ள, மாமி அமைதியாய் தூங்கட்டும் என அந்த அறையை விட்டு அடுத்த அறைக்குச் சென்றவன் மனதில் உணர்ச்சி வெள்ளம் பாயத் தொடங்கி இருந்தது.
ஆனால்...ஆனால் அடுத்த நாள் காலை சுமார் எட்டு மணி இருக்கும். தோட்டதில் மாமி மிளகாய் செடியில் மிளகாய் பறித்துக் கொண்டிருந்த போது.. ""சுந்தர்...சுகுணா'' என்று கத்திக் கொண்டு மாமி அப்படியே தரையில் சாய...வாயில் ரத்தம் கக்கியிருந்தது.
அலறிக் கொண்டு சுந்தரும் சுகுணாவும் ஓடி வந்து மாமியை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, பரிசோதித்த மருத்தவர் இரண்டு நாள் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து விட்டுச் சொன்னது ""சார், மாமிக்கு மருந்தெல்லாம் உடம்பில பிடிக்காது. முயற்சி பண்ணினோம். ப்ரயோசனம் இல்லை. இனிமே ட்ரீட்மெண்ட் எல்லாம் வேண்டாம். உங்க மாமிக்கு ரொம்ப வயசாயிடுச்சு. சும்மா ட்ரீட்மெண்ட் அது இதுன்னு பண்ணி மாமி உடம்பையும் ட்ரபிள் பண்ண வேண்டாம். அவங்க நாட்கள் நெருங்கிடுச்சு. இன்னும் சில நாட்கள்தான் இருப்பாங்க. பேசாம வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடுங்க...''
""டாக்டர், டாக்டர் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை...'' ஆரம்பித்த சுந்தரைக் கட்டிக் கொண்டு டாக்டர் சொன்னது ""சார்... ப்ளீஸ் மாமி மேல நீங்க வைச்சிருக்கற பாசம் எனக்குப் புரியறது. ஆனா... ஷீ ஈஸ் ஸிங்கிங். ப்ளீஸ் அந்த ஆத்மாவை அமைதியா இருக்க விடுங்க. அமைதியா இறக்க விடுங்க... உங்க பாசமான மாமியை.. மாமியோட வயசான உடம்பை போட்டு படுத்த வேண்டாம் சார். வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடுங்க''
வீட்டுக்கு வந்து மாமியை படுக்கையில் படுக்க வைக்க மாமி அப்படியே அசையாமல் கிடந்தாள். நிமிடங்கள் நகர்ந்தன. மாமியின் நாடி மட்டும் துடித்துக் கொண்டிருக்க, மாமி மட்டும் படுக்க வைத்த இடத்தை விட்டு ஒரு மில்லி மீட்டர் கூட அசையாமல் அப்படியே கிடந்தாள். மாமியின் அருகில் சுந்தர் சோகமாக உட்கார்ந்திருந்தான். சுகுணா சோகமே உருவானாள். மாமியின் இந்த நிலை...அப்புறம் அந்த எழுதாமல் போன.. மாமி சொல்லிக் கொண்டிருந்த அந்த முக்கியமான... உயில்...
அதே நிலையில் ஒரு நாள் பொழுது ஓடி விட்டிருந்த நிலையில்தான். ...வீட்டு வாசலில் தாடியுடன்...கலைந்த தலையுடன் அவன் வந்தான்.. . ""சார்...'' குரல் கொடுக்க, வாசலுக்கு வந்தான் சுந்தர்.
""நீங்க ?'' கேட்டான்.
""பட்டம்மாள் மாமி வீடு?'' கேட்டான் வந்தவன்.
""இதுதான். நீங்க யாரு?''
""நான் உடனே மாமியைப் பார்க்கணும்...'' சுந்தரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவன் வீட்டிற்குள் ஓடி மாமியைத் தேட, மாமி கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து தான் கொண்டு வந்திருந்த பையை அப்படியே கீழே வைத்து விட்டு கட்டிலில் அருகில் சென்று அமர்ந்து கொண்டவன் அழைத்தான்: ""அம்மா மூர்த்தி வந்திருக்கேன். எழுந்திரும்மா. நான் மூர்த்தி வந்திருக்கேன்...''
""நீங்க... மாமி... என்ன சொல்றது கிட்டத்தட்ட கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்ல...'' அழ ஆரம்பித்தான் சுந்தர்.
""ஐயோ என்ன சொல்றேள். அம்மா... அம்மா... நான் உன் மூர்த்தி வந்திருக்கேம்மா. கண்ணைத் திறம்மா. அம்மா நான் உன் மூர்த்திம்மா''
அப்பொழுதான் நடந்து அந்த ஆச்சரியம். படக்கென்று கண்களைத் திறந்தாள் மாமி...வந்தவனைப் பார்த்தாள். ""மூர்த்தி...என் கண்ணா எங்கடா போனே என்னை விட்டு இவ்வளவு வருஷமா...என் கண்ணா. என்னடா கோலம் இது. ஏன்டா என்னை விட்டுட்டுப் போனே. அம்மாவை விட்டு ஓட எப்படிடா மனசு வந்தது...என்னடா இது...'' பேசிக் கொண்டே ஒரு வேகத்தில் எப்படித்தான் எழுந்து உட்கார்ந்தாளோ பட்டம்மாள் மாமி.
""அம்மா அம்மா உனக்கு என்ன ஆச்சும்மா. ஏதோ சொன்னாளே...என்ன உடம்பும்மா.. என்னை மன்னிச்சுடும்மா. ஏதோ என் தலையெழுத்து விட்டை விட்டு ஓடிட்டேன். இனிமே உன் கூடத்தான் இருப்பேன். ..உன் கையால சாப்பிட்டு ரொம்ப வருஷம் ஆச்சும்மா. உன் கையால சாப்பிடணும்மா. .'' அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதான் சுந்தர்.
சுந்தர் ஆச்சரிய அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்க, சுகுணா அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.
""சாரி மூர்த்தி... சின்ன வயசுல பார்த்தது. நீ தாடியோட இருந்ததுனால அடையாளம் தெரியலை. ரொம்பவே நிம்மதியா இருக்குப்பா நீ திரும்பி வந்துட்டது. மாமி பாரேன், டாக்டரே கைவிரிச்சுட்டார். உன் குரலைக் கேட்ட உடனே எப்படி விருட்டென்று எழுந்துட்டா பாரேன். அடேயப்பா புத்திர பாசத்தோட சக்தியைப் பாரேன். பட்டம்மாள் மாமி உட்கார்ந்து கொண்டு வார்த்துப் போட்ட தோசைகளைச் சாப்பிட்டவாறே சொன்னான் சுந்தர்.
""அம்மா நீ தோசை வார்த்துப் போட பத்துப் பன்னிரண்டுன்னு சாப்பிட்ட அந்த நாளெல்லாம்... தப்புப் பண்ணிட்டேம்மா... அப்பாவும் இறந்து போயிட, உன்னை விட்டு ஓடிப் போன பாவிம்மா நான்...'' அழுதான் மூர்த்தி
""அழாதே மூர்த்தி... எனக்கும் அழுகை வர்றது. என்னிக்காவது ஒருநாள் நீ திரும்பி வருவேன்னு நினைச்சுண்டு இருந்தேன். வருஷங்கள் ஆக அந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு கடைசியில நீ திரும்பி வரவே மாட்டேன்னு தோண ஆரம்பிச்சுடுத்துடா கண்ணா. ஆனா கடைசியில ஆண்டவன் என் நம்பிக்கையைப் பொய்யாக்கலை. உன்னை என் கிட்டே திரும்பி கொண்டு வந்து சேர்ந்துட்டார். எனக்கு இனிமே எந்தக் கவலையுமே இல்லை. நூறு வருஷம் வாழ்வேன்டா. என் குழந்தை திரும்பி வந்துட்டே... சாப்பிடுப்பா... சாப்பிடு. பத்து தோசை என்ன, இருபது தோசை சாப்பிடு. அம்மா கையால சாப்பிடு...'' வயிறு முட்ட சாப்பிட்டான் மூர்த்தி.
""அம்மா இந்தாம்மா என் கையால சம்பாதிச்சது பத்தாயிரம் ரூபாய் வைச்சுக்கோ. இந்தா நான் உனக்காக வாங்கின புடவை. இதை கட்டிக்கோம்மா...'' அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதான் மூர்த்தி.
அன்றைய தினம் முழுவதும் அவன், தான் வீட்டை விட்டு ஓடி பட்ட கஷ்டங்கள், இந்த வேலை அந்த வேலை என ஒரு ஜாண் வயிற்றுக்காக என்ன செய்தான் என்றெல்லாம் சொல்ல...கடிகாரம் அந்த நாளை விழுங்கத் தொடங்க...அந்த நாளுக்கு வயதாக, இரவுப் பொழுது வர, எல்லோரும் உறங்கினர். அந்த வீட்டில் அமைதி நிலவ ஆரம்பித்தது.
விடியற்காலை ஐந்து மணி இருக்கும். ""அம்மா அம்மா... என்ன ஆச்சு... சுந்தர் இங்கே வாயேன்...அம்மா சலனமே இல்லாம... ஓடி வாயேன்'' மூர்த்தியின் குரல் அந்த வீட்டை உலுக்கியது. படுக்கையை விட்டு எழுந்து ஓடி வந்தான் சுந்தர். மாமியின் அருகில் வந்து பார்க்க, அவனுக்கும் சந்தேகம் வர, மாமியின் சுவாசத்தையும், நாடியையும் பரிசோதித்துப் பார்க்க... ""மாமி...போயிட்டேளா...?'' கதறினான்.
""அம்மா...என்னை விட்டுட்டுப் போயிட்டியா. வீட்டை விட்டு ஓடினவன் வருஷங்கள் கழிச்சு திரும்பி வந்து ஒரே நாள்ல என்னை விட்டுட்டுப் போயிட்டியேம்மா...நான் என்ன பண்ணுவேன்...அம்மா மீதி நாட்கள்ல உன்னை சந்தோஷமா வாழ வைக்கணும்னு பார்த்தேனேம்மா. என்னை அனாதையா தவிக்க விட்டுட்டுப் போயிட்டியேம்மா...'' அம்மாவின் உடம்பு மீதி சாய்ந்து கொண்டு மூர்த்தி அழுத அழுகை அந்த தெருவையே உலுக்க, பட்டு மாமியின் உடல் உயிரற்றுக் கிடந்தது.
அம்மாவிற்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை முன்னின்று செய்தான் மூர்த்தி. இறந்த அன்றைக்கு ஆரம்பித்து பதிமூன்றாம் நாள் காரியம் வரை தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு செய்து முடித்தான். பட்டு மாமியின் படமும் நினைவுகளும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தன. ஆனால் அந்த வீடு...அந்த ஒன்றரை கிரவுண்ட் நிலம்.. அதுவும் பட்டு மாமியுடையதாய் இருந்ததுதானே? இப்பொழுது.. இப்பொழுது...
""என்னங்க...'' அழைத்தாள் சுகுணா காப்பியைப் பருகியவாறே. ""என்ன சுகுணா?'' கேட்டான் சோகமே உருவாக இருந்த சுந்தர்.
""என்னதுங்க இது. .நான் கேட்டது. இந்த வீடு...உயில். என்னங்க இது வருஷக் கணக்குல நாம மாமியைக் கண்ணும் கருத்துமா பார்த்துண்டோம். வீட்டை விட்டு ஓடிப் போனவர் தீடீர்னு வந்து நிற்பார்னு கனவுல கூட நினைக்கலை. இப்ப இந்த சொத்து அவருக்கா. என்னது இது?'' கேட்ட மனைவியை அமைதியாகப் பார்த்தான்.
""ஏன் சுகுணா. என்ன கேட்கறே. மாமி பெத்த பிள்ளை இல்லையா மூர்த்தி. சொந்தப் பிள்ளைக்கு சொத்து போய் சேர்றதுதானே தர்மம் நியாயம். அதுதான் நடக்கணும். மூர்த்திக்குத்தான் இந்த சொத்து சேரணும்'' சொன்னான்.
""அப்பா மாமிக்கு செஞ்ச நமக்கு...?''
"சுகுணா, இப்ப நான் இந்த நல்ல நிலைமையில இருக்கேன்னா அதுக்கு பட்டு மாமிதான் காரணம்னா முழுக்க முழுக்க பட்டு மாமிதான் காரணம். அவங்க என்னை வளர்த்து, என்னைப் படிக்க வைச்சு, வேலை வாங்கிக் கொடுத்து, கல்யாணம் பண்ணி வைச்சு, நம்ம குழந்தைகளையும் இந்த அளவுக்கு வளர்த்து...இதுக்கு நாம மாமிக்கு திரும்ப செஞ்சது ஒரு துரும்பு கூட இல்லை. மாமி இல்லேன்னா இன்னிக்கு நான் இல்லை. சும்மா இரு. மாமியோட பிள்ளைக்குத்தான் இந்த சொத்து. நமக்கு வந்தா அது பாவம். நமக்கு எந்த உரிமையும் இல்லை சுகுணா. புரிஞ்சுக்கோ...'' திட்டவட்டமாகச் சொன்ன கணவனைப் பார்த்தாள் சுகுணா.
""நான் என்னவோ மாமி மேல பாசமே இல்லாம இருந்த மாதிரி நினைச்சுக்காதீங்க. என் சொந்த மாமியார், என் சொந்த அம்மா மாதிரிதான் நினைச்சேன். ஆனா நியாயம்னு ஒண்ணு வேணும் இல்லையா...''
""அந்த நியாயப்படிதான் சொத்து சொந்த பிள்ளைக்குத்தான்''
""இல்லைங்க. நமக்குத்தான் சொத்து வரணும். இப்ப எங்கே போயிருக்கார் அவர். இப்ப கூட வக்கீலைப் பார்க்கத்தான் போயிருப்பார்னு நினைக்கறேன் மூர்த்தி. அம்மாவுக்கு ஒண்ணுமே செய்யாம திடுதிப்புன்னு வந்து நின்னு சொத்தை மட்டும் அபகரிச்சுண்டு போறது அநியாயம். ரொம்பவே அநியாயம். நான் விட மாட்டேன். அவர் வரட்டும். கேட்கறேன்'' சொல்லி விட்டு வெடுக்கென்று சமையல் அறையில் நுழைந்தாள் சுகுணா.
சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்து அமர்ந்த போது மூர்த்தி வர அவருடன் ஒருவர். யார் அது இருவருக்கும் தெரியவில்லை.
""வாங்க சார்... வாங்க உட்காருங்க. அம்மா சுகுணா, சாருக்கு காப்பி கொண்டு வாயேன்'' மூர்த்தி சொல்ல, வந்திருந்தவர் யாரென்று குழம்பிக் கொண்டே சுகுணா சமையலறைக்குச் சென்றாள். ஒரே நிமிடத்தில் காப்பி டம்ளர்களோடு ஓடி வந்தாள். வந்திருப்பது யாராக இருக்கும்?
சுகுணா காப்பிக் கோப்பைகளை ஒவ்வொருவர் கையிலும் கொடுக்க, வந்திருந்தவர் கையில் வீட்டு பத்திரம்...அப்படி என்றால் வந்திருப்பது வக்கீலோ... கணவரின் காதில் கிசுகிசுத்தான். சுந்தர் அவளை சும்மா இருக்கும்படி சொல்ல, பதற்றமாக வாயை மூடிக் கொண்டாள்.
""சொல்லுங்க மூர்த்தி சார். இப்ப என்ன பண்ணனும்?''
""சார்...இதுதான் இந்த வீட்டோடா, சொத்தோட டாக்குமெண்ட். அம்மா போயி... ..'' மேலே சொல்ல முடியாமல் அழ ஆரம்பித்தான் மூர்த்தி. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டான்.
""சொல்லுங்க மூர்த்தி சார்''
""வக்கீல் சார், நான் தான் அம்மாவோட ஒரே பையன். ஒரே வாரிசு...இந்த வீட்டுக்கு, இந்த சொத்துக்கு நான் தான் ஒரே வாரிசு...'' மூர்த்தி பேசப் பேச சுகுணாவின் மனதில் ஒரு பூகம்பமே தோன்ற ஆரம்பித்தது.
""வேறு யாராவது... அதாவது இந்த சொத்துக்கு வேற வாரிசு...உங்க கூடப் பிறந்தவங்க யாராவது...?''
""இல்லை சார்... நான் தான் அம்மாவுக்கு ஒரே பையன். ஒரே வாரிசு''
""அப்ப நீங்க சொன்னபடி...'' வக்கீல் ஆரம்பிக்க...சுகுணாவால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.
""வக்கீல் சார் நான் ஒண்ணு சொல்லணும். அதுக்கு முன்னாடி மூர்த்தி சார். நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.. .'' சொன்னாள்.
வெடுக்கென்று எழுந்தான் சுந்தர். சுகுணாவின் கையைப் பிடித்து இழுத்தான். ""சுகுணா உள்ளே போ உடனே'' அவன் கர்ஜிக்க, சுகுணா கோபமாக உள்ளே சென்று விட்டாள்.
""என்ன சுந்தர் இது. சுகுணா ஏதோ சொல்லணும்னு சொன்னா அவளை ஏன் உள்ளே போன்னு மிரட்டறே. என்னப்பா இது?'' கேட்டான்.
""அது ஒண்ணும் இல்லை மூர்த்தி. நீ விஷயத்தைக் கவனி''
சுகுணா எங்கே உள்ளே சென்றாள். கதவுக்கு அருகில் நின்று கொண்டு காதைத் தீட்டிக் கொண்டிருந்தாள். சுந்தர் அவளை வாயைத் திறக்கக் கூடாது என்று சைகையால் கட்டளை இட்டான்.
""வக்கீல் சார். அது வந்து என்ன கேட்டீங்க... நீங்க என்ன பண்ணனும்னுதானே? நான் ஏற்கெனவே கேட்டுக்கிட்டதுதான் சார். இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடணும்னா அது நானாக மட்டும்தான் இருப்பேன். நானே மனப்பூர்வமா சுந்தர் பேருக்கு என் அம்மா சொத்தை எழுதிக் கொடுக்க, விட்டுக் கொடுக்க சம்மதிக்கறேன்னு கையெழுத்துப் போட்டு எழுதித் தரேன். டாக்குமெண்ட் ரெடி பண்ணுங்க. ரெஜிஸ்டர் பண்ணிடுங்க... என்ன'' சொன்னவன் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
சுகுணா இதைக் கேட்டு அதிர்ந்தாள், இன்பத்தில்தான். ""மூர்த்தி என்னப்பா இது சொத்தை என் பேருக்கு எழுதச் சொல்றியா. உனக்கென்னா பயித்தியமா. நீதாம்பா மாமியோட ஒரே பையன். அவங்க ரத்தம். வாரிசு. உனக்குத்தான் உங்க அம்மாவோட சொத்து சேரணும். அதுதான் தர்மம். வக்கீல் சார் இவன் சொல்றதெல்லாம் கேட்காதிங்க. உளர்றான். நீங்க சொத்தை மூர்த்தி பெயருக்கு ரெஜிஸ்டர் பண்ண ஏற்பாடு பண்ணுங்க'' உணர்ச்சி வசத்தில் பேசினான் சுந்தர். வக்கீல் மூர்த்தியைப் பார்த்தார்.
""வக்கீல் சார். நான் சொன்னபடி செய்யுங்க. உடனே ஏற்பாடு பண்ணுங்க. என்ன?'' மூர்த்தி சொல்ல, மூர்த்தியை அணைத்துக் கொண்ட வக்கீலின் கண்களும் கலங்கியிருந்தன.
""சுந்தர், நான் உளர்றேனா...பெத்த அம்மாவை விட்டு, அதுவும் அப்பா இல்லாத நிலையிலேயே வீட்டை விட்டுட்டு ஓடி, அவங்களைத் தவிக்க விட்டுட்டேன். அவங்க மனசு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும். நல்லா படிச்சு, நல்ல வேலைக்குப் போய் சம்பாதிச்சு என் அம்மாவை ராணி மாதிரி வைச்சு காப்பாத்தியிருக்க வேண்டியவன், அவங்களைத் தவிக்க விட்டுட்டு ஓடிட்டேன். அவங்க கூட இருந்து, அவங்களை இவ்வளவு வருஷம் அன்பா கவனிச்சுண்டு, அம்மாவுக்குத் துணையா இருந்து... அம்மாவுக்கு சாப்பாடு போட்டு...அவங்க மேல அன்பு காட்டி...இவ்வளவெல்லாம் செஞ்ச உனக்கும் சுகுணாவுக்கும்தான் ஏன் உன் குழந்தைங்களுக்குதான் இந்த சொத்து சேரணும். நான் பெத்த அம்மாவுக்கு ஒண்ணுமே செய்யாத ஒரு பாவி சுந்தர்.
""அது மட்டும் இல்ல. கடைசியா ஒரே நாள் என் அம்மா கூட முழுசா வாழ்ந்துட்டேன். அவங்க கையால சாப்பிட்டுட்டேன். நான் வாங்கிண்டு வந்த தின்பண்டம் அம்மா சாப்பிட்டா. நான் வாங்கிக் கொடுத்த புடவையை ஆசையா கட்டிண்டா. பெத்த பிள்ளையை மறுபடியும் பார்த்துட்டேன்னு ரொம்ப சந்தோஷப் பட்டா. அது வரைக்கும் என் அம்மாவை சொந்த அம்மாவை விட மேலா பார்த்துண்டேளே... நீ சொன்னியே தர்மம்னு. அந்த தர்மப் படி உனக்குத்தான் சுந்தர் இந்த சொத்து சேரணும். அம்மா சுகுணா. ரொம்ப நன்றிம்மா. என் அம்மாவை இவ்வளவு வருஷம் கண்ணும் கருத்துமா பார்த்துண்டதுக்கு.
""நீங்க என் அம்மாவுக்குச் செஞ்ச, அதாவது எனக்குச் செஞ்ச இந்த பெரிய உதவிக்கு முன்னாடி, நான் விட்டுக் கொடுக்கற இந்த சொத்து.. வெறும் ஒரு துரும்புக்குக் கூட ஈடாகாது...நான் உங்களுக்கு ஜன்ம ஜன்மத்துக்குக் கடமைப் பட்டிருக்கேன்.
""வக்கீல் சார். வேகமா ஏற்பாடுகளைச் செய்யுங்க. நான் இந்த சொத்தை இவங்க கிட்ட ஒப்படைச்சுட்டு வந்த வழியே கிளம்பணும்...'' மூர்த்தி சொல்லிக் கொண்டிருக்க, அவனைக் கட்டிக் கொண்ட சுந்தரின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்து கொண்டிருந்து. தன்னால் மூர்த்தியை நிமிர்ந்து பார்க்கக் கூட முடியவில்லை என உணர்ந்தாள் சுகுணா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


