உதவும் முகநூல் கரங்கள்!

"முகநூல்  வெறும் பொழுதுபோக்கு தளம் அல்ல. மனிதத்தையும் காக்கும் தளம்... மனிதாபிமானத்தை வளர்க்கும், பரப்பும் தளம் என்பதை உலகத்திற்கு நிரூபிப்போம்...
உதவும் முகநூல் கரங்கள்!
Updated on
4 min read

"முகநூல்  வெறும் பொழுதுபோக்கு தளம் அல்ல. மனிதத்தையும் காக்கும் தளம்... மனிதாபிமானத்தை வளர்க்கும், பரப்பும் தளம் என்பதை உலகத்திற்கு நிரூபிப்போம்... பலருக்கு  எந்த  நிமிடத்திலும்  வாழ்க்கை மிகக் கடினமாக மாறலாம்... ஆனால்,  உதவி செய்வதற்கும்,  சோதனைகளை வெல்வதற்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. "பிறருக்கு உதவி செய்ய பணம் தேவையில்லை... மனம் இருந்தால் போதும்' என்று இயங்கி வரும் கரூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பத்து இளைஞர்கள் "இணைந்த கைகள்' என்ற அமைப்பின் மூலமாக உடனடியாக சிகிச்சை தேவைப்படும் நலிந்தவர்களுக்கு முகநூல் மூலமாக இதுவரை சுமார் பதினொரு லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி  மறுவாழ்வு அளித்துவருகிறார்கள். இந்த பத்து இளைஞர்களின் பின்னணியில்  இருப்பவர்கள்  மனிதம் உள்ள ஆயிரக்கணக்கான  முகநூல் ஆர்வலர்கள். 

"இணைந்த கைகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாதிக் அலி தனது அமைப்பை குறித்து விளக்குகிறார்: 

""இந்தப்   பொதுநல அமைப்பு தொடங்குவதற்கு  எனக்கு ஏற்பட்ட  சொந்த இழப்பும் ஒரு காரணம். பண வசதி இல்லாததால்  எனது தகப்பனாரை மாரடைப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. அப்பா இறந்தபோது எனக்கு நான்கு வயது. அவரது மரணத்தை நான் நேரில் பார்த்தேன். அதன் தாக்கம் என்னுள் இன்றைக்கும் இருக்கிறது. அதனால்  நலிந்தவர்களில்   உடல்நலம்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உணர்வு எனக்கு இயல்பாகவே ஏற்பட்டுவிட்டது.  2016  வரை  நான் வளைகுடா நாட்டில்  வேலை பார்த்து வந்தேன். சென்னை வெள்ளத்தின் போது  அங்கே  நண்பர்களிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை  உதவித்தொகை  திரட்டி   முன்னூறு போர்வைகளுடன் அனுப்பி வைத்தேன்.  சென்ற ஆண்டு  நிரந்தரமாக தமிழகம் திரும்பினேன். 

இங்கு  எனது அண்ணன்  நடத்தி வரும் சிறு நிறுவனத்தில் வேலை பார்த்த நடராஜன் என்பவரின் பேத்தி அக்ஷ்யாவுக்கு  இதயத்தில் துளை ஏற்பட்டிருப்பதால் கோளாறு. சுத்தமான  ரத்தத்துடன் அசுத்தமான  ரத்தமும் சேர்ந்து விடுவதால்  உடல் நீல நிறமாக மாறிக் கொண்டிருந்தது. அக்ஷ்யாவுக்கு அப்பா, அம்மா இருந்தாலும்   இதயக் கோளாறு சரி செய்யும்  அளவுக்கு பண வசதியில்லை. என்னாலும் எனது அண்ணியாலும்  சிறிய அளவில்தான் உதவ முடிந்தது. நினைத்தோம்.  உள்ளூர் மருத்துவர்கள்,  ""அறுவை சிகிச்சை செய்ய கால தாமதம் ஏற்பட்டுவிட்டது.

இனி சிரமம்'' என்றார்கள். முகநூலில் அக்ஷ்யாவின்  நிலைமையைப் பதிவு செய்தோம். உதவிகள் சிறிது சிறிதாக  வர ஆரம்பித்தன. அதை வைத்துக் கொண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அக்ஷ்யாவைக் காட்டினோம். அறுவை சிகிச்சைக்கு மூன்றரை   லட்சம் ஆகும் என்றார்கள். அப்போது கரூர்  மாவட்ட  ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ்  ஐஏஎஸ் எழுபதாயிரம் அரசு பணத்தை  நிதியாகத் தந்து உதவ... முக நூல் நண்பர்களும் கை கோர்க்க.. சுமார் நாலேகால் லட்சம் வரை  சேர்ந்தது. அக்ஷ்யாவுக்கும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக  நடந்தது.

ஆனால் இரண்டாவது அறுவை சிகிச்சை கொஞ்சம் இடைவெளி விட்டு செய்ய வேண்டும்  என்று கூறிவிட்டார்கள்.  ஓரடி எடுத்து வைக்கச் சிரமமப்பட அக்ஷ்யா ஓடியாடி விளையாடினாள். அக்ஷ்யாவிக்கு வயது பன்னிரண்டு. கேரள வெள்ளத்தின் காரணமாக  பேரிடர்கள்  கேரளத்தை  உலுக்க... அந்த காட்சிகளை  டிவியில்  கண்டு  பரிதவித்துப் போன  அக்ஷ்யா, கேரள வெள்ள நிவாரண நிதிக்காக  தனது   முதல் அறுவை சிகிச்சையில்  மிஞ்சிய பணத்தில் ஐந்தாயிரம்   எடுத்து  வழங்க... அக்ஷ்யா  குறித்த செய்திகள் தேசிய சானல்களில் வெளியானது. அக்ஷ்யா   தனது இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு  மேலும் பணம் வேண்டும் என்ற நிலையிலும்,  கேரள வெள்ள நிவாரண நிதிக்கு  தனது பங்கினைச் செய்த நெகிழ்ச்சியான சம்பவம், இந்தியாவின் சிறந்த  இருபத்திரண்டு  சிறப்பான மருத்துவ  மனைகளிலிருந்து "அக்ஷ்யாவின் இரண்டாவது இதய அறுவை சிகிச்சையை இலவசமாக செய்கிறோம்'  என்று முன்வந்தன. அப்பல்லோவும்  இப்போது  அந்த அறுவை சிகிச்சையை இலவசமாக  செய்து தர முன்வந்துள்ளது.  முதல் அறுவை சிகிச்சை அப்பல்லோவில் செய்திருப்பதால் இரண்டாவது சிகிச்சையும் அங்கேயே செய்யலாம்  என்று முடிவு செய்துள்ளோம்.அக்ஷ்யா குறித்த  குறும்படம் ஒன்றும் தயாராகியுள்ளது.

கிருத்திகா என்ற  ஐந்தாம் வகுப்பு மாணவிக்கும்   இதயத்தில்  துளையுள்ள கோளாறுதான். கிருத்திகா கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்தவர்.  நலிந்த குடும்பம்.  கிருத்திகாவின் பெற்றோர்  எங்கள் உதவியை நாட... கிருத்திகாவை "சேனை மெடிக்கல் மிஷன்  மருத்துவமனை'யில்  காண்பித்தோம்.  நான்கரை லட்சம் ரூபாய் செல்வாக்கும் என்றார்கள். முகநூலில்  வேண்டுகோள் விடுத்தோம்.  சுமார் ஐந்து லட்சம் வரை  சேர்ந்தது. கிருத்திகாவின்  அறுவை சிகிச்சையும்  முடிந்தது. அக்ஷ்யா மாதிரி  கிருத்திகாவுக்கும் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.  செலவு நான்கு லட்சம் வரை தேவை. இதில் மத்திய மாநில அரசு  இலவச நிதி உதவி ஒன்றரை  லட்சம் வரை கிடைக்கும். மீதமுள்ள இரண்டரை லட்சத்திற்கு மீண்டும் முகநூல் மூலமாக சேகரிக்க உள்ளோம். முகநூல் நண்பர்கள் கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

காஞ்சனா  அம்மாவை தற்செயலாக கடைத்தெருவில்  சந்தித்தோம்.   நோட்டீஸ்  வைத்துக் கொண்டு கடை கடையாக  பண உதவி கேட்டு கெஞ்சிக் கொண்டிருந்தார்.  அவருடைய மகன் விஜயகுமாருக்கு   மூளையில் கட்டி உள்ளதால், தினமும் பத்து தடவையாவது வலிப்பு வருமாம்.  அதனால் கீழே விழுந்து  தலையில் அடிபட்டு தலையில் காயங்களும்  ஏற்படுகின்றன.  காயங்களுக்கும் சேர்த்து  செலவு செய்ய வேண்டியுள்ளது. பண வசதி சிறிதும்  இல்லாத குடும்பம். முகநூல்  மூலம்  நிதி திரட்டி காஞ்சனா அம்மாவின் மகன் விஜயகுமாருக்கு அறுவை சிகிச்சை  திருச்சியில்  செய்தோம்.  இப்போது பூரண குணமடைந்து வலிப்பு  வராமல் நன்றாக இருக்கிறார்.

காங்கேயம் வெள்ளக்கோவில் ஜெ நகரை சார்ந்த பிரகாஷ் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து, கஷ்டப்படுகிறார்.  பிரகாஷை  நம்பித் தான் அந்த குடும்பமே இருக்கிறது. காங்கேயம், வெள்ளக்கோவில் நண்பர்களுடன் இணைந்து, முகநூல் நண்பர்களின் மூலமாக அவரையும், அவரின் குடும்பத்தையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பிரகாஷுக்கு  நான்காவது கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. அவருக்கு சிறுநீரகம் தானம் தரும் மறு தாயான பிரகாஷின் அக்காவிற்கும் நான்கு பரிசோதனைகள் நடந்து முடிந்திருக்கின்றன. இரண்டுபேரின் சிறுநீரகமும் ஒத்துப்போகிறது இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது வரை 90  ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்கிறது. ஐந்து லட்சம்  அரசு உதவி கிடைக்கும். இன்னும் 15 நாளில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம். மீதித்  தொகையை  நாங்கள்  இணைந்த  கைகள் மூலம்  திரட்ட வேண்டும். முகநூலை  நண்பர்களை மீண்டும் அணுகுவோம்.  மூன்று உயிர்களைக் காப்பாற்றி கொடுத்த இறைவன்  மற்றும்  முகநூல் நண்பர்கள்  இந்த குடும்பத்தையும் காப்பாற்றுவார்கள்  என நம்புகிறோம். 

உலகத்தில் யாரும் அனாதை இல்லை... இயலாமை நிலை யாருக்கும் வரும். நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே இணைந்த கைகளின் குறிக்கோள். உதவி செய்யுங்கள் என்று பல  அழைப்புகள் வருகின்றன. நாங்கள் எங்களால்   முடிந்த அளவு  உதவிகளைச்  செய்து வருகிறோம். இந்த அமைப்பில் ஜாதி, மதம்,  அரசியல்  வந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறோம். மோகன் குமார மங்கலம்,  தமிழக போக்குவரத்து அமைச்சர் விஜய பாஸ்கர் , கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற  உறுப்பினர்  கீதா, இப்போதைய கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோரும்  நிதி உதவிகள் செய்துள்ளனர். யாருக்கு உதவி வேண்டுமோ அவர்கள் பெயரில் வாங்கிக் கணக்கு  ஆரம்பித்து  பண உதவி செய்ய விரும்புபவர்கள் அந்த கணக்கில் செலுத்தலாம். வீதியில் ஆதரவற்று  வாழும் பெண்களை  அருகில் இருக்கும்  தொண்டு நிறுவனங்களில் சேர்த்துவிடுகிறோம். இந்த மானுட சேவையில்  என்னுடன்  இணந்து செயல்படுபவர்களில்  மிக முக்கியமானவர்கள்  காமிலா, சலீம், வளர்நிலவன், வினோத்குமார்,  திவ்யா ஈழ  மகள்,  கயல்விழி போன்றோர். வளர்நிலவன் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்.  சென்னையில் அக்ஷ்யா, கிருத்திகா அறுவை சிகிச்சைகள் நடந்தபோது  தேவையான  எல்லா உதவிகளையும் செய்தவர்.    

இரண்டு வயது ஹரிணி பாப்பா காணாமற் போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.  அவளுடைய பெற்றோருக்குத்  தொழில் பாசி மணி, ஊசிமணி  விற்பது. இந்த குழந்தையைக் கண்டு பிடித்துத் தர,  நம் முகநூல் நண்பர்களின் உதவியுடன்  "இணைந்த கைகள்' கரூர் களம் இறங்குகிறது. ஹரிணியைக் கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் தருவதாக  அறிவித்திருக்கிறோம். முகநூல் மூலமாக  எங்கள்  உறுப்பினர் அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளோம்.  தன்னார்வ  அமைப்புகள் நாடு முழுவதும் இயங்குகின்றன. அதனால் இந்திய மொழிகளில் எங்களது வேண்டுகோளை  மொழிபெயர்த்து   அந்த அமைப்புகளுக்கு அனுப்ப உள்ளோம்.  மகளை இழந்து வேதனையில் வாடும்  பெற்றோரை நேரில் கண்டு ஆறுதல் கூறி வந்திருக்கிறோம்''  என்கிறார் சாதிக் அலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com