/

திரைக் கதிர்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு "சைலன்ட்' என தலைப்பிட்டுள்ளனர்.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 7:29 am

• தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகும் படத்துக்கு "சைலன்ட்' என தலைப்பிட்டுள்ளனர். அதில் அனுஷ்கா நடிக்கிறார். வசனங்களே இல்லாத பேசும் படமாக இது உருவாகிறது. ஹேமந்த் மதுகர் இயக்குகிறார். கோணா வெங்கட் திரைக்கதை எழுதி தயாரிக்கிறார். தெலுங்கில் நடித்து வந்த அனுஷ்கா, 2006-ஆம் ஆண்டு "ரெண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் மாதவன் ஹீரோ. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

• ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "2.0'. அதில் ஒரு வீடியோவில் முதன் முதலாக ரஜினிகாந்த் இப்படத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர் பேசும் போது... "இயக்குநர் ஷங்கர் முப்பரிமாண தொழில்நுட்பத்தை மனதில் வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார். படத்தில் நான் தோன்றும் முதல் 3 டி காட்சியை பார்த்தபோது மெய்மறந்து போனேன். அது ஒரு பிரம்மாண்ட அனுபவம். ஷங்கரைப் பாராட்டுகிறேன். எந்த ஒரு 3-டி பிரம்மாண்ட ஹாலிவுட் படத்துக்கும் இந்தப் படம் சளைத்தது அல்ல. மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக ஆவலாக காத்திருக்கிறேன்'' என்று பேசியுள்ளார் ரஜினி. இந்நிலையில் தற்போது இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், 13 மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் டீஸரை விநாயகர் சதுர்த்தியன்று பார்க்கலாம். 

• அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் "விஸ்வாசம்'. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனி மாவட்டங்களின் பின்னணியில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாகப் படப்பிடிப்பு நடத்தினால் கூட்டம் சேர்ந்துவிடும் என்பதால், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகின்றன. வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடும் உத்வேகத்தில் படக்குழு பணியாற்றி வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில், நரைத்த தலைமுடி, மீசை, தாடியுடன் ஒரு அஜித், இளமைத் தோற்றத்தில் ஒரு அஜித் என இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, "விஸ்வாசம்' படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

• பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது "மிக மிக அவசரம்'. பெண் காவலர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் விதமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. பாரதிராஜா உள்ளிட்ட ஆளுமைகள் பலர் இப்படத்தைப் பார்த்து விட்டு, ஆதரவு குரல் எழுப்பியிருக்கிறார்கள். பிரியங்கா, சீமான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தயாரிப்பாளராக அறியப்பட்ட சுரேஷ் காமாட்சி இப்படத்தை எழுதி இயக்குகிறார். படம் குறித்து அவர் பேசும் போது, ""காலை முதல் மாலை வரை உச்சி வெயிலில் கால் கடுக்க நிற்கும் பெண் காவலர்களை பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் உறுத்தும். அவர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் பிரதிபலிக்கும் விதமாக இதை எழுதி முடித்தேன். படத்தின் ரஷ் பார்த்த நண்பர்கள் நன்றாக வந்திருப்பதாக பாராட்டுகிறார்கள். சில இடங்களில் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். காவல்துறை தொடர்பான பல பொது விவாதங்களை எழுப்புவதாக இந்தப் படம் இருக்கும்'' என்றார். படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். படத்துக்கு "யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. 

• சிம்பு, நயன்தாரா நடித்த, "இது நம்ம ஆளு' படத்தில் நடித்தவர் அதா சர்மா. தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கிறார். மும்பை சாலை பகுதி ஒன்றில் சென்றுகொண்டிருந்தவர்கள் சாலை ஓரத்தில் காய்கறி விற்றுக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டு ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்து மற்றவர்களும் யார் அது என்று கேட்டபடி கூடத் தொடங்கினர். பச்சை நிற ஜாக்கெட், கிரே கலர் சேலையில் இருந்தவர் வேறு யாருமல்ல நடிகை அதா சர்மாவேதான். ஹிந்தியில் நடித்து வரும் தோற்றத்துக்காக சந்தையில் காய்கறி விற்பது போல் ஒத்திகை பார்த்து வருவதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் அவரை அடையாளம் கண்டுகொண்டாலும் பலர் அவர் எதார்த்தமான காய்கறி விற்கும் பெண் என்று எண்ணித்தான் அவரிடம் விலை பேசி காய்கறி வாங்கிச் செல்கின்றனர். இதுவே அவரது கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாக படக் குழு கருதுகிறது. 
- ஜி.அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.