/

மரம் வடிவில் அணிவகுத்த மாணவிகள்!

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2019, 8:25 am

உலகம் முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை வளர்க்க வேண்டும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.

எனவே  தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், பள்ளி, கல்லூரிகள் மரக்கன்றுகளை நடுவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.   மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் கீழ், தமிழகம் எங்கும் கிராமப் பகுதிகளில் கண்மாய்க்கரை, நீர்நிலைகள் ஆகியவற்றில் மரக்கன்றுகளை நட்டு, முள்வேலி அமைத்து தண்ணீர் ஊற்றிப் பாதுகாத்து வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள மரங்களில் சுமார் 40 சதம் பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன என ஒரு தகவல் உண்டு. எனவே மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில்  மாணவிகள் 1000 பேர் இணைந்து, ஆகஸ்ட் 17 - ஆம் தேதி, மிகப்பெரிய மரம் போல உடலை வளைத்து நின்று உலக சாதனை புரிந்ததோடு, மரம் வளர்ப்பது குறித்து சமுதாய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.   மாணவிகளின் இந்தச் சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனத்தின் இயக்குநர் அரவிந்தன் மற்றும் அந்த நிறுவனத்தின் தமிழக நடுவர் கதிரவன் ஆகியோர் அங்கீகரித்து, நோபல் உலக சாதனை நிகழ்வாக, மாணவிகளின் சாதனையைப் பதிவு செய்து, பாராட்டி உலக சாதனைச் சான்றிதழை வழங்கினர். 

இதற்கான சான்றிதழை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம், கல்லூரித் தலைவர் திலகவதி ரவீந்திரனிடம் வழங்கினார்.

கல்லூரி முதல்வர் த.பழனீஸ்வரி, உடற்கல்வித்துறை இயக்குநர் சா.விஜயகுமாரி ஆகியோரிடம் இது குறித்துக்  கேட்டபோது, ""சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சிந்தித்தபோது, மரங்கள் குறித்து நினைவுக்கு வந்தது. மரங்கள் அழிக்கப்படுவதால், மீண்டும் மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.  எனவே மரங்களை வளர்க்கவும், அவற்றைப் பாதுகாக்கவும், மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அவர்கள் மேலும் பலருக்குத் தெரியப்படுத்துவார்கள் என முடிவு செய்தோம். இதையடுத்து மாணவிகளை மர வடிவத்தில் அமர வைத்தால் அது சாதனையாகுமா என நோபல்  உலக சாதனை நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் இதுவரை யாரும் இந்த நிகழ்வைச் செய்யவில்லை எனக் கூறினார்கள். தொடர்ந்து அனைத்து துறையிலிருந்தும் 1000 மாணவிகளைத் தேர்வு செய்தோம். பின்னர் பச்சை மற்றும் பிரவுன் வண்ணத்தில் டீ சர்ட் வாங்கி, மாணவிகளை அணியச் செய்து நான்கு முறை ஒத்திகை பார்த்தோம். அது சிறப்பாக இருக்கவே மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர் முன்னிலையில் இந்த நிகழ்வை நடத்த முடிவு செய்து, நிகழ்ச்சியை நடத்தினோம். 

அது நோபல் உலக சாதனை நிகழ்வாக இருந்ததால் பங்கேற்ற மாணவிகளும், மற்ற மாணவிகளும் சந்தோஷப்பட்டனர். மேலும் கல்லூரி மாணவிகளுக்கு தங்களது வீடுகளில் நட்டு வளர்க்க 1000 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினோம். இதுபோல பலரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, மழையும் பெய்யும். நாடும் நாமும் வளம் பெறுவோம்'' என்றார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.