மதிப்பு
குமார் சீக்கிரம் அகிலாவின் அலுவலகத்துக்கு வந்து விட்டான். வந்ததும் அவளுக்குப் போன் செய்த போது பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாகச் சொன்னாள். அவர்கள் இருவரும் கமர்ஷியல் ஸ்ட்ரீட் போவதாக இருந்தது.


குமார் சீக்கிரம் அகிலாவின் அலுவலகத்துக்கு வந்து விட்டான். வந்ததும் அவளுக்குப் போன் செய்த போது பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாகச் சொன்னாள். அவர்கள் இருவரும் கமர்ஷியல் ஸ்ட்ரீட் போவதாக இருந்தது. பன்னிரண்டு மணி வெயிலைமதிக்க மறுத்து மேகங்கள் வானில் சூழ்ந்திருக்க, காற்றில் குளிர் பரவி அதிகாலை ஆறுமணி போலக் காட்டிக் கொண்டிருந்தது. மதுரையில் இந்த நேரத்துக்கு ஏசி ரூம் கூட வாணலியில் உட்கார்ந்திருக்கும் வெறுப்பைத் தந்து விடும். குமார் பெங்களூர் வந்து ஒரு மாதமாகப் போகிறது. மதுரையுடன் பெங்களூர் சீதோஷ்ணத்தில் மட்டும்தானா வித்தியாசப்படுகிறது?
வந்த ஒரு மாதத்தில் இந்த ஊரின் விசாலமான சாலைகள், அவற்றிற்கு இருபுறமும் குடை பிடித்தாற் போன்ற பெரிய மரங்கள், வானளாவும் குடியிருப்புகள், ஒன்றுக்கொன்று சவால் விடும் அலுவலக அமைப்புகள், நிஜமாகவே ஏசி போட்டு நடத்தப்படும் தியேட்டர்கள், பசுமை சுரக்கும் பார்க்குகள், இளம் பெண்கள், இளம் பெண்கள், இளம் பெண்கள். மதுரை இந்த ஊருக்குப் பக்கத்தில் நிற்க முடியாது என்பது தான் உண்மை என்று குமார் நினைத்தான்.
இன்றுதான் முதல் முறையாக அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே போகிறார்கள். இதுவரை அவளுடனான தொடர்பு அவளது வீட்டில் அல்லது போனில் உரையாடல் என்றுதான் இருந்தது. அகிலா அவனுக்குத் தூரத்து உறவு. அவன் பெங்களூரில் வேலை கிடைத்துக் கிளம்பப் போகிறான் என்றதும் அம்மாவுக்கு முப்பது வருஷம் முன்பு வேலூரில் வீட்டு சாமான்களுடன் விட்டு விட்டு வந்த உறவும், ஜனமும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. அவளுடைய மைத்துனரின் சட்டகருக்கு திலகா என்று ஒரே பெண், அவள் குடும்பத்தோடு பெங்களூரில் இருக்கிறாள் என்றுஅவனது அம்மா கண்டு பிடித்து உடனே கர்நாடக டெலிபோன்சில் இருந்த குமாரின் சிநேகிதன் செந்திலைத் தொந்தரவு பண்ணி அகிலாவின் அம்மா திலகாவிடம் பேசியும் விட்டாள். குமார் வேலையில் சேர்ந்ததும் அவர்களைப் போய்ப் பார்த்து உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டதுடன் ""ஒனக்கு சொந்த பந்தம்னு இருக்கிறது நாலு பேரு. ஒறவு விட்டுப்போகாம சனங்களோட பேசிப் பழகணும் தெரிஞ்சிச்சா!'' என்று உபதேசித்து தான் வேலூரை விடும் போது செய்யாததற்குப் பரிகாரமும் தேடிக் கொண்டு விட்டாள்.
குமார் வேலைக்குச் சேர்ந்து செந்தில் உதவியால் குட்டஹள்ளியில் ஒரு தனி அறையைப் பிடித்து விட்டான். அந்த வார ஞாயிற்றுக்கிழமை காலையில் உறவினருக்குப் போன் செய்தபோது அவர் அவனை மத்தியானம் சாப்பிட வரச் சொன்னார். சென்றான்.
வாசல் கதவில் பொருத்தியிருந்த அழைப்பு மணியை அவன் கை அடைந்த போது கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் நின்றாள்.
""குமார்?'' என்று கேட்டாள்.
""ஆமா.''
""உள்ளே வாங்க'' என்று அவள் முன்னே நடந்து சென்றாள்.
வரவழைத்துக் கொண்ட வெட்கம், மூன்றாவது ஆளைப் பார்த்ததும் நடை, உடை பாவனைகளில் சட்டென்று வெளிப்படும் மாற்றம் ஆகிய எதுவும் இல்லாது அவள் இயல்பாக இருந்தது அவனைக் கவர்ந்தது.
அவள் தன்னை யார் என்று கேட்ட போது, அவளை ""நீ யார் அகிலாவா?'' என்று உடனடியாகத் தான் கேட்கவில்லை என்று வருத்தப்பட்டான். இதெல்லாம் பழக இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று நினைத்தான்.
அவர்கள் வீட்டில் எல்லோரும் சுமுகமாக அவனை வரவேற்று அன்புடன் பேசினார்கள். சாதாரண நடுத்தரக் குடும்பம் என்பதை வீடு பறைசாற்றியது. அகிலாவின் பெற்றோரைத் தவிர, அவளுடன் அவளுடைய தம்பி மணி என்று சிறிய குடும்பம்தான். பேசிக் கொண்டிருக்கையில் அகிலா அவன் வேலை பார்க்கும் மில்லர் ரோடிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த குவீன்ஸ் ரோடில்தான் தனது அலுவலகம் இருப்பதாகத் தெரிவித்தாள்.
""ஹலோ!'' என்று அழைத்தபடி அகிலா புன்னகையுடன் அவன் நின்றிருந்த இடத்துக்கு வந்தாள்.
அடர்ந்த மஞ்சள் நிற ஸாரியும் கறுப்பு ரவிக்கையும் அணிந்திருந்தாள். எளிமை அவளுக்கு மேலும் மெருகூட்டியது போலிருந்தது.
""நேத்திக்கு மத்தியானம் பேசறப்போ நாளைக்கி குட் ஃ ப்ரைடே, அடுத்தாப்ல சனி ஞாயிறுன்னு இந்த வாரம் மூணு நாள் லீவுன்னு சொல்லிட்டு இன்னிக்கி ஆபிசுக்கு வந்திட்டே?'' என்று கேட்டான்.
""டைரக்டர் திடீர்னு இன்னிக்கி சாயந்திர ஃபிளைட்ல பம்பாய் போறார்ன்னு நேத்திக்கு வீட்டுக்கு கிளம்பறப்போ சொன்னாங்க. அதனால நானும் அக்கவுண்ட்ஸ் ஆபிசரும் காலேல சீக்கிரமே வந்து ஸ்டேட்மென்ட்லாம் போட்டுக் குடுக்க வேண்டியதாயிடுச்சு'' என்றாள்.
அவர்கள் ஓர் ஆட்டோ பிடித்து கமர்ஷியல் ஸ்ட்ரீட் சென்றார்கள். அங்கிருந்த கடைகளை அன்றிரவே மூடி விடுவார்கள் என்று பயந்தவர்களைப் போல தெரு தாங்காமல் ஜனக் கூட்டம் பரவிக் கிடந்தது. சேர்ந்தாற்போல் மூன்று நாள்கள் விடுமுறை என்று வெளியூர்க்காரர்கள் கூட்டம் வேறு என்று தெருவை அடைத்து வந்து நடமாடிய முகங்களும், காற்றில் கலந்து வந்த மொழிகளும் தெரிவித்தன.
""மணியும் வரேன்னு சொன்னான். நான் ஆபிசிலிருந்து கிளம்புறப்போ போன் பண்ணிச் சொன்னேன். வந்திடுவான்'' என்றாள்.
""ஓ வெரி குட். நாம காத்திருக்கலாமா?'' என்று கேட்டான்.
""இல்ல நாம போலாம். அவன் நம்மளை கண்டுபிடிச்சு வந்திருவான்'' என்று அகிலா சிரித்தாள்.
""விண்டோ ஷாப்பிங்தான?''
""பாப்போம். ஏதாவது பிடிச்சிருந்தா, நல்லாயிருந்தா வாங்கலாம்'' என்றான் குமார்.
இரு பக்கமும்,துணிகள், நகைகள், காலணிகள், விற்கும் கடைகள் பரந்து கிடந்தன. மீரஜ் டிசைனர் ஸ்டுடியோ வாசலில் ஒரு மணப்பெண் அணிய ஒரு லட்சத்து இருபத்தி மூன்றாயிரம் என்று விலை போட்டு பட்டுத் துணியால் செய்யப்பட்டிருந்த உடையைப் பார்த்து அகிலா ""அம்மாடி, என் அஞ்சு மாச சம்பளம் !'' என்று சிரித்தாள்.
""நீ சொன்னது கரெக்ட்டுதான். நம்மால விண்டோ ஷாப்பிங்தான் பண்ண முடியும் போல'' என்று குமாரும் சிரித்தான்.
அவர்கள் கடை வாசல்களில் இருந்த கண்ணாடிப் பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்து சென்றார்கள். ஒரு செருப்புக் கடை வாசலில் நின்ற அகிலா ஒரு ஜோடிக் காலணியைக் காண்பித்து ""ரொம்ப அழகாயிருக்கில்ல?'' என்றாள். அவள் கண்களில் மிதந்த ஆர்வத்தைக் குமார் கவனித்தான்.
""சரி, வா. உள்ள போய்ப் பாப்போம்'' என்றான். இருவரும் உள்ளே சென்றார்கள்.
குமார் கடைச் சிப்பந்தியிடம் ஷோ கேசில் பார்த்த காலணியைக் காட்டினான். அவன் மூன்று வண்ணங்களில் இருந்த காலணிகளைக் கொண்டு வந்து கொடுத்தான். அகிலா அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்தவள் விலையைப் பார்த்து, ""அடேங்கப்பா!'' என்றாள்.
குமார் எடுத்துப் பார்த்தான். ரூ.799/- என்று போடப்பட்டிருந்தது.
""நா இப்ப கால்ல போட்ருக்குறது நூத்தி அம்பது தான். ரொம்ப ஜாஸ்தி வெல இது'' என்றாள்.
""உனக்குப் பிடிச்சிருக்கா? எந்த கலர்?'' என்று குமார் கேட்டான்.
""இல்ல, இது ரொம்ப வெல. வேண்டாம்'' என்றாள் அகிலா.
""கலரை செலெக்ட் பண்ணிட்டு சொல்லு'' என்றான் அவன்.
அவள் தெரிவு செய்ததை சிப்பந்தியிடம் கொடுத்துப் பில் போடச் சொன்னான்.
அவர்கள் கடையை விட்டு வெளியே வந்து தெருவில் நடந்தார்கள். அகிலா மெளனமாக நடந்து வந்தாள்.
""என்ன ரொம்ப பலமான யோசனையா இருக்கு?'' என்று கேட்டான் குமார்.
அகிலா உடனே பதில் அளிக்காமல் புன்னகை செய்தாள்.
""நான் வாங்கித் தந்தது உனக்குப் பிடிக்கலையா?'' என்று கேட்டான்.
""சே... சே'' என்று அவள் உடனே மறுத்தாள்.
""இதுக்கெல்லாம் நீ ரொம்ப அர்த்தம் குடுத்து மூளையைப் போட்டுக் கொழப்பிக்காதே. தெரிஞ்சவங்கன்னு நாம பாக்கறோம், போறோம், பேசறோம். நமக்கு பிடிச்சிருந்தா பழகறோம். இல்லாட்டா பாக்கறப்போ மாத்திரம் ஹலோ சொல்லிட்டு போய்க்கிட்டே இருக்கோம். அவ்வளவுதான்?'' என்றான்.
""யூ ஆர் úஸா ஸ்வீட்'' என்றாள் அகிலா.
""அன்னிக்கு உங்க அப்பாவுக்கு போன் பண்ணேன் இந்த மாதிரி ஊர்லேந்து வந்திருக்கேன்னு சொல்றதுக்கு. அவர் சாப்பிட வான்னு கூப்பிட்டாரு. உடனே வந்துட்டேன்ல. நான் ஒதுங்கலாம், கொஞ்சம் பிகு பண்ணலாம், தட்டிக் கழிக்கலாம். அப்பிடி ஒண்ணும் நான் பண்ணலையே. ஏன்னா அப்பிடி பண்ணணும்னு எனக்குத் தோணல. நாம ஒருத்தரை ஒருத்தர் மதிச்சுப் பழகறோம். மதிக்கிறதுதான் முக்கியம். இல்லியா? வீ ஆர் ஃப்ரண்ட்ஸ். ஆர்ன்ட் வீ?'' என்று கேட்டு விட்டுச் சிரித்தான்.
""யெஸ் வீ ஆர்'' என்று அவளும் சிரித்தாள்.
அப்போது மணி அவர்களிடம் வந்து சேர்ந்தான். குமார் அவனிடம் கை குலுக்கினான்.
""ஷாப்பிங் எல்லாம் ஆச்சா?'' என்று மணி அகிலாவின் கையில் இருந்த பையைப் பார்த்தான்.
அகிலா பையைத் திறந்து காட்டினாள். அவன் காலணியைப் பார்த்து விட்டு ""வெரி நைஸ்'' என்றான்.
""இவருக்குத்தான் நீ க்ரெடிட் குடுக்கணும்'' என்றாள் அவள்.
""திங்கக் கெழம ஆபீசுக்கு போட்டுட்டு போயி எல்லாரையும் அசத்தணும்'' என்று சிரித்தாள்.
குமார் மணியிடம், ""சாப்பிட எங்க போகலாம்?'' என்று கேட்டான்.
""பல்லால் ரெசிடென்ஸி?'' என்று கேட்டான் மணி. அவள் தலையசைத்தாள். அவர்கள் ஆட்டோ பிடித்து ஹோட்டலுக்குச் சென்றார்கள். சாப்பிட்டு விட்டு கருடா மால் பக்கம் நடந்தார்கள். ஒரே திருவிழாக் கூட்டம். நான்காவது மாடிக்குச் சென்ற போது அகிலா ஐநாக்ஸ் வாசலில் நின்று விட்டாள்.
""என்ன ஆச்சு?''
""கேப்டன் மார்வெல்'' என்றாள்.
""ஓ, உனக்குப் பிடிக்குமா? நாளைக்கு சனிக்கிழமைதான? ஈவ்னிங் ஷோ போலாமா?'' என்று கேட்டான் குமார்.
""ராத்திரில ராஜாஜி நகர் திரும்பிப் போக ஆட்டோ ரொம்பப் படுத்திருவான். மாட்னி ஷோ?'' என்று கேட்டாள் அகிலா
குமார் அவர்கள் மூவருக்கும் மறுநாள் மாட்னி ஷோவுக்கு ரிசர்வ் செய்தான்..
அவன் கருடா மாலை அடைந்த போது சற்றுத் தாமதமாகி விட்டது.
அகிலா இன்னும் வரவில்லை என்று அவன் சுற்றுமுற்றும் பார்த்த போது தெரிந்தது. மால் வாசலில் இளைஞர்களும் யுவதிகளும் இறைந்து கிடந்தார்கள்.
அவன் அங்கு வந்து ஐந்து நிமிடங்களில் மணி வந்து விட்டான். அவன் கூட அகிலா இல்லை.
""ஸாரி, திடீர்னு எனக்கு ஒரு வேலை வந்திருச்சு. உங்களைப் பார்த்து சொல்லிட்டுப் போகணும்னு ஓடி வந்தேன்'' என்றான்.
""அப்ப சினிமா ப்ரோக்ராம் கேன்சலா?'' என்று குமார் கேட்டான். ""ஏன் அகிலா வரவில்லை?'' என்று கேட்க அவன் விரும்பவில்லை.
""இல்ல. ஸாரி. இன்னிக்கி காலேலதான் எனக்கு போன் வந்தது. இந்த மாதிரி நாலு மணிக்கு அவசர வேலைன்னு.''
""இப்ப என்ன பண்ணனும்?'' என்று கேட்டான். குமார்.
""நா ரெண்டு டிக்கட்டையும் கொண்டு வந்திருக்கேன். அகிலா கிட்ட சொன்னப்போ அவ தனியா வரலேன்னு சொல்லிட்டா. நீங்க ஓக்கேன்னு சொன்னா நா என்னோட பிரெண்டு ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களுக்கு போன் பண்ணி வரச் சொல்றேன். இங்கதான் பக்கத்துல விவேக் நகர்ல இருக்காங்க'' என்றான்.
""தனியா வரலேன்னு சொல்லிட்டா !'' குமாருக்குச் சொடுக்கினாற் போலிருந்தது.
குமார் தனது டிக்கட்டையும் அவனிடம் கொடுத்தான். ""நாம கம்பனியா ஜாலியா பாக்கலாம்னுதான் வாங்கினேன். அது இல்லேங்கிறதுனால நீ இன்னும் ஒரு ஃப்ரண்டையும் கண்டு பிடிச்சு கொடுத்திரு. அட்லீஸ்ட் அவங்க ஜாலியா குரூப்பா பாக்கட்டும். வரட்டுமா?'' என்று சொல்லி விட்டு வாசலைப் பார்க்கச் சென்றான்.
மறுநாள் காலை அகிலா வீட்டு வாசல் காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்த அகிலாவிடம் வாசலில் நின்ற மனிதன், ""நீங்க அகிலா மேடமா?'' என்று கேட்டான்.
""ஆமா'' என்றாள் அகிலா.
""நா குமார் சார்ட்டேர்ந்து வரேன். இதை உங்களிடம் குடுக்கச் சொன்னாரு'' என்று ஒரு கவரை நீட்டினான்.
அவள் அதை வாங்கி கவரின் உள்ளிருந்த காகிதத்தை எடுத்துப் படித்தாள்.
""அன்புள்ள அகிலாவுக்கு, இதைக் கொண்டு வரும் என் அலுவலகப் பியூனிடம் நேற்று வாங்கிக் கொடுத்ததைத் திருப்பி அனுப்பவும் '' என்றிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...