பேசத் தெரியாதவர்களும், மக்களிடம் செல்வாக்கில்லாதவர்களும், தலைவர்களையே சுற்றி வந்தவர்களும் இச்சகம் பேசித் திரிபவர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பான பதவிகளும், ஆட்சியில் பொறுப்பும் கொடுக்கப்பட்டன.
எதிர்கட்சிகளுக்கு மண்டையில் அடித்தாற்போல் பதில் சொல்லத் தெரியாத மந்திரிகளும், செய்த சேவையை மக்களுக்குத் தோரணம் கட்டி விளம்பரப்படுத்திப் பேசத் தெரியாத கட்சித் தலைவர்களும், நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியைப் பலவீனமாக்கிக் கொண்டே வந்தார்கள்.
1967 தேர்தலில் ராஜாஜி அவர்கள் காமராஜ் அவர்களைப் பழிதீர்த்துக் கொள்ள திரு. அண்ணாதுரையை முன்னால் நிறுத்தி ஒரு விநோதமான கூட்டணியை உண்டாக்கி காங்கிரசைப் படுதோல்வி அடையச் செய்து தலைவர் காமராஜ் அவர்களையும் விருதுநகரில் தோற்கும்படி செய்தார்.
காமராஜ் தோற்று, காங்கிரசும் தோற்று, காங்கிரசின் பரம வைரியான தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இந்தத் தடவை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் தனக்கு இழைத்த அநீதியை மனதில் கொண்டு தேர்தலில் காங்கிரசை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார்.
இதில் எனக்கு வருத்தமெல்லாம், திரு. ம.பொ.சி. அவர்கள் காங்கிரசை எதிர்த்து நின்றதைப் பற்றி அல்ல, ஆனால் காலமெல்லாம் ஆக்ரோஷமாக எதிர்த்த தி.மு.கவுடன் சேர்ந்து, அதுவும் "உதயசூரியன்' சின்னத்தில் நின்று ஓட்டுக் கேட்டதுதான்!
திரு. ம.பொ.சியின் அருமை பெருமையை திரு. காமராஜ் உணர்ந்து அவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கவில்லை.
இத்தனைக்கும் திரு. காமராஜ் அவர்களின் பெருமையை திரு. ம.பொ.சி. நாடு நகரமெல்லாம் பேசிப் பரப்பினார்.
ஆனால் திரு. அண்ணாதுரை, திரு. மு. கருணாநிதி இவர்களை எவ்வளவோ தாக்கி திரு. ம.பொ.சி. பேசியிருக்கிறார். ம.பொ.சியின் உண்மையான நாட்டுப்பற்றையும், தமிழுணர்ச்சியையும் தமிழ் இனப் பற்றையும் மதித்து அண்ணா அவர்களும், கலைஞர் மு.க. அவர்களும், ம.பொ.சிக்கு அவர்களுக்கு முடிந்த பெருமையையும் கெளரவத்தையும் செய்திருக்கிறார்கள். அது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.
1967 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் மீண்டும் காங்கிரஸ் தொண்டர்களிடையே சோர்வு ஏற்பட்டது. தி.மு.க. தோழர்கள் வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பேரில் ஊரெல்லாம் முழக்கினார்கள். இப்போது அவர்களுடன் ம.பொ.சி., ராஜாஜி வேறு இருந்தார்கள். கேட்க வேண்டுமா அமர்க்களத்தை!
இச்சமயம் இளைஞர்கள் யாரும் காங்கிரசைச் சீண்டவில்லை. ஓர் ஆண்டு, இரண்டாண்டு பொறுத்துப் பார்த்தேன். காங்கிரசில் யாரும் யாரும் புதிய வேகம் கொடுக்கக் கூடியவர்கள் தென்படவில்லை.
கட்சித் தொண்டர்கள் நாளுக்கு நாள் உற்சாகமிழந்து வந்தனர்.
ஒருநாள் நான் மதுரை சென்றிருந்தேன். எனது நண்பர் திரு. ஆனந்தன் அவர்கள் (மதுரை நகர முன்னாள் துணை மேயராக இருந்தவர்) என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் தமிழ்நாட்டில் காங்கிரசின் நிலை பற்றியும், காங்கிரசிற்கு இளைஞர்களைக் கொண்டு வருவது எப்படி என்பதைப் பற்றியும் ஆலோசனை செய்தேன்.
அவர், "தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறார்கள். இவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள். இவர்களை ஒன்று சேர்த்தால் காங்கிரசிற்கு புதிய பலம் கொண்டு வரலாம்'' என்று கூறினார்.
"மதுரையில் அப்படி எத்தனை மன்றங்கள் இருக்கின்றன?'' என்று கேட்டேன். "இப்போது சுமார் 60 மன்றங்கள் இருக்கின்றன'' என்றார் அவர். "முதலில் அவர்கள் அனைவரையும் ஓர் இடத்தில் கூட்டுங்கள். பேசிப் பார்ப்போம்'' என்று சொன்னேன். "சரி'' என்று திரு. ஆனந்தன் மறுநாளே மதுரையிலுள்ள சிவாஜி ரசிகர் மன்றங்களை ஓர் இடத்தில் கூட்டினார். சுமார் 500 இளைஞர்கள் கூடினார்கள்.
அவர்களிடம் பேசியதில், "அகில இந்திய ரீதியில் ஒரு சிவாஜி மன்றம் துவக்கி, இந்தியா முழுவதிலுமுள்ள சிவாஜி ரசிகர்களை ஒன்று திரட்டி காங்கிரஸ் கட்சிக்குக் கொண்டு வரலாம்'' என்ற எண்ணம் உதயமாயிற்று. காங்கிரஸ் கட்சிக்கு நேரடியாக வர விரும்பாத இளைஞர்கள் பலர், சிவாஜி ரசிகராக முதலில் சேர்ந்து அதிலிருந்து காங்கிரசிற்கு நிச்சயம் வருவார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன்.
அதனால் காங்கிரஸ் கட்சிக்கு நிறைய இளைஞர்களைக் கொண்டு வரவேண்டுமென்ற ஆசையால்தான் 1969 ஆகஸ்டு மாதம் "அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றம்' என்ற அமைப்பை உருவாக்கினேன்.
1969 அக்டோபர் முதல் தேதி அன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் 43- வது பிறந்த தின விழாவும், அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்ற முதல் பேரவையும் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் நடைபெற்றது. அதற்கு நடைபெற்ற ஊர்வலம் சென்னையில் புதிய சரித்திரத்தை உண்டாக்கியது. இந்தியா முழுவதிலுமுள்ள இளைஞர்கள் அதற்கு வந்த வேகம்போல் வேறு எதற்கும் இதுவரையில் வரவில்லை.
தி.மு.க. அரசு ஸ்தம்பிக்கும்படியாக, பஸ்களும், லாரிகளும் சென்னையில் குவிந்தன. தென்னாட்டு நட்சத்திரங்களும், வடநாட்டு நட்சத்திரங்களும் வந்து அலைமோதினார்கள். இவ்வளவும் எதற்காக? காங்கிரசைப் பலப்படுத்த நான் மறைமுகமாகச் செய்த ஏற்பாடு!
இந்தக் கூட்டத்திற்கு வர தலைவர் காமராஜ் அவர்களை நான் ரொம்பவும் கெஞ்ச வேண்டியதாயிற்று! காரணம் இளைஞர்களின் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கவோ, அல்லது அதை ஜீரணிக்கவோ காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டம் இல்லாமல் போய்விட்டது! அதனால் காங்கிரசிலேயே பலபேர், நான் சிவாஜி ரசிகர் மன்றம் ஆரம்பித்து அமர்க்களப்படுத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கட்சிக்குள் எனக்கு செல்வாக்கு இல்லாமல் செய்து கொண்டு வந்தனர்.
நான் அதை எல்லாம் லட்சியம் செய்யாமல் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுமார் 15,000 சிவாஜிகணேசன் ரசிகர் மன்றங்கள் அமைத்து, அதை ஒரே தலைமையின் கீழ் கொண்டு வந்து, இன்று ஒரு பெரிய ஆலவிருட்சமாக அது வளர்ந்தோங்கி நிற்கிறது. காங்கிரசின் கவசமாக அது என்றும் நின்று பணி புரியும்.
ஏழு ஆண்டுகள் அதன் தலைவராக இருந்து, தொடர்ந்து நாமே தலைவராக இருந்து வருவது சரியாகாது என்று கருதி, அகில இந்திய சிவாஜிகணேசன் ரசிகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.
இரண்டுமுறை தமிழகக் காங்கிரஸில் தொய்வு விழுந்தநேரத்தில் நானும் தோள்கொடுக்க வாய்ப்புக் கிடைத்தது குறித்து நான் பெருமை அடைகிறேன்.
வடக்கு எல்லைப் போராட்டம்
1955-ஆம் ஆண்டு தலைவர் காமராஜ் முதன் மந்திரியாக இருந்த நேரம். தமிழரசுக் கழகத்தின் வடக்கெல்லைப் போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. என் தலைமையில் சுமார் 50 தோழர்கள் சத்யாக்கிரகம் செய்யப் புறப்பட்டோம். அப்போது சட்டசபை இப்போதைய "கலைவாணர் அரங்கு' இருக்கும் இடத்தில் நடந்து கொண்டிருந்தது. சட்டசபை வழிகளை எல்லாம் சுவர் வைத்ததுபோல போலீசார் அடைத்துக் கொண்டிருந்தார்கள்.
எனக்கோ சட்டசபைக்குள் சத்தியாக்கிரகிகளுடன் போய் விட வேண்டும் என்ற எண்ணம், போலீஸ் வியூகத்தை உடைத்துக் கொண்டு எப்படிப் போவது என்ற சிந்தனையோடு சத்தியாக்கிரகிகளுடன் நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வழி புலப்பட்டது.
எங்கள் போராட்டக் குழுவில் திருமதி. சரோஜினி நாராயணசாமியும் திரு. கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய மனைவியாரும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரையும் முன்னால் வரச்செய்து அவர்கள் தலைமை தாங்கிச் செல்வது போல ஏற்பாடு செய்தேன்.
இரு பெண்மணிகளும் முன்னால் செல்ல, நாங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தோம். போலீஸ் காவல் புரியும் கேட் அருகில் வந்ததும் திருமதி. சரோஜினியிடம், "நிற்காமல் தயங்காமல் நடந்து செல்லுங்கள்' என்று மெதுவாகக் கட்டளையிட்டேன்.
திருமதி. சரோஜினி நல்ல துணிச்சல் உள்ளவர். ஆகவே கொஞ்சமும் தயங்காமல் போலீசாரைப் பிளந்து கொண்டு செல்ல முனைந்தார். பெண்மணிகள் இருவர், தங்களை இடிப்பது போல் வருவதைப் பார்த்த போலீசார் கொஞ்சம் கூச்சப்பட்டு இலேசாக ஒதுங்கிக் கொடுத்தார்கள்.
அவ்வளவுதான் சத்தியாகிரகிகள் அத்தனை பேரும் கோஷம் செய்து கொண்டு ஒரே ஓட்டமாக சட்டசபைக்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நுழைந்துவிட்டோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!

முடிவுக்கு வந்தது தந்தை-மகன் மோதல்! அன்புமணியை ஆரத்தழுவி வரவேற்ற ராமதாஸ்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தரி தொடர் நடிகர்களின் ரீயூனியன்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


