தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிறம் மாறாத நினைவுகள்

30 ஆண்டுகளாக நட்பு. காலை நடைப்பயிற்சி போட் கிளப்பில் ஒரு மணி நேரம் நடைபெறும். சமீபகாலமாக ஒரு மணியை அரை மணி நேரமாகக் குறைத்துக் கொண்டார்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஸ்ரீதேவி குமரேசன


நடமாடும் பல்கலைக்கழகம்

ஆர்.வேலு, முன்னாள் மத்திய அமைச்சர்.

30 ஆண்டுகளாக நட்பு. காலை நடைப்பயிற்சி போட் கிளப்பில் ஒரு மணி நேரம் நடைபெறும். சமீபகாலமாக ஒரு மணியை அரை மணி நேரமாகக் குறைத்துக் கொண்டார். 1 நிமிடம் கூட வீணாக்காமல் தற்கால நாட்டு நடப்பு, இலக்கியம் சம்பந்தமான உரையாடல் தொடங்கிவிடும். அச்சமயம் என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் - நாளேட்டுக்கு என்ன கட்டுரை என்று இருக்கும்.

சில சமயங்களில் துறை சம்பந்தமான குறைகளை உடனுக்குடன் தன் கருத்தைக் கடிதமாக வடித்து அனுப்பிவிடுவார்.

ஐரோப்பிய இலக்கியம், அமெரிக்க எழுத்தாளர்கள் பற்றி பேசுவார். படித்த நிகழ்வுகளை பெயர், வருடம், நாள் எனத் தவறில்லாமல் குறிப்பிடுவார். அபாரமான ஞாபகசக்தி. கடைசிவரையில் மறதி நோய்க்கு (டிமென்ஷியா) 80 வயது வரையிலும் இடமில்லை.

எழுதும் பாங்கு - தனித்தன்மை- சிறு சிறு வாக்கியங்கள், தெளிவான சிந்தனையை வெளிப்படுத்தும்- தன் மனதிற்குப் பட்டதை தயக்கம் ஏதுமின்றி எழுதுவார்.

சில சமயம் சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வாக தனக்குத் தோன்றியதைஊடகங்களுக்கு உடனுக்குடன் எழுதிவிடுவார்.

தான் எழுதிய புத்தகங்களைப் படிக்கச் சொல்வதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதோ என்றும் நிகழ்ந்ததில்லை. மாறாக மற்றவர்களை எழுதும்படி உற்சாகமூட்டுவார்.

மற்ற எழுத்தாளர்களைத் தாழ்த்திப் பேசுவதோ அல்லது அவர்கள் மேல் பொறாமை கொள்வதோ அவரிடம் இல்லாத ஒன்று.

இவர் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர். அந்நாடுகளின் கலை, கலாசாரங்களை தன் கதைகளில், கட்டுரைகளில் குறிப்பிடுவார்.

நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி " நீரின் பேரோசை' என்ற நூலை அவர் எழுதினார். வான்கூவர் அதைச் சுற்றியுள்ள சரித்திரச் சின்னங்கள், காடுகள், பூந்தோட்டங்கள் பற்றியும் நூலாக வடித்துள்ளார்.

கன்னிமாரா, தேவநேயப்பாவாணர், அண்ணா நூல்நிலையம் ஆகியவற்றை முழுமையாகத் தன் வாழ்நாளில் பயன்படுத்திக் கொண்டார்.

இவர் புலால் உண்ணாத சைவர். ஆனாலும் மீன்களைப் பற்றி, மீனவர்களைப் பற்றி கதை எழுதுவார்.

உண்ணும் உணவில் எளிமை, உடுப்பதில் அதைவிட எளிமை, வருகின்ற சொற்ப வருமானத்தில் யாரிடமும் கையேந்தாமல் வாழக் கற்றுக் கொண்டவர்.
தன் மனைவியைத் தனக்குக் கிடைத்த தெய்வம் என்று அடிக்கடி கூறுவார். அவருடைய மனைவி ரோகிணி கந்தசாமியும் அவரைக் கண்போல் கவனித்து வந்தார்.

ஃபுட் கார்ப்பரேஷன் பணியை, எழுத்தை தன்மூச்சாக, வாழ்வாகக் கொண்டதால் உதறித் தள்ளிவிட்டு வந்தார். இது யாருக்கும் அவ்வளவு எளிதில் வருகின்ற துணிவு அல்ல. மனைவி, மக்கள், குடும்பம் என இந்த வருமானத்தை நம்பியிருந்தபோது, எடுக்கப்பட்ட முடிவு இது.

நான் அமைச்சராக இருந்தபோது, பல கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வேன். மகிழ்ச்சியாக வருவார். முடிவில் நடவடிக்கைகளைப் பற்றி தன் கருத்தைக் கூறுவார்.

பேராசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்த இவரைப் பற்றிய ஒரு குறும்படம் என் தலைமையில் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தில் உள்ள முன்னணி எழுத்தாளர்கள் தங்கள் ஆழமான சிந்தனைகளை, மதிப்பீடுகளை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இவர் அடிக்கடி துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு, நெ.து.சுந்தரவடிவேலுவின் நாட்குறிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசுவார்.

புத்தரைப் பற்றி ஆழ்ந்து படித்தவர். "மனிதன் தான் உண்ணும் உணவால் புனிதமடைவதில்லை' என்ற புத்தரின் கூற்றை அடிக்கடி நினைவுகூர்வார்.

ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகளை மொழிபெயர்த்தார். அவரின் கதைகள், பாடல்களைப் பற்றி உரையாடுவார். நேருவின் சுயசரிதை மற்றும் மற்ற நூல்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும். தூரதர்சனில் இவரது கதைகள் ஒளிபரப்பியதற்கு அதன் இயக்குநர் நடராசனை நன்றியுடன் நினைவு கூர்வார்.
இவரது படைப்புகள் பொய்யுரை ஏதுமின்றி உண்மையான சமூக சிந்தனையுடன் மக்கள் முன்னேற, தெளிவு பெற ஏற்பட்டவை. அவர் மறைந்தாலும் என்றும் நிரந்தரமாக அவை நிலைத்து நிற்கும்.

அப்துல்கலாம் ஆலோசனைப்படி என்னை ஊக்குவித்து, என் சுயசரிதையை எழுத வைத்து, பிரசுரிக்க பேருதவியாய் இருந்தார்.

இவரைப் போன்று சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி வசதியை அளித்து நாட்டின் அறிவுசார் சொத்தாகப் பாதுகாக்க வேண்டும்.

உயிர்... நூலகத்தில் இருக்கிறது!

கலைமணி,நூலகர், டர்ன்புல்ஸ் சாலை நூலகம்.

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமி குறித்து நூலகர் கலைமணி நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""நந்தனம் டர்ன்புல்ஸ் சாலையில் அமைந்திருக்கும் எங்கள் நூலகம் கந்தசாமி ஐயா வசித்து வந்த வீட்டின் அருகிலேயே அமைந்திருந்ததால், அவர் வீட்டில் இருந்த நேரத்தைவிட அதிக நேரம் எங்கள் நூலகத்தில்தான் செலவிடுவார். அவரின் இழப்பு அஸ்திவாரம் இல்லாத கட்டடமாகத்தான் எங்கள் நூலகத்தை ஆக்கியிருக்கிறது.

இந்த நூலகம் அனைவருக்கும் பரிச்சயமானது, அவர்மூலமாகத்தான். நாங்கள் இந்த நூலகத்தின் நூலகர்களாக இருந்தாலும், எங்களைவிட ஆர்வம் அவருக்குத்தான் அதிகம். இன்று எங்கள் நூலகத்தில் சுமார் 2400 வாசகர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்கான உழைப்பு அவருடையதுதான். இந்த நூலகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும் பங்கு அவரையே சாரும். அவருடைய இழப்பு எங்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு நூலகத்திலும் புரவலர் நன்கொடை என நூலக வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் 1000 ரூபாய் வரை வாசகர்களிடம் நிதி திரட்டி சேர்க்க வேண்டிய பொறுப்பு நூலகர்களுக்கு உண்டு. அந்த பொறுப்பையும், அவரே எடுத்துக் கொண்டு, வரும் வாசகர்களிடம் நூலக வளர்ச்சி குறித்துப் பேசி, எங்கள் நூலகத்திற்கு 32 புரவலர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். எங்கள் நூலகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் படிக்கல்லாக இருந்து உருவாக்கியது அவர்தான்.

அவருடைய இளமைக் காலத்தில் பெரும் பகுதியை கழித்த நூலகமான தேவநேய பாவாணர் நூலகம் அவருக்கு மிகவும் பிடித்தமான நூலகம். அதுபோன்று சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகமும், அண்ணா நூலகமும் அவருக்குப் பிடிக்கும்.

ஆனால், தான் சிறுகதைகள் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து, தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்றியமைத்த சிறப்பு இந்த நந்தனம் டர்ன்புல்ஸ் சாலை நூலகத்தையே சாரும் என்பார். இது என்னுடைய வீடு என்று சொல்வார்.

நூல் வாசிப்பு பழக்கம்தான் இன்று சமூகத்தில் எனக்கு ஓர் அடையாளத்தைத் தந்துள்ளது. எனவே, வாசிப்புப் பழக்கத்தைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுநூலகத்திற்கு வரும் வாசகர்கள், இளைஞர்கள், குழந்தைகளிடம் வலியுறுத்துவார்.

அதுபோன்று, அவருக்கும் எங்கள் நூலகம் முக்கியத்துவம் கொடுத்து அவர் வாசிக்கும் நூல்கள், வாசித்த நூல்கள், குறிப்பெடுத்த நூல்கள் இவற்றையெல்லாம் வைத்துக் கொள்ள அவருக்கென்று தனி அலமாரி ஒதுக்கிக் கொடுத்துள்ளோம். அவர் புதிதாக இந்த நூல்கள் வேண்டும் என்று கேட்டால், உடனே எங்கள் மேலதிகாரியிடம் தகவலை தெரிவிப்போம். உடனே எங்கள் மாவட்ட நூலக அதிகாரி அனுமதி அளித்து அவருக்கு தேவையான புத்தகங்களை சிறப்பு ஏற்பாடு செய்து வழங்குவார்.

இலக்கியம் சார்ந்த நூல்களைத்தான் அதிகம் வாசிப்பார். கடைசியாக என்னிடம் படிக்க வேண்டும் என்று கேட்ட புத்தகம், அசோகமித்திரன் எழுதிய "தண்ணீர்' என்ற புத்தகம்தான்.

அவரது உடல் பிரிந்திருக்கலாம். ஆனால் உயிர் எங்களது நூலகத்தில்தான் இருக்கும்.


"கசடதபற' காலம்!

நா.கிருஷ்ணமூர்த்தி,ஆசிரியர், கசடதபற.

நான், சா.கந்தசாமி, ம.இராஜராம், க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய நால்வரும், பொதுவாக எங்களிடையே இருந்த புத்தகம் வாசித்தல் மற்றும் இலக்கிய ஆர்வத்தினால் நண்பர்களாய் இணைந்தோம்.

ஆகஸ்ட், 1966-இல் இலக்கியச் சங்கம் அமைப்பை ஆரம்பித்து மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் போது அறிமுகமானவர்கள் ஞானக்கூத்தன், ஆர். சுவாமிநாதன் ( ஐராவதம்), என்.எம்.பதி, சி.மணி, ந.முத்துசாமி, வி.து. சீனிவாசன் இன்னும் சிலர். இலக்கியச் சங்கக் கூட்டங்களின் தொடர்ச்சியாய் கவிதை, சிறுகதைத் தொகுப்பு, நாவல் ஆகியவற்றை வெளியிட்டோம். அதன்பின் அக்டோபர், 1970-இல் கசடதற வல்லின மாத இதழைத் தொடங்கினோம்.

வழக்கமான ஜனரஞ்சகப் பத்திரிகையிலிருந்து மாறுபட்டு தரமான படைப்பிலக்கியத்தை தமிழ் வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் முயற்சியாய் ஆரம்பிக்கப்பட்ட கசடதபற பத்திரிகைக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
முக்கியமாக நவீன ஓவியர்களும் நவீன படைப்பிலக்கியத்தோடு தொடர்புடையவர்களே என அவர்களையும் பத்திரிகையோடு இணைத்துக் கொண்டு செயல்பட்டதால் இன்று வெகுஜன பத்திரிகைகளிலும், தமிழ் இலக்கியப் புத்தகங்களிலும் நவீன ஓவியங்களைப் பற்றிய கட்டுரைகளையும், நவீன ஓவியங்களையும் காணமுடிகிறது.

"மணிக்கொடி' காலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது போல, எழுபதுகளில் நவீன தமிழ் இலக்கியத்தில் வெளியான "கசடதபற'வின் 33 இதழ்களும் இலக்கிய உலகில் தனித்ததோர் தாக்கத்தை ஏற்படுத்தியது.

"கசடதபற'வுக்குப் பின் ஏராளமான சிற்றிலக்கிய ஏடுகள் தொடங்கப்பட்டன என்பதும், பலரின் கவனமும் சிற்றிலக்கிய ஏடுகளின் மீது பதிந்தன என்பதும் நிதர்சனம். நவீன தமிழ் இலக்கியத்தின் மீதிருந்த ஆர்வத்தினால் நண்பர்களுடன் சேர்ந்து "கசடதபற' இதழ் வெளிவர துடிப்புடனிருந்த சா.கந்தசாமியின் இலக்கிய வளர்ச்சியில் "கசடதபற' பத்திரிகையின் பங்கு மகத்தானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.