'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல் - 30

ராஜீவ் காந்தியின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக மாறியிருந்தார் பிரணாப் முகர்ஜி என்று தில்லியில் பரவலாகவே பேசத் தொடங்கி இருந்தார்கள்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல் - 30

ராஜீவ் காந்தியின் முழு நம்பிக்கையையும் பெற்றவராக மாறியிருந்தார் பிரணாப் முகர்ஜி என்று தில்லியில் பரவலாகவே பேசத் தொடங்கி இருந்தார்கள். காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதும், அடிக்கடி ராஜீவ் காந்தி அவரை அழைத்து ஆலோசனைகள் நடத்துவதும் பிரணாப் முகர்ஜியின் முக்கியத்துவத்தை அதிகரித்திருந்தன.

வி.பி. சிங்கின் ஆட்சி கவிழ்ந்ததும், அதிருப்தியாளர்களின் உதவியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் பலரும் விரும்பினார்கள். ராஜீவ் காந்திக்கேகூட அப்படியொரு எண்ணம் இருந்தது என்று வசந்த் சாத்தே என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆட்சி அமைக்கக் கூடாது என்று ராஜீவ் காந்தியைத் தடுத்ததில், பிரணாப் முகர்ஜிக்குப் பெரும் பங்கு உண்டு. மண்டல் கமிஷன் பிரச்னையும், அயோத்தி பிரச்னையும் கொழுந்துவிட்டு எரிந்து சற்று தணிந்திருந்தாலும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் நிலையில், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது நல்லதல்ல என்று ராஜீவ் காந்தியை ஏற்றுக்கொள்ள வைத்தவர்கள் பிரணாப் முகர்ஜியும், நரசிம்ம ராவும் என்று வசந்த் சாத்தே என்னிடம் தெரிவித்திருக்கிறார். அந்த முடிவில் தனக்கு உடன்பாடில்லை என்பதையும் அவர் சென்னார்.

சந்திரசேகரால் மட்டுமே பிரச்னைகளை எதிர்கொண்டு அந்த நேரத்தில் தீர்க்க முடியும் என்று பிரணாப் முகர்ஜி கருதினார். அவரது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. அதே நேரத்தில், சந்திரசேகர் பதவியில் தொடர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு நழுவிவிடுமோ என்கிற அச்சம் பலரையும் தொற்றிக் கொண்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சந்திரசேகர் அரசுக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் உரசல் வலுத்துக் கொண்டிருந்தது.

பிரணாப் முகர்ஜியின் வெஸ்டர்ன் கோர்ட் அறையில் நான் நுழைந்தபோது அவரது முகத்தில் காணப்பட்ட இறுக்கம் எனக்கு சந்தேகத்தை எழுப்பியது. நான் வணக்கம் சொல்வதற்குக்கூட இடமளிக்காமல் அவர் கேள்வியை எழுப்பினார்.

""என்ன சொல்கிறார் பிரதமர் சந்திரசேகர்? பதவி விலகுகிறேன் என்று கூறத் தொடங்கி விட்டாரோ?''

""ஆமாம். ராஜீவ் காந்தியுடன் நீங்கள் ராஷ்டிரபதியை சந்தித்ததும், பட்ஜெட் குறித்துப் பேசியதும் அவருக்குப் பிடிக்கவில்லை. நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம் என்று காங்கிரஸ் உறுதி அளித்ததால்தான் பிரதமராக சம்மதித்தேன் என்று அவர் கூறுகிறார். இப்போது, ஒன்றன் பின் ஒன்றாக அவரது அரசின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டை போடுவதை அவர் விரும்பவில்லை.''

""அங்கிருந்துதான் நேராக வருகிறாயா?''

""ஆமாம். அவரை சமாதானம் செய்யும் அளவுக்கு எனக்கு வயதும் கிடையாது. தகுதியும் கிடையாது. அதனால்தான் உங்களிடம் வந்தேன். சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்துவிடக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது நல்லதல்ல...''

""அது எனக்கும் தெரியும். ராஜீவ் காந்திக்கும் தெரியும். நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறோம் என்பது சரி. அதற்காக, எங்களிடம் எந்தப் பிரச்னையையும் கலந்தாலோசிக்காமல் இருக்கிறார்களே, அதைப்பற்றி அவர்களிடம் யார் கேட்பது?''

""நான் அதையெல்லாம் பேசினால் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கும். நீங்கள் ஏதாவது கேட்கச் சொன்னால், உங்கள் சார்பில் அந்த செய்தியை நான் கொண்டு செல்கிறேன்.''

பிரணாப்தா பதிலேதும் சொல்லாமல் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார். நான் எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்தேன். மெளனமாக சில நிமிடங்கள் நகர்ந்தன. தனது பைப்பை எடுத்து பற்ற வைத்தார் அவர்.

""நாட்டின் நிதி நிலைமை சரியில்லை. முந்தைய வி.பி. சிங் அரசின் 11 மாத ஆட்சியில் அந்நியச் செலாவணி இருப்பு குறைந்து ஆபத்தான நிலைமையை எட்டியிருப்பது மட்டுமல்லாமல், சர்வதேச கடன்களுக்கான வட்டியைச் செலுத்தக்கூட முடியாத நிலைமையில் இருக்கிறோம். சர்வதேச நிதியமைப்புகள் நமது தரநிர்ணயத்தைக் குறைத்து விட்டால், புதிதாக எந்த நிதியுதவியையும் இந்தியா பெற முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். நமக்கு கடனுதவி அளித்துக் காப்பாற்ற எந்த நாடும், அமைப்பும் தயாராகவும் இல்லை. பிரதமர் சந்திரசேகரும், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் இந்தப் பிரச்னையிலிருந்து இந்தியாவை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எங்களுடன் கலந்தாலோசிக்கவும் அவர்கள் தயாராக இல்லை.''
பிரணாப் முகர்ஜி பேசிக் கொண்டே போனார். எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அன்றைய தலைவர்களுக்கு, இப்போதுபோல் அல்லாமல், அரசியலுக்கு அப்பால் தேசம் குறித்த கவலையும் நிறையவே இருந்தது என்பதுதான் அது.

""சோ ராமசாமி வந்திருக்கிறாரா?''

""இன்னும் இல்லை. சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதாகச் சொன்னார்கள். வந்து விடுவார்.''

""அவர் வந்ததும் அவரை என்னுடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ளச் சொல். நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்ல முடியாது. சொல்வதால் எதுவும் நடந்துவிடாது. சந்திரசேகர் அரசு தொடர்ந்து விடக் கூடாது என்று பல சக்திகள் வேலை செய்கின்றன. ராஜீவ் காந்திக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்கேற்றாற்போல, பிரதமரும் அவரது சகாக்களும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.''

""சோ சாரை அழைத்து வரட்டுமா?''

""வேண்டாம். கட்சித் தலைமையின் அனுமதி இல்லாமல் நான் இந்தப் பிரச்னையில் நேரிடையாகத் தலையிடக் கூடாது. அது தவறு...''

எந்த நிலையிலும் தனது வரம்பு என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார் பிரணாப் முகர்ஜி. ஒரு கட்சித் தொண்டனாகத் தன்னை நினைத்துக் கொள்வாரே தவிர, தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதோ, தலைமைக்குத் தெரியாமல் செயல்படுவதோ அவரது அகராதியிலேயே கிடையாது. இதனால் அவர் அடைந்த லாபங்களைவிட  இழந்ததுதான் அதிகம் என்பது அவருடன் பழகியவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

விமான நிலையத்திலிருந்து சோ சார் போன்சி பண்ணைக்குச் சென்றுவிட்டதாக பிரதமர் சந்திரசேகரின் சகோதரர் கிருபா சங்கர்ஜி தெரிவித்தார்.

குருகிராமைத் தாண்டி தில்லியை ஒட்டிய ஹரியாணா எல்லையில் அமைந்த போன்சி கிராமத்தில் பிரதமர் சந்திரசேகருக்கு ஒரு பண்ணை இருந்தது. அவர் இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டபோது சில இடங்களில் இயற்கை விவசாயத்துக்காகச் சில முன்மாதிரிப் பண்ணைகளை "பாரத் யாத்ரா கேந்திரா' என்கிற பெயரில் ஏற்படுத்தினார். அவற்றில் ஒன்றுதான் போன்சி பண்ணை.  ஏற்காட்டிலும் பாரத் யாத்ரா கேந்திரா என்கிற பண்ணை இப்போதும் செயல்படுகிறது.  

என் சகோதரி கணவரிடம் அப்போது "யெஸ்டி' மோட்டார் சைக்கிள் ஒன்று இருந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் போன்சி பண்ணைக்கு விரைந்தேன். நான் அங்கே சென்றடையும்போதே இருட்டத் தொடங்கிவிட்டது. பிரதமர் சந்திரசேகர் அந்தப் பண்ணை வீட்டுக்கு வந்திருக்கிறார் என்பதால் ஏகப்பட்ட பாதுகாப்புக் கெடுபிடி.

முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதால் என்னை வெளியில் நிறுத்திவிட்டனர். பிப்ரவரி மாத தில்லி குளிரும், மோட்டார் சைக்கிளில் சுமார் 50 கி.மீ. பயணித்த களைப்பும் என்னைச் சோர்வடையச் செய்திருந்தன. பிரதமர் சந்திரசேகரின் தனி உதவியாளர் கெளதம் அங்கே இருந்ததால், தப்பித்தேன். ராஜ மரியாதையுடன் எனக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

போன்சி தோட்டத்தைப் பற்றியும், அதை பிரதமர் சந்திரசேகர் உருவாக்கிப் பராமரித்தது குறித்தும் புத்தகமே எழுதலாம். நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக அந்தப் பண்ணையை அவர் இழந்தபோது அடைந்த சோகத்தை வார்த்தையில் விளக்க முடியாது. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது எனலாம். ஹரியாணா அரசின் பொறுப்பில் இருக்கும் போன்சி பண்ணைக்கு சமீபத்தில் "சந்திரசேகர் ஸ்மிருதி வனம்' என்று ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டாரால் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

போன்சி தோட்டத்தில் பிரதமர் சந்திரசேகரைச் சந்திக்க சோ சார் மட்டுமல்லாமல், யஷ்வந்த் சின்ஹா, சுப்பிரமணியம் சுவாமி, கமல் மொரார்க்கா, சுபோத்காந்த் சஹாய் ஆகியோரும் அங்கே குழுமியிருந்தனர். அங்கே ஒரு "மினி' அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. குளிர்காலம் என்பதால் கதவுகள் அடைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரு பெரிய அறையில் அமர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அருகிலிருந்த இன்னொரு காட்டேஜில் அமைந்திருந்த வரவேற்பறையில் நான் காத்திருந்தேன். ஏதோ வேலையாக வெளியில் வந்த கமல் மொரார்க்கா என்னைப் பார்த்துவிட்டார். எனக்கு அவரை முன்பின் அறிமுகம் கிடையாது. பிரதமர் சந்திரசேகரின் நண்பர் என்றும், மும்பையில் தொழிலதிபர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன், அவ்வளவுதான். நான் யார் என்று என்னைப் பற்றி உதவியாளர் கெளதமிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.

உள்ளேபோய் நான் அவருக்காகக் காத்திருப்பதாக சோ சாரிடம் கமல் மொரார்க்கா தெரிவித்திருக்கிறார். அடுத்த சில நிமிடங்களில் சோ சாரே பக்கத்து காட்டேஜ்க்கு வந்துவிட்டார். 

""என்ன சார். இப்படி திடுதிப்புன்னு இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கேள்?'' என்றபடி உள்ளே நுழைந்தார் சோ சார்.

பிரதமர் சந்திரசேகரை சந்தித்ததையும், பிரணாப் முகர்ஜியுடன் உரையாடியதையும் சொன்னேன். சோ சாரை தொலைபேசியில் தன்னிடம் பேசச் சொன்னார் பிரணாப்தா என்பதையும் தெரிவித்தேன்.

""அந்தப் பிரச்னை பற்றித்தான் உள்ளே விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள், நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அபிப்பிராயம் எதுவும் சொல்லவில்லை. நாளைக்கு சந்திரசேகரிடம் தனிமையில் பேசும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தேன். நீங்கள் சொல்வதுபோல, அவர் அவசரப்படக் கூடாது என்பதுதான் எனது கருத்தும்கூட'' - சொன்னார் சோ சார்.

""சந்திரசேகர்ஜியுடன் நீங்கள் நாளைக்குப் பேசுவதற்கு முன்பு பிரணாப்தாவுடன் பேசிவிடுவது நல்லது. அவர் உங்கள் மூலமாக சந்திரசேகருக்கு ஏதோ செய்தி தெரிவிக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.''

""இந்த நேரத்தில் அவருடன் பேசலாமா?''

""எந்த நேரத்திலும் பேசலாம். கெளதமிடம் லைன் போட்டுத்தரச் சொல்லட்டுமா?''

""சொல்லுங்கோ...''

பிரணாப் முகர்ஜி வெஸ்டர்ன் கோர்ட்டிலிருந்து கிரேட்டர் கைலாஷிலுள்ள அவரது வீட்டிற்குப் போயிருந்தார். அங்கே தொடர்பு கொண்டபோது, அவரே தொலைபேசியை எடுத்தார். சோ சாருடன் போன்சி தோட்டத்தில் இருக்கிறேன் என்பதையும், அவர் அருகில் இருப்பதையும் தெரிவித்தேன்.

அப்போது பிரணாப்தா சாப்பிட்டுக் கொண்டிருந்தாரா இல்லை வேறு யாராவது வந்திருந்தார்களா என்று தெரியவில்லை. பத்து நிமிடத்துக்குப் பிறகு மீண்டும் அழைக்கச் சொன்னார். நானும் சோ சாரும் மட்டும்தான் அந்த அறையில் இருந்தோம்.

""சந்திரசேகர் அரசு கவிழ வேண்டும், தேர்தல் வர வேண்டும் என்பதில் சில சக்திகள் மும்முரமாக இருக்கின்றன. அவர்கள் காங்கிரஸிலும் இருக்கிறார்கள், வெளியிலும் இருக்கிறார்கள். அவர்கள்தான் ராஜீவ் காந்தியை இயக்குகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது'' - நான் சோ சாரிடம் சொன்னேன்.

""எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்? அப்படி இருந்தால் பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியாமல் இருக்குமா? எனக்கு என்னவோ இது காங்கிரஸ் கட்சியின் வழக்கமான அரசியல் தந்திரம் என்றுதான் தோன்றுகிறது. காங்கிரஸ்காரர்களால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது...''

சோ சாரின் அந்தக் கருத்தை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மண்டல் பிரச்னையும், அயோத்தி பிரச்னையும் ஏற்படுத்திய வெப்பம் தணிந்திருந்தாலும், பொருளாதாரப் பிரச்னையும், வெளியுறவுப் பிரச்னைகளும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், ஆட்சியைக் கவிழ்ப்பது புத்திசாலித்தனமல்ல என்பது கூடவா காங்கிரஸ் தலைமைக்குத் தெரியாது? நினைத்தேன். ஆனால், சொல்லவில்லை.

பிரணாப்தாவை மீண்டும் அழைத்தபோது அவர் சோ சாரிடம் தொலைபேசியைக் கொடுக்கச் சொன்னார், கொடுத்தேன். பிரணாப் முகர்ஜி பேசிக் கொண்டிருந்தார். சோ சார் தலையை அசைத்து ஆமோதித்துக் கொண்டிருந்தார். அவர் பேசப்பேச, சோ சாரின் முகம் மாறத் தொடங்கியது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com