பேல்பூரி 

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி."வாங்கிக் கொடுக்கிறேன்' என்று சொல்லியே சமாளிப்பவன் திறமைசாலி.
பேல்பூரி 


கண்டது

(கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு அலுவலகப் பலகையில் இருந்த வாசகம்)

மனைவி கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து சமாளிப்பவன் புத்திசாலி.
"வாங்கிக் கொடுக்கிறேன்' என்று சொல்லியே சமாளிப்பவன் திறமைசாலி.


மா.பழனி - தருமபுரி

(தஞ்சை - திருச்சி சாலையில் வல்லம் பகுதியில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையின் பெயர்)

கடவுள் ஹார்டுவேர் & சிமெண்ட் கடை

-வி. ரேவதி, தஞ்சை-7

(சென்னையில் ஒரு லாரியின் பின் புறம்எழுதப் பட்டிருந்த வாசகம்)

பதறினால் சிதறி விடுவாய்

மஞ்சுதேவன்
பெங்களூரு- 560067(வேதாரண்யம் பகுதியில் உள்ள முடி திருத்தும் கடையின் பெயர்)

திரு.குறளழகு நிலையம்.


எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.

கேட்டது

(சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள நண்பர் வீட்டில்)

விருந்தினர்: உன் மனைவி திடீர்னு "யாம் இருக்க பயமேன்'னு சொல்றாங்களே, ஏன்..?''
நண்பர்: திடீர்னு விருந்தாளிகள் வந்திருக்காங்களே வீட்டுல காய் ஏதாவது இருக்கான்னு கேட்டேன். கருணைக்கிழங்கு, அதான் ஆங்கிலத்துல,
"யாம்'... இருக்க பயமேன்னு சொல்றா!

வி.சி. கிருஷ்ணரத்னம்,
காட்டாங்குளத்தூர்.

(நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷனில் இருவர்)

""ஏன்டா... மச்சி வாசல் வரைக்கும் வந்துட்டு, திரும்பப் போயிட்டே?''
""வீட்டில் பிரச்னை நடந்துட்டு இருந்ததுலே... அதான்''
""பிரச்னையா... அப்படி ஒண்ணும் நடக்கலையே... நான் சந்தோஷமாதானே பாட்டு பாடிட்டு இருந்தேன்''
""என்னது பாட்டு பாடிட்டு இருந்தியா... அச்சச்சோ... நீ அக்காகிட்ட அடி வாங்கி, அழுதிட்டு இருக்கிறாய்ன்ல நெனச்சிட்டேன்''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.

யோசிக்கிறாங்கப்பா!

சில உறவுகள் யோசித்துப் பேச வைக்கும்
சில உறவுகள் பேசியதை யோசிக்க வைக்கும்
சில உறவுகள் பேசவே யோசிக்கும்.

அ.கருப்பையா,
பொன்னமராவதி.

மைக்ரோ கதை

""சார்! கொஞ்சம் பேனா கொடுங்களேன். இந்த செலானை நிரப்பிவிட்டு தருகிறேன்'' என்று கேட்டவரை நிமிர்ந்து பார்த்தார் சிதம்பரம்.

""பேங்க்குக்கு வர்றீங்க. கையில் நாலஞ்சு ரூபாய் பேனா கொண்டு வந்தால் தான் என்ன? இது நாலு ரூபாய் பேனா என்றால் தந்துவிடலாம். ஆனால் இந்தப் பேனாவின் விலை நானூறு ரூபாய். இதையெல்லாம் மற்றவருக்கு இரவலாக எழுத கொடுக்க முடியாது. மன்னிக்க வேண்டும்; இந்த பேனாவைத் தர முடியாது'' உறுதியாகச் சொன்னார் சிதம்பரம்.

பேனா கேட்டவர் கேலியாகச் சிரித்தார். சிதம்பரத்துக்கு எரிச்சல் கலந்த வியப்பு!

""ஏங்க அப்படிச் சிரிக்கிறீங்க?''

""நானூறு ரூபாய்க்கு நீங்கள் பேனா வாங்கி வைத்திருந்து என்ன பலன்? நாலு ரூபாய் பேனா பிறருக்கு செய்யும் உதவியை இந்த நானூறு ரூபாய் பேனாவால் செய்ய முடியவில்லையே''

சொல்லி விட்டுச் சென்றார் அவர்.

- கு.அருணாசலம்,
தென்காசி.

எஸ்.எம்.எஸ்.

சட்டையில் முதல் பட்டன் போடாதவனை
"ஒழுங்கில்லாதவன்' என்று சொல்லும் சமூகம்,
காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால்
"லூசு' என்று சொல்லி விடுகிறது.

பி.கோபி,
கிருஷ்ணகிரி-1

அப்படீங்களா!


கரோனா தீநுண்மி எவரெஸ்ட் சிகரம் வரை சென்றுவிட்டது.

நார்வேயைச் சேர்ந்த எர்லண்ட் நெஸ் என்பவர் இமயமலையில் ஏறுவதற்காக நார்வேயிலிருந்து புறப்பட்டார்.

அப்போது அவருக்கு கரோனா தொற்று எதுவுமில்லை. இமயமலையில் ஏறுவதற்கு முன்பு அதன் அடித்தளத்தில் இருக்கும்போதும் அவருக்குக் கரோனா தொற்று எதுவுமில்லை. அதற்குப் பிறகு அவரும் அவருடைய குழுவினரும் மலையேறத் தொடங்கினர்.

சுமார் 8000 மீட்டர் உயரம் ஏறிய பிறகு எர்லண்ட் நெஸ்ஸூக்கு மூச்சுக் திணறல் ஏற்பட்டிருக்கிறது. வெறும் சளியினால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் மூச்சுத் திணறல் தொடரவே அவர்கள் தகவல் தெரிவித்தனர். அங்கு ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. எர்லண்ட் நெஸ் அதன் உதவியால் நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கரோனா தொற்றின் காரணமாக நேபாள அரசு எவரெஸ்ட் பயணம் மேற்கொள்ளுவதற்கு ஏற்கெனவே பல தடைகளை விதித்து இருக்கிறது. இந்த ஆண்டு மலையேறுவதற்கு 377 அனுமதிகளை மட்டுமே அது வழங்கியிருந்தது.

""நான் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டதைப் போல எல்லாரையும் அழைத்து வர முடியுமா என்பது சந்தேகமே'' என்கிறார் எர்லண்ட் நெஸ்.

அவருடன் சென்ற நேபாள பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com