கேரள மாநிலத்தில் இந்தியக் கலைகளை வளர்க்கும் கலைக்கூடமாக விளங்குகிறது, "நடன கிராமம்'. இது திருவனந்தபுரத்தில், வட்டியூர்க்காவு, குருவிக்காடு பகுதியில் அமைந்துள்ளது.
நடன கிராமம் 1994-ஆம் ஆண்டு இந்திய அரசின் கலாசாரத் துறை மற்றும் கேரள அரசின் கலாசாரத் துறையின் நிதியுதவியால் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஏக்கர் மூன்று சென்ட் நிலப்பரப்பில், 42,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் இரண்டு மேல் தளங்களுடன் கூடியக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.
இதில், உள் அரங்குகள், திறந்தவெளி அரங்குகள், பரத முனிவரின் நின்ற கோல கல்சிலைகள், அலுவலகம் முதலானவற்றைக் கொண்டு, நடன கிராமம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கூடங்கள், மேலும் மெழுகு சிலைகள் அரங்கு, நடனத்தின் பரிணாம வளர்ச்சி அரங்கு, பழங்குடியினர் நடனங்கள் அரங்கு, கேரள நாட்டுப்புற நடனங்கள் அரங்கு, பாரம்பரிய கோயில் நடனங்கள் அரங்கு, குருவுக்கு அஞ்சலி அரங்கு, உலகின் நடனங்கள் அரங்கு, இந்திய நடனங்கள், பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற நடனங்களுக்கான அரங்கு என பத்து அரங்குகள் கொண்ட நேர்த்தியான கலைக்கூடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நடனக்கலையை நேசிப்பவர்களுக்கு இவை அரிய பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல.
இங்கு கேரள நடனம், பரதநாட்டியம், மோகினியாட்டம், ஓட்டம் துள்ளல், கர்நாடக குரலிசை, கீ போர்டு வாசித்தல், ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல், நீர்வண்ண ஓவியம் என பல்வேறு விதமான கலைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது தவிர, அவ்வப்போது சிறப்பு பயிற்சி முகாம்களும் நடத்தப்படுகின்றன.
நிர்வாகக் குழுவிற்கு, நியமன உறுப்பினர்கள் கேரள அரசால் பணியமர்த்தப்படுகின்றனர். செயலாளரும் நியமனம் செய்யப்படுபவரே, இவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.
தேசிய நடன விழாக்கள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏழு நாட்கள் நடத்தப்படுகின்றன. திருவனந்தபுரம் வரும் வாய்புள்ளவர்கள், அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இந்த கலைக்கோயிலான "நடன கிராமம்" ஒன்றாகும்.
குரு கோபிநாத் (1908-1987): கேரளாவின் பெருமைமிக்க நடனக் கலைஞராக விளங்குபவர் குரு கோபிநாத் ஆவார். இவர் 1908- ஆம் ஆண்டு ஜுன் 24- இல் கேரளாவில், ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள சம்பாகுளத்தில் பிறந்தவராவார். இவரின் பெற்றோர் கைப்பிலி சங்கராப்பிள்ளை மாதவி அம்மா. குருகோபிநாத்தின் இயற்பெயர் கோபிநாதன் பிள்ளை என்பதாகும்.
இவரின் குடும்பம் இருநூறு ஆண்டுகால கதகளி நடன பாரம்பரியம் கொண்டதாகும். சிறு வயது முதற்கொண்டு நடனத்தையே தன் வாழ்வாக கொண்டு வாழ்ந்தவர்.
இவர் கேரள நடன பாரம்பரியத்தின் பாதுகாவலராக இவர் போற்றப்படுகின்றார். சங்கீத நாடக அகாதெமி விருதினைப் பெற்றவர். கேரளாவின் புகழ்பெற்ற நடன நாடகமான கதகளியை சிறப்பான விதத்தில் வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர். சமகால நடனத்தினை பாரம்பரிய முறையில் வடிவமைத்தவர். புராணங்களுக்கு அப்பாற்பட்டு, இந்திய பாரம்பரிய நடனத்தை உருவாக்கியவர்.
இந்திய பாரம்பரிய நடனம் மனித சமுதாயத்தின் மொழி என்றும், இந்நடனம் உலகம் தழுவிய மொழி என்றும் உணர்த்தினார். அரசியல் கருப்பொருள் நாட்டியம் மற்றும் பாலே நடனத்தின் வாயிலாக அதைப் பிரபலப்படுத்தினார்.
கதகளியின் தெற்கு மற்றும் வடக்கு பாணியில் நிபுணத்துவம் பெற்று விளங்கினார்.
இவரின் நவரசங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகளின் முக்கிய அருங்காட்சியகங்களில் இடம் பெற்றுள்ளன. இரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு, ஈ.எம்.எஸ். ஆகியோரால் பாராட்டப்பட்டவராக விளங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.