பேல்பூரி

சூழ்ச்சிக்கு கேள்விக்குறி வை; விடாமுயற்சிக்கு ஆச்சரியக் குறி வை; வளர்ச்சிக்கு வெற்றிக்குறி வை.
பேல்பூரி

கண்டது


(சேலம் பேருந்து நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த கார் ஒன்றில்...)

  வீட்டுக்கு அழகு நல்ல வண்ணம்;   மனதுக்கு அழகு நல்ல எண்ணம்.

- இரா.வசந்தராசன்,
கிருஷ்ணகிரி.

(ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

கிடாத்திருக்கை.

- கே.முத்தூஸ்,
தொண்டி.

(புதுக்கோட்டை அரிமளம் அருகேயுள்ள ஓர் சிற்றூரின் பெயர்)

சொம்பு புளி

-வி.முத்துராமு,
பொன்னமராவதி.

கேட்டது

(திருச்சி இப்ராஹீம் பூங்காவில் இரு இளைஞர்கள் பேசியது)

""உனக்கு குடுக்கிறதுக்கு தற்சமயம் என்கிட்ட பணமில்லை மச்சி''
""பொய் சொல்லாதே! நீதான் அகநூனூறு.. 
புறநானூறு ஆச்சே..?''
""புரியலையே...''
""உள் பாக்கெட்டில் நானூறு ரூபாயும், வெளி பாக்கெட்டில் நானூறு ரூபாயும்  எப்பவும் வைச்சிருப்பியே...''

-சம்பத்குமாரி,
திருச்சி.

(திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் அருகே இருவர்)

""பேரன்- பேத்தியைக் கூட பார்த்துட்டேன்!''
""வேறென்ன வேணும் உனக்கு!''
""இந்த மேம்பால வேலை முடிந்து, போக்குவரத்து தொடங்கறதை இன்னும் பார்க்கலையே..?''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

(சிதம்பரம் நடராஜர் கோயில் அருகே இருவர்)

"உங்க மனைவி அடிக்கடி உங்ககிட்ட சொல்ற வார்த்தை எது..?''
""வாயை மூடிகிட்டு பேசாம இருக்கீங்களா...!''

-பி.பாலாஜிகணேஷ்,
சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!


சூழ்ச்சிக்கு கேள்விக்குறி வை; விடாமுயற்சிக்கு ஆச்சரியக் குறி வை; வளர்ச்சிக்கு வெற்றிக்குறி வை.

-தா.முருகேசன்,
திருத்துறைப்பூண்டி.

மைக்ரோ கதை


""அம்மா தாயே... பிச்சை போடுங்கம்மா...?'' என்று வீட்டு வாசலில் நின்று பிச்சைக்காரர் கத்தினார்.

""இத பாருப்பா.. வீட்டுல யாருமில்லை.  கையில காசும் இல்லை. பிச்சை எடுக்காத குறைதான் நானும்...'' என்று குமுறியபடி கத்தினார் வீட்டுக்காரர் கோவிந்து.

""வருமானம் இல்லேன்னா.. என்கூட வாங்களேன். நாலு காசு கிடைக்கும்'' என்றார் பிச்சைக்காரர்.

""எவ்ளோ கிடைக்கும்''

""பிஃப்டி... பிஃப்டி,..''

உடனே கதவைப் பூட்டிவிட்டு பிச்சைக்காரனுடன் கிளம்பினார் கோவிந்து.

தொழில் பிஸியாகப் போனது.  மதிய நேரம் என்பதால், வெயில் சுட்டெரித்தது.
""முடியலைப்பா.. பசி ...'' என்றார் கோவிந்து.

""ரெண்டு பேரும் அப்படியே கோயில் அன்னதானக் கூடம் போவோம்'' என்று பிச்சைக்காரர் சொல்ல, அங்கு சென்று உணவருந்தினர்.

சாப்பிட்டு முடிந்தவுடன் அன்றைய வசூலை எண்ணியபோது, ரூ.64 இருந்தது.  
""இந்தா உன் பங்கு ரூ.32'' என்றார் பிச்சைக்காரர்.

"'ரூ.50 (பிஃப்டி) தர்றேன் சொல்லிட்டு, ரூ.32 தர்றீயே... நியாயமா?'' என்றார் கோவிந்து.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, சக பிச்சைக்காரர்கள் திரண்டு தலையிட்டு சமரசம் செய்தனர்.

-ஜி.வினோத்து,
திருநெல்வேலி.  

எஸ்எம்எஸ்


பிரச்னைகள் குறித்து தூங்காமல் யோசிப்பதைவிட, தூங்கி முழிச்சா நல்ல விடை கிடைக்கும்.

-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.

அப்படீங்களா!

தொழில் போட்டியைச் சமாளிக்க வாட்ஸ்ஆப்பின் மெட்டா நிறுவனம் மாதம்தோறும் புதிய சேவைகளைப் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, வாட்ஸ் ஆப்பில் ஒருவரின் நிலையை தெரியப்படுத்தும் "ஸ்டேடஸ் அப்டேட்' மாற்றம் செய்யப்பட்டால் அது அவரது சாட் பட்டியலிலேயே தற்போது காண்பித்துவிடும். முன்பு இதை அவரது புகைப்படத்தை கிளிக் செய்து புரோபைலுக்கு சென்று காண வேண்டியிருந்தது.

இந்த புதிய சேவையின் மூலம் குழுவில் உள்ளவர்கள் மாற்றம் செய்யும் "ஸ்டேடஸ் அப்டேட்' களை உறுப்பினர்கள் அனைவரும் சாட் பகுதியிலேயே காணலாம். இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் "ஸ்டேடஸ் அப்டேட்'டை மியூட் செய்து விட்டால் போதும். 

ஸ்டேடஸ்களுக்கு ஏமோஜி மூலம் பதிலளிக்கும் புதிய சேவையையும் அண்மையில் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்திருந்தது. 

இதேபோன்று, வாட்ஸ்ஆப்பில் பிறருக்கு அனுப்பப்படும் புகைப்படம் ஒரு முறை மட்டும் காணும் வகையிலான சேவை தற்போது உள்ளது. இப்படி தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படும் புகைப்படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கொள்ளலாம். இதனால் அந்த சேவையே பயன்பாடு இல்லாமல் பொய்விடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஒரு முறை மட்டும் பார்க்கும் அனுமதியுடன் அனுப்பப்படும் புகைப்படங்கள், விடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் புதிய சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இதேபோல், கைத் தவறி அழிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் தகவலை மீண்டும் பெறும் வகையிலும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மூன்றாம் தரச் செயலிகள் மூலம் இந்த சேவையைப் பலர் பயன்படுத்தினர். தற்போது இதை வாட்ஸ்ஆப் நிறுவனமே அளிக்க முன்வந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com