பேல்பூரி

சாமி சத்தியமா சைவக் கடை
பேல்பூரி

கண்டது


(சங்கரன்கோவில் அரசு கிளை நூலகம் அருகே உள்ள சுவரில்.. )

கால் செய்த புண்ணியம் 
நூலகம் வருவது!
கை செய்த புண்ணியம் 
நூல்  தேடி எடுப்பது!
கண் செய்த புண்ணியம் கருத்தூன்றிப் படிப்பது!
கடைசிப் புண்ணியம் கடைப்பிடித்திடுவது!

ச.ஜான்ரவி , கோவில்பட்டி.

(ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் அருகே உள்ள ஒரு வீட்டின் பெயர்)

""நல்ல இல்லம்''

-மு.நாகூர், கீழக்கரை.

(திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயர்)


""சாமி சத்தியமா சைவக் கடை''

-சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கேட்டது


(நாகர்கோவில் பகுதியில் உள்ள கைப்பேசி கடை ஒன்றில்..)

""தம்பி, இந்த செல்போனுக்கு கவர் ஒண்ணு குடுப்பா...''
""சரி பெருசு...முன்னால பின்னால   மூடுற மாதிரி இந்த கவரை போட்டுக்கலாம் .. .. சைடுல போட்டோ , விசிட்டிங் கார்டு வைக்குற மாதிரியும் இருக்கு...''
""ஓ அப்படியா... அப்ப இதை வெச்சிட்டு,  எனக்கு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு வைக்குற மாதிரி, போன்  கவர்  குடேன்''

-மகேஷ் அப்பாசுவாமி,
பள்ளம்.

(மதகடிப்பட்டில் இருந்த ஹோட்டலில்...)

வாடிக்கையாளர்: ""காலை 10.00 மணி முதல் 
மதியம் 2.00 மணி வரை சாப்பாடு போடப்படுமுன்னு போர்டுல எழுதியிருக்கீங்க.. அவ்வளவு நேரமெல்லாம் சாப்பிட முடியாதுங்க..!''
சர்வர்: ஹிஹிஹி

- இரா. அருண்குமார்,  
புதுச்சேரி.

(சென்னை ஹாஸ்பிட்டலில் இரு நண்பர்கள் பேசிக்கொண்டது )

""கொஞ்ச நாளைக்கு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகலாம்னு நினைக்கிறேன்!''
""ஏன் டாக்டரை பார்த்தியா ?''
""இல்லை... நர்ûஸ பார்த்துட்டேன் !''

- குமார்,
வாணரப்பேட்டை.

யோசிக்கிறாங்கப்பா!

ரசிக்கத் தெரியாதவர்களுக்கு கிடைத்த வாழ்வும்,
ருசிக்கத் தெரியாதவரிடம் கிடைத்த உணவும் - வீண்

- பி.கோபி,  
கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை


குளிர் நிரம்பிய பொழுதொன்றில், காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.
புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், ""என்ன பார்க்கிறாய்" என்று கேட்டார்.
""எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்''.
சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.
தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி, ""நான் யார் தெரியுமா!'' என்றார்.
சிறுவன் சொன்னான். ""தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!''
"கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்"

-அமுதா அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

எஸ்எம்எஸ்


உயர்வான எண்ணமும் நேர்மையான செயல்பாடும் இருந்தால், உங்களை வீழ்த்த யாராலும் இயலாது!

-கு. அருணாசலம்,
தென்காசி.

அப்படீங்களா!

திரையரங்களுக்கு அடுத்தபடியாக ஒலி,  ஒளி எபேக்ஸூடன் திரைப்
படங்களைக் காண்பதற்கு கணினிதான் உதவுகிறது.  
கணினி யுகத்தில் திரைப்படங்கள் மட்டுமன்றி,  திரையரங்குகளும் பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளன. 
கணினியின் திரையில் தெரியும் காட்சிகள் நேரில் பார்ப்பதற்கும் தெளிவாக இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பம் மேலும் நவீனமடைந்துள்ளது. இரண்டு தனித்தனி  திரைகளை இணைத்து கணினி விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டன.
16:9 நீளம் விகிதத்தில் பயன்படுத்தப்பட்ட கணினி திரைகள் பின்னர் 21:9 ஆகவும், பின்னர் 32:9 ஆகவும் அதிகரித்துள்ளன. இதனால் மிகப் பெரிய அளவிலான வளைந்த ஒரே கணினி திரையைப் பயன்படுத்தலாம். இந்தத் திரைகள் தற்போது அதிக அளவில் சந்தையில் விற்பனையாகி வருகின்றன. சினிமா திரையங்குகளில் அமர்ந்து கணினி விளையாட்டுகளை விளையாடும் அனுபவத்தை இந்தப் பெரிய திரைகள் அளிப்பதால் கணினி விளையாட்டு பிரியர்கள் மத்தியில் இதற்கு மவுசு அதிகரித்து வருகிறது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com