டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பெரிய வாய்க்கா தெரு

மதிய நேரம். பாதரசத்தினால் பூசி மெழுகியது போன்று வெயில் பளபளத்துக் கொண்டிருந்தது.

News image
Updated On :27 மார்ச் 2022, 4:07 pm

பாரதி வசந்தன்

மதிய நேரம். பாதரசத்தினால் பூசி மெழுகியது போன்று வெயில் பளபளத்துக் கொண்டிருந்தது. சத்யா வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் தேவகியைப் பார்த்துவிட்டான். அப்போதுதான் அவள் குளித்து முடித்துவிட்டு வந்திருக்க வேண்டும். பாவாடை, சட்டையில் "பளிச்' என்று  அழகாக இருந்தாள். அந்த அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல இருந்தது அவளின் பேச்சு. 

""கடைக்குப் போகலாம்னு இந்த பக்கமா வந்தேன். உங்கள பார்த்ததும் நின்னுட்டேன்''
""அப்படியா?'' என்று இயல்பாகக் கேட்டுவிட்டு சத்யா சிரித்தான். 
""அப்பா எப்படி இருக்கிறாரு?''
""நல்லா இருக்காரு. நீங்கதான் முன்ன போல வீட்டுக்கு வரமாட்டங்கறீங்க''
""எங்க தேவகி முடியுது? நேரம் கிடைச்சா வர்றேன்''
""கண்டிப்பா வரணும்''
""ஏதாவது முக்கியமான விஷயமா''
""ஆமாங்க''
 தேவகி இதை தயக்கத்தோடு சொன்னபோது சத்யா உண்மையான மனதுடன் திருப்பிக் கேட்டான். அதில் அன்பு நிறைந்திருந்தது.
""நான் என்ன செய்யணும்?''
""என்கிட்ட கொஞ்சம் வெளிநாட்டு பணம் இருக்கு''
""ரூபா நோட்டா, காய்ன்ஸா?''
""ரூபா நோட்டுதான்''
""எந்த நாட்டோடது''
""பிரான்ஸூதுன்னு அதகொடுத்த அந்த ஐயா 
சொன்னாரு''
சத்யாவுக்கு புரிந்துவிட்டது. தேவகி ஒரு பிரெஞ்சு சொல்தா வீட்டில் வேலை செய்கிறாள். அவர்தான் கொடுத்திருக்க வேண்டும். கேட்டான். தேவகி "ஆமாம்' என்றாள். 
""சரி தேவகி. அந்த ரூபா நோட்டுகள நான் மாத்தித் தரணும். அவ்வளவுதான''
""அதேதான்''
""நாளைக்கு நீ இந்த கடைக்கு வருவ இல்ல?''
""முடியாதுங்க. நிறைய வேலை இருக்கு. ரெண்டுநாள் சென்றுதான் வருவேன்''
""நானும் அப்ப வர்றேன். மறக்காம அத எடுத்துகிட்டு வா... பார்க்கலாம்''
சத்யா அப்படி சொல்லிவிட்டு வந்ததை இப்போது நினைத்துக் கொண்டான். தேவகி அந்த பிரான்ஸ் ரூபாய் நோட்டுகளை அவனிடத்தில் கொடுத்து ஒரு வாரத்துக்கும் மேலாகப் போகிறது. அதை எடுத்துப் போய் அவன் இன்னும் நம்ம ஊர் ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தரவில்லை. 
சத்யாவுக்கு தேவகியை நன்றாகத் தெரியும். அவளுடைய அப்பாவோடு நல்ல பழக்கம் இருந்தது. அவர் வேலை செய்யும் கட்டடங்களுக்கு அவ்வப்போது பெயிண்ட் அடிக்கப் போனதில் ஏற்பட்ட நட்பு. அதை வைத்து சாயந்திரமானால் தேவகியுடைய அப்பாவை பார்க்கப் போய்விடுவான். 
அவருடைய குடிசைக்கு வெளியே பாய் போட்டு இரண்டு பேரும் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு டிரான்ஸிஸ்டர்  ரேடியோ. அதுபாட்டுக்கு  எதாவது கத்திக் கொண்டிருக்கும். குடிசைக்குள் தேவகி பெரும்பாலும் சமையல் வேலையில் ஈடுபட்டிருப்பாள். அவளுடைய அம்மா செத்துப் போய் இரண்டு வருஷம் ஆகிவிட்டது. அவர் இருக்கும்வரையில் பள்ளிக்கூடம் போன தேவகி அவருக்குப் பிறகு தன் அப்பாவுக்கு வேண்டிய உதவிகள் செய்ய  படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டாள். ஒரு எட்டாவது வரைக்குமாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்று தேவகியின்  அப்பா எவ்வளவோ முயற்சிசெய்தார். வறுமையில் அது முடியவில்லை. 
இன்றைக்கோ நாளைக்கோ பெரியமனுஷி ஆகிவிடும் நிலைமையில் இருக்கிற தேவகி தன் அப்பாவுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு சொல்தா வீட்டில் கை வேலை செய்யப் போய்விடுவாள். அந்த சொற்ப வருமானம் அவர்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லாவிட்டாலும் ஏதோ வாய்க்கும், வயிற்றுக்கும் ஏற்பஇருந்தது. 
கொசப்பாளையத்துக்கு போகும் வழியில் மணிமேகலை பள்ளிக்கூடத்துக்கும் எதிரே ஒரு வீடு. இப்போதுதான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தேவகியின் அப்பாவுக்கு அதில் வேலை. அதல்லாமல் கட்டடத்தை இரவு, பகல் எந்நேரமும் பார்த்துக் கொள்ள வேண்டும். வாட்ச்மேன் உத்தியோகம். அதற்காக வீட்டு ஓனர் அங்கேயே ஒரு குடிசை போட்டுக் கொடுத்திருக்கிறார். வீடு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருந்தது. இந்த வீட்டு வேலை முடிந்தவுடன் இதே மாதிரி வேறொரு வீடு தேடிப் போய் அங்கே தங்கிவிட வேண்டும். இப்படித்தான் தேவகிக்கும், அவளுடைய அப்பாவுக்கும் வாழ்க்கை அமைந்துவிட்டது. 
சத்யா கஸ்தூரி பாய் நகரில் இருக்கிறான், அவனும் குடிசைவாசிதான். வயதான தன் அம்மாவோடு அவன் வசிக்கும் பகுதி முழுக்க குடிசைகள். அந்த இடம் ஒருகாலத்தில் தோப்பும் தொரவுமாக இருந்தது. அங்கே மல்லாட்டகிராமணி என்று ஒருத்தர் இருந்தார். நல்ல தடிமனான உடம்பு. நரைத்துப் போன மீசையை முறுக்கி வைத்துக் கொண்டு பார்க்கிறவர்களை பயம் கொள்ளச் செய்யும்படியான தோற்றம். அதற்கேற்ப அவர் குஸ்தி சண்டைகள் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாராக இருந்தார். சிலம்பாட்டத்திலும் பெரிய கெட்டிக்காரர். தன்னுடைய தோப்பில் அவர் மகனுக்கே சிலம்பம் சொல்லித்தருவார். காலை, மாலை இரண்டுவேளையும் அந்தப் பயிற்சி நடக்கும். சத்யா அப்போது ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தான். 
மல்லாட்டகிராமணிக்கு தெரியாமல் ஒரு புதரில் மறைந்து கெண்டு அவரை ரசித்துப் பார்ப்பான். 
அவ்வளவு அழகாக இருக்கும்  அவர் சிலம்பம் சுற்றுவது. சத்யாவுக்கும் அவரிடம் அதை கற்றுக் கொள்ள  ஆசையாக இருக்கும். சின்னப் பையன் என்று திட்டிவிடுவாரோ என்கிற பயத்தில் அப்படியே விட்டுவிட்டான். 
மல்லாட்ட கிராமணி ரொம்ப கண்டிப்பானவர். அவருடய தோப்பில் பெரிய புளியமரம் இருந்தது. ஒரு சமயம் சத்யா புளியம்பழத்தை கல்லால் அடிக்கப் போய் அவர் கையில் வகையாக மாட்டிக் கொண்டான். மல்லாட்டகிராமணி அடிப்பதுபோல கையை ஓங்கி ஒரு முறை முறைத்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்தார். 
""புளியம்பழம் வேணும்னா கீழவிழுந்து கிடக்கிறத பொறுக்கிக்க. கல்லால அடிச்சா யார் மேலயாவது போய் விழுமில்ல'' என்று சொல்லியவர், அவனைப் பற்றி விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டார். அப்டிப்பட்டவர் இருந்த தோப்புஅவர் பெயரிலேயே மல்லாட்டகிராமணி தோப்பு என்று ஆகிவிட்டது. அந்த தோப்பைத்தான் அரசாங்கம் கையகப்படுத்தி கஸ்தூரிபாய் நகர் என்று பெயர் வைத்து ஜனங்களுக்கு பட்டா செய்து கொடுத்துவிட்டார்கள். 
சத்யாவின் கையில் தேவகி கொடுத்திருந்த பிரான்ஸ் ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தான். செவ்வக வடிவில் வெளிர் நிற ஊதா நிறத்தில் தனிஅழகாக இருந்தது. 
பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலை நிறைய முடியோடும், குறுந்தாடியோடும் அதில் இருந்தான். யாரென்று தெரியவில்லை. பின்பக்கம் அதே மனிதன் ஒரு பூங்காவைப் பார்ப்பது போன்ற தோற்றம். சத்யா அந்த ரூபாய் நோட்டுகளில் ஒன்றை திருப்பித் திருப்பிப் பார்த்தான். "மொடமொட' என்று சத்தம். புதுநோட்டு. தேவகியிடம் இருந்து இதனை வாங்கி வந்தபோது பிரெஞ்சுமொழி தெரிந்த ஒருத்தரிடம் காட்டி இந்த ரூபாய் நோட்டுகளில் என்ன எழுதியிருக்கிறது என்று கேட்டான். 
அவர் வாங்கிப் பார்த்துவிட்டு அதில் அச்சடித்திருப்பதை ஒன்றுவிடாமல் படித்துச் சொன்னார். இடது மூலையில் பாங்க் தெ பிரான்ஸ் என்று இருக்கிறது. அதன்கீழ் வேன் ஃபிரான் அதாவது 20 ஃபிரான் என்றும், ரூபாய்நோட்டின் நடுவே நம்நாட்டு ரிசர்வ்வங்கி கவர்னரின் கையெழுத்துப் போல முக்கியமான மூன்று பேர்களின் கையெழுத்தும் இருக்கிறது. பின்பக்கம் ஒருவெள்ளை சதுரத்தின்கீழ் பொடிஎழுத்தில் "இந்தப்பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டைத் தவறாகப் பயன்படுத்துவதும், மோசடி செய்வதும், புழக்கத்தில் இருக்கும்போது அதனை ஏமாற்றும் நோக்கத்தில் மாற்றங்கள் செய்வதும் குற்றம். அதுஉறுதி செய்யப்பட்டால் 30லட்சம் ஃபிரான் அபராதமும், 30வருட சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்' என்று பிரெஞ்சில் இருப்பதை அவர் படித்துவிட்டுச் சொன்னபோது சத்யாவுக்கு பிரான்ஸ் நாட்டின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டது. 
நம் நாட்டு ரூபாய் நோட்டுகளில் இப்படி அச்சடிப்பதில்லை. அப்படி செய்தால் யாருக்காவது கள்ள நோட்டுகளை அடிக்க தைரியம் வருமா? 30லட்சம் ஃபிரான் மதிப்புள்ள இந்திய ரூபாய் எவ்வளவு என்று கணக்கிட்டு அபராதம் என்று சொல்லிப் பாருங்கள். ஒரு பயல் அந்த காரியத்தை செய்ய முன் வர மாட்டான். அதையும் மீறி அபராதம் தானே கட்டிவிடுவோம் என்று நினைக்கிறவனிடத்தில் போய் அதோடு சேர்த்து 30 வருஷம் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று பயமுறுத்திப் பாருங்கள், அப்புறம் அவன் நல்ல நோட்டுகளை தொடுவதற்குக் கூட நடுங்குவான். 
ஒரு நாட்டின் ரூபாய்நோட்டு என்பது வெறும் தாள்களினால் அச்சடிக்கப்படுவதல்ல. 
அது அந்த நாட்டின் இறையாண்மைக்கான அடையாளம். அதை நம்மவர்களைப் போல கொச்சைப்படுத்துகிறவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ரூபாய் நோட்டில் காதலியின் பெயர், மனைவியின் பெயர் மற்ற என்னென்னவோ கண்றாவிகள் எல்லாம் எழுதி ஐம்பது பைசா போஸ்ட் கார்டு போல அவரவர்கள்  கொடுத்து கொடுத்து மாற்றுகிறது இருக்கிறதே... அது பெரிய குற்றம். ஒரு நாட்டை அவமதிக்கிற செயல். இதற்கு என்ன தண்டனை என்று இதுவரை அறிவித்திருக்கிறார்களா? இல்லையே.  அப்புறம் எப்படி நாடு உருப்படும்? 
இன்னும் கொஞ்ச காலம் போனால் ரூபாய் நோட்டுகளில் சிரித்துக் கொண்டிருக்கிற  தேசப்பிதா காந்தியின் மொட்டைத் தலையில் கொம்பு வரைவார்கள். 
பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். 
சத்யாவிடம் ஐந்து பிரான்ஸ் ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஒவ்வொன்றும் 20 ஃபிரான். மொத்தம் 100ஃபிரான்கள். இந்திய ரூபாய் மதிப்பு எக்கச்சக்கமாக இருக்கும். இவற்றை எப்படியாவது மாற்றி தேவகியிடத்தில் தந்துவிட வேண்டும். சத்யா அப்படி நினைத்தபோதே அவனுக்கு ஓர் இடம் உடனே நினைவுக்கு வந்தது. அங்குதான் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை எல்லாம் மாற்றுவார்கள். கொஞ்சமும் தாமதிக்காமல் கிளம்பினான். 
மேலண்டை புல்வார்வீதி, இப்போது போத்தீஸ் துணிக்கடை இருக்கிற இடத்தில் முன்பு ராமன் தியேட்டர் இருந்தது. ராமன் டிரான்ஸ்போர்ட்  ஓனருக்குச் சொந்தமானது. அதன் திறப்புவிழாவுக்கு முதல்முதலாக எம்.ஜி.ஆர். நடித்த "குடியிருந்தகோயில்'  திரைப்படத்தை திரையிட்டார்கள். வாசலில் இருந்த காம்பவுண்டை ஒட்டிய வேப்பமரத்துக்கும் பக்கத்தில் இரண்டு எம்.ஜி.ஆர்.கள்  கட்-அவுட்டில் இருந்தார்கள். ஒருத்தர் கையில் ஊசிபோடும் சிரஞ்சை தூக்கிப் பிடித்திருப்பார். இன்னொருத்தர் இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து அழகாக சிரித்துக் காண்டிருப்பார். கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்தது. நல்ல கலெக்ஷன். அந்த சந்தோஷம் யாவும் முடிந்து ரொம்ப காலத்துக்குப் பிறகு "அன்னக்கிளி' வந்த சமயம். முதல் நாளும், மற்ற இரண்டு மூன்று நாட்களும் தியேட்டரில் கூட்டம் இல்லை. டைட்டில் போடும்போது வெடித்த தென்னம்பாளையில் ஒரு கிளி அமர்ந்திருப்பது போன்ற ஷாட்டில் இளையராஜா பெயரைக் காட்டுவார்கள். படத்தை தூக்கிவிடலாம் என்று நினைத்ததும் எப்படித்தான் ஜனங்கள் வந்தார்களோ, தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாகப் படம் நன்றாக பிக்-அப் ஆகிவிட்டது. தெடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அதிக நாட்கள் ஓடி பெரிய ரெக்கார்டுபிரேக் செய்த அந்தப் படத்தை சத்யா விரும்பிப் பார்த்திருக்கிறான். 
 அந்த நினைவுகளோடு சத்யா எதிரேயிருந்த தெருவுக்குள் நுழைந்தான். அங்கு ஓர் அசைவ ஓட்டல் இருந்தது, ஞாயிற்றுக்கிழமைகளில் மான்கறி கிடைக்கும் என்று மரப்பலகை போர்டில் கிரெயான் கட்டியால் எழுதி வைத்திருப்பார்கள். நாம் நம்ப வேண்டும் என்பதற்காக ஒரு மாமரத்தின் கீழே புள்ளிமான் ஒன்றையும் கட்டி வைத்திருப்பார்கள். அதுதான் இந்தவாரம் அறுக்கப்படப்போகிறது என்று அர்த்தம். அதை நம்பி எந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போனாலும் சாப்பிட மான்கறி கிடைக்கும். ஆனால் கட்டிவைத்த அதே மான் மட்டும் ஒவ்வொரு வாரமும் அப்படியே நின்றபடி புல்லைத் தின்றுகொண்ருக்கும். ஆச்சரியப்படுவான். ஏமாற்றுவதற்கும் திறமை வேண்டும். அதுஅவர்களுக்கு இருந்தது. 
அந்த ஓட்டலுக்கும் பக்கத்தில் ஒரு பங்க் கடை. சாப்பிட்டுவிட்டு வருகிறவர்களுக்கு தேவையான சிகரெட், வாழைப்பழம், பீடா, வாசனைப்பாக்கு என்று எல்லாம் கிடைக்கும். அங்குதான் எந்த நாட்டின் ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் மாற்றித் தருவார்கள். சத்யா போய்ப் பார்த்தான். கடைஇருந்தது. ஆனால் அப்படி மாற்றுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கடைக்காரரிடத்தில் கேட்டான். அவர் அவனை ஏற இறங்கப் 
பார்த்தார். 
""எங்க இருக்கிற நீ?''
""ஏங்க?''
""பின்ன என்ன? அதெல்லாம் அந்தக் காலத்தில நடந்தது. இப்பவந்து கேட்கிற அப்ப இங்க வெளிநாட்டு ரூபா நோட்டெல்லாம் மாத்தறது இல்லையா
தோ... பார் தம்பி. முன்ன மாத்தனது என்னவோ உண்மைதான். இப்ப கிடையாது''
சத்யா அப்பாவியாக விழித்தான். அவனுக்குத் தெரிந்து இந்த  ஒரு இடம் மட்டும்தான். மற்றது தெரியாது. கேட்டான். 
""வேற எங்க மாத்தித் தருவாங்க?''
""இது இப்போ சந்து பொந்தெல்லாம் இருக்குது தம்பி. தோ ஓட்டலுக்கும் பக்கத்தில. அப்படியே கொஞ்சதூரம்  போனா காந்தி வீதியில. மிஷன் வீதியில. லப்போர்த் வீதியிலஅப்புறம்நெடுக்க  மணி எக்úஸஞ்சர்னு வேற இருக்குது. நீ எந்த பக்கமா போற?''
""இல்லைங்க... இதுக்காகத்தான் வந்தேன்''
""சரி. இப்படியே போனா நேரு வீதியில நிறைய திறந்திருக்கும். அதவிட்டா காசுக் கடைதான் அங்க இருக்கிற சேட்டு இதுக்கு நியாயமான பணம் தருவாரு''
பங்க் கடைக்காரர் நல்லவராகத் தெரிந்தார். இல்லை என்றால் இத்தனை விவரங்களை இவ்வளவு பொறுமையாகச் சொல்வாரா? சத்யா அவரைப் பார்த்து சிரித்தபடி நன்றி சொல்லிவிட்டு எங்கு போய் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்று யோசித்தவனாக அங்கேயே சிறிதுநேரம் நின்றான். அடுத்த நிமிஷமே எதுவாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டான். 
மறுநாள். காலையிலேயே சத்யா கிளம்பினான். பாரதிவீதியின் காசுக்கடை பரபரப்பாக இருந்தது. வழியெல்லாம் நகைக்கடை. வாசலில் உட்கார்ந்து தங்க நகைகளுக்கு மெருகு போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரே நெல்உமி போட்ட நெருப்புடன் குமிட்டி அடுப்பு. புங்கங்காய் கொட்டையை கரைத்த சோப்பு நுரை போன்ற திரவம். ஒருவிதமான வாசனை அடிக்க சத்யா அதைத் தாண்டி ஒரு சின்ன படிக்கட்டுகளின் வழியே மெத்தைக்கு போனான். பங்க் கடைக்காரர் சொன்ன சேட்டு உட்கார்ந்திருந்தார். என்ன என்பதுபோல பார்த்தார். சத்யா அங்கிருந்த பெஞ்சியில் உட்கார்ந்து தன்னிடமிருந்த பிரெஞ்சு ரூபாய் நோட்டுகளை எடுத்துக்காட்டினான். அவர் வாங்கிப் பார்த்துவிட்டுச் சிரித்தார். 
""என்னப்பா இது? செல்லாத நோட்டுகளா எடுத்துக்கினு வந்திருக்கிற?''
சத்யாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. கேட்டான். 
""செல்லாத நோட்டுகளா?''
""ஆமாம்பா. இந்த ஃபிரான்ஸ் ரூபாய் நோட்டுகளை எல்லாம் மாத்தி ரொம்பநாளாகுது''
""என்ன சொல்றீங்க சேட்டு?''
""உனக்கு விஷயம் தெரியாதுன்னு நெனைக்கிறேன். உலக அளவில பிரான்ஸ் ரூபா நோட்டோட மதிப்பு குறைய ஆரம்பிச்சது. அத பயன்படுத்திகிட்டு அமெரிக்கா தன்னோட டாலர் மதிப்ப ஏத்துனதால ஐரோப்பா ஒன்றியத்த சேர்ந்த நாடுகள்லாம் கூட்டுசேர்ந்து ஃபிரானுக்கு பதிலா யூரோவ கொண்டு வந்துட்டாங்க''
""இது எப்ப நடந்ததுங்க?''
""அது எத்தனையோ வருஷமாச்சு. இப்ப இந்த நோட்டை எல்லாம் யாரும் வாங்கமாட்டாங்க''
""வேறுவழியே இல்லையா?''
""இல்லப்பா''
சேட்டு சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்தவரிடத்தில் பேசத் தொடங்கிவிட்டார். சத்யாவுக்கு ஏமாற்றமாகிவிட்டது. பணம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வந்தான். அது நடக்கவில்லை. எதற்கும் பக்கத்தில் நேரு வீதியில் போய் விசாரிக்கலாம் என்று அங்கு போனால் கடைசாத்தியிருந்தது. பால் மாறாமல் மிஷன்வீதி போனான். அங்கிருந்தவன் சத்யாவை நிமிர்ந்து கூட பார்க்காமல் விரட்டி விட்டான். வீட்டுக்கு வரும் வழியில் சின்னக்கடை பக்கம் இருக்கும் மணி எக்úஸஞ்சரிடத்தில் போனான். அவர், இனிமேல் பிரான்ஸ் ரூபாய் நோட்டுகளை மியூசியத்தில் வைத்துவிட வேண்டியதுதான் என்று கேலி செய்தார். சத்யா சோர்ந்து போய் எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்கு வந்துவிட்டான். அவனுக்கு தேவகிக்கு உதவ முடியவில்லையே என்கிற வருத்தம் நிறைய இருந்தது. 
ஒரு மாதம் போயிருக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை. சத்யாவோட அம்மாவுக்கு கடுமையான காய்ச்சல். இருந்து இருந்து பார்த்த சத்யா  தன்அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போக முடிவெடுத்தான். கையில் அவ்வளவாக காசில்லை. இருக்கும் பணத்தை டாக்டர் பீஸூக்கு கொடுக்கலாம். மருந்து வாங்க முடியாது. என்ன செய்யலாம் என்று தவித்துக் கொண்டிருந்தவன் சரி எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று அம்மாவை ஆட்டோவில் ஏற்றி டாக்டரிடம் அழைத்துப்போனான். அங்கு ஏற்கெனவே நிறையப் பேர் இருந்தார்கள்.
பொறுமையாக காத்திருந்து அவன்முறை வந்ததும் சத்யா தன் அம்மாவுடன் டாக்டரின் அறைக்குள் நுழைந்தான். அவர் மருத்துவம் பார்க்கிறவரைப்போல இல்லாமல் அவரே ஒரு பேஷண்ட் போலத்தான் தெரிந்தார். தலையெழுத்து என்று நொந்து கொண்ட சத்யா அமைதியாக இருந்தான். டாக்டர் நாடிபிடித்துப் பார்த்துவிட்டு புரியாத கையெழுத்தில் ஒரு சீட்டு நிறைய மருந்து எழுதிக் கொடுத்துவிட்டார். சத்யா அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். அவனுக்கு என்ன செய்வதென்று புரியாத நிலை. இப்போது மருந்து வாங்க வேண்டும். பணத்துக்கு எங்கே போவது?
வீட்டுக்கு வந்த சத்யா அம்மாவைப் படுக்க வைத்துவிட்டு யாரிடத்திலாவது கொஞ்சம் பணம் கைமாத்தாக வாங்கவேண்டும் என்று நினைத்து மறுபடியும் வெளியே போகத் தயாரானான். எதற்கோ உள்அறைக்குள் போனவன் அங்கே இருந்த மேஜையின் டிராயரை திறந்தபோது அதில் தேவகி எப்போதோ கொடுத்து மாற்ற முடியாத 100 ஃபிரான் ரூபாய்நோட்டுகள் இருந்தன. சத்யா அப்படி ஒரு பணம் இருக்கிறது என்பதையே அடியோடு மறந்துபோய் விட்டிருந்தான். இப்போது அதைப் பார்த்ததும் சட்டென்று ஓர் எண்ணம். 
இந்த நோட்டுகளை மாற்றுவது குறித்து சத்யா பலபேரிடத்தில் தொடர்ந்து விசாரித்தபோது யாரோ சொல்லியிருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை சண்டே மார்க்கெட்டில் வாங்கிக் கொள்வார்கள் என்று அந்த ஞாபகம் வந்ததும் சத்யா அவசர அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பி சண்டே மார்க்கெட் நடக்கும் இடத்திற்குப் போனான். சின்னக்கடை காந்திவீதியின் முனையில் தொடங்கி அந்தத் தெரு முழுக்க அடைத்துக் கொண்டிருந்தன கடைகள். விதவிதமான பொருட்கள். மனிதர்கள் ஒரேஇரைச்சலாக இருந்தது. எப்படியோ சத்யா பழைய ரூபாய்நோட்டுகள் விற்கிற கடையைக் கண்டு  பிடித்துவிட்டான். அவனுக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. 
கடைக்காரன் தரையில் பிளாஸ்டிக் தார்ப்பாயை போட்டு உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே கைப்பிடி அளவு தேய்ந்துபோன செங்கல்லின் பொடிக்கற்களை குவித்து வைத்திருப்பதைப்போல பழைய நாணயங்கள். செப்பு, பித்தளை, அலுமினியம் கலந்த துத்தநாகம் என்று பலநிறத்தில் துருப்பிடித்த காசுகள். சத்யா தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை காட்டி கேட்டான். 
""இத எடுத்துகிட்டு ஏதாவது பணம் தருவீங்களா?''
""இங்க பல நாட்டோட நாணயங்கள விற்கிறேனே ஒழிய ரூபா எல்லாம் கிடையாது. ஏதாவது அந்தக் காலத்து காசாஇருந்தாலும் பரவாயில்ல''
சத்யா இதை எதிர்பார்க்கவில்லை. அவன் மனம் கலங்கியது. மெதுவான குரலில் கெஞ்சுவது போல பேசினான். 
""இத நீங்க வாங்கிக்குவீங்கன்னு சொன்னாங்க... அதான் வந்தேன்''
கடைக்காரனுக்கு சத்யாவைப் பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும். தவிப்புடன் இருந்தவனின் முகத்தைக் கவனித்தவன் சத்யாவுக்கு உதவ வேண்டும் என்று முடிவெடுத்தவனைப்போல சொன்னான். 
""பெரிய வாய்க்கா தெருவில ஒரு பாய் இருக்காரு. வெளிநாட்டுப் பணமெல்லாம் வாங்கறவரு. எதுக்கும் அவரப் போய்ப் பாரு''
சத்யாவுக்கு போன உயிர் திரும்ப வந்ததுபோல இருந்தது. சாகக் கிடக்கிறவனுக்கு அவன் வாயில் கொஞ்சம் பால் ஊற்றுகிற காரியம் இது. அவ்வளவு நெருக்கடியான நிலைமை. தன்னை பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய்க்கு செய்ய வேண்டிய கடமைக்கு அதுவும் கடுமையான ஜூரத்துக்கு மருந்து, மாத்திரை வாங்க பணம்வேண்டும். கடவுள் கைவிடவில்லை. நல்லவர்களை அவர் ஒருபோதும் நிர்க்கதியாக விடமாட்டார். பழைய நாணயங்கள் விற்கிறவன் மூலமாக வழிகாட்டி விட்டார். அவன்தான் இப்போது கடவுள். 
அந்தக் கணமே சத்யா கடைக்காரனுக்கு நெஞ்சார நன்றி சொல்லிவிட்டு ஓட்டமும், நடையுமாக பெரியவாய்க்கா தெரு பக்கமாக கிளம்பிப் போனான். 
பழங்காலப் புதுச்சேரியில் சின்ன வாய்க்காதெரு மட்டும்தான் இருந்தது. இந்த ஊர் பிரெஞ்சுக்காரர்களின் ஆளுகைக்கு வந்த பின்பு உருவாக்கப்பட்டதுதான் பெரிய வாய்க்கா தெரு. மழைக்காலங்களிலும் மற்ற நேரத்திலும் அதிலிருந்து வரும் தண்ணீர் இப்போது ரெழி பக்கமாகப்போய் திப்ராயப்பேட்டை வழியாக வந்து கடலில் கலக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் பெரிய வாய்க்கா தெரு பள்ளத்தாக்காக விரிந்து ரயில்வே ஸ்டேஷன் இருதய ஆண்டவர் கோயில் எதிரே வரை நெல் விளையும் கழனியாக நீண்டு கிடந்தது. அந்தச் சமயத்தில் புதுச்சேரி முழுமையும் பள்ளத்தூர் என்றுஅழைக்கப்பட அப்பெயர் வில்லியனூர் சிவன்கோயில் கல்வெட்டில் மட்டும் இப்போதும் இருக்கிறது. 
பிரெஞ்சியர் ஆட்சி நடந்தபோது டவுனை ஒட்டிய பகுதிகளிலும், பிற இடங்களிலும் தமிழர்களும், பிரெஞ்சுக்காரர்களும் எந்தப் பாகுபாடும் இன்றி ஒன்றாக வாழ்ந்தனர். உலகம் முழுக்க ஐரோப்பியர்களின் ஆதிக்கம் வந்த பின்பு இங்கும் அதன் பாதிப்புகள் வரத் தொடங்கின. கடற்கரை அருகே இருந்த பெரிய வாய்க்கா தெருவிலிருந்து கிழக்கே அந்தப் பக்கம் முடிய வெள்ளையர் நகரம் என்றும், அதற்கும் இந்தப்பக்கமான மேற்குப் பகுதி முழுவதும் கருப்பர் நகரம் என்றும் பிரெஞ்சில் போர்டு எழுதிவைத்துப் பிரித்திருந்தார்கள். 
அப்போது பிரெஞ்சுக்காரர்கள் தமிழர்கள் வசிக்கும் இடங்களில் சொத்து வாங்கக் கூடாது, அவர்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று சட்டமே இருந்தது. தமிழர்கள் குறிப்பிட்ட பகுதி தமிழ் மக்களை சாதியைக் காரணம் காட்டி தீண்டாமைக் கொடுமையினால் ஒதுக்கிவைத்திருக்கும் நிலையில் சமத்துவ எண்ணம் கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர்கள் ஒட்டுமொத்த தமிழர்களையும் அதே தீண்டாமையினால் தங்களிடமிருந்து தனியே பிரித்து வைத்து ஒதுக்கியது இன்றைய தலைமுறையினர் பல பேருக்குத் தெரியாது. 
கடந்த காலத்தின் இத்தகைய நிகழ்வுகள் சத்யாவுக்குத் தெரிந்திருந்தும் அவன் அவற்றை மறந்து போயிருந்தான். ஆனால் நடந்த சமூகக் குற்றத்தின் நேரடி சாட்சியான பெரிய வாய்க்கா தெரு மட்டும் எதையும் மறக்காததைப்போல மண்புழுதிகளால் தூர்ந்துபோய் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுகிறது மாதிரி சிறிய வாய்க்காலாகிக் குறுகிக் கிடக்கிறது. முன்பு போல அதில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடாமல் ஊரிலுள்ள சாக்கடைகள் எல்லாம் கலக்கின்றன. ஒரே நாற்றம். அநீதிக்குத் துணைபோனால் யாராயிருந்தாலும், எதுவாயிருந்தாலும் இந்தக்கதிதான் ஏற்படும் என்பது எத்தனை பெரிய உண்மை. 
அதனை உறுதிப்படுத்தும் விதமாக பக்கத்தில் இணையாக வரும் காந்திவீதியின் கையைப் பிடித்தபடி சத்தம் போடாமல் நடந்து போகிற வயதான ஒரு கிழவியைப்போன்று அமைதியாகக் காட்சியளித்தது பெரிய வாய்க்கா தெரு. ஜனநடமாட்டம் அவ்வளவாக இல்லை. வாய்க்கா ஓரத்தில் அன்றைக்குப் பசுமையாக இருந்த மஞ்சள் நிற பூ பூக்கும் பூவரச மரங்களும், இளஞ்சிவப்புப் பூக்களைக் கொண்ட சீமைப் பூவரச மரங்களும் போறை விழுந்து பட்டுப்போய் கிடந்தன. அந்த இடமே மாறிப் போயிருந்தது.
சத்யா எப்படியோ ரூபாய்நோட்டுகள் வாங்குகிற பாய்வீட்டை கண்டு பிடித்துவிட்டான். கதவில் இருந்த காலிங்பெல்லை அழுத்த யாரோ ஒருபெண்மணி முக்காடு போட்டுக் கொண்டு வெளியே எட்டிப் பார்த்தார்.
""என்ன வேணும்?''
""பழைய ரூபா நோட்டுகள வாங்கற பாய்வீடு இதானுங்களே?''
""ஆமாம்''
""அவரைப் பார்க்கணும்''
ஒருகணம் யோசித்த அந்தப் பெண்மணி பின்பக்கமாக திரும்பி ஏதோ சத்தமாகச் சொல்லிவிட்டு சத்யாவை உள்ளேஅழைத்தார். தயங்கித் தயங்கி போனான். அறைக்குள் பாய் உட்கார்ந்திருந்தார். "வெள்ளைவெளேர்' என்று தாடியுடன், லுங்கியை கட்டிக்கொண்டு சட்டை ஏதும் போடாமல் இருந்தவரைப் பார்த்து சத்யா கும்பிட்டான். பதிலுக்கு அவரும் அவ்விதம் செய்தார். 
""உட்காரு தம்பி''
சத்யா எஞ்சியிருக்கும் கடைசி நம்பிக்கையோடு அவர் எதிரே போய் அமர்ந்தான். மனக்கண்ணில் அம்மா ஜூரத்தின் வேதனையோடு இருப்பது தெரிந்தது. அவனுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வர எல்லா விஷயத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். தன் அம்மாவுக்காகத்தான் இத்தனையும் என்றபோது, பாய் நெகிழ்ச்சியாகி விட்டார். 
""அடடா இந்த ரூபாய மாத்தறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிற. நான் வெளிநாட்டுப் பணத்தை குறைஞ்ச காசுக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கிறவன். அத வாங்கறதுக்கும் ஆளுங்க இருக்காங்க. இப்ப நீ எடுத்துகிட்டு வந்திருக்கிற பிரான்ஸ் நாட்டோட  ஃபிரான் எப்பவோ காலாவதி ஆயிட்டுது, புழக்கத்திலேயே இல்ல. எதுக்கும் பயன்படாத இத வச்சி நான் என்ன செய்யப் போறேன். இருந்தாலும் வாங்கிக்கிறேன். ஆனா அதிகப் பணம் தர முடியாது. முன்னன்னா இதோட மதிப்பு ஆயிரக்கணக்கில இருக்கும். இப்ப உனக்காக, உன்அவசரத்துக்காக ஒரு இருநூறு ரூபா தர்றேன். வாங்கிக்க'' 
பாய் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. உடனே எழுந்துபோய் ரூபாயோடு திரும்ப வந்தார். சத்யா தன்னிடமிருந்த 100  ஃபிரான் ரூபாய் நோட்டுகளையும் அப்படியேஅவரிடம் தந்தவன் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் ஏதோ இந்த அளவுக்காவது பணம் கொடுத்தாரே என்று பாயை இருகைகளையும் கூப்பி வணங்கியவன் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தான். அவனுக்கு இப்போதுதான் மனம் அமைதியாக இருந்தது. 
மருந்துக்கடையில் நின்றிருந்தான் சத்யா. ஒரேகூட்டம். கொஞ்சநேரம் போனதும் அம்மாவுக்காக டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்துச்சீட்டை எடுத்து நீட்டினான்.கடையில் இருந்தவர், ""எல்லாத்தையும் கொடுத்திடலாமா?''என்று கேட்டார். 
சத்யா தயக்கத்தோடு, ""இல்ல ஒரு வேளைக்கு வர்ற மாதிரி இருநூறு ரூபாய்க்குள்ள கொடுங்க'' என்றதும் மருந்துக்கடைக்காரர் சீட்டில் இருந்ததைப்பார்த்து ஒவ்வொரு மாத்திரையாக எடுத்து சின்னதான காக்கிஉறை கவருக்குள் போடும் சமயம். சத்யா தன்பாக்கெட்டுக்குள் இருந்த இருநூறு ரூபாயை எடுதது அவரிடத்தில் கொடுக்க கையை நீட்டினான்.
சட்டென்று தேவகியின் நினைப்பு வந்தது. 
"கள்ளம்கபடம் இல்லாத பெண். எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளோடு இருக்கும் குழந்தை. அந்த பிஞ்சு உள்ளம் கொடுத்தது இந்தப் பணம். இதுஅவளுக்குத்தான் சொந்தம். என்றைக்கோ மாற்றித் தருவதாக வாங்கியது. 
வீட்டு வேலை செய்யப்போன இடத்தில் பெரிய பணக்காரனான ஒரு சொல்தா அந்த ஏழைப் பெண்ணிடம் நிறைய வேலை வாங்கிக்கொண்டு அவளிடத்தில் எதற்கும் உதவாமல் கிடந்த பிரான்ஸ்நாட்டின் பழைய ஃபிரான் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றி இருக்கிறான். 
இப்போது இந்தப் பணத்தை அவளுக்கு கொடுக்காமல் போனால் அந்த சொல்தாவைப் போல நானும் ஒரு ஏமாற்றுக்காரன்தான். 
இது தேவகியின் உழைப்புக்குக் கிடைத்தது. முழுக்க முழுக்க அவளுக்கே உரியது. இதை என் அம்மாவுக்கு பயன்படுத்துவது அநியாயம். அதோடு பாவம்' என்று சத்யாவின்மனம் சொன்னதும் கடைக்காரரைப் பார்த்து, ""மருந்து வேணாம். சீட்ட கொடுங்க'' என்று அதை திரும்ப வாங்கிக் கொண்டு வேக வேகமாக புறப்பட்டு வந்தான். 
கொசப்பாளையம் மணிமேகலை பள்ளிக்கூடம். அதன் எதிரேபோய் பார்த்த சத்யாவுக்கு பயங்கர அதிர்ச்சி. அங்கே கட்டி முடிக்கப்படாத கட்டடம் இல்லை. அதற்குப் பதில் புதியவீடு. யாரோ குடிவந்திருக்கிறார்கள். குடிசையும் இல்லை. தேவகியும் அவளுடைய அப்பாவும் காணோம். பதறிப் போன சத்யா அந்தப்பக்கமாக போன ஒருவரிடம் கேட்டான். 
""இந்த வீடு கட்றப்போ இங்க ரெண்டுபேரு இருந்தாங்களே''
""ஆமாம்''
""அவங்ககிட்ட முக்கியமான ஒருவிஷயம் பேசணும்''
""அது இப்ப முடியாது''
""ஏன்''
""அவங்க எப்பவோ காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க''
""எங்கன்னு தெரியுமா?''
""தெரியாது''
சொல்லிவிட்டு அவர்பாட்டுக்கு போய்க் கொண்டிருந்தார். துயரம் நிறைந்த மனதோடு தன் கையில் இருந்த இருநூறு ரூபாய் நோட்டுகளுடன் அங்கேயே நீண்ட நேரமாக நின்றிருந்தான் சத்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.